பன்கர்வாடி – வெங்கடேஷ் மாட்கூல்கர் – தமிழில், உமாசந்திரன்
இருபது வயதுகூட நிறைந்திடாத இராஜாராம் எனும் இளைஞன், பள்ளி ஆசிரியனாகப் பொறுப்பேற்கப் பன்கர்வாடியை நோக்கி வருவதில் ஆரம்பித்து, அவன் அவ்வூரைவிட்டு நீங்கித் திரும்பிச் செல்வதுடன் முடிவடைகிறது ‘பன்கர்வாடி’. ‘உணவுப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு நான் பன்கர்வாடியை நோக்கிப் புறப்பட்டிருந்தேன்.’ என்பதுதான் ‘பன்கர்வாடி’ நாவலின் முதல் வரி. ‘நான் என் ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தேன்’ என்பது இறுதி வரி. இதற்கிடையில், பன்கர்வாடி கிராமத்தில் அவன் சந்தித்த மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் அவர்களிடமிருந்து கேட்டறிந்த கதைகளும் இராஜாராமுக்கு மட்டுமல்ல நமக்கும் பேரனுபவத்தைத் தரும் வகையில், இராஜாராம் மூலமாக, வெவ்வேறு குணாதிசயம் மிக்கக் கதாபாத்திரங்களுடன் சொல்லப்படுகின்றன. நாவலின் கதைக்களம், பன்கர்வாடி எனும் கிராமம். அக்கிராமத்தில் வசிக்கும் ஆடு மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் கதைமாந்தர்கள். கதை நிகழும் காலம், சுதந்திரத்துக்குச் சமீபத்திய காலக்கட்டம். பள்ளிப் படிப்பை முடித்ததுமே இராஜாராமுக்குப் பள்ளி ஆசிரியன் பணி கிடைக்க, அவன் பொறுப்பேற்கப் பன்கர்வாடி கிராமத்திற்கு வருகிறான். அவன் வரும்போ...









