துருவ நட்சத்திரங்கள் – குல்ஜார் சிங் சந்து – தமிழில், வாஸந்தி
குல்ஜார் சிங் சந்து, 1985இல்
தான் எழுதிய ‘கந்தின் ஜாயே’ எனும் முதல் நாவலில் திருத்தங்களை மேற்கொண்டு, 2005ஆம்
ஆண்டில் ‘துருவ் தாரே’ என்ற பெயரில் புத்தாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். அந்நாவலைத்
தமிழில், எழுத்தாளர் வாஸந்தி ‘துருவ நட்சத்திரங்கள்’ என்று நேஷனல் புக் டிரஸ்ட்டுக்காக
மொழிபெயர்த்துள்ளார். பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல், பஞ்சாபியரின் வாழ்க்கையைப்
பேசவில்லை. மாறாக, ஓர் அமெரிக்கப் பிரஜையையும் தமிழ்ப் பெண்ணையும் முதன்மைப் பாத்திரங்களாகக்
கொண்டிருக்கிறது. கதை நிகழும் களம்கூடத் தமிழ்நாடும் அமெரிக்காவும்தான்!
அமெரிக்கப் பிரஜையான விக்டர்,
மனைவி ஆப்பில்பீவுடனான மணமுறிவுக்குப் பிறகு, இரண்டாவதாகத் திருமணம் செய்துக்கொள்வதற்கு,
இந்தியா முழுமைக்கும் அலைந்துப் பெண் தேடுகிறான். அவன் இறுதியாக வந்தடையும் இடம், தமிழ்நாட்டில்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஆசிரமம்! அந்த ஆசிரமத்தை நடத்துபவர், ஒரு மலையாளி.
விக்டர், ஆசிரமத்தில் கிருஷ்ணா என்றொரு பெண்ணைப் பார்க்கிறான், முதல் பார்வையிலேயே
அவனுக்கு அவளைப் பிடித்துவிடுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக நிர்வாகிகளிடம்
சொல்லி அவள் விருப்பத்தையும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய முறையான நடிவடிக்கைகளுக்கான
அனுமதியையும் கோரி காத்திருக்கிறான்.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதமும்
சண்டையுமாக அமைந்த முதல் திருமண உறவிலிருந்து விலகித் தவிக்கும் விக்டருக்குத் தேவை,
பிரியத்தையும் அரவணைப்பையும் வழங்கும் ஒரு துணை(வி). சீரழிந்து வரும் அமெரிக்க வாழ்க்கை
முறையிலிருந்து விடுபட்டு, அவன் இந்தியப் பெண்ணைத் தேடக் காரணம், இந்தியப் பெண்களின்
தார்மீக மதிப்பீடுகள் உன்னதமானவை என்ற அவனது எண்ணம்! இதையெல்லாம் அவனுடனான ஓர் உரையாடலில்
தெரிந்துக்கொள்ளும் எலிஸபெத், அவனின் எண்ணத்தின் மீது கல்லெறியும் வகையில், அவன் முன்
சில கேள்விகளை எழுப்புகிறாள். என்றாலும், விக்டர் ‘கிருஷ்ணாதான் வேண்டும்’ என்ற முடிவில்
நிலைத்து நிற்கிறான்.
கிருஷ்ணா மிகச் சிறிய குழந்தையாக
- இரண்டு வயதில் - அந்த ஆசிரமத்தை வந்தடைகிறாள், வளர்கிறாள். கூடவே, ஆசிரமத்திலிருக்கும்
பெரும்பான்மையான குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்களாகவே இருக்க, தானும் அவ்வாறு
கைவிடப்பட்ட குழந்தைதானோ? என்ற எண்ணமும் அவளுக்குள் வளர்ந்திருக்கிறது. அஃது அவளைப்
பல்வேறு கேள்விகளுக்கு இட்டுச்சென்று, அவள் சுபாவத்திலேயே ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனுடன் சேர்ந்து, ஓர் அமெரிக்கன் தன்னைத் திருமணம் செய்துக்கொள்ளக் கேட்டு வந்து நிற்பது
மேலும் சுமையாகிறது. சுமலட்சுமி அம்மா இதை ஒரு ‘நல்ல வாய்ப்பு’ என்கிறாள். ஆசிரமத்திலுள்ள
எல்லோரும் கிருஷ்ணாவுக்கு ‘அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது’ என்று கருதுகிறார்கள். ஆனால்,
அவளுக்குள் இருக்கும் அச்சவுணர்வையும் பூதாகரமாக எழுந்து நிற்கும் எண்ணற்ற கேள்விகளையும்
அவள் ஒருத்தி மட்டுமே அறிந்திருக்கிறாள்.
தன் பெற்றோர்கள் தன்னை நிராகரித்து
ஒதுக்கியதன் காரணமாகவே, தான் யாருமற்றவளாகவில்லை; அவர்கள் வெள்ளத்தில் இறந்துப் போனதால்
மட்டுமே நிராதரவாகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துக்கொண்ட பிறகுதான், அவளது அச்சவுணர்வு
நீங்கி அவள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால், திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறாள்.
ஆசிரமத்தில், ‘ஆற்றல் அதிகமற்ற அசமஞ்சம்’ என அழைக்கப்பட்ட கிருஷ்ணா, விக்டருடனான திருமணப்
பந்தத்துக்குப் பின், அமெரிக்க வாழ்க்கையில், மிக வலுவான ஆளுமையாகப் பரிமாணமடைகிறாள்.
கிருஷ்ணாவைத் தவிர்த்து அவளுடன்
சேர்ந்து வளர்ந்த நண்பர்களான ராஜூ, பிரபா ஆகிய இருவரும்கூட, தங்களை வளர்த்துக்கொண்டு
வாழ்க்கையில் நல்ல நிலையை அடைகின்றனர். ராஜூ, பிரபல நடிகனாகிறான். பிரபா, ஆசிரியையாகிறாள்.
ஆசிரமத்தில் வளர்ந்த கிருஷ்ணா, ராஜூ, பிரபா ஆகியோருக்கு, சேவையின் முக்கியத்துவத்தை
முன்னிறுத்தும் வகையிலேயே சரஸ்வதி அம்மாள், சுமலட்சுமி மற்றும் எலிஸபெத் ஆகியோரின்
வாழ்க்கை இருக்கிறது எனலாம். வாழ்க்கை மீதான மதிப்பீடுகளை அவர்கள் மூலமாகவே, ஒவ்வொரு
ஆசிரமப் பிள்ளைகளும் உள்வாங்கியிருப்பார்கள் எனவும் நம்பலாம். அதன் வெளிப்பாடாகவே,
நிகழ்காலத்தில், கிருஷ்ணா, ராஜூ மற்றும் பிரபாவின் வேலைகள், செயல்பாடுகள் யாவும் சேவையையொட்டியே
இருக்கின்றன.
திருமணத்துக்குப் பின், விக்டர்-கிருஷ்ணா
இணையருக்குள் நிகழும் உடனடி முரண்கள், அவர்களின் உளவியல் சிக்கல்களின் ஆதாரமாக இருக்கின்றன.
ஆப்பில்பீ போலக் கிருஷ்ணாவும் பிடிவாதக்காரியாகத் தன் விருப்பத்தின்படி இருக்கக் கூடாது
என்ற எண்ணத்தில், மிக ஆரம்பத்திலே கிருஷ்ணா மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புகிறான்
விக்டர். கிருஷ்ணாவுக்கு அவனின் ஆதிக்கம் வெறுப்பை வரவழைக்காமல் இல்லை. அவளுக்குள்
தன்னுரிமை சார்ந்த கேள்விகள் மிக ஆழமாக எழுந்து விவாதத்தை உருவாக்குகிறது. ஐரோப்பிய
பயணத்துக்குப் பின, அமெரிக்கா சென்று வாழத் தொடங்கும்போது, கிருஷ்ணாவால், அந்தச் சூழலுக்குத்
தன்னைப் பொருத்திக் கொள்ளமுடியவில்லை. என்றாலும், பரஸ்பர இணக்கத்துடன், விக்டர்-கிருஷ்ணா
உறவு நாளுக்கு நாள் பலப்படவே செய்கிறது. அதன் வெளிப்பாடாகவே, செவ்விந்தியர்கள் அதிகமிருக்கும்
மாகாணத்துக்குக் குடிப்பெயரும் முடிவை விக்டர் எடுக்கிறான்.
ஒரு மனிதன் வழியே இன்னொரு மனிதனுக்குக்
கடத்தப்படும் மானுடப்பண்புகள், எப்படி எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன என்பதற்கு உதாரணமாக, காந்தியடிகளின் பேச்சில் தன்னை இழந்து சமூகச்
சேவைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் சரஸ்வதி அம்மாள், காந்தியாசிரமம் குறித்துக் கேள்விப்பட்டு
ஸ்காட்லாண்டிலிருந்து வந்து இருபதாண்டுகளாக இங்கேயே தங்கிவிட்ட எலிஸபெத், கணவனிடமிருந்து
விவாகரத்து பெற்றுச் சேவையிலிருக்கும் சுமலட்சுமி என எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒருங்கிணைந்த
சேவை மனப்பான்மையும் சக மனிதன் மீதான அக்கறையும் தொடர்ந்து அடுத்தத் தலைமுறையைச் சென்றடைகின்றன.
நாவல், ‘நான்-லீனியர்’ பாணியில்
எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நிகழ்காலம், கடந்த காலம் என மாறி மாறி அத்தியாயங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ‘பஞ்சாபியில் எழுதப்பட்டுள்ள தமிழ் நாவல்’ எனச் சொல்லுமளவுக்கு
நாவலுடனும் பாத்திரங்களுடனும் நெருக்கம் கொள்ள முடிகிறது.
நாவலாசிரியர் 1985ஆம் ஆண்டில்
எழுதிய நாவலை 2005ஆம் ஆண்டில் திருத்தி எழுதி வெளியிட்டுள்ளார் என்று முன்பே சொல்லியிருந்தேன்.
அது நாவலில் சில குழப்பங்களுக்கு இடமளித்திருக்கிறது. உதாரணத்துக்கு, ‘பாபா’ திரைப்படத்தில்
வரும் வசனங்களை – கதம்! கதம்! – ஆசிரமத்துக் குழந்தைகள் சொல்வதாக முதல் அத்தியாயத்தில்
இடம்பெற்றிருக்கும். அடுத்த அத்தியாயத்திலேயே, ‘அப்போதுதான் விடுதலை அடைந்திருக்கும்
பங்களாதேஷில் ஆகட்டும், மேற்கு வங்கத்தில் ஆகட்டும்’ எனும் வாக்கியமும் ‘யுத்தகாலத்தில்
உபயோகிக்கப்பட்ட இந்த வாகனத்தைப் பங்களாதேஷ் வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கினான்’
எனும் வாக்கியமும் அப்படியே நம்மைக் காலத்தால் பின்னோக்கி இழுத்துச் சென்று குழப்பத்தை
விளைவிக்கின்றன. திருத்தியெழுதிய நாவலாசிரியருக்கு இது கவனத்தில் இல்லாமல் போனது ஆச்சரியமே!
‘பாதுகாப்பான சூழலில் அரவணைப்பும்
கதகதப்பும் உள்ள வீடுகளில் வளரும் குழந்தைகளைவிட இறந்தகாலம் அற்ற இந்த நிராகரிக்கப்பட்ட
குழந்தைகள் நல்ல பிரஜைகளாக உருவாகிறார்கள் என்று நான் நம்புகிறேன். இவர்களது சாதனைக்குத்
தடை ஏதும் வரமுடியாது.’ எனக் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர். அந்த நம்பிக்கைக்கு உரமிடும்
வகையிலேயே தன் கதாபாத்திரங்களை அமைத்து, அவர்கள் வழியே நமக்கும் பெரும் நம்பிக்கையூட்டுகிறார்.
மேலும், ‘மனித குலம் ஒன்று என்று நம்புபவன் நான். மொழி, இனம், பூகோள எல்லை, மதம் என்கிற பெயரில் உலகச் சரித்திரத்தில் தொடர்ந்து நடைபெறும் சச்சரவுகளைக் கண்டு மனம் வெதும்புபவன். எல்லாரும் கைகோத்து ஒரே மொழி பேசும் உலகம் என்று கனவு காண்பவன்.’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் குல்ஜார் சிங் சந்து. அவர் பேச விரும்பிய ‘ஒரே மொழி’யை இந்நாவல் வழியாக, நம்மால் மிக எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறேன் நான்.


Comments
Post a Comment