மண் பொம்மை – காளிந்தீசரண் பாணிக்ராஹி – தமிழில், ரா. வீழிநாதன்


காளிந்தீசரண் பாணிக்ராஹியின் ‘மாதிரா மனிஷா’ எனும் ஒரிய நாவல், 1934ஆம் ஆண்டு வெளியானது. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், ஓர் ஒரிய கிராமத்தின் பின்னணியில் சொல்லப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய கிராமங்களிலிருக்கும் ஒவ்வொரு குடும்ப வாழ்க்கைக்கும் மிகவும் பொருந்தும் வகையில், இந்நாவல் அமைந்துள்ளதுதான் இதன் சிறப்பு! ஒரிய மொழியில் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, தொடர்ந்து வாசிக்கப்படும் நாவலாக விளங்குவதற்கும், வாசகன் இன்றளவும் வாசிப்பில் அதனுடன் நெருக்கமும் அணுக்கமும் கொள்வதற்கும் அச்சிறப்பே காரணமாக அமைகிறது.

‘பதான் பாடா’ எனும் கிராமத்தில் ‘சாம்பதான்’ என்பவர், எந்தச் சூழலிலும் பிறருக்கு உதவும் உயரிய குணத்தின் காரணமாகப் போற்றப்படுகிறார். அவரது மனைவியும்கூட அதே குணத்தைக் கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் ஏதாவது தேவைப்பட்டால், சாம்பதானின் வீட்டைத்தான் தேடி வருவார்கள். வீட்டில் ஏதுமில்லாவிட்டாலும்கூட, சாம்பதானின் மனைவி சட்டிப் பானைகளைத் துடைத்தாவது ஏதேனும் கொண்டு வந்து தருவாள். அப்பேர்ப்பட்ட குணவதி அவள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன், பர்ஜூ. இளையவன் சக்டி. தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகும், இருவரும் திருமணமாகி ஒரே வீட்டில், கூட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். சகோதர்கள் ஒரு தாய் பிள்ளைகளானாலும், அவர்களது மனைவிகள் வெவ்வேறு வீட்டையும் குணத்தையும் கொண்டவர்கள்தானே? அவர்களுக்கிடையே ஓயாமல் உரசல்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

சாம்பதான் உயிர்விடும் தருணத்தில், பர்ஜூவிடம் ‘வயல்களுக்கிடையே வரப்பு விழக்கூடாது. வீட்டு முற்றத்திலே வேலி எழக்கூடாது. வீட்டிலே இரண்டு அடுப்புகள் புகையக் கூடாது’ என்றும் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டையும் சொத்தையும் இரண்டாக்கிப் பங்குப்போட கூடாது; அண்ணன்-தம்பி இருவரும் ஒரே குடையின் கீழ்தான் வாழ வேண்டும் என்றும் சத்தியம் வாங்கிவிட்டு உயிர் துறக்கிறார். அந்தச் சத்தியத்தைக் காக்க, வெவ்வேறு விதமான சூழல்களுக்கிடையில், பர்ஜூ மேற்கொள்ளும் பிரயத்தனங்களாக, ‘மண் பொம்மை’ நாவல் விரிகிறது.

பர்ஜூவின் தம்பியான சக்டிக்கு ஊரில் அண்ணனுக்குக் கிடைக்கக் கூடிய மரியாதை தனக்கில்லை என்ற எண்ணம் உள்ளுக்குளிருந்து அவனைச் சிறுமைப்படுத்துகிறது. நாளுக்கு நாள் அதைப் பெரிதாக்கும் வகையில், மனைவி நேத்ரமணி பர்ஜூவைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் ஒன்றுக்கு ஒன்பதாகக் குறைக்கூறியே சக்டியின் மனதில் நாளுக்கு நாள் தீ வளர்க்கிறாள். அது, அண்ணனிடமிருந்து பிரிந்துத் தனியாகக் குடித்தனம் செல்ல வேண்டுமென்ற முடிவை நோக்கிச் சக்டியை உந்தித் தள்ளுகிறது.

சக்டியின் எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பர்ஜூவிடமிருந்து விலகித் தனிக் குடித்தனம் செல்ல, பஞ்சாயத்து தலைவர் ஹரிமிச்ரரும் தன் பங்குக்குச் சக்டியிடம் தூபம் போட்டுக்கொண்டேயிருக்கிறார். பர்ஜூவிடம் மிகுந்திருக்கும் நல்லெண்ணமும் நற்குணமும் ஊர் மக்களிடம் அவன் செலுத்தும் ஆதிக்கமும் ஹரிமிச்ரருக்கும் பொறாமையையும் காழ்ப்பையும் மிக அதிகமாகப் பெருக்குகின்றன. அதனால், பர்ஜூவுக்கு எதிராக, சக்டியைத் தூண்டிவிட்டு, ஊரார் மத்தியில் பர்ஜூவுக்குக் கலங்கம் விளைவிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் ஹரிமிச்ரர். ஆனால், பர்ஜூ தன் குணத்தால் அவர்களை வீழ்த்தி மேலும் மேலும் உயர்கிறான்.

யதார்த்தமும் இலட்சியவேட்கையும் இரண்டற கலந்திருக்கும் இந்நாவலில், தியாகம், அடக்கம், பொறுமை, தாராளம், அகிம்சை ஆகிய குணங்களால் பர்ஜூ என்ற அண்ணன், நம் அனைவருடைய உள்ளங்களிலிருந்தும் நீங்காத இடம் பிடிக்கிறான். எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராது, மிக உறுதியுடன் இருந்து, கொஞ்சமும் பிசகாதத் தன் குணத்திலிருந்தும் தந்தைக்குச் செய்து கொடுத்த சத்தியத்திலிருந்தும் நூலிழையளவும் விலகாமல் இருக்கிறான். தம்பி மனைவி நேத்ரமணியுடன் சச்சரவுகளிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபடும் தன் மனைவியைக்கூடத் தன் வழிக்குக் கொண்டு வருகிறான் பர்ஜூ. அவளையும் தன்னிலிருந்தும் தன்னுடைய கொள்கையிலிருந்தும் பிரிக்க முடியாத தன்னுயிரின் தன்னுணர்வின் ஓர் அங்கம் ஆக்குகிறான்.

குடும்ப வாழ்க்கையில் அகிம்சையைக் கடைப்பிடித்துக் குடும்ப உறவுகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடும் பர்ஜூ, சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் காக்க அகிம்சையைக் கையாள்வதில்லை. மக்கள் சக்தியை ஒன்று திரட்டிப் புரட்சியில் ஈடுபடத் துணிகிறான். அவனுள் மிகுந்திருக்கும் போராட்டக் குணம், குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் இரு வெவ்வேறு வகைகளில் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன என்பது நாவலில் கவனிக்கத்தக்கது. அதாவது, குடும்ப வாழ்க்கையில் காந்தியம்; சமூக வாழ்க்கையில் மார்க்ஸியம்.

தன் வாழ்வில், தான் தேர்ந்த ஓர் உயர்ந்த கொள்கையைத் தன் ஆத்மப் பலத்தால், இறுதிவரை கடைப்பிடித்து அதில் வெற்றிக்கொண்டு, நம் உள்ளத்தை முழுவதுமாக ஆட்கொள்கிறான் பர்ஜூ.

உறவுகளை உதறித் தனித்து வாழத் தலைப்படும் சூழலில், அநாவசிய சச்சரவுகளில் ஈடுபடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகிப்புத் தன்மையையும் வளர்த்துக்கொண்டு, மனதில் எவ்வித தீய எண்ணங்களையும் சேர்த்துக்கொள்ளாமல், ஓர் உயர்ந்த மனப்பான்மையை நமக்குள் உருவாக்கிக்கொள்ளத் துணைச் செய்யும் வகையிலேயே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அந்த மனப்பான்மை, எக்காலத்துக்கும் தேவையான ஒன்றாக இருப்பதால்தான், காலம் கடந்தும் ‘மண் பொம்மை’ நாவல் இன்றும் நிலைத்து நிற்கிறது என்பதில் ஐயமில்லை.

ரா. வீழிநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பில், ‘மண் பொம்மை’ நாவல் 1959ஆம் ஆண்டுச் சாகித்திய அகாதெமி வெளியீடாக வெளியாகியுள்ளது. இரண்டாம் பதிப்பு, 43 ஆண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ரா. வீழிநாதனின் மொழிபெயர்ப்பு, மிக இலகுவான மொழியைக் கொண்டுள்ளது; மிகக் கவித்துவமாகவும் அமைந்திருக்கிறது. ரா. வீழிநாதன் கையாண்டிருக்கும் மொழிபெயர்ப்பின் கவித்துவத்தை அறிந்துகொள்வதற்காகவே ‘மண் பொம்மை’ நாவலை இலக்கிய ஆர்வலர்கள் மிக அவசியமாக வாசிக்க வேண்டும். ‘மண் பொம்மை’ சாகித்திய அகாதெமியால் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும்.

இந்நாவல், இயக்குநர் மிருணாள் சென் அவர்களால், ஒரிய மொழியில் திரைப்படமாக இயக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. அந்த வருடத்தின் மிகச் சிறந்த ஒரியத் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்துக்கான திரைக்கதையை நாவலாசிரியர் காளீந்தீசரண் அவர்களே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments