இதுதான் நம் வாழ்க்கை – தலீப் கௌர் டிவானா – தமிழில், தி. சா. ராஜு

 


‘ஹே ஹமாரா ஜீவனா’ எனும் பஞ்சாபி நாவலின் தமிழாக்கம்தான் ‘இதுதான் நம் வாழ்க்கை’. பஞ்சாபியில், 1968ஆம் ஆண்டில் வெளியான இந்நாவல் தலீப் கௌர் டிவானாவின் இரண்டாவது நாவலாகும். தமிழில் தி.சா.ராஜு அவர்களின் மொழிபெயர்ப்பில், 1992ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் மூலமாக முதல் பதிப்பு வெளியாகியுள்ளது.

“இந்தப் பெண் ஜென்மமே புண் ஜென்மம்… … புருஷன் வீடு போகாதவரைதான் பெண் மகளாக இருப்பாள். அதற்குப் பிறகு சீர்கேடுதான்.” என்ற வரிகள் நாவலில், ஸந்தி என்பவள் சொல்வதாக இடம்பெற்றிருக்கும். யாருக்கு எப்படியோ! ஆனால், நாவலின் முதன்மை கதாபாத்திரமான பானோவுக்கு மிகப் பொருத்தமான வரிகள்.

தாயற்ற அவளுக்கு வயது முதிர்ந்த தந்தையும் தம்பியும் மட்டுமே இருக்கின்றனர். தம்பி, சாராயம் குடித்து நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக, அவனது மருத்துவச் செலவுகளுக்கே சொத்தில் எல்லாம் கழிகிறது. பானோவுக்கும் நல்ல வரன் அமையாமல் தட்டிக் கழிகிறது. எவ்வளவோ செலவு செய்தும்கூட தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை. என்றாலும், கொஞ்ச நாட்களில் பானோவுக்கு ஒரு வரன் கைக்கூடி, திருமணம் முடிகிறது. அவள் வாழச் சென்ற வீட்டில், மொத்தம் ஐந்து ஆண் பிள்ளைகள். பானோவின் கணவன்தான் மூத்தவன். அண்ணன் இல்லாத சமயங்களில், தம்பிகள் அவளிடம் தகாத முறையில் நடந்துக்கொள்ள, தனிக்குடித்தனம் செல்கின்றனர் பானோவும் கணவனும். சகோதர்களுக்கிடையில், சண்டை வளர்ந்து, அடிதடிகளுக்கு மத்தியில், பானோவின் கணவன் வெகு விரைவிலே இறந்துவிடுகிறான். பானோ, தந்தையுடனே சென்றுவிடுகிறாள். அவருடன் காலம் கழிக்கிறாள்.

ஊரார்கள் கணவனின் தம்பிகளில் ஒருவனைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லி நச்சரிக்கின்றனர். பானோவின் தந்தையும் அதற்குத் துணையாக நிற்க, தற்கொலை முடிவுடன் கங்கையில் குதித்துவிடுகிறாள். அங்குதான், நாராயணன் அம்லி பானோவைப் பார்த்து, தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். நாராயணன் அம்லி குடிகாரன். போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவன். உடல் நலனில்லாதவன். போக்கிரி. ஏற்கனவே அவனுக்குத் திருமணமாகி அவன் மனைவி, அவனைவிட்டு ஓடியிருக்க, தனிமையில் உழன்றுக்கொண்டிருப்பவன். அவனுக்கென ஆதரவாக யாருமில்லை. அக்கா ஒருத்தி உண்டு. அவளும் மிகத் தூரத்தில், உத்திப்பிரதேசத்தில் இருக்கிறாள். உறவுகளுக்குள் போக்குவரத்து இல்லை. அப்படிப்பட்ட நாராயணன் அம்லியை நம்பி ஒரு பெண் அவனுடன் வந்திருக்கிறாள் என்பதில், அம்லியின் வீட்டைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு மிக ஆச்சரியம். ‘அவள் எப்படிப்பட்டப் பெண்ணாக இருப்பாள்?’ என்ற கேள்வியுடன், அக்கம்பக்கத்துப் பெண்கள் அவளைப் பற்றிய வம்பு பேச்சைப் பேசுகின்றனர். அதில் இருந்துதான் இந்நாவல் தொடங்குகிறது.

நாவலின் ஆரம்பத்திலிருந்து ஸந்தி மட்டுமே பானோவைக் குறித்து தவறான அபிப்பிராயங்களைச் சொல்லாமல், கண் காது மூக்கு வைத்து பேசாமல், பானோவின் நடவடிக்கைகளைப் பார்த்து, அவளை முழுமையாகப் புரிந்துக்கொள்பவளாகவும் உறுதுணையாக இருப்பவளாகவும் வலம் வருகிறாள். பானோவின் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி அவளைப் பற்றி முழுமையாக அறிந்து அணுசரணையாக இருக்கிறாள்.

நாராயணன் அம்லி மாதிரியான தரங்கெட்ட ஒருத்தனை நம்பி வந்திருப்பவளும் தரங்கெட்டவளாகத்தான் இருப்பாள் எனும் விதமாகவே எல்லாரும் அவளை அணுகிறார்கள். ஸந்தியைத் தவிர்த்த மற்ற பெண்கள் எல்லாருக்கும் அவளைப் பற்றிய தவறான அபிப்பிராயம்தான் நிலவி வருகிறது. கூடவே, நாராயணனின் குடித்தோழர்களுக்கும் அதே எண்ணம்தான். தவறான கண் கொண்டுதான் அவளைப் பார்க்கிறார்கள். அவர்களில், தயாளுவின் மைத்துனனும் அம்லியின் நண்பனுமான ஜாகர், பானோவையே வளைய வளைய வந்து இம்சித்தபடியே இருக்கிறான். தனக்கு இணங்காத அவளைக் குறித்து, நாராயணனிடம் தவறாகச் சொல்லி, அடிவாங்க வைக்கிறான். இவர்களிடமிருந்து விடுபட்டு, கோயில் பிரார்த்தனை பூஜை என்று சென்றால், கோயிலி ஒரு சாமியாரும் தவறான எண்ணத்துடன் பானோவை நெருங்குகிறார். பானோவின் வாழ்க்கையில் சீர்கேடுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. மகிழ்ச்சிக்கான எந்தச் சலனமும் அவள் வாழ்க்கையில் இல்லை.

எல்லாரையும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, பானோ ஒன்றுமில்லாத வீட்டைத் தன் உழைப்பால் வளர்த்தெடுக்கிறாள். நாராயணனை ஒரு மனிதன் ஆக்குகிறாள். ஆனாலும் என்ன பயன்? பானோவின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு இடமேமில்லை. துயரம்தான் தொடர்ந்து துரத்துகிறது. குழந்தைப்பேறின்மையைக் காரணம் காட்டி, நாராயணன் வேறொரு திருமணம் செய்துக்கொள்கிறான். அதுமட்டுமில்லாமல், பானோவை இன்னொருவனுடன் செல்லச் சொல்லி விலைப் பேசி, அவளை நிராதரவாக்குகிறான்.

அநேக காட்சிகளுக்கு இணையாக, ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் வகையில், புறச்சூழல் காட்சிகளைத் தலீப் கௌர் டிவானா, நாவலில் வளர்த்தெடுத்திருக்கும் விதம் அபாரமானது. உதாரணத்துக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் பானோ, முதல் முறையாக பாக்வந்தியைப் பார்க்கும் சூழலைக் குறிப்பிடலாம். பாக்வந்தி, வீட்டுக்குள் உத்திரத்தில் கூடு கட்டிருக்கும் குருவிக்கூட்டைக் கலைத்துக்கொண்டிருப்பாள். அப்போது, பானோ ‘கூட்டில் ஏதேனும் முட்டை இருக்க போகிறது... கலைக்காதே…” என்று சொல்லும் போது, பாக்வந்தி, “அப்படி இருந்தாலும் அது குருவியுடையதுதானே உன்னுடையது இல்லையே!” என்பாள். இந்த மாதிரியான இடங்கள் இன்னும் சிலவும் நாவலில் உண்டு.

தலீப் கௌர் டிவானா, இக்கதையை மிகக் கச்சிதமான வடிவில் சொல்லிச் செல்கிறார். அளவில் மிகக் குறைந்த பக்கங்களில் சொல்லப்படும் கதைகளில், வாசகனும் பங்கேற்பாளனாகி தான் சொல்லாதப் பக்கங்களைத் தன் கற்பனையில் வளர்த்துக்கொள்வதற்கான சாத்தியங்களை எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டும். தலீப் கௌர் டிவானா அதைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Comments