திருமணமாகாதவள் – சரத் சந்திர சட்டோபாத்யாயா – தமிழில், சு. கிருஷண்மூர்த்தி

 


சரத் சந்திரரின் ஆரம்பக் காலப் படைப்புகளில் ஒன்றான ‘ஆரக்ஷணீயா (1916)’ எனும் குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘திருமணமாகாதவள்’. 1999இல், நேஷனல் புக் டிரஸ்ட் மூலமாக, தமிழ்ப்பதிப்பு வெளியாகியுள்ளது. இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, சென்ற வருடம் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

78 பக்கங்களுடைய இக்குறுநாவல், அன்றைய வங்காள குடும்ப அமைப்பில், கருப்பாகப் பிறந்து, எல்லாருடைய வெறுப்புகளுக்கும் ஆளாகித் திருமணம் கைக்கூடாமல், வாழ்க்கையில் அவதியுறும் ‘ஞானதா’ எனும் பெண்ணின் கதையைக் கூறுகிறது. உண்மையில் அவள் வழியாக, அன்றைய வங்காளச் சமூகத்தின் சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் மதிப்பீடுகளையே இந்நாவல் நமக்கு அளிக்கிறது. பெண்களுக்கு 12, 13 வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் நடைமுறை அக்காலத்தில் பரவலாக இருந்துள்ளது. 15 வயதுக்குள் மிக நிச்சயமாகப் பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிடவேண்டும். இல்லையெனில், அது மிகப் பெரிய தீட்டு; பாவம். பதினைந்தைக் கடந்த பெண்களை இரண்டாம் தாரமாகக் கிழடுகளுக்குப் பெண் தரத் துணியும் நிலையும் இருந்திருக்கிறது.

இக்குறுநாவலின் நாயகி ஞானதா உள்ளத்தால் அப்பழுக்கற்றவள். மிகத் தூய்மையானவள். உடலின் நிறத்தைக் கொண்டு அவளை அவள் தாய் உட்பட எல்லாரும் வெறுக்கும் நிலைக்கு, வாழ்க்கை சூழல்கள் இட்டுச் செல்கின்றன. அவளது அப்பாவின் இறப்புக்குப் பிறகு, கூட்டுக்குடும்பத்தில் எல்லா வீட்டு வேலைகளையும் செய்யும் பொறுப்பு அவளுக்கு வந்துவிடுகிறது. அவளது பெரியம்மா ஸ்வர்ணமஞ்சரி சதா நேரமும் அவளைக் கீழ்த்தரமாகப் பேசியும் வேலைகளை ஏவியும் நோகடித்துக்கொண்டே இருக்கிறாள். ஸ்வர்ண மஞ்சரியின் கணவன் இறந்து, அந்தக் கூட்டுக்குடும்பத்தின் தலைவி என்ற நிலையில் அவள் இருக்கிறாள். அவளுக்குக் குழந்தைகளும் இல்லை. ஞானதாவின் நிறத்தைக் காரணம் காட்டி அவளை வெறுக்கும் ஸ்வர்ண மஞ்சரி, சின்னவளின் – வீட்டின் கடைசி மருமகள் – குழந்தைகளைச் செல்லம் கொஞ்சுவாள். இதைக் காணும் ஞானதாவின் அம்மா துர்க்கா மணிக்கு, ஞானதாவின் மீதே எரிச்சல் மேலோங்குகிறது. நமக்கு இப்படி வந்து வாய்த்திருக்கிறாளே என்று!

இன்னொரு பக்கம், மூத்த அண்ணன்கள் இருவரும் இல்லாத நிலையில், ஞானதாவுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு கடைசி ஆளுடையது என்ற நிலையில், அவரோ அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார். மேலும், ஞானதாவின் நிறத்தைக் காரணம் காட்டி, கிழவன் ஒருவனுக்குப் பேசி முடிக்கலாம் என்கிறார். ஆனால், அதுல் என்ற நன்கு படித்த இளைஞன், ஞானதாவின் மீது ப்ரியம் கொண்டிருக்கிறான். அவன், ஞானதாவின் அப்பாவுக்கு வாக்கும் கொடுத்திருக்கிறான். ஞானதாவுக்கும் துர்க்கா மணிக்கும் இது தெரியும். என்றாலும், கூட்டுக்குடும்பத்தின் மற்றவர்களுக்குத் தெரியாது.

ஞானதாவின் திருமணப் பேச்சையொட்டி, ஸ்வர்ண மஞ்சரி சதா நேரமும், தன் வார்த்தைகளால், துர்க்காமணியையும் ஞானதாவையும் நச்சரித்தபடியே இருக்கிறாள். துர்க்காமணியை அவள் அண்ணன் வீட்டுக்குச் செல்லச் சொல்கிறாள். ஞானதாவின் கல்யாண பொறுப்பை அவன்தான் ஏற்றுச் செய்ய வேண்டும் என்கிறாள். அங்குச் சென்றால், துர்க்காமணியின் அண்ணன், தான் வாங்கிய கடனை அடைக்கும்பொருட்டு, ஒரு கிழப்பயலுக்கு ஞானதாவைத் திருமணம் செய்து வைக்கத் திட்டம் தீட்டுகிறான். தன் அண்ணனுக்கு உடந்தையாக, தன் அண்ணி பாமினிதான் செயல்படுகிறாள் எனத் துர்க்காமணி நினைத்துக்கொண்டிருக்க, இறுதியில் பாமினிதான் துர்க்காமணிக்கும் ஞானதாவுக்கும் மிக ஆதரவாகச் செயல்படுகிறாள். நாவலில், மிகவும் அசிங்கமானவள், மிகக் கேவலமாக ஈறு தெரிய சிரிப்பவள் என்று துர்க்காமணியால் ஒதுக்கப்படும் பாமினிதான் அவளுக்கு ஒரே ஆதவரவாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவள். அதுல்லைக் குறித்துத் துர்க்காமணிக்கு இருந்த நல்ல அபிப்பிராயங்களுக்கு மாறாக, நாவலின் பிற்பாதியில் அவன் வேறு மாதிரி வெளிப்படுகிறான். அவனுள் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை, நோய்வாய்ப்பட்டுக் கோரமான உருவத்தை அடைந்திருக்கும் ஞானதா ஏற்றுக்கொள்கிறாள். என்றாலும், துர்க்காமணியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஞானதா திருமணம் குறித்த கவலையிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுக்கிறாள். தான் இறப்பதற்குள், ஞானதாவை யாருக்கேனும் – அவன் கிழவனாக இருந்தாலும்கூட - திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால். அவளது ஆசை அவளின் உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை நிகழ்வதேயில்லை.

நாவல் முழுக்கத் துயரமே நிரம்பி வழிகிறது. எல்லாச் சூழலிலும், எவ்வளவோ துயரங்களுக்கும் மத்தியிலும், தன்னிலை இழக்காது, ஒரே நிலையில், ஆரம்பம் முதல் இறுதி வரை அழுப்பழுக்கற்ற குணத்துடனே இருக்கிறாள் ஞானதா. ஆனால், மற்ற எல்லாக் கதாபாத்திரங்களும் தங்கள் தேவையையொட்டி, தங்களையும் தங்கள் வார்த்தைகளையும் மாற்றிக்கொள்பவர்களாகவே இருக்கின்றனர். தங்கள் சுய இலாபங்களையொட்டி, இன்னோர் உயிர்கள் மீதும் அவர்களின் மனம் மீதும் அக்கறையற்று இருக்கின்றனர்.

இந்நாவல் எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலாகின்றது. காலம் மாறியிருக்கிறது என்றாலும், காட்சிகள் மாறாமல் இருக்கின்றன. நம் சமூகம் அப்படியேதான் இருக்கிறது. இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களை இப்போதும்கூட, உங்களால் உங்களைச் சுற்றியே அடையாளம் காண முடியும்.

Comments