கினு கோனார் சந்து – ஸந்தோஷ் குமார் கோஷ் – தமிழில், பானுபந்த்


‘கினு கோயலார் கலி’ ஸந்தோஷ் குமார் கோஷின் முதல் நாவல். வங்காள இதழான ‘தேஷ்’-இல், 1950ஆம் ஆண்டுத் தொடர் கதையாக வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்ற நாவல். இந்நாவல், முதன்முதலாக, 1966ஆம் ஆண்டுத் தமிழில் த. நா. குமாரசாமி அவர்களால், நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழுக்கு ‘சந்து வீடு’ எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பதிப்பாசிரியர், அ. கி. ஜயராமன். வெளியீடு, ஜோதி நிலையம். பிறகு, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக, 1977ஆம் ஆண்டில், திருமதி பானுபந்த் அவர்களால் மீண்டும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா நகரிலிருக்கும் ‘கினு கோனார் சந்து’-இல் நகரின் சாயலைக் கொஞ்சம்கூடக் காண முடியாது. மிக நெருக்கமான அந்தச் சந்தில், சாணியும் சாக்கடையும் வழிந்தோடும். அச்சந்தின் வழியே வாகனங்கள் நுழைய முடியாது. காரைப் பெயர்ந்து விழுந்திருக்கும் சில வீடுகளும் வெகுசில சௌகரியங்களும் மட்டுமே அங்கு உள்ளன. காற்றுக்கும் வெளிச்சத்துக்கும்கூட அங்கே குறை. என்றாலும், அந்தச் சந்தில், சில மனிதர்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.  மிகப் பரபரப்பான, மிகப் பகட்டான கொல்கத்தா நகரில், யாரொருவருக்கும் முக்கியமில்லாத ஒரு சந்தில் வசிக்கும், முக்கியத்துவமற்ற சில மனிதர்களின் வாழ்க்கையே ‘கினு கோனார் சந்து’ எனும் இந்நாவலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கினு கோனார் சந்தில், பிரமோத பத்தர் எனும் அடகு வியாபாரி மட்டுமே முன்பிருந்தே இருக்கிறான். சிவவிரதப் பாபுவின் குடும்பத்தினர் புதிதாய் அங்குக் குடிவருகிறார்கள். சிவவிரதனின் மனைவி, ஆஸ்துமா வியாதியால் அவதியுறுபவள். அவர்களுக்கு ஒரு மகன் (தேவவிரதன்), மருமகள் (ஆமிதா), மகள் (நீலா) உள்ளனர். மகள் நீலா கல்லூரி மாணவி. மிக நன்றாக வாழ்ந்துக் கெட்ட, சிவவிரதப் பாபுவின் குடும்பம், படிப்படியாகக் கீழிறங்கி இறுதியாக வந்து சேரும் இடம் ‘கினு கோனார் சந்து’. அவர்கள் குடிப்பெயரும் வீட்டில், அவர்களுக்கு முன்பு யாருமில்லை. ஆனால், அவர்களது வருகையைத் தொடர்ந்து, மணீந்திரன்-சாந்தி, இந்திரஜித், சகுந்தலா மற்றும் அவளது தோழிகள் என இன்னும் சிலரும் வந்து சேர அச்சந்தில் புதிய புதிய மனிதர்கள், புதிய புதிய நம்பிக்கைகளுடனும் கனவுகளுடனும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அதுநாள் வரையில், இருண்ட தன் அறைக்குள் இருந்துக்கொண்டு தங்கத்தையும் வெள்ளியையும் நிறையிட்டு மதிப்பிட்டுக்கொண்டிருந்த பத்தருக்குப் புதிய மனிதர்களின் வருகை உற்சாகமளிக்கிறது. மிக இரகசியமாக அவர்களின் வாழ்க்கையைக் கண்காணித்து அம்மனிதர்களை எடைப் போட தொடங்குகிறார்.

நீலாவுக்கு வந்த புதிதிலிருந்தே அந்த இடம் பிடிக்கவில்லை. அந்தச் சந்தில் நடந்து செல்வதென்பதே அவளுக்கு மணலை வாயிலிட்டு நரநரவென்று மென்றுக்கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. அதுபோலவே தேவவிரதனுக்கும் அமிதாக்கும்கூட, அங்கிருந்து எப்படித் தப்பித்துச் செல்லலாம் என்றே தோன்றுகிறது. அமிதா அதற்கான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்காமல், அதை உருவாக்கிக்கொண்டு, மிகச் சாதுரியமாகப் புருஷனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறாள். நீலாவுக்கு வழியில்லை, சாந்தி சகுந்தலா என்று அங்கிருப்பவர்களுடன் தன் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறாள். இந்திரஜித் வருகைக்குப் பிறகு, அவள் புதிய விஷயங்களைத் தெரிந்துக்கொள்கிறாள். மனிதர்களை மதிப்பிடுவதில், அவளிடத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

மணீந்திரன் ஓர் எழுத்தாளன். எழுதினால் மட்டுமே அவனுக்கு வருமானம். அவன் எழுதுவதற்குப் போராடிக்கொண்டிருக்கிறான். அவனின் மனைவி, மணீந்திரனின் நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டும் இந்திரஜித்துடன் இரகசிய உறவில் இருந்துக்கொண்டு அவன் பணத்தில் ஊர்ச் சுற்றிக்கொண்டும் இருக்கிறாள். இதெல்லாம் மணீந்திரனுக்குத் தெரியாமல் இல்லை. அவன் எல்லாவற்றையும் அனுமதித்து, கண்டும் காணாதவன் போல் இருந்துக்கொண்டு, அச்சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். இதெல்லாம், அவனது நாடகத்தின் ஒத்திகையின் போதுதான் சாந்திக்குத் தெரிய வருகிறது.

ஓர் இலட்சிய வேகத்தில், தன்னைப் போன்ற நர்சுகள் சிலரை ஒன்றிணைத்து, ‘சேவா சத்திரம்’ ஒன்றைத் தொடங்குகிறாள் சகுந்தலா. ஆனால், அவளுக்கு இடையூறு தரும் வகையில், அவளின் முன்னாள் கணவன் – பத்திரிக்கையாளன் – அந்தச் சேவா சத்திரம் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி அவளின் இலட்சியத்தையே சிதைக்கிறான்.

இந்திரஜித், ஓர் இளம் கவிஞன். சாந்தியின் வலையில் சிக்குண்டு, தன் நேரத்தையும் பணத்தையும் இழந்துக்கொண்டிருப்பவன். நோய்வாய்ப்பட்டு, கவனிப்பாரற்று போகிறான். அவனைக் கடைத்தேற்றி, அவனுடன் வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் உழல்கிறாள் நீலா.

நாவலில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவரவர்களுக்கேயுரிய நிறைகுறைகளுடனும் தனித்த குணங்களுடனும் படைக்கப்பட்டுள்ளனர். அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையைத் தகவமைத்துக் கொண்டு, நிறைகுறைகளை ஏற்று வாழத் தலைப்படுகின்றனர்.  அவர்களின் இயல்பே, அவர்களின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக அமைகிறது.

அமிதாவின் சித்தப்பாவான அவிநாச பாபு, தன் வயதை மீறியும் நீலா மீது ஆசைக்கொண்டு, அவளை அடையத் துடிக்கிறார். அதற்கான எல்லாப் பிரயத்தனங்களையும் மேற்கொள்கிறார். தணிக்க முடியாத அவரின் உடல் பசி அவரைப் பிடுங்கித் தின்கிறது. அதைத் தணிக்கமுடியாமல் தவிக்கிறார். நீலாவிடம் தன் திட்டங்கள் பலிக்காத வேளையிலும், வெவ்வேறு நபர்களிடம் தன் முயற்சியை மேற்கொண்டபடியேதான் இருக்கிறாள்.

சிவவிரதபாபு, எல்லாம் இழந்து ஏதுமற்ற சூழலிலும்கூட, வீட்டுப் பொருட்களையெல்லாம் பணையம் வைத்து, பத்தருடன் சதுரங்கம் விளையாடுகிறார். அதுபோலவே, நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்கள் வாழ்க்கை விளையாட்டில், தங்களையே பணையம் வைத்து விளையாடுகிறார்கள். ஜெயிப்பது யார்? தோற்பது யார்?

எவ்வளவு வேகமாக, கினு கோனார் சந்தில் ஒவ்வொரு ஆட்களாகக் குடிவந்து, ஒரு புதிய வாழக்கை அங்குத் தொடங்கியதோ அதே வேகத்தில், அச்சந்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறுகிறார்கள்.

நகரங்களுக்கே உரித்தான மத்தியதர வாழ்க்கையின் எல்லாத் தரப்பட்ட இயல்புகளையும் சிக்கல்களையும் தன் முதல் நாவலின் வழியாக அணுகியிருக்கிறார் ஸந்தோஷ் குமார் கோஷ். மத்தியதர வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். அவரின் கதாபாத்திரங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளையும் இன்றும்கூட நம்மோடு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். கொல்கத்தாவில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தவொரு நகர வாழக்கையுடனும் பொருந்தகூடிய வாழ்க்கை, கினு கோனார் சந்தினுடையது. கொல்கத்தாவில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா நகரங்களிலும் ஒரு ‘கினு கோனார் சந்து’ இருக்கவே செய்யும் மிக உறுதியாக!  

‘கினு கோயலார் கலி’யின் இரு மொழிபெயர்ப்புகளையும் வாசித்ததில், பானுபந்த் அவர்களின் மொழிபெயர்ப்பே மிகச் சரளமாக வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படிச் சொல்வது, த. நா. குமாரசாமியின் மொழிபெயர்ப்புச் சரியாக இல்லை; வாசிக்கும் வகையில் இல்லை என்று சொல்வதாகாது. அவரின் அரும்பணியைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. இரு மொழிபெயர்ப்புகளும் வெவ்வேறு காலக்கட்டங்களையொட்டி வந்துள்ளன. அதில், த. நா. குமாரசாமி, தன் காலத்தையொட்டிய உரைநடையில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். தம் மொழிபெயர்ப்பில், அவர் கையாண்டிருக்கும் அநேகச் சொற்களை – வடமொழிச் சொற்கள் – இன்று வாசிக்கும்போது, ஒரு விதமான ஒவ்வாமையைத் தருகின்றன.  ஏதோவொரு வகையில், வாசிப்பின் போக்கில் தடையை ஏற்படுத்துகின்றன. ஆனால், திருமதி பானுபந்த் அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிக்க மிக இலகுவாக, நெருக்கமாக இருக்கிறது.

நாவலின் தலைப்பையே எடுத்துக்கொள்வோம். த. நா. குமாரசாமி, ‘சந்துவீடு’ எனத் தலைப்பிட்டிருக்கிறார். அத்தலைப்பு ஏதோவொரு வீட்டின் கதை எனுமளவில் அர்த்தம் கொள்ளும்படி இருக்கிறது. ஆனால், நாவலின் மையம், அந்தத் தெருவையும் அங்கு வாழும் பல்வேறு மனிதர்களையும் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் உள்ளடக்கியது. வங்காளத்தில், கோயலார் (அல்லது கோலார்) எனும் சொல்லுக்குப் பால்காரன் எனப் பொருள். கினு பால்காரன் தெரு. அதைத்தான் பானுபந்த், வங்காளத் தலைப்பான ‘கினு கோயலார் கலி’க்கு நெருக்கம் சேர்க்கும் வகையில், ‘கினு கோனார் சந்து’ என்று தமிழில் தந்துள்ளார். அதையேதான் நாவல் முழுக்கப் பயன்படுத்தியுள்ளார். த. நா. குமாரசாமியின் மொழிபெயர்ப்பில், அதுகூட ஒவ்வோர் அத்தியாயத்துக்கும் மாறுகிறது. ஓரிடத்தில், பால்காரன் தெரு எனவும் மற்றொரு இடத்தில் இடையன் சந்து எனவும் கூறப்படுகிறது.

பானுபந்த், இந்நாவலை வங்காளத்திலிருந்துதான் நேரடியாக மொழிபெயர்த்தாரா? அல்லது இந்தி மொழி வழியாக மொழிபெயர்த்தாரா? என்ற குறிப்பு நூலில் இல்லை. ஆனால், அவர் மொழிபெயர்ப்பு அதன் சரளமான நடையால் முக்கியத்துவம் பெறுகிறது. அதேப்போல, த. நா. குமாரசாமியின் மொழிபெயர்ப்பு, மூலமொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்ற வகையில் முக்கியமானது என்பதும் மறுப்பதற்கில்லை.

Comments