காகித மாளிகை – ரங்கநாயகம்மா – தமிழில், பா. பாலசுப்பிரமணியன்
1962ஆம் ஆண்டில், ‘ஆந்திரப்
பிரபா’ எனும் தெலுங்கு வார இதழில் தொடராக வெளியாகிய ‘பேக்க மேடலு’ எனும் நாவல், ரங்கநாயகம்மாவின்
ஆரம்பக் கால நாவல்களில் ஒன்றாகும். 1972ஆம் ஆண்டில், பா. பாலசுப்பிரமணியன் மொழிபெயர்ப்பில்,
‘காகித மாளிகை’ எனும் பெயரில் நேஷனல் புக் டிரஸ்ட்டின் அனைத்திந்திய நூல் வரிசையில்
ஒன்றாக, இந்நாவல் தமிழில் வெளியாகியுள்ளது.
இந்நாவலில், பானுமதி எனும்
பெண்ணின் கசப்பான வாழ்க்கையே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப் ‘பானுமதியின் கசப்பான
வரலாறு’ என்றும் சொல்லலாம். அல்லது ‘பானுமதியின் ஊமை வேதனை’ என்றும் வரையறுக்கலாம்.
‘ஊமை வேதனை’ எனக் குறிப்பிடக் காரணம், அதிகாரம் செய்தே பழக்கப்பட்ட ஓர் ஆணுக்கு மனைவியாகி,
அடிமையாகி, அவன் விரும்பும்படியாகவே ஒவ்வொன்றையும் செய்து கொடுத்து, தன் விருப்பு வெறுப்புகளை
ஒதுக்கிக்கொண்டு வாழும் பானுமதியால், தான் அடைகின்ற வேதனைகளைக்கூட யாரிடமும் பங்கிட்டுக்
கொள்ள முடியாத நிலை!
பானுமதி, மிக நன்றாகப் படிக்கக்
கூடிய பெண். மிகச் சுயமாக எல்லாவற்றையும் வரையறுத்து முடிவுகள் எடுக்கக் கூடியவளாகவும்,
தன் சிந்தனைகளை மிகத் தெளிவாக எல்லாருக்கும் எடுத்துக் கூறுபவளாகவும் பள்ளிப் பருவத்திலே
மிளிர்கிறாள். ஆனால், அவளால் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை. காரணம், குடும்பத்தின்
சூழல். வீட்டில், அவளுக்கு முன்பாகவும் பெண்கள். அவளுக்குப் பின்பாகவும் பெண்கள். தொடர்ந்து
வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாத வறுமை.
கேசவ், பானுமதியின் அண்ணன்.
பெரியப்பா மகன். வயதில் மூத்தவன் என்றாலும், பானுமதியும் அவனும் ஒன்றாகப் படித்தவர்களே!
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகி, இருவரும் தேர்ச்சிப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியைப்
பானுவுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக, கொண்டாடுவதற்காக, சித்தப்பா வீட்டுக்கு வரும் அவனுக்கு
ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது, ‘பானுவைக் கல்லூரிக்கு அனுப்புவதாக இல்லை’ என்ற
சித்தப்பாவின் முடிவு! தன் சொந்தத் தங்கையைக் காட்டிலும், பானுவின் மீது மிகப் பிரியம்
கொண்டிருக்கும் அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்றாலும், அவனால் எதுவும்
செய்ய முடியாத கையறு நிலை.
பானுமதியை இராஜசேகரம் என்பவருக்குத்
திருமணம் செய்துவைக்கின்றர். இராஜசேகரத்துக்குப் பெற்றோர்கள் இல்லை. உறவினர்கள் வளர்ப்பில்
வளர்ந்த அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதால், மற்றவர்களின் பிக்கல் பிடுங்கல்கள்
ஏதுமற்று பானுவும் மாமாவும் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் விருப்பப்படி, இனிமையாக வாழலாம்
என்று கருதும் கேசவ்வுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இராஜசேகரத்தின் குணக்கோளாறுகளும்
பழக்க வழக்கங்களும் பானுமதிக்குத் துயரத்தை மட்டுமே தொடர்ந்து பரிசளிக்கின்றன. நியாயமானாலும்
அநியாயமானாலும் அதிகாரம் செய்தே பழக்கப்பட்ட இராஜசேகரத்தை எதிர்த்துப் பதில் பேசும்
பானுமதி ஒரு கட்டத்துக்கு மேல் அவனிடம் பேசுவது மட்டுமல்ல, வாழ்வதும்கூடப் பயனற்றதுதான்
என்ற முடிவுக்கு வருகிறாள். காரணம், எவ்வளவோ ஆசைகளுடனும் கனவுகளுடனும், அவனுடன் வாழ்க்கையைத்
தொடங்கியவளுக்கு எஞ்சுவதெல்லாம் ஏமாற்றம் மட்டும்தான்! பெற்ற மகனைக்கூடத் தூக்கிக்
கொஞ்சாத மனிதனுடன் எப்படி வாழ முடியும்?
குடும்ப வாழ்க்கையில், கணவன்
எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், அவனை அனுசரித்துப் பூஜித்து வாழ வேண்டியதுதான், நம்
பாரத நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்களின் கடமை எனும் விதமாகவே சமூகத்தால் பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தன் கணவன் என்ன செய்தாலும், எவ்வளவு மோசமாகத் தன்னை நடத்தினாலும், மனைவி என்பவள் –
பெண் என்பவள் – அமைதியாக இருக்க வேண்டும். அவள் மனதில் எவ்வளவு சுமைகள், துக்கங்கள்,
துயரங்கள் இருந்தாலும் கணவனுக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் செய்துக்கொண்டே வாழக்கையையும்
நாட்களையும் கழிக்க வேண்டும். பெண்களுக்குத் தன்மானம், சுயமரியாதை என்பதெல்லாம் இருக்கவே
கூடாது என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகத்தில், ‘இழிவான மரியாதை குறைவான நிலையில்
ஒரு பெண் அப்படி வாழ்ந்தால்தான் என்ன? வாழாவிட்டால்தான் என்ன?’ என்று நினைக்கிறாள்
பானுமதி. மேலும், மாறாத மனிதருக்காக எவ்வளவு காலம் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வது?
ஓரிடத்தில் பானுமதி சொல்வாள்:
“நான் விரும்பியது வாழ்க்கையே தவிர, நடிப்பு அல்ல. எந்த வினாடியும் அமைதியில்லாத இந்த
மனத்தை, எந்த நிமிஷமும் இன்பமில்லாத இந்த உடலை எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள், எத்தனை
ஆண்டுகள் ஏமாற்றிக்கொண்டு இருப்பது? இம்மியளவும் மதிப்பில்லாத இந்தச் சரீரத்தை யாருக்காக
உயிரோடு வைத்துக்கொள்ள வேண்டும்?”
தங்கையின் துயர வாழ்க்கையைத்
தெரிந்துக்கொள்ளும் கேசவ்வால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு ஆறுதலாக உறுதுணையாக
என்றென்றும் இருக்க வேண்டும் எனக் கருதும் அவன், அவளை அடிக்கடி வந்து பார்த்து நலன்
விசாரித்துப் போகிறான். ஒரு கட்டத்தில் அதுவும்கூட இராஜசேகரத்தின் அவமதிப்பால் நின்றுப்போகும்படி
ஆகிறது.
முன்னேறும் ஆர்வமுடைய பெண்கள்
வேகமாகத் தங்களை மாற்றிக்கொண்டு முன்னேற்றம் கண்டுக்கொண்டிருக்க, அதே வேகத்தில் அதிகாரத்தைக்
கைவிட வேண்டிய ஆண்கள் மாற முடியாமல் தவிக்கிறார்கள் என்பதையும் இந்நாவல் மூலம் சுட்டிக்காட்டுகிறார்
ரங்கநாயகம்மா. அதுமட்டுமில்லாமல், தலைமுறை தலைமுறையாக, பெண்களுக்கு விடிவில்லை; அவர்களது
வாழ்க்கை எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியே இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில்,
பானுமதியின் அத்தை கதை சொல்லப்படுகிறது. பாட்டி அத்தையின் கதையைச் சொல்லும்போதெல்லாம்,
வெகுண்டெழுந்த சிறுமி பானுவால், தன் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே நிலையை அடைந்திருக்கும்
போது ஒன்றும் செய்யமுடிவதில்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. பானுமதி சொல்கிறாள்:
“பெண்ணுக்கு எத்தனை ஆசைங்க இருந்தாலும், எத்தனை குறிக்கோளுங்க இருந்தாலும், எவ்வளவு
தன்மானம் இருந்தாலும், அழுத்தமான மனுஷ தன்மை இருந்தாலும், மிகக் கீழான நிலையிலே நிக்க
வேண்டிய காலம் எப்பவோ ஒரு முறை வந்தே தீரும்.” ஆனால், பானுவுக்கு அவள் குடும்ப வாழ்க்கை
முழுக்கவும் அந்நிலையே தொடர்கிறது என்பதுதான் அவலம்! அதனால் தன் உயிரையே மாய்த்துக்கொள்ள
துணிகிறாள்.
ரங்கநாயகம்மாவின் இந்நாவலை
அன்றைய காலக்கட்டங்களில் வெளியான குடும்ப நாவல்களுக்கான எதிர்வினையாகவே கருதலாம். இந்நாவலிலே
குடும்ப வாழ்க்கையையும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பையும் பிணைப்பையும் மிகைப்படுத்தி
எழுதும் எழுத்தாளருக்கும் பானுமதிக்குமான முரண் கடித வடிவில் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாவல் முழுவதும் தொடர்கின்ற
பானுமதி – கேசவ் இருவருக்குமிடையிலான உரையாடல்களில், பானுவின் எண்ணங்களும் வாதங்களும்
மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. கேசவ்வைப் போலவே நாமும் அவள் கதையைக் கேட்க
கேட்க, ஆற்றாமையால் தவிக்கிறோம். பானுவுடன் நெருக்கம் கொள்கிறோம்.
நாவலின் இறுதியில், பானுவின்
மகன் இறப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில் வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகவே இருக்கிறது.
தன் மகன், இந்தச் சமூகத்தில் நல்ல ஆண் மகனாக வாழ வேண்டுமென விரும்பிய பானுவின் ஆசை,
அவளது இறப்புடன், மகனின் இறப்புடன் சேர்ந்தே இறந்துவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பானு, அவள் வாழும்போதுதான் நிறைவேறாத ஆசைகளுடன் வாழ்ந்தாள். தன் இறப்புக்குப் பிறகும்கூட,
அவள் நிறைவேறாத ஆசையுடன் மேலும் துயரத்தைத்தான் சுமக்க வேண்டுமா? என்று ரங்கநாயகம்மாவிடம்
கேட்கத் தோன்றுகிறது.



Comments
Post a Comment