பன்கர்வாடி – வெங்கடேஷ் மாட்கூல்கர் – தமிழில், உமாசந்திரன்



இருபது வயதுகூட நிறைந்திடாத இராஜாராம் எனும் இளைஞன், பள்ளி ஆசிரியனாகப் பொறுப்பேற்கப் பன்கர்வாடியை நோக்கி வருவதில் ஆரம்பித்து, அவன் அவ்வூரைவிட்டு நீங்கித் திரும்பிச் செல்வதுடன் முடிவடைகிறது ‘பன்கர்வாடி’. ‘உணவுப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு நான் பன்கர்வாடியை நோக்கிப் புறப்பட்டிருந்தேன்.’ என்பதுதான் ‘பன்கர்வாடி’ நாவலின் முதல் வரி. ‘நான் என் ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தேன்’ என்பது இறுதி வரி. இதற்கிடையில், பன்கர்வாடி கிராமத்தில் அவன் சந்தித்த மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் அவர்களிடமிருந்து கேட்டறிந்த கதைகளும் இராஜாராமுக்கு மட்டுமல்ல நமக்கும் பேரனுபவத்தைத் தரும் வகையில், இராஜாராம் மூலமாக, வெவ்வேறு குணாதிசயம் மிக்கக் கதாபாத்திரங்களுடன் சொல்லப்படுகின்றன.

நாவலின் கதைக்களம், பன்கர்வாடி எனும் கிராமம். அக்கிராமத்தில் வசிக்கும் ஆடு மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் கதைமாந்தர்கள். கதை நிகழும் காலம், சுதந்திரத்துக்குச் சமீபத்திய காலக்கட்டம்.

பள்ளிப் படிப்பை முடித்ததுமே இராஜாராமுக்குப் பள்ளி ஆசிரியன் பணி கிடைக்க, அவன் பொறுப்பேற்கப் பன்கர்வாடி கிராமத்திற்கு வருகிறான். அவன் வரும்போது அக்கிராமம், உயிரற்ற சடலம் போல, எந்த இயக்கமுமற்றுக் காணப்படுகிறது. கிராமத்தில் வெகுசில வீடுகள் மட்டுமே காணப்படுகின்றன. வீடுகளென்றால், புற்களால் கூரை வேயப்பட்ட, மண் சுவர்களாலான அநேகக் குடிசைகள். குடிசைகளுடன் சேர்ந்தே ஆடுகளுக்கான பட்டியும் வேலிகளிடப்பட்டுள்ளன. அக்கிராமத்தில் தெரு என்ற ஒன்றே இல்லை.

கிராமத்துக்குள் நுழைந்துப் பயணக் களைப்பில் சோர்ந்து ஓரிடத்தில் அமரும் அவனை யாரெனத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வமிகுதியில் கோள்மூட்டித் தாதூ என்பவன், ‘ஏண்டா முட்டைக்காரனா?’ எனக் கேட்கிறான். இராஜாராமுக்குச் சவுக்கால் அடித்தது போல் இருக்கிறது அந்தக் கேள்வியும், அதன் தொனியும்! தன்னை ‘ஆசிரியன்’ என அறிமுகப்படுத்திக்கொள்கிறான் இராஜாராம். உடனே தாதூ, ‘இங்கே ஆசிரியனுக்கு என்ன வேலை? பள்ளிக்கூடம் எங்கே நடக்கிறது? கிராமத்தில் பிள்ளைகள் ஏது?’ எனக் கேட்டு அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டுச் செல்கிறான்.

தாதூவைத் தொடர்ந்து வரும் கிழவரான நாட்டாண்மைக்காரர், இராஜாராமுடன் நெருங்கிப் பழகியவரைப் போலப் பேசி, அவனை அவநம்பிக்கையிலிருந்து மீட்டு அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகிறார். ஒட்டடையும் புழுதியும் பறவைகளின் எச்சமும் நிறைந்த பள்ளிக்கூடத்தினுள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தூங்கி எழுபவன், மாலையில் வேறு ரூபம் கொள்ளும் கிராமத்தைக் கண்டுக்கொள்கிறான். மேய்ச்சலுக்குச் சென்ற எண்ணிலடங்கா ஆடுகளுடன் சிறுவர்கள் கிராமத்தை நிறைக்கிறார்கள். கிராமம் புத்துயிர் பெறுகிறது.

ஆடுகளை மேய்ப்பதையே முதன்மையான வேலையாகக் கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் அக்கிராமத்தில், சிறுவர்களும் ஆடுகளை மேய்க்க வேண்டிய கட்டாயம்! அதுவே அச்சிறுவர்களின் வயிற்றுப் பசியையும் தீர்க்கிறது. வயிற்றுப்பாட்டைத் தவிர்த்துவிட்டுப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்குச் சம்மதமில்லை. போலவே, சிறுவர்களுக்கும் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை. இத்தகுச் சூழலில், பள்ளியைச் சுத்தம் செய்து மாணவர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறான் இராஜாராம். ஆரம்பத்தில் சுணக்கம் காட்டும் பிள்ளைகள், நாளடைவில் ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை வேலைகளில் பள்ளிக்கு வருகிறார்கள். கூடவே, அவரவர் தேவைகளையொட்டி கிராம மக்களும் ஆசிரியரின் உதவியை நாடிப் பள்ளிக்கு வரத் தொடங்குகிறார்கள். மிக விரைவிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று அக்கிராமத்தின் இன்றியமையாத சக்தியாக இராஜாராம் உருவெடுக்கிறான்; கிராமத்தின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுகிறான். கிராமத்துப் பள்ளியுடன் சேர்த்து ஒரு விளையாட்டுக் கூடத்தைக் கட்ட முனைந்து, பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், கிராம மக்களின் உதவியுடன் அதைச் செய்து முடிக்கிறான். சமஸ்தானத்தின் அரசரை வரவழைத்து மிக விமர்சையாகத் திறப்புவிழாக் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறான். எந்தளவுக்கு வேகமாக, அக்கிராமத்துடனும் அம்மக்களுடனும் இணக்கம் கொள்கிறானோ அதேயளவுக்கு வேகமாக அவன் அங்கிருந்து வெளியேறும்படியான சூழலைக் காலம் ஏற்படுத்துகிறது. ஒட்டு மொத்த கிராம மக்களும் ஒவ்வொருவராகத் தங்களைப் பஞ்சத்திலிருந்து காத்துக்கொள்ளக் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். இறுதியாக அவனும் வெளியேறுகிறான்.

கதைச்சொல்லி என்ற வகையில், ஆசிரியன் இராஜாராம்தான் நாவலின் முதன்மை பாத்திரம்போலத் தோன்றினாலும், பன்கர்வாடியைப் பொறுத்த வரையில், நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரங்களும் முதன்மையானவர்களே! ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தால் மிளிர்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், வாசகர்கள் தங்களுக்கு மிக நெருக்கமாக உணரும் வகையில், நாவலாசிரியர் படைத்திருக்கிறார். இந்நாவலின் சிறப்பிற்கும் தனித்துவத்திற்கும் அதுவே காரணம்.

நாவலில் ராமா என்ற கதாபாத்திரம் எண்ணற்ற செல்லாக்காசுகளைச் சேமித்து வைத்திருப்பான். அவற்றின் மதிப்பு அவனுக்குத் தெரியாது. ‘கொண்டை ரூபாய்’ எனப்படும் ராணி தலையுள்ள அந்நாணயங்களுக்கு, அதன் சிறப்புத் தன்மையால் வியாபாரிகளிடம் தனித்த விலையுண்டு. அதை மாற்றித் தரும் வேலையை ஆசிரியன் செய்துக்கொடுப்பான். முதலில், தன்னிடமிருக்கும் ஒரு நாணயத்தை மட்டும் மாற்றிக்கொடுக்கச் சொல்லும் ராமா, பிறகு ஆசிரியன் மீது நம்பிக்கை ஏற்பட்டவுடன் பெரும் எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்டு வந்து குவிப்பான். அனைத்தையும் மாற்றித் தரச் சொல்வான். அதேபோல, முதல் தடவை நாணயத்தை மாற்றி வந்து கொடுக்கும் ஆசிரியனிடம், தன் நாணயத்தின் மதிப்பைக் காட்டிலும் இரண்டு அணா அதிகம் தந்துவிட்டதாகக் கூறி அதைத் திருப்பித் தருவான். பெரும் எண்ணிக்கையிலான நாணயங்களைத் தந்துவிட்ட பிறகும் அவை குறித்து அதிகம் கேட்டுக்கொள்ளமாட்டான். மாஸ்டர் தன்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்குள் மிகுதியாகவே இருக்கும். அவனது குணம் போற்றத்தக்கதாக இருக்கும்.

ஆனந்தா ராமோஷி என்றொரு கதாபாத்திரமுண்டு. பசிக்காகச் சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபடுபவன், சில காலம் கழித்துத் திருடியவர்களிடமே சென்று தன் திருட்டை ஒப்புக்கொள்வான். அவனுடைய வாதம், ‘பசிக்குக் கொடுங்களய்யா என்று கேட்டால் யாரும் கொடுப்பதில்லை. நான் என்ன செய்யட்டும்? பூச்சிகள், குருவிகள், கிளிகள் எவ்வளவோ தானியங்களை உங்களைக் கேட்டா சாப்பிடுகின்றன? அவற்றை என்ன செய்கிறீர்கள்? எதுவும் செய்வதில்லைதானே! அதேபோல என்னையும் ஒன்றும் செய்யாதீர்கள்’ என்பான்.

நிலத்தை உழும் தங்களுடைய எருதுகளில் ஒன்று இறந்துவிட, நிலத்தை உழ வேண்டிய கட்டாயத்தில், மற்றொரு எருது தேடி அலையும் ஷேகூவின் மனைவி, ஒரு கட்டத்தில் எருது கிடைக்காத சூழலில், இருக்கின்ற ஓர் எருதுவுக்கு இணையாகத் தன்னையும் வண்டியில் பூட்டச் சொல்லி, எருதைப் போல நிலத்தை உழுதுமுடிக்கிறாள். அவள் நாவலில் மிகத் தனித்துவமான பாத்திரம். இடைவிடாமல், டீயும் பீடியும் குடித்தே இறந்த காதாபாத்திரம் ஒன்றும் நாவலிலுண்டு.

நாட்டாண்மைக் கிழவர், கோள்மூட்டித் தாதூ, கசாப்பு வேலைக்காகவே ஊரில் தங்கியிருக்கும் யாருமற்ற ஆயபூ, ஓநாயை வேட்டையாடிக் கொல்லும் சதா, கைம்பெண்ணொருத்தியை மணந்துக்கொள்ளும் ஜகன்யா, நாட்டாண்மைக் கிழவரின் பேத்தி அஞ்சி என ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டுக்கொண்டே போகலாம்.

இந்நாவலின் வழியாக, அன்றைய சமூகத்திலிருந்த சில வழக்கங்கள் ஓர் ஆவணம் போல எனக்குத் தெரிய வந்தன. உதாரணத்துக்கு, ஊர் ஊராக வந்து காசு கொடுத்து கோழி முட்டைகளைச் சேகரித்துச் செல்லும் பணியை இஸ்லாமியர்கள் செய்துள்ளனர். போலவே, ஆசிரியர்கள் கோட்டும் வேட்டியும் அணிவது கட்டாயமாக இருந்துள்ளது. கட்டுப்பாட்டை மீறி மறுமணம் செய்யும் பெண்களின் மூக்கை அறுக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஒத்த வயதுடைய இளைஞர்களின் திருமணங்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ஒரே நாளில் முடிக்கப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் அன்றைய காலக்கட்டத்திலிருந்த வழக்கங்களின் ஆவணங்களாக இன்று நாவல் மூலம் அறியமுடிகிறது.   

கிராமத்துப் பள்ளியொன்றுக்கு ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற தன் சொந்த அனுபவத்தின் வழியாக, தன் முதல் நாவலை எழுதியுள்ளார் வெங்கடேஷ் மாட்கூல்கர். ‘பன்கர்வாடி’ நாவலை எழுதும்போது அவருக்கு வயது 27! ‘பன்கர்வாடி’ 1954ஆம் ஆண்டில், மராத்தி இதழொன்றின் தீபாவளி மலரில்தான் முதன்முறையாகப் பிரசுரமாகியுள்ளது. மறுவருடமே புத்தகமாக அச்சாகியுள்ளது. அதைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டில் ‘தி விலேஜ் ஹாட் நோ வால்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டேனிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, மராத்தி வாசகர்களையும் தாண்டி, பிற மொழிகளிலும் மிகப் பரவலான வாசகப் பரப்பைப் பெற்றிருக்கிறது. தமிழில், நேஷனல் புக் டிரஸ்ட் வாயிலாக, 1977ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர், உமாசந்திரன். அவரது மொழிபெயர்ப்பு, எவ்விதத் தொய்வுமின்றி வெகுவிரைவாக, மிகச் சரளமாக நாவலை வாசிக்க வழிவகைச் செய்கிறது. நாவலை வாசித்து முடித்ததும், வாசகர்கள் பன்கர்வாடி கிராமத்தில் அக்கிராமத்து மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வெளியேறிய உணர்வைப் பெறுவார்கள் என்பது மிக உறுதி!

‘பன்கர்வாடி’, மராத்தியில் இயக்குநர் அமோல் பலேக்கரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1995ஆம் ஆண்டில் வெளியாகி, சிறந்த மராத்தி திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ளது. திரைப்படத்துக்கு நாவலாசிரியர் வெங்கடேஷ் மாட்கூல்கரே திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments