கதிரவனின் ஏழாவது குதிரை - தர்மவீர்பாரதி – தமிழில், சௌரி


 

1952ஆம் ஆண்டில், இந்தியில் வெளியான ‘சூரஜ் கா சாத்வான் கோடா’ எனும் நாவல், தர்மவீர்பாரதியின் இரண்டாவது நாவலாகும். அவரது முதல் நாவல் ‘குணாஹோன் கா தேவதா’ (1949) வெளியான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது.

‘சூரஜ் கா சாத்வான் கோடா’வின் தமிழ்ப் பதிப்பு, ‘கதிரவனின் ஏழாவது குதிரை’ எனும் பெயரில் சௌரி (எ) சௌரிராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகி, மிகச் சரியாக இருபது ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், நான் அப்பிரதியை வாசித்து இக்குறிப்புகளை எழுதுகிறேன்.

தர்மவீர்பாரதிக்கும் அவரின் நண்பர்களுக்கும், மாணிக் முல்லா என்பவர் ஏழு பகல் வேளைகளில் சொல்லிய கதைகளைப் பாரதி வாசகர்களாகிய நமக்குச் சொல்லிச் செல்வது போல் எழுதப்பட்டுள்ளது இந்நாவல். நாவலின் பிரதான கதைச்சொல்லி என்றால், அது மாணிக் முல்லாதான். ஏழு பகல்களில் அவர் சொல்லிச் செல்லும் கதைகள், வாழ்க்கையில் அவர் கடந்து வந்த மூன்று பெண்களுடனான கதைகளாக விரிகின்றன. அம்மூன்று பெண்களும் தனித்துவமானவர்கள்; வெவ்வேறு வகையானவர்கள். அவர்களை இணைக்கும் புள்ளியாக மாணிக் முல்லா இருக்கிறார். தன்னாவும் அவனது அப்பாவும்கூட அவர்களை இணைக்கும் கண்ணிகளாகக் கதையில் வலம் வருகிறார்கள்.

பொருளாதார – வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நம் வாழ்வில் வகிக்கும் பங்கு வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரே முடிவை நோக்கி நகரும்படியாக இருப்பதை மாணிக் முல்லா சொல்லும் கதைகள் வாயிலாக நாம் அறியலாம். ஜமுனாவுக்கும் தன்னாவுக்கும் இடையிலான காதலில் சாதி ரீதியான பேதமும் பொருளாதார ரீதியான பேதமும் ஒவ்வொரு வீட்டுக்கும் தடையாக இருக்கிறது. பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் ஜமுனாவின் தாய், ‘தன்னா நம்மிலும் கீழானவன்’ என்று அவனை மறந்துவிடச் சொல்கிறாள். தன்னாவின் தந்தை மஹேஸர் தல்லால், ‘ஜமுனா நம் அந்தஸ்துக்கு அருகதையில்லாதவள்’ என்று தன்னாவிடம் சொல்லுகிறார். கிட்டத்தட்ட இதேதான் மாணிக் முல்லா – லிலீ காதலில் நிகழ்கிறது. தன்னா – லிலீ மணவாழ்வில், தன்னாவின் பொருளற்ற வாழ்வை ஏற்கமுடியாமல், லிலீயை அவள் அம்மா அழைத்துச் சென்றுவிடுகிறாள். சத்திக்கும் மாணிக் முல்லாவிற்கும் இடையிலான உறவு கெடுவதற்கும் வர்க்க பேதமே காரணமாக அமைகிறது.

ஜமுனா, தனக்குத் தன்னாதான் வேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்து, அதில் உறுதியாக இருக்கும் பெண்ணாக இருக்கும்போதிலும், தன்னா தன்னுடைய அப்பாவுக்குக் கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். ஜமுனாவின் உறுதி அவனுக்கில்லை. தன்னாவின் கோழைத்தனம், ஜமுனாவின் வாழ்க்கையை வேறொரு திசையை நோக்கித் திருப்புகிறது.

சத்தி, மிகவும் துணிச்சலான பெண். ஆனால், மிகவும் துரதிர்ஷ்டசாலி. மாணிக்கிற்கும் சத்திக்கும் இடையிலான கதையில், மாணிக்கின் கோழைத்தனம், சத்தியின் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது. வாழ்க்கையில், அவள் நம்பிய ஒரே ஆடவன், தனக்குத் துரோகம் இழைத்ததை இறுதி வரையில் அவளால் ஏற்கமுடியவில்லை. மாணிக் அந்தக் குற்றவுணர்வில் தன்னைத் தானே மன ரீதியாக வதைத்துக்கொள்கிறார்.

நாவலில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு துயர் படிகிறது. நாவலில், தன்னாவின் கதையும் சத்தியின் கதையும், துயர் நிறைந்த கதைகளாகச் சொல்லப்பட்டாலும்கூட, அவர்களைக் காட்டிலும் துயர் நிரம்பிய கதை அக்கதைகளைச் சொல்லும் மாணிக் கதைதான் என்பதை வாசகர்களாகிய நாம் கண்டுக்கொள்ள முடியும். இந்து புராணத்தின்படி, சூரியன் ஏழு குதிரைகள் அடங்கிய தேரில், உலகை உலா வருபவர். அந்த ஏழு குதிரைகளில், ஒரு குதிரை மட்டும் மிகவும் பலவீனமானது. அந்தப் பலவீனமான குதிரையால், மற்ற குதிரைகளின் வேகம் தடைப்படுகிறது. பலவீனமான அந்தக் குதிரை அதிகம் கற்பனைகளில் உழன்றுக்கொண்டிருக்கக் கூடிய ஒன்றும்கூட! அந்த வகையில், இந்தக் கதையில், சூரியனின் ஏழாவது குதிரை மாணிக் முல்லாதான்!

மாணிக் முல்லா, இக்கதையில், சூரியனின் ஏழாவது குதிரையை நம்பிக்கை மற்றும் எதிர்காலம் எனும் வகையில் தன் கதையில் சொல்லிச் செல்வதுகூட, தன் பலவீனத்திலிருந்து விடுபடவே!

‘கதிரவனின் ஏழாவது குதிரை’ வெளியாகியிருக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு பார்க்க, வடிவ ரீதியிலும் கதையைச் சொல்லியிருக்கும் பாணியிலும் இஃதொரு முன்னோடி முயற்சி. வெவ்வேறு பார்வையில், வெவ்வேறு கோணங்களைத் தாங்கி நிற்கும் பிரதி! பக்க அளவில் மிகச் சிறியது என்றாலும், அது நம் மனப்பரப்பில் விரித்துக் காட்டும் வாழ்க்கை மிகப் பெரியது. அவை எழுப்பும் கேள்விகள் எண்ணற்றவை.

தமிழில் யுவன் சந்திரசேகரின் கதைச் சொல்லும் பாணியை நினைவூட்டும் நாவல் இது!

இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான ஸ்யாம் பெனகல், 1994இல் இந்நாவலை இதே பெயரில் (‘சூரஜ் கா சாத்வான் கோடா’) திரைப்படமாக்கி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் 1999இல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், எழுத்தாளர் அக்ஞேயா!

Comments