கடைசியில் இதுதான் மிச்சம் - புச்சி பாபு - தமிழில், பி. வி. சுப்பிரமணியன்

 


‘நவோதயா’ எனும் தெலுங்கு இதழில், ‘சிவரகு மிகிலேதி’ புச்சி பாபுவால் எழுதப்பட்ட தொடர்கதையாகும். அத்தொடர்கதை, 1952ஆம் ஆண்டில், நாவலாகப் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. பிறகு, 1957இல், அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பு வெளியாகி, மிகப் பரந்த வாசகர் கவனத்தைப் பெற்று, இன்று தெலுங்கு இலக்கியத்தில் ‘கிளாசிக் நாவல்’ ஆகப் புகழ் பெற்றுப் போற்றப்படுகிறது. அந்நாவலை ‘கடைசியில் இதுதான் மிச்சம்’ என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. சுப்பிரமணியன். ராச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்பஜீவி’ எனும் தெலுங்கு நாவலையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். ‘அற்பஜீவி’ நாவலைப் போலவே ‘கடைசியில் இதுதான் மிச்சம்’-உம் ஓர் ஆடவனின் உளவியலைப் பேசும் மனோதத்துவ நாவல்தான் என்பது அவர் மொழிபெயர்ப்பின் தேர்வில் இருக்கும் ஓர் ஒற்றுமை.

தயாநிதி, மருத்துவ மாணவன். அவனது அம்மா, ‘குடும்ப வாழ்க்கையிலிருந்து நெறிப் பிறழ்ந்தவள்’ என்று சமூகத்தால் கருதப்பட்டு, தூற்றப்படுபவள். அவளால் குடும்பத்தில், நாளுக்கு நாள் சச்சரவுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அப்பா தசரதராமையாவுக்கு எல்லாம் தெரியும். என்றாலும், அவரால் அவளைக் குடும்பத்திலிருந்து விலக்க முடியவில்லை. மேலுமதிகமாகக் கௌரவத்தை இழக்க விருப்பமில்லை அவருக்கு. தயாநிதியின் அண்ணன், அவள் மீது வெறுப்பை உமிழ்ந்து, மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான். எல்லாவற்றையும் மீறி, அவளுடன் - தாயுடன் - இணக்கம் கொண்டு பரிவு காட்டுபவன் ‘தயாநிதி’ மட்டும்தான்!

அடிக்கடி வலிப்பு நோயினால் அவதியுறும் அவளுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கிலே, அவன் மருத்துவம் படிக்கிறான். ஆனால், தயாநிதி மருத்துவன் ஆகும் முன்னரே, விதிவசம் தன்னுயிரை அவள் ஒப்படைக்கிறாள். அவள் இறந்தாலும்கூட, அவள் மீதான தாக்குதல்களும் அவளைப் பற்றிய பேச்சுகளும் தொடர்ந்து தயாநிதியின் வாழ்க்கையைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. தயாநிதியின் எல்லாச் செயல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும், அவன் அம்மாவின் குணத்தையே எல்லோரும் ஒப்புமைப்படுத்திப் பேசுகின்றனர். அவன் தாய் மீதே பழி சுமத்திக் காரணம் கற்பிக்கின்றனர். அவனால் அதிலிருந்து விடுபட்டு அமைதியை அடையவே முடிவதில்லை.

தயாநிதிக்கு கோமளி என்ற பெண்ணின் மீது காதல். பேரழகியான அவளின் தனித்தன்மைகளில் நிதிக்குப் பெரும்விருப்பம். என்றாலும், அவளைத் திருமணம் செய்துக்கொள்ளப் பயம்; தயக்கம். திருமண எண்ணம் மட்டும் அவனுக்குள் எழுவதேயில்லை. அதற்கும் அவளின் ‘தனித்தன்மை’யே காரணமாகிறது. அவள் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள். நிதியின் அப்பாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘நாலு பேர் நுழைந்து புறப்படும் வீடு’ கோமளியுடையது. ஒரு வகையில், அந்த எண்ணமே நிதிக்கும் இருக்கிறது என்றாலும், அவள் மீதான பற்றை விட்டுவிட முடியவில்லை.

கோமளி மீதான நிதியின் விருப்பத்தைத் தாய் தந்தை இருவரும் தெரிந்தே வைத்திருக்கின்றனர். தாயால் மகனைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. தந்தைக்கோ, தாயின் குணத்தால், அவளின் தயவுடன்தான் இதெல்லாம் நடக்கிறது என்ற எண்ணமும் எரிச்சலும் இருக்கிறது. மாமன் மகள் சுசீலாவைத் திருமணம் செய்துக்கொள்ள நிதியை வலியுறுத்துகிறார். சுசீலாவின் அப்பா கோவிந்தராவ், தாசில்தார். நல்ல வசதியான குடும்பம். சுசீலாவின் தாய் நரசம்மாவுக்கும் தயாநிதிக்குப் பெண்ணைத் தருவதில் விருப்பம்தான். என்றாலும், அவ்விருப்பம் கோவிந்தராவுக்கு இல்லை. காரணம், அந்த வீட்டை நன்கு அறிந்தவர் அவர்.

‘குடும்பச் சங்கதிகள்’ தெரிந்தவர்கள் யாரும் நிதிக்குப் பெண் தர முன்வரமாட்டார்கள் எனக் கருதும் தசரதராமையா வெளியில் முயற்சி செய்து நிதிக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். பெண் இனத்தின் மீதே தான் நம்பிக்கை இழந்ததற்குக் காரணம் அம்மாதான் என்ற எண்ணம் தயாநிதிக்கு உண்டு. அவனால் எந்தப் பெண்ணுடனும் நெருக்கம் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. அதற்கு வலு சேர்க்கும் வகையில், கோமளியும் யாரோவொரு ஜமீன்தாருடன் ஓடிவிடுகிறாள். அதனால் நிதிக்கு எதிலும் பற்றில்லை. வாழ்க்கையின் போக்குக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். தொடர்ந்து ஏதேதோ அலைக்கழிப்புகள், அவன் வாழ்க்கையில் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. ஏலூர், நியாயம்பள்ளி என அவன் பிழைக்கச் செல்லும் எல்லா ஊர்களிலும், எல்லா நிலைகளிலும், அவன் அவஸ்தைகளையே அனுபவிக்கிறான்.

அமிருதம், தயாநிதியின் முறைப்பெண். திருமணமானவள். அத்தையின் மரணத்துக்குப் பிறகு தயாநிதியின் வீட்டுக்கு வருபவள், ‘அத்தான். அத்தான்…’ எனத் நிதியின் மீது மிகுந்த அன்புடனும் பரிவுடனும் வாஞ்சையுடனும் நடந்துகொள்கிறாள். கணவனுடன் ‘இயற்கையாக’ கிடைக்க வேண்டிய எந்தச் சுகமும் அவளுக்குக் கிடைக்காத ஏக்கம் அவளுக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அவள் தன்னை எல்லா வகையிலும் நிதியிடம் ஒப்புக்கொடுக்கிறாள்.

தயாநிதிக்கும் இந்திராவுக்கும் இடையிலான திருமண உறவு சுமூகமாக இல்லாமல் இருக்கும்படியாகவே சூழல்களை அமைத்து, அவர்களுக்கிடையே இடைவெளியைப் பூதாகரமாகப் பெருக்குகிறது வாழ்க்கை. எந்தவொரு சுகத்தையும் தயா நிதியிடமிருந்து அனுபவிக்காமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துப் போகிறாள் இந்திரா.

நாவலில் ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவைக்கு, ஜகந்நாதம் எனும் சிறுவன் - அமிருதத்தின் தம்பி - காரணமாக அமைகிறான். மிகக் குறும்பும் சுறுசுறுப்புமிக்க அவன், தூயத் தெலுங்கில் பேசும் வசனமெல்லாம் நகைப்பைத் தூண்டுகின்றன. அவன் பாத்திரப் படைப்பு மட்டுமே நாவலில் எத்துன்பத்தையும் அடையாத ஒன்றாக, நகைச்சுவையைத் தவிர்த்து வேறு உணர்ச்சிகளை எழுப்பாத பாத்திரமாக இருக்கிறது.

நிதியின் அம்மா மீது குற்றம் சுமத்தி நிதியைச் சீண்டும் எல்லோரும், ஏதேனுமோர் இடத்தில் சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் நெறியிலிருந்து விலகவே செய்கிறார்கள். அதுதான் இயற்கையும்கூடப் போல! கோமளி, ஜமீன்தாருடன் ஓடிப்போய்விட்டு இறுதியில் நிதியிடமே திரும்புகிறாள். உடனிருந்து அவளை ஆதரித்தாலும் நிதியால் அவளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சுசீலா, திருமணத்துக்கு முன்பே கருத்தரித்துவிடுகிறாள். ஆனால், குடும்பத்தாரின் கட்டாயத்துக்குட்பட்டு, வேறொருவனைத் திருமணம் செய்துக்கொள்கிறாள். அவளால் அந்த வாழ்க்கையைச் சகஜமாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்துகொண்டு இறந்துப்போகிறாள்.

இப்படியாக, ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசிக்கொண்டே செல்லலாம். அந்தளவுக்கு நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குணநலன்கள், சம்பவங்களின் போக்கிலும் உரையாடல்களிலும் மிகத் தனித்துவத்துடன் நாவலாசிரியரால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே கதாபாத்திரங்களின் வழியே சமூகம் சார்ந்து முன்வைக்கப்படும் மிக ஆழமான தத்துவவிசாரணைகளும் எழுப்படும் கேள்விகளும் இந்நாவலை மிகக் கனமான படைப்பாக்குகின்றன.

‘நல்லவர்களாக இருப்பவர்களே கெட்டுப்போகிறார்கள்’ என்றொரு வாசகம் நாவலில் உண்டு. வாழ்க்கையில் கெட்டுப்போகிறார்களா? அல்லது வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்கிறார்களா என்ற கேள்விகள் அவ்வாசகத்துடன் சேர்ந்து இயல்பாக எழுகின்றன. அவ்வாசகமும், கேள்விகளும் யாருடைய வாழ்க்கைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ வாழ்க்கைச் சுழலில் அகப்பட்டுக்கொண்டு அல்லலுறும் தயாநிதிக்குப் பொருந்தும்.

நாவலில், கதாபாத்திரங்களின் உளவியலை ஆராயும் விதமாக ஏராளமான இடங்கள் வருகின்றன. அதில் முக்கியமானது, அமிருதம் கருவுற்றிருக்கிறாள் என்பதை ஜகந்நாதத்தின் கடிதம் வழியாக அறிந்துக்கொண்ட பின், நிதிக்குள் எழும் மன அலைக்கழிப்புகள். ‘திட்டமிட்டு நிகழாத அவர்களுக்கிடையிலான உறவின் பரிசுதானா அக்கரு?’ என்ற கேள்வி தயாநிதியை வதைக்கிறது. அமிருதத்துக்குப் பெண் குழந்தைப் பிறந்து, அதைப் பார்க்கும் செல்லும்போது, அவனுக்குள் எழும் மனப் போராட்டம் மிகத் தீவிரமாகிறது. அமிருதத்தையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கத் தயங்குகிறான். குற்றவுணர்வும் கூச்சமும் அவனை ஆட்கொள்கின்றன. அமிருதத்தின் முகத்தில் எப்படி விழிப்பது? என்ற கேள்விக்கு மத்தியிலும், தான் தேடும் விடையைத் தேடிச் செல்கிறான். ஆனால், அமிருதம் தங்களுக்குள் நிகழ்ந்த உறவை பற்றிக் கொஞ்சம் கூட நினைபில்லாதவள் போல நடந்துக்கொள்கிறாள். மிக இயல்பாக, தன் மாமியார் முன்னிலையில், ‘அத்தானின் சாயலில்தானே குழந்தை இருக்கிறாள்?’ என்கிறாள். அவள் அதை எந்த உள்ளோக்கமுமற்றுதான் கூறுகிறாள். என்றாலும், தயாநிதிக்கு ஒரு கணம் தூக்கிவாறிப் போடுகிறது. குழந்தைத் தன் ஜாடையில் இருக்கிறதா என்று சோதிக்கிறான். அவனுக்குள் இருக்கும் கேள்வியை அமிருதத்திடம் கேட்கத் துடிக்கிறான். ஆனால், கடைசி வரையில் அவனால் கேட்க முடியவில்லை. சூழல் அதற்கான வாய்ப்பை அவனுக்கு வழங்கவில்லை.

இந்நாவலின் கதை 1932-1940க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்கிறது. அதனால் அந்தக் காலத்தையொட்டிய அரசியல் நிலவரங்கள், கதாபாத்திரங்களின் அரசியல் தீவிரத்துடன் கதையின் போக்கில் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. ராயலசீமையில், காலரா மற்றும் ப்ளேக் நோய் தீவிரமாகப் பரவியிருந்த சூழலும் நாவலில் கையாளப்பட்டுள்ளது. மருத்துவனான நிதி, மிகத் தீவிரமாக, அந்நோயுடன் மக்களுக்கு வைத்தியம் செய்யும் பகுதிகள், நிகழ்காலத்தில் கொரோனோ பெருந்தொற்றை நினைவூட்டும்படி இருந்தன.

‘நிகழ்காலத்தைத் தவிர, கடந்த காலம், எதிர்காலம் இரண்டுமே ஒருவனுக்கு இருக்கக்கூடாது. அவை இரண்டும் நிகழ்காலத்தைக் கொன்றுவிடுகின்றன. கடந்த காலம் தீர்ப்புக் கூறுகிறது; எதிர்காலம் தண்டனை விதிக்கிறது. இவ்விரண்டையும் பற்றிச் சிந்தித்து, நலிந்து, பரிதவித்து, மனிதன் நிகழ்காலத்தில் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.’ இவ்வரிகள், நாவலின் போக்கில், தயாநிதியின் சிந்தனையில் எழும் எண்ணங்களாக, ஓர் அத்தியாயத்தில் இடம்பெறும். நாவல் முழுக்க, தயாநிதி கடந்த காலச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டு, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வில்தான் வாழ்க்கையைத் தொலைத்தபடி இருக்கிறான். கடந்த காலத்திலிருந்து விடுபட்டும் எதிர்காலத்தில் நிகழ்விருக்கும் நிகழ்வுகளின் மீதான அச்சவுணர்விலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் அவனால் விடுபடவே முடிவதில்லை. ‘காத்யாயனி’ எனும் வைரக் கற்கள் அவனுக்குக் கிடைத்து, பெரும் பணக்காரனாகி, சுரங்கம் தோண்டும் தொழிலதிபராக மாறிவிட்ட பிறகும்கூட, துயரம் அவனை அரசியல் ரீதியாகத் - தொழிலாளிகளின் கூலிப் பிரச்சனையாகத் - துரத்தவே செய்கிறது.

எல்லாம் போக, தன் வாழ்க்கையில், ‘கடைசியில் எதுதான் மிச்சம்?’ என்ற கேள்விக்கு, ‘கடைசியில் இதுதான் மிச்சம்!’ எனத் தயாநிதி கண்டடையும் விடயம், ‘தன்னைத் தானே முழுமையாக உணர்ந்துக்கொண்டு, தன்னில் தானே நிறைவு பெற்றது’தான்! கடைசியில் அதுதான் மிச்சம்!

தமிழில், நமக்குக் கிடைக்கக் கூடிய ‘க்ளாசிக்’ தெலுங்கு நாவல்களில், ‘கடைசியில் இதுதான் மிச்சம்’தான் கதாபாத்திரங்களின் உளவியலை மிகத் தீவிரமாக அணுகிய மிகச் சிறந்த நாவல் என்பதில் சந்தேகம் இல்லை. ‘அற்பஜீவி’யும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்ததைப் போல, ஒரு கதாபாத்திரத்தின் உளவியலைத்தான் பேசுகிறது. எனினும், அது ‘சுப்பையா’ எனும் ஒருவனின் கதாபாத்திரத்தை மட்டுமே கையாள்கிறது. ஆனால், ‘கடைசியில் இதுதான் மிச்சம்’, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உளவியலையும் மிகச் சிறப்பாகச் சம்பவங்களின் போக்கில் பேசிச் செல்கிறது. காலத்தைக் கடந்து, இன்றும் அதன் தீவிரம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. நாவல் ஆர்வலர்கள், தவறவிடக்கூடாத மிகச் சிறந்த மொழியாக்கம்!

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக, 1980ஆம் ஆண்டில் வெளியான ‘கடைசியில் இதுதான் மிச்சம்’ மிக மிக அவசியமாக, மறுபதிப்பு காணப்பட வேண்டிய மொழியாக்கம் என்பதில் சந்தேகமில்லை!

Comments