மித்ராவந்தி – கிருஷ்ணாஸோப்தி - தமிழில், லட்சுமி விஸ்வநாதன்

 


குருதாஸூக்கும் தனவந்திக்கும் மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள். எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பஞ்சாபி கூட்டுக்குடும்பம். மேலும், அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறாள், திருமணமாகி வேறொரு வீட்டில். 

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில், ஒவ்வொருவரும் ஏதொவொரு வகையில், ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனுமொரு விஷயத்தில் முரண்பட்டே இருப்பார்கள். அஃது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் சிக்கல்களும் வருத்தங்களும் மிக அதிகமாகவே இருக்கும். முதல் மருமகள், சுஹாக் மிக அடக்கமானவள். மாமனாருக்கும் மாமியாருக்கும் மிக இணக்கமானவள். கிட்டத்தட்ட வீட்டின் எல்லா வேலைகளையும் தட்டிக்கழிக்காமல் செய்யும் மிகப் பொறுப்பானவள். இளைய மருமகள் ஃபூலா, நயவஞ்சகமானவள். அவளுக்கு யாரைப் பற்றியும் கவலைகள் கிடையாது. தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் நகைகள், புடவைகள் மீது மட்டுமே மிக அதிகக் கவனம். மேலும் நகைகள் சேர்ப்பதில்தான் அதிக விருப்பம். பாசாங்குகள் செய்து கொண்டு, எந்த வேலையும் செய்யாமல், அந்த வீட்டில் சுகவாழ்வு வாழ்பவள். எப்போது அந்த வீட்டைவிட்டு வெளியேறலாம் எனக் காத்துக்கொண்டிருப்பவள். அவளது பாசாங்குத்தனங்களை வெளிக்கொணர, அவளை எப்போதும் சீண்டிக்கொண்டே இருப்பாள் மித்ராவந்தி.

‘மித்ராவந்தி’ வீட்டின் இரண்டாவது மருமகள். அவள், இச்சமூக வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். ‘குடும்பப் பெண்’ என்ற வரையறைக்கு உட்படாதவள். அவள் பேச்சு ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ எனும் வகையிலே இருக்கும் எப்போதும்! தனது எண்ணங்களையும் ஆசைகளையும் மிக வெளிப்படையாக, மிகத் தெளிவாக எல்லாரிடத்திலும் நேருக்கு நேராகச் சொல்லும் அளவுக்குத் துணிவு மிக்கவள். மிகக் குறிப்பாக, தனது பாலியல் ஆசைகளையும் உடலின் தேவைகளையும்கூட எல்லாரிடத்திலும் தெரிவிக்கும் சுபாவம் கொண்டவள், பகிர்ந்துக்கொள்ளக் கூடியவள். மேலும், எல்லாரையும் ஏதோவொரு வகையில், தனது வெளிப்படையான பேச்சால் சீண்டுபவள். தனது மாமியாரிடத்தில், தன் உடல் தேவையைப் பூர்த்திச் செய்ய இயலாத அவரது மகனைக் குறித்து மிக வெளிப்படையாகவே குற்றம் சுமத்துபவள்.

தன் உடலாசைகளைக் கணவன் மூலமாகத் தணித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் மித்ராவந்தி, தன் கற்பனைகளால், கனவுகளால், பேச்சுக்களின் மூலமாக அதைத் தணிக்க முற்பட்டு, எல்லோருடைய எரிச்சலுக்கும் ஆளாகிறாள். மித்ராவந்தியைக் குறித்து, அந்த வீட்டிலிருக்கும் ஒட்டுமொத்த நபர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணமே இருக்கிறது. மித்ராவந்தியின் தாய் ‘பாலோ’ ஒரு விலைமாது. அவளது குடும்பப் பின்னணியைச் சரிவர அறிந்துக்கொள்ளாமல் அவளைத் திருமணம் செய்துகொண்டு வந்துவிட்டதைக் குறித்த வருத்தம், எல்லோரையும் காட்டிலும், மித்ராவந்தியின் மாமியாருக்கு மிக அதிகமாக உள்ளது. போலவே, அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபர்களுக்கும், மித்ராவந்தியின் பேச்சும் நடவடிக்கைகளும் மிகப் பெரும் வெறுப்பையும் எரிச்சலையும் வரவழைக்கின்றன. நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண் இப்படியெல்லாம் பேசமாட்டாள் என்ற எண்ணம்.  

நாவலாசிரியர் கிருஷ்ணாஸோப்தி, மித்ராவந்தியின் பாத்திரத்தை மிக வலுவாகப் படைத்துள்ளார். ஆனால், தனது பாலியல் விருப்பங்களை மிக வெளிப்படையாகப் பேசத் தெரிந்தப் பெண்ணின் குடும்பப் பின்னணி, ‘விலைமாதுவின் மகள்’ என்ற வகையில்தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை மட்டும் தவிர்க்க முடியவில்லை. மித்ராவந்தியின் தாய், பல்வேறு மனிதர்களும் காலமும் சேர்ந்து தின்று செரித்த உடலையும் இச்சைகளையும் இன்னும்கூடத் தன்னுள் தக்கவைத்திருக்கிறாள். மூப்பின் காரணமாக, அவள் உடலைத் தேடி வரும் ஆட்கள் இல்லாமல் ஆக, மகளின் கணவனையே அடையத் துடிக்கிறாள். மேலும், மகளின் உடலாசையைத் தணிக்கும் வகையில், வேறொருவனுடன் உறவு வைத்துக் கொள்வதற்காக, மகளை அனுப்புவதற்கான ஆயத்தங்களையும் செய்கிறாள். மித்ராவும் நெடுநாள் பசியைத் தணித்துக்கொள்ள முன்னகருகிறாள். இதுநாள் வரையில், தன்னுடன் கூடிக் கலந்த ஒருவனிடம் மித்ராவை அனுப்பிவைக்கும் பாலோ, இறுதியில் மித்ராவை அழைத்துத் தடுக்கிறாள். அவனை மகளுடன் பகிர்ந்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதை மித்ராவும் புரிந்துக்கொள்கிறாள். அதைபோலவே, தன் கணவன் மீது கண் வைத்து மருமகனை அடைய நினைக்கும் தாயின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாள் மித்ரா. மகளுக்கும் பெற்றவளுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’க்குச் சான்றாகவும் அதிர்ச்சியூட்டும்படியாகவும் இருக்கின்றன.

பெண் கதாபாத்திரங்களைக் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மட்டுமே நிறுத்திப் பொருத்திப் பார்த்த காலத்தில், இத்தகுப் பெண் பாத்திரங்களை எழுதத் துணிவதென்பது மிக அரிதான செயல். அதற்கு மிக உறுதியான மனமும் பார்வையும் வேண்டும். அது கிருஷ்ணாஸோப்தியிடம் இருந்திருக்கிறது. எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, எழுத்தாளர் கிருஷ்ணாஸோப்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.

‘மித்ரோ மர்ஜானி’ இந்தியில் 1966ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. ‘மித்ரோ மர்ஜானி’ என்றால், ‘நகரத்துக்குப் போ, மித்ரா’ என்று பொருள் என அறிகிறேன். முதன்மைக் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக்கி, ‘மித்ராவந்தி’ எனத் தலைப்பிட்டு, தமிழில் மொழிபெயர்த்திருப்பவர், லட்சுமி விஸ்வநாதன். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. முதல் பதிப்பு, 1996.

‘மித்ரோ மர்ஜானி’ எனும் பெயரிலேயே இந்நாவலை ‘சொல்வனம்’ இதழுக்காக, மொழிபெயர்ப்பாளர் அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments