அவன் காட்டை வென்றான் – கேசவ ரெட்டி - தமிழில், ஏ.ஜி.எத்திராஜுலு

 


பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் காணாமல்போய்விட்ட பன்றியொன்றைத் தேடிக் காட்டுக்குச் செல்லும் ஒரு கிழவனைப் பற்றிய கதைதான் ‘அவன் காட்டை வென்றான்’. ஓர் இரவில் நிகழும் சம்பவங்களை மிகக் கச்சிதமான மொழியில், மிகக் கூர்மையாகவும் நுட்பமாகவும் வெறும் 80 பக்கங்களுக்குள் படைத்துள்ளார் கேசவ ரெட்டி. இக்குறைந்த பக்கங்களுக்குள்ளாக அவர், கிழவனுடன் சேர்த்து நம்மை அழைத்துச் சென்று காட்டும் கானுயிர் வாழ்க்கையானது மிகப் பெரியது.

கிழவனின் பாத்திரம் மிக உறுதியானது. பன்றியைத் தேடியலைந்து அதைக் கண்டுகொண்டு, பன்றியையும் அதன் குட்டிகளையும் காக்க அவன் எடுக்கும் முயற்சிகளும் பிரயத்தனங்களும், தொடரும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அவன் எடுக்கும் முடிவுகளும் கொஞ்சமும் நாம் எதிர்பார்க்காதவையாக இருக்கின்றன.

‘காடு மிக விசித்திரமானது. காடு ரகசியங்கள் நிறைந்தது. அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது. எந்த அனுபவத்துக்கும், எப்படிப்பட்ட அறிவுக்கும் புரியாத ரகசியங்களால் நிறைந்தது.’ என்றாலும், கிழவனைப் பொறுத்த வரையில், அவனது அனுபவத்தின் அடிப்படையில், அதன் ரகசியங்களை அவன் அறிந்தே வைத்திருக்கிறான் எனலாம். கிழவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், எந்தளவுக்குக் காட்டையும் அதை உறைவிடமாகக் கொண்டு வாழும் ஒவ்வோர் உயிரினங்களையும் மிக நுட்பமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதையே எடுத்துரைக்கின்றன.

உயிர்கள் வளர்ந்த அளவுக்கு உள்ளம் வளராத அந்தக் காட்டில், கிழவன் தன்னறிதலின் வழியாக, அக்காட்டில் வாழும் உயிரினங்களின் குணாம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, காத்திருக்கும் ஆபத்துகளை மிக எளிதாகவும் மிக நுட்பமாகவும் கணிக்கிறான். தன் கணித்தலின் வழியே வெகுவிரைவான முடிவை நோக்கி, பிற உயிர்களை முந்திக்கொண்டு முன்னகர வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆகிறான்.

இறுதி வரையிலும், தாய்ப் பன்றியையும் குட்டிப் பன்றிகளையும் காக்க, மிக உறுதியுடன் போராடுபவன், வேறு வாய்ப்புகளின்றி, சூழல்களுக்குக் கட்டுப்படத் தொடங்குகிறான். சூழல்களைப் பொறுத்து, தனது தேவைகளைப் பொறுத்து, ஒவ்வோர் உயிர்களும் இன்னோர் உயிரிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளவே செய்கின்றன. அல்லது இன்னோர் உயிரை வேட்டையாடத் துடிக்கின்றன. தாய்ப் பன்றியின் இருப்பைக் காட்டிக்கொடுத்து, கிழவனுக்கு உதவிச் செய்யும் சிட்டுக்குருவி, இன்னொரு சந்தர்ப்பத்தில் அதன் இயல்பாலேயே நரிகளின் வருகைக்குக் காரணமாக அமைகிறது. அதனால், அதைக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான் கிழவன். காலத்தின் பிடியில் - சூழல்நிலையின் பிடியில் - அகப்பட்டுத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ‘சந்தர்ப்பங்கள்தானே உயிரினங்களைச் செயலுக்குத் தூண்டும்’ என்பதற்கிணங்க, இன்னொரு சந்தர்ப்பத்தில், தான் உயிருக்குயிராக நேசிக்கும் தாய்ப் பன்றியையும் கொல்லத் துணிகிறான்.

‘பறவைக்கோ விலங்குக்கோ மனிதன் செய்யக் கூடிய மாபெரும் உதவி அவற்றை அவற்றின் விருப்பத்திற்கு வாழ விட்டுவிடுவதுதான்!’ என்றொரு வரிகள் நாவலில் உண்டு. ஆனால், மனிதனால் அப்படி விட்டுவிட முடியுமா என்ன? மனிதனின் விருப்பு வெறுப்புகளையொட்டித்தானே அவன் ஒவ்வொரு உயிர்களையும் அணுகிறான்?

இந்நாவலின் மொழி மிக அபாரமானது. கிழவனின் செயல்களை ஒப்பிடும் வகையில், நாவலில் கையாளப்பட்டுள்ள உவமைகள் யாவும் ஒவ்வோர் உயிர்களின் இயக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. நாவலாசிரியரால், இது மிகப் பிரக்ஞை பூர்வமாகவே கையாளப்பட்டுள்ளது. உதாரணத்துக்குச் சில, 1. சுருட்டிப் படுத்துக்கொண்டிருந்த பாம்புக் குட்டி விழித்தெழுந்து தலையை மேலே உயர்த்தியதைப் போல… 2. பெண் மைனாவை அழைக்கும் ஆண் மைனாவின் வாலைப் போல… 3. ஆடாமல் அசையாமல் மத்தியான வெயிலில் நீருக்கடியில் படுத்துக் கிடக்கும் உளுவை மீன் போல… இப்படி நாவல் முழுக்க நிறைய உவமைகள் உள்ளன. ஓரிடத்தில், பன்றிக்குட்டிகளை நிலவின் அழகுக்கு ஒப்புமைப்படுத்துவான் கிழவன்.

தாய்ப் பன்றியையும் குட்டிகளையும் காக்க கிழவன் அசாத்தியமான முயற்சிகளையே மேற்கொள்கிறான. அந்த முயற்சியில், அவன் தன் உயிரையே கூடப் பணையம் வைக்க முன் வருகிறான். இறுதியில், அவன் முயற்சியின் பலனாக, அவனுக்கு வெற்றிக் கிடைப்பதில்லை. தோல்வியே மிஞ்சுகிறது. என்றாலும், அவன் முயற்சியின் தீவிரத்தால் அந்தக் காட்டை வென்றான் என்றுதான் சொல்ல வேண்டும்!

‘எந்த மனிதனும் முழு வெற்றி அடைய முடியாது. எவனும் தன் முயற்சிகள் அனைத்திலுமே வெற்றி வாகை சூட முடியாது. வெற்றி தோல்விகளின் சங்கமமே வாழ்க்கை.’ இதுதான் ‘அவன் காட்டை வென்றான்’ கூறும் செய்தி எனக் கொள்ளலாமா?

எர்னெஸ்ட் ஹெமிங்வேவின் ‘கிழவனும் கடலும்’ நாவலுக்கு இணையானது, ‘அவன் காட்டை வென்றான்’ எனும் இத்தெலுங்கு நாவல். ‘கிழவனும் கடலும்’ வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘அவன் காட்டை வென்றான்’ தெலுங்கில் 1980ஆம் ஆண்டும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1996ஆம் ஆண்டும் வெளியாகியுள்ளன. தமிழில் மொழிபெயர்த்தவர், ஏ. ஜி. எத்திராஜுலு ஆவார். மிகச் சிறந்த மொழியாக்கம்!

Comments