உயிரற்ற நிலா – உபேந்திர கிஷோர் தாஸ் – தமிழில், பானுபந்த்


‘மாலாஜன்ஹா’ ஒரிய மொழியில், 1922ஆம் ஆண்டில் வெளியான நாவல். ஒரிய மொழியில், ‘மாலாஜன்ஹா’ என்ற சொல்லுக்கு ‘இறந்த நிலா’ என்று பொருள். பேச்சு வழக்கில் இல்லாத அச்சொல், ஒரிய மொழியில் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அச்சொல்லை உபேந்திர கிஷோர் தாஸ், தன் நாவலுக்குத் தலைப்பாக்கிக் கொடுத்துள்ளார். திருமதி பானுபந்த், அதை ‘உயிரற்ற நிலா’ எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவர், இந்த ஒரிய நாவலை இந்தி வழியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக, 1991ஆம் ஆண்டு ‘உயிரற்ற நிலா’ வெளியாகியுள்ளது.

இந்நாவல், குழந்தைத் திருமணம் வழக்கத்திலிருந்த காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரிஸாவின் கிராமமொன்றில், பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளரும் ‘சத்யபாமா’ எனும் ‘சதி’ (சிறுமி), தன் கதையைச் சொல்லிச் செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்த வழக்கத்தையொட்டி, பன்னிரண்டு வயதான ‘சதி’க்கு அவள் விருப்பத்தைப் பொருட்படுத்தாத வகையில், வயது முதிர்ந்த ஓர் ஆசாமியுடன் திருமணம் நடக்கிறது. மிகச் சமீபத்தில்தான் ஜமீந்தார் ஆகியிருக்கும் அவனுக்கு, முதல் மனைவி இறந்த நிலையில், சதி இரண்டாம்தாரமாக மணம் முடித்து வைக்கப்படுகிறாள். சதிக்கு அவனைக் கொஞ்சம்கூடப் பிடிப்பதில்லை. கூடவே, பணிப்பெண் ஸௌரபியுடன் அவனுக்குத் தொடர்பும் இருக்கிறது. வாழச் சென்ற வீட்டில், பணிப்பெண் அவள் மீது செலுத்தும் அதிகாரத்தையும் சதி மிகவும் வெறுக்கிறாள். ஆனால், என்ன செய்வது? பொறுமைக் காக்கிறாள்.

வீட்டில், சதிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கணவனின் அம்மா – அவளது மாமியார் – மிக நல்ல குணத்துடன் இருக்கிறாள். அதே போல, கணவனின் மிகச் சிறய மகன் நடோ, ‘புது அம்மா’ என்று ஆசையுடன் சதியுடன் ஒட்டிக்கொள்கிறான். அந்த வீட்டில், கணவனுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கும் சதிக்கு, ‘நாத்’தின் நினைவு வந்துக்கொண்டே இருக்கிறது. லோகநாத், அவளின் ஊரில் வசிக்கும் உறவுக்காரன். தோழி நிஸியின் அண்ணனும் கூட. அவனுக்கும்கூட, சதியின் மீது விருப்பம் உண்டு. சதிக்கு வயது முதிர்ந்த ஓர் ஆளுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது என்பதைத் தெரிந்துக்கொண்டு, சதியின் அப்பாவிடம், அத்திருமணத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று நேரடியாகக் கூறும் துணிவு மிகுந்த ஒரே ஆள் அவன்தான். ஆனால், அவன் கருத்துக்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆனால், சதியின் கணவன், அவள் மீது பழிச் சுமத்தி, ஒதுக்கித் தள்ளும்போது சதிக்கு அடைக்கலம் தந்து காப்பவன் அந்த ‘நாத்’தான். தன் வறுமைக்கு மத்தியிலும் அவளைப் பொருட்படுத்தி மதிப்பளிக்கிறான். சதிக்கும் நாத்துக்கும் இடையிலான உறவு உணர்ச்சி பிணைப்பாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் தங்கள் காதலைக் குறித்தும் ஒருவர் மீதான மற்றொருவரின் அன்பைக் குறித்தும் ஒருபோதும் பேசிக் கொள்வதேயில்லை. கிராமத்தில், சதிக்கும் நாத்துக்கும் இடையிலான உறவை குறித்து மோசமான வதந்திகள் பரவும் சூழலில், ஒட்டுமொத்த பிராமணக் குடும்பங்களும் நாத்துக்கு எதிராகத் திரள்கின்றன. அவர்களை நாத் ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும், சதியால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விபரீதமான முடிவை நோக்கி நகர்கிறாள்.

அர்த்தமில்லாத வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் காழ்ப்புணர்வுகளும் பிராமணக் குடும்பங்களடங்கிய கிராமப் பின்னணியிலிருந்து சொல்லப்பட்டுள்ளன. பெண்கள், தங்களுக்குச் சொந்தமான மனமோ விருப்பங்களோ கனவுகளோ அற்ற ஜடங்களாக, அடிமைகளாக எல்லோராலும் நடத்தப்பட்டுள்ளனர். அதையே சடங்கு, சமூகக் கட்டுப்பாடு என்று கொண்டுள்ளனர்.

ஊரால் விலக்கப்படும் நாத்துக்குக் காய்கறிகளை விற்க வியாபாரிகள் மறுக்கும்போது, நாத் தூண்டிலையெடுத்து அதைச் சீராக்குகிறான், மீன் பிடிக்க! காய்கறி இல்லாவிட்டால் என்ன? மீன் பிடித்து அதைச் சமைத்து சாப்பிடலாமே என்ற எண்ணம் அவனுக்கு. கிராமத்தின் கட்டுப்பாடுகளும் சடங்குகளும் அவனுக்கொரு பொருட்டே இல்லை. ஓர் இலட்சியக் கதாபாத்திரம்தான் ‘நாத்’.

இருபதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ள இந்நாவல், மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் எழுதப்படுள்ளது. மிக நேர்த்தியாக, நேர்க்கோட்டு பாணியில், தொய்வில்லாத கதைச்சொல்லல் அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறார் நாவலாசிரியர். இஃது அவர் எழுதிய ஒரேயொரு நாவல் ஆகும். திருமதி பானுபந்த் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு தங்குத் தடையற்ற நடையில் அமைந்துள்ளது, மிகச் சிறப்பு!

நமக்குக் கிடைக்கக்கூடிய ஒரிய நாவல்களின் மொழிபெயர்ப்பில், ‘உயிரற்ற நிலா’தான் காலத்தால் மிகப் பிந்தையது என்பதால், ஒரிய மொழி இலக்கியங்களைப் பரீட்சியம் கொள்ள இந்நாவலிலிருந்து தொடங்குவதே மிக நல்லது.

இந்நாவல், இதே பெயரில் (மாலாஜன்ஹா) திரைப்படமாக எடுக்கப்பட்டு, 1965ஆம் ஆண்டில் ஒரிய மொழியில் வெளியாகி, அந்தாண்டின் மிகச் சிறந்த ஒரியத் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments