சோமனின் உடுக்கை – சிவராம காரந்த் – தமிழில், தி. சு. சதாசிவம்
‘இருட்டென்றால் இருட்டு, அப்படியொரு
இருட்டு. கண்ணோடு கண் வைத்துப் பார்த்தாலும் எதையும் காண முடியாத இருட்டு.’ ‘சோமனின் உடுக்கை’ இப்படித்தான் ஆரம்பமாகிறது. இந்த வரிகளுக்கேற்ப,
நாவல் முழுக்க, எவ்வளவுதான் கண்ணோடு கண் வைத்துப் பார்த்தாலும் சோமனின் வாழ்க்கையிலும்
அவனின் ஆசையிலும் வெளிச்சமே பிறப்பதில்லை. ‘இருட்டென்றால் இருட்டு, அப்படியொரு இருட்டு!’
பண்ணையடிமையான சோமனுக்கு இருக்கும்
குடிப்பழக்கம், பண்ணைவீட்டிலிருந்து கூலியாகக் கிடைக்கும் அரைப்படி அரிசியைக்கூட, ஒவ்வொரு
நாளும் கள்ளுக்கடை பிருமபூசாரிக்கே படியளக்க வைக்கிறது. அதனால் சோமனின் பிள்ளைகள்,
ஒவ்வொரு நாளும் பசியால் வாடும்படி ஆகிறது. ஆனால், சோமனின் குடி நாள் தவறாமல் தொடர்கிறது.
மூத்த மகன்கள் சனியனுக்கும் குருவவுக்கும் சோமனின் ஒரே மகளான பெள்ளிக்கும் பசியைப்
பொறுத்துக்கொள்வது பழக்கம்தான். ஆனால், இளைய மகன்களான நீலனும் காளவும் பசிப் பொறுத்துக்கொள்ள
மாட்டார்கள். அதனால் பெள்ளி, எத்தனை சிரமங்களுக்கும் மத்தியில், எதையாவது செய்து, அவர்களின்
காலளவு வயிற்றையாவது நிரப்பி, அவர்களைப் படுக்க வைத்துவிடுவது வழக்கம்.
எவ்வளவு வேலைகள் செய்தாலும்,
நாளொன்று அரைப்படி அரிசித்தான் கிடைக்கிறது. நாமே விளைவித்து உழுதால் இன்னும் கொஞ்சம்
கிடைக்குமே, உழுவதற்குத் தோதாக நம்மிடம் ஈர் எருதுகளும் வளர்ந்துக்கொண்டே வருகின்றவே
என்ற எண்ணங்கள் சோமனுக்குள். ஆனால், நிலத்துக்கு எங்குச் செல்வது? யாரிடம் கேட்பது?
எவ்வளவோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பண்ணையார் சங்கப்பய்யாவிடமே குத்தகைக்கு நிலம்
கேட்கிறான் சோமன். சங்கபய்யாவுக்குப் பெருமதிர்ச்சி. ‘புலையன் குத்தகைக்கு நிலம் கேட்பதா?’
என்றாலும், சோமனின் மீதும் அவனின் உழைப்பின் மீது பண்ணையாருக்கு மிகுந்த நம்பிக்கை
உண்டு. அதனால், பண்ணைத் தன் அம்மாவிடம் கேட்க, அவள் மறுக்கிறாள். ‘ஒரு புலையனுக்கு
உழ நிலத்தைக் கொடுத்தால், பிற்பாடு மற்ற புலையன்களும் நிலம் கேட்டு வந்து நின்று, அவனவன்
ஏர் பிடிக்கச் சென்றுவிட்டால், நமக்கு ஏர் பிடிக்க யார் வருவார்கள்? நாமா எர் பிடித்து
உழ முடியும்?’ எனக் கேட்கிறாள். சங்கப்பய்யாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிறகு பார்க்கலாம்
என்று சோமனை அனுப்பிவிடுகிறான்.
நாளுக்கு நாள் சோமனின் ஆசையுடன்,
அவனின் எருதுகளும் வளர்கின்றன. தான் விவசாயியாகும் கனவுக்கு ஊக்கமளிக்கும் அந்த எருதுகளின்
மீது அவன் அளப்பரிய அன்பு செலுத்துகிறான், தன் மக்கள் மீது செலுத்தும் அன்பைக் காட்டிலும்!
அதனால்தான், கடனை அடைக்க மன்வேலன் வந்து எருதுகளை விற்றுவிடும்படி கூறும்போதும், பண்ணையார்
தனக்கு எருதுகளைப் பணத்துக்குத் தந்துவிடும்படியாகக் கேட்கும்போதும் அவர்களுக்கு மறுத்துவிடுகிறான்.
தன் மூத்த மகன்களைக் கடனை அடைக்கும்பொருட்டுத் தோட்ட வேலைக்கு அனுப்புகிறான். எவ்வளவோ
இழப்புகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில், தன் ஆசைகளுடன் சேர்த்து அந்த எருதுகளையும்
தக்க வைத்துக்கொள்ள, அவன் நாவல் முழுக்கப் போராடிக்கொண்டே இருக்கிறான். சனியனின் இறப்புக்குப்
பிறகும்கூட, எருதுகளை அவன் விற்கத் துணிவதேயில்லை. பெள்ளியையும் நீலனையும் கடனுக்குப்
பொறுப்பாளிகளாக்கி, தோட்ட வேலைக்கு அனுப்புகிறான். தன் போராட்டத்தில், எருதுகளைத் தக்க வைத்துக்கொள்பவன்
இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல, மிக ஏராளம்!
கிட்டத்தட்ட தன் ஆசைக்காகவும்
இலட்சியத்துக்காகவும் அவன் தன் மக்களைத்தான் ஒவ்வொரு முறையும் பணையம் வைக்கிறான். அதனால்தான்,
பெள்ளியின் திருமணத்தைக்கூடத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறான். அவள் தோட்ட வேலைக்குச்
சென்றுக், கடனை அடைத்துத் திரும்பிய பிறகுதான் அதைப் பற்றி யோசிக்கிறான்.
தோட்ட வேலைக்குச் செல்லும்
பெள்ளியோ தகப்பனின் கடனை அடைக்கும்பொருட்டு, முழுமுற்றாக மன்வேலனிடமும் துரையிடமும்
தன்னை இழக்கிறாள். அவளுக்கு வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.
விவசாயியாக அவன் எடுத்து வைக்கும்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய நம்பிக்கைக் குன்றிப் போறான். மதம் மாறித் திருமணம்
செய்ததற்காகக் குருவனை ஆரம்பத்தில் பழித்து, அவன் உறவு வேண்டாமென்று வெறுக்கும் சோமன்,
இறுதியில் தன் மகன் விவசாயியாகி நிலத்தை உழுகிறான் என்பதைக் கேள்விப்பட்டு அவன் மீது
பொறாமை கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தன் ஆசையை ஈடேற்றிக்கொள்ள மதம் மாற முடிவெடுக்கிறான்.
மதம் மாறப் போகும் வழியில் இருக்கும் பஞ்சுருளி தெய்வத்தைத் தன்னையறியாமலேயே வணங்குகிறான்.
அதைத் தொடர்ந்து, தன்னால் மதம் மாற முடியாது என்ற முடிவுக்கு வந்து வீட்டுக்கே திரும்புகிறான்.
நாவல் முழுக்கச் சோமன் எல்லாத்
தருணங்களிலும் தன் உணர்ச்சியை வெளியிடும் கருவியாகக் கருதி, உடுக்கையைக் கையிலெடுத்து
அடித்துக்கொண்டே இருக்கிறான். உடுக்கையின் ஒலி நாவல் முழுக்கத் தொடர்கிறது. நாவலின்
இறுதியில், சோமனுடன் சேர்ந்து அவனுடைய உடுக்கையும் வீழ்ந்தாலும்கூட, துடிப்புடன் அவன்
உடுக்கையை அடிக்கும் ஒலி வாசகனுக்கு நிற்காமல் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்!
‘டமடம்ம… டமடக்க… டமடம்ம… டமடக்க…’
வாழ்க்கையில், எல்லாமும் எல்லாரும்
அவன் பிடியிலிருந்து விலகிச் செல்ல, அவன் இறப்புக்குப் பிறகும்கூட, அவன் பிடியிலிருந்து
விலகாமல் இருப்பது அவன் உடுக்கை மட்டுமே! சோமனின் உடுக்கை!
நம் சமூக அமைப்பில், சாதியின்
அடிப்படையில், மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள்? அவர்களது ஆசைகள், இலட்சியங்கள்,
கனவுகள், வாழ்க்கை, உயிர் என எல்லாம் எவ்வாறு காற்றோடு காற்றாகக் கலைந்து போகிறது?
அவர்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள்? சுரண்டப்படுகிறார்கள்? என்பதை மிகத்
தீர்க்கமாக இந்நாவலில் பதிவு செய்துள்ளார் சிவராம காரந்த். நாவலில் கொஞ்சமும் மிகையில்லை.
அவ்வளவு இயல்பாக, நம் வாழ்க்கையோடு நெருக்கம் கொள்ளும் வகையில், கதாபாத்திரங்களையும்
சம்பவங்களையும் படைத்துள்ளார்.
‘சோமன துடி’, 1931ஆம் ஆண்டில்
எழுதப்பட்டுள்ளது. இத்தகவலைச் சொன்னாலன்றி, வாசிப்பின் வழியாக, கதை நிகழும் காலத்தைக்
கணக்கிட்டு உறுதிபடக் கூறுவது அவள்ளவு அரிது. கதையினுள் புழங்கும் பண மதிப்பைக் கொண்டு
ஒருவாறாகக் கணக்கிட முடியும்தான், என்றாலும், நாவலின் களம் இன்றும் பொருந்தக்கூடிய
ஒன்றாகவே இருப்பதுதான் இதன் சிறப்பு! கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும்
இந்நாவல், ‘ஏதோ மிகச் சமீபத்தில் எழுதப்பட்டுள்ள நாவல்தான்’ என்பதானத் தோற்றத்துக்குப்
பொருந்தும் வகையிலான வாழ்க்கையைக் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக்
குறித்த முன்னோடி நாவலான ‘சோமனின் உடுக்கை’, இன்றளவும் மிக முதன்மையானதாகத் திகழ்கிறது.
கன்னடத்தில் எழுதப்பட்டு,
71 ஆண்டுகளுக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டில், தி. சு. சதாசிவம் அவர்களால் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுத்
தமிழில் வெளியாகியுள்ளது. ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்ட முதல் பதிப்பைத் தொடர்ந்து,
சோமனின் உடுக்கைக்கு மறுபதிப்பு வெளியாகவேயில்லை.
சோமன துடி, 1975ஆம் ஆண்டில்,
சிவராம காரந்த் அவர்களின் திரைக்கதையில், பி. வி. காரந்த் அவர்களால் திரைப்படமாகவும்
எடுக்கப்பட்டு, அந்த ஆண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்படமாக தேசிய விருதுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment