அற்ப ஜீவி – இராச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரி – தமிழில், பி. வி. சுப்பிரமணியன்
‘சுப்பையா அழகானவன் அல்ல.’ இது சுப்பையா அபிப்பிராயம். ‘சுப்பையா சுத்த உதவாக்கரை.’ இதுவும் சுப்பையா அபிப்பிராயமே.
‘அற்ப ஜீவி’ நாவல் இப்படித்தான் ஆரம்பமாகிறது. சுப்பையா எனும் கதாபாத்திரத்தைப் பற்றி அவனுடைய அபிப்பிராயத்துடன் ஆரம்பித்து, அவனைச் சார்ந்த ஒவ்வொருவரின் அபிப்பிராயமாகச் சொல்லப்பட்டு ‘சுப்பையா வாழ்க்கை’ நமக்குக் கதையாக அளிக்கப்பட்டு, சுப்பையாவைப் பற்றிய எல்லா அபிப்பிராயங்களையும் தாண்டி வாசகர்களாகிய நாமும் ஓர் அபிப்பிராயத்தை இறுதிச் செய்துக்கொள்ளும்படியாக நாவல் முடிவுறுகிறது.
சுப்பையாவுக்கு எதற்கெடுத்தாலும் பயம். சட்டத்திற்குப் புறம்பாக என்றைக்குமே அவன் நடந்ததில்லை. சுப்பையா அனாவசியமாக மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுவதில்லை. தகராறு என்றாலே அவனுக்கு நடுக்கம். அதேப்போல, ‘எல்லோருக்கும் நல்லவனாக இருந்தாலொழிய இவ்வாழ்க்கையை நடத்துவது கஷ்டம் என்பது அவனுடைய நம்பிக்கை. எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய இலட்சியம்.’ ஆனால், எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் சுப்பையாவுக்குக் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்தான் வருகிறது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் சுப்பையாவிடம் பெரும்பாலும் யாருமே நல்ல விதமாக நடந்துக்கொள்வதில்லை. அவனது மகளைத் தவிர! எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற சுப்பையாவின் இலட்சியம், வாழ்வில் அவன் எதிர்கொள்ளும் சூழல்களின் போக்கினால் காணாமல் போகிறது.
சுப்பையாவின் சுபாவத்துக்குச் சிறு வயதில் அவன் எதிர்கொண்ட இரு சம்பவங்களே – அனுபவங்களே - அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. ஒன்று, அம்மா இல்லாத சுப்பையாவை அவனது சித்தி கொடுமை செய்வது. அதிலிருந்துதான் அவனுக்குள் பய உணர்வு ஆரம்பமாகிறது. அடுத்தது, யாரென்றே தெரியாத ஆட்கள் அப்பா சோமையாவைத் தாக்குவதைச் சுப்பையா காண்பது. அஃது அவனின் பயத்தை மேலும் பெரிதாக்குகிறது. அஃது அப்படியே தொடர்வதற்கு அழகில்லாத சுப்பையா, அழகான சாவித்திரியைத் திருமணம் செய்துக்கொண்டு வாழ்வதும்கூடக் காரணம் எனலாம். அப்படியே ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொன்றின் மீதும் சுப்பையாவின் பயம் பெருகி வளர்ந்து நிற்கின்றது.
சாவித்ரி, ஜமீன்தார் வீட்டுப்பெண். அவளது அண்ணன் வெங்கட் ராவ் சுப்பையாவின் தோழன். எல்லாச் சொத்தையும் இழந்து நின்ற தருணத்தில், வெங்கட் ராவ் தன் தங்கையைச் சுப்பையாவுக்கு மணம் முடித்துத் தர முன் வந்து, சுப்பையாவிடம் கேட்கிறான். அதுவும்கூட, சுப்பையாவுக்கு வேலையொன்று உறுதியாகியிருக்கும் சூழலில், தன் பொறுப்பைக் கழித்துக்கொள்ளும் நோக்கில்தான் கேட்கிறான். வெங்கட் ராவ் அவ்வாறு தன்னிடம் கேட்டதையே மிகப் பெரிய கௌரவமாக நினைக்கும் சுப்பையா உடனே ஒப்புக்கொள்கிறான். சாவித்திரியைப் பொறுத்தவரையில், சுப்பையா தன்னைத் திருமணம் செய்யத் துணிந்ததே மிகப் பெரிய குற்றம். இரண்டு குழந்தைகளைப் பெற்ற போதிலும், சாவித்திரிக்குச் சுப்பையா மீது மதிப்போ மரியாதையோ கிடையாது. ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் இருவரும் வெவ்வேறு உலகங்கள்தான். அதிலும் சுப்பையாவின் உலகம், வீட்டுத்திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, போவோர் வருவோரைக் கணக்கிட்டுக்கொண்டு, அவர்களைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் தனித்த உலகம். அந்தக் கற்பனை உலகம் தாண்டி, அவனுக்குத் தெரிந்தது எல்லாம் அவனது அலுவலகம் மட்டுமே!
சாதாரணக் குமாஸ்தாவான சுப்பையாவால், ஊழலும் மோசடியும் நிறைந்த பணிச்சூழலில், மிக எளிமையான, சாதாரண வாழ்க்கையை மிக அமைதியாக வாழ முடிவதில்லை. அதற்குக் காரணகர்த்தாக்களாக, அவனது மைத்துனன் வெங்கட் ராவ்வும் கான்ட்டிராக்டர் கவரையாவும் இருக்கின்றனர். வெங்கட் ராவ், கவரையாவிடமிருந்து தனக்கு ஐநூறு ரூபாய் வாங்கித் தருமாறு சுப்பையாவிடம் கேட்கிறான். கவரையாவின் பில்களைச் சரிப்பார்க்கும் பொறுப்பில் சுப்பையா இருக்கிறான். அதனால் கவரையாவிடம் துணிந்து ஐநூறு கேட்கச் சொல்லி வற்புறுத்துகிறான். தன் மைத்துனன் வெங்கட் ராவ்வுக்கு உதவி செய்ய முன்வந்து, அப்பணத்தை வாங்கித் தருகிறான், சுப்பையா இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான். அவன் பணத்தை அவனுக்காகப் பெறாவிடினும், அஃது ‘அவன் பெற்ற இலஞ்சம்’ எனும் வகையிலேயே அலுவலகத்தாரால் பார்க்கப்பட்டு, அவன் நிலை கீழாகிறது. கவரையாவின் பில்களைச் சரி பார்க்கும் பொறுப்பும் வேறு ஆளுக்குப் போகிறது. இதற்கிடையில், கவரையா தான் கொடுத்த பணத்தைக் கேட்டு சுப்பையாவின் வீட்டுக்கே ஆள் அனுப்புகிறான். அதிலிருந்து அவன் தப்பிப்பதற்குள், அவனுக்குள் ஏற்படும் மனப்போராட்டம் பூதாகரமாகி, சதா கேள்விகள் கேட்டே அவனை அலைக்கழிக்கிறது.
சுப்பையாவுக்குள் நிலவும் பயமும் தன் மீதான தன்னம்பிக்கையின்மையும் அவனை அடுத்தவரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வைத்துத் தன்னைத் தானே ஒடுக்கிக் கொள்ள வைக்கிறது. இயலாமையால் தவிக்கும் சுப்பையா, தன் கற்பனையிலேயே எல்லாவற்றைக் குறித்தும் அலசுகிறான். தீர்வுக் காண முயல்கிறான். யாரும் அவனுக்கு அனுசரணையாக இல்லாத நிலையில், உதவ முன் வராத நிலையில், அவனுக்குள் பெருகும் கழிவிரக்கம்தான் மனோரமாவை நெருங்கக் காரணமாக அமைகிறது. சுப்பையாவுக்கும் மனோரமாவுக்கும் இடையில் உருவாகும் உறவு, சுப்பையா தனக்குத்தானே கற்பனையில் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒன்றுதானா என்று எண்ணுமளவுக்கு அவ்வுறவின் தன்மை நாவலில் கையாளப்பட்டுள்ளது.
இந்நாவலின் சிறப்பம்சம் எனச் சுப்பையாவின் கதாபாத்திர வார்ப்பைத்தைத்தான் சொல்ல வேண்டும். நாவல் முழுக்க, அவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமும் தனக்குத் தானே கேள்விகள் கேட்டுப் பதிலளித்துக்கொள்வதும் மிகையில்லாமல், சுப்பையாவின் மனதை அப்படியே எடுத்துக்காட்டும்படி எழுதப்பட்டுள்ளன. மிக அமைதியாக, எந்தப் பிரச்சனைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், ஒரு சராசரி வாழ்க்கையை வாழ விரும்பும் மனம் எப்படியெல்லாம் சிந்திக்கும்? எப்படியெல்லாம் அஞ்சி நடுங்கும்? எதற்கெல்லாம் பதைபதைக்கும்? என்பதைச் சுப்பையா பாத்திரம் மூலம், மிகத் துலக்கமாக வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். அவர் கையாண்டிருக்கும் மொழி மிக அபாரமாக இருக்கிறது.
சில மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது, அதன் மொழியால் – நடையால் – கவரப்படும்போது, இயல்பாகவே ஒரு கேள்வி மனதினுள் எழும். இந்த நடை, மூலமொழியில் இதே சொற்கச்சிதத்துடன்தான் இருந்ததா? அல்லது மொழிபெயர்ப்பாளர் நம் மொழியில் இதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறாரா? எனத் தோன்றும். அந்த வகையில், ‘அற்ப ஜீவி’ தமிழில் எழுதப்பட்ட நாவல்தானோ என நம்பும் அளவுக்குப் பி.வி.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு மிக அற்புதமாக உள்ளது. இந்த மொழிக்காகவே மிக அவசியமாக வாசிக்கப்பட வேண்டிய நாவல் ‘அற்ப ஜீவி’.
தெலுங்கில் 1955ஆம் ஆண்டில் வெளியான இந்நாவல், தமிழில் வாசகர் வட்ட வெளியீடாக 1968ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. முதல் பதிப்பு வந்து 57 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் ‘அற்ப ஜீவி’ நாவலுக்கு அடுத்த பதிப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன்.



Comments
Post a Comment