The Boy, The Mole, The Fox And The Horse (2022)

 

தொடர்ச்சியாகப் பனிப்பெய்துக்கொண்டிருக்க, மிகப் பெரிய பனிப்பிரதேசம் ஒன்றில், ஒரு சிறுவன் மட்டும் தனித்திருக்கிறான். தனித்திருக்கும் அவன் சோர்வுற்று அமரும்போது அவனுக்கு அருகாக ஓர் அகழெலி பனிக்குள்ளாக இருந்து மேல் எழுந்து வருகிறது. சிறுவனுடன் உரையாடத் துவங்குகிறது. அந்த உரையாடலில், அந்தச் சிறுவன் தன்னுடைய வீட்டைத் தேடிக்கொண்டிருப்பதைத் தெரிந்து அவனுக்கு உதவியாகச் செல்கிறது. அந்தப் பயணத்தினூடாக, அவர்களுடன் ஒரு நரியும் ஒரு குதிரையும் சேர்ந்துக்கொள்ள, அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சிறுவனின் வீட்டைத் தேடத் துவங்குகின்றனர். அந்தப் பயணத்தில் அவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல்களும் சம்பவங்களும் அவர்களுக்கிடையில் பெரும்பிணைப்பை உருவாக்குகிறது. இறுதியில், அவர்கள் சிறுவனின் வீட்டைக் கண்டடைந்தார்களா இல்லையா என்பதே கதை!

35 நிமிடங்கள் கால அளவுடைய இக்குறும்படம், மிக எளிமையான குழந்தைகளின் கதையைப் போலத் தோன்றினாலும், எவ்வயதினருக்கும் பொருந்தும் வகையில், மிக வலுவான ஆழமான உரையாடல்களைக் கொண்டிருக்கிறது. எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தும் வகையிலான உரையாடல்கள்!

இரக்கம், தைரியம் மற்றும் நம்பிக்கைகள் குறித்த மிக ஆழமான உரையாடல்கள் காண்போர்கள் / கேட்போர்கள் மனதைச் சலனமடையச் செய்யும்! வாழ்க்கையில் கடினமானச் சூழல்களைக் கையாளும் நபர்களுக்கு, வாழ்க்கை மிக சிக்கல் நிறைந்திருப்பதாக உணரும் நபர்களுக்கு, தனக்கிருக்கும் பிரச்சனை என்னவென்றே அறியாமல் உழலும் நபர்களுக்கு இக்குறும்படம் மிக நிச்சயமாக ஏதேனுமொரு வகையில் ஊக்கம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை!

மிக நேர்த்தியான அனிமேஷனும் இசையும் காண்போர்கள் / கேட்போர்கள் மனதை நெகிழ்வுறச் செய்யும்! மிக அவசியமாகப் பார்க்க வேண்டிய குறும்படம்!

Comments