இருளுக்குள் சூழ்ந்திருக்கும் வெளிச்சமும் தடைகளுக்குள் திறந்திருக்கும் வாசல்களும்… (‘டுலெட்: திரைக்கதையும் உருவாக்கமும்’ நூல் அறிமுகம்)

2007ஆம் ஆண்டு, இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், அதைத் தொடர்ந்து தாமிராவின் ‘ரெட்டச்சுழி’, வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’, சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப்  பருவக்காற்று’, பாலாவின் ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, குகன் சென்னியப்பனின் ‘சவாரி’ மற்றும் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தனக்கென ஒளிப்பதிவில் தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். இலக்கியத்திலும் எழுத்திலும் ஈடுபாடு கொண்டவர். தனது திரையனுபவங்களை எழுதிக் கட்டுரைகளாகத் தொகுத்து மூன்று தொகுப்புகளையும் வெளியிட்டவர். (‘முகங்களின் திரைப்படம்’, ‘பேசும் படம்’ மற்றும் ‘ஒளியில் எழுதுதல்’ ஆகியன. முதலிரண்டு புத்தகங்கள் உயிர்எழுத்து பதிப்பகம் வெளியிட்டவை, கடைசிப் புத்தகம் பரிசல் வெளியீடு.) இவைத் தவிர்த்து விகடனில் தொடராக வெளிவந்த, மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய ‘உலக சினிமா’ தொடர் மூலம் எல்லோராலும் நினைவுக்கூரப்படுபவர். எனினும் அவரது ஆளுமையை முழுமையாக அடையாளம் காண, அவரது கட்டுரைத் தொகுப்புகளே உதவியாக இருக்கும். கூரிய விமர்சனங்களையும் பார்வைகளையும் அனுபவங்களையும் உள்ளடக்கியவை அவரது முதலிரண்டு கட்டுரைத் தொகுப்புகள். இவையல்லாமல், அப்பாஸ் கியாரோஸ்தமிக்கு தடம் இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் ருத்ரய்யாவுக்கு ஆனந்த விகடனில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் உடனடி நினைவுக்கு வருகின்றன. இப்படியாக, சினிமா சார்ந்தும் எழுத்து சார்ந்தும் தனித்துவமான பார்வைகளுடன் இயங்கி வரும் செழியன் அவர்கள், திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘டுலெட்’ திரைப்படத்தின் திரைக்கதையையும் அதன் உருவாக்கத்தில் தான் எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் தனது மொழியில் எழுதித் தொகுத்து நூலாக்கியுள்ளார். உயிர்எழுத்து பதிப்பகம் அந்நூலை வெளியிட்டுள்ளது.

‘எளிமைதான் மேன்மையின் ஆகச் சிறந்த வடிவம்’ எனும் டாவின்சியின் மேற்கோளுடன் துவங்குகிறது நூல். அதற்குத் தகுந்த வகையில், டுலெட் திரைப்படத்தின் திரைமொழி எவ்வளவு எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருந்ததோ அதேவகையில், இந்நூலின் மொழியும் இருக்கிறது.

15 அத்தியாயங்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டில், தாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யச் சொல்ல, அதைத் தொடர்ந்து வீடுத் தேடத் துவங்கிய அவரது அனுபவம் நீள்கிறது. ஒரு நாள், ஒரு வீட்டு உரிமையாளருக்காக அவரது வீட்டு நிழலில் காத்திருக்கிறார் செழியன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் காத்திருக்க, அவரது இருச்சக்கர வாகனத்தின் பக்கக் கண்ணாடியின் வழியாக, மேகங்கள் நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார். அந்தக் கணத்தில், அந்தக் காத்திருப்பையே படமாக எடுக்கலாமே எனத் தோன்றுகிறது அவருக்கு. அதைத் தொடர்ந்து வீடு தேடும் அனுபவங்களைக் குறிப்புகளாக எழுதத் துவங்கியுள்ளார். ஒரு திரைப்படத்துக்கான துவக்கப் புள்ளியைக் கண்டடைகிறார்.

தான் வீடு தேடிய அனுபவம், தனது நண்பர்கள் மற்றும் தான் சந்தித்த மனிதர்களின் அனுபவங்கள் என்று குறிப்புகள் எழுதி வைத்திருந்த, புத்தகத்தைக் கையிலெடுத்து அதன் பக்கங்களைப் புரட்டுகிறார். அந்தக் குறிப்புகளின் வாயிலாக, திரைக்கதையை எழுதத் துவங்குகிறார். 150 பக்கங்களுடைய திரைக்கதையைத் திருத்தித் திருத்தி எழுதி 35 பக்கங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு பக்கம், ஒரு நிமிடம் எனும் ஹாலிவுட் பாணியிலான திரைக்கதை அமைப்பை மறுதலிக்கிறார். 35 பக்கங்களிலான திரைக்கதையில் நிறைவுறுகிறார்.

திரைக்கதையை எழுதி முடிப்பதைக் காட்டிலும், தமிழ்ச்சூழலில் தயாரிப்பாளரைத் தேடிக்கண்டடைவதுதான் மிகக் கடினம். வெவ்வேறு விதமான தயாரிப்பாளர்களைச் சந்தித்துவிட்டு, சலிப்புற்று, இறுதியாக தாங்களே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு இயக்குநர் செழியனும் அவரது மனைவி பிரேமாவும் வருகிறார்கள். தயாரிப்புக்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

முதற்கட்டமாக, திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்களைத் தேர்வு செய்யத் துவங்குகிறார்கள். இத்திரைப்படத்திற்கு, நூறு சதவீதம் புதுமுகங்கள்தான் இருக்க வேண்டுமென்று உறுதியாக இருந்து நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார் செழியன்.

திரைப்படத்தின் உருவாக்கத்தில், செழியன் வெவ்வேறு வகைகளில் சவால்களை எதிர்க்கொண்டுள்ளார். மேலும், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் ஒலியமைப்பு என ஒவ்வொரு துறை சார்ந்தும் தான் தேர்ந்தெடுத்த முடிவுகளைக் குறித்தும் அம்முடிவுகளின்படி, ஒவ்வொரு துறையிலும் தன்னுடன் இணைந்து செயலாற்றிய நபர்கள் குறித்தும் செயலாற்றிய விதங்கள் குறித்தும் அழகுற எடுத்துரைத்துள்ளார்.

நூறு வருட தமிழ் சினிமா வரலாற்றில் பின்னணி இசை இல்லாத முதல் படம், டுலெட். ‘இசையை விடவும் மௌனம் வலிமையானது’ எனும் இயக்குநர் தியோ ஆஞ்சலோ போலஸின் மேற்கோளை முன்னிறுத்தி வரும் ‘இசை’ அத்தியாயத்தில் திரைப்படத்தில் இசை இல்லை என்ற முடிவுக்கு தான் எந்தக் கணத்தில் வந்தார் என்பதைக் கூறியுள்ளார். இசை இல்லை என்று முடிவானதும் காட்சிகளுக்குள் இருக்கும் ஒலி குறித்தும் மௌனம் குறித்தும் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் துவங்கி, படத்தொகுப்பையும் ஒலியையும் மிகக் கவனமாகக் கையாளும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒலியமைப்பாளர் தபஸ் நாயக்கிடம் தன்னுடைய முடிவை செழியன் எடுத்துரைக்க அவர்களும் அவரது முடிவை ஏற்றுப் பாராட்டி, தங்களது பங்களிப்பை முழுமையாகத் தரத் துவங்கியுள்ளனர்/தந்துள்ளனர்.

டுலெட் எண்ணற்ற திரைவிழாக்களில் பங்குகொண்டது. அந்த அனுபவங்களை ‘திரை விழாக்கள்’ அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.

இந்நூலின் மிக முக்கிய சிறப்பம்சம், திரைக்கதையுடன் ஒவ்வொரு காட்சிகளும் ஷாட் பிரித்து வரையப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு காட்சி குறித்தும் செழியன் தனது குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அந்தக் குறிப்புகளில், அந்தக் காட்சியின் தேவை குறித்தும் அந்தக் காட்சியை அப்படி அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் அந்தக் காட்சி மூலம் தான் சொல்ல விரும்பிய செய்தி என்ன என்பதைக் குறித்தும் விளக்கி எழுதியுள்ளார். இயக்குநரின் பார்வையிலிருந்து ஒரு காட்சி எப்படி அணுகப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்ள இந்தக் குறிப்புகள் ஏதுவாக உள்ளன. மேலும், சில காட்சிகளை வெவ்வேறு ஷாட்களாகப் பிரிக்காமல், சிங்கிள் ஷாட்களாக எடுக்க வேண்டி இருந்ததன் அவசியம் குறித்து மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும், ஒளிப்பதிவு வரைப்படங்களும் முன்தயாரிப்பு குறிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

செழியன், ஸ்ரீகர் பிரசாத் மற்றும் தபஸ் நாயக் ஆகியோரை அனிர்பன் பட்டாச்சார்யா செய்த நேர்காணலை செழியனின் மகன் சிபி மொழிப்பெயர்த்துள்ளார். (ஓர் இளம் மொழிப்பெயர்பாளரை இழந்திருக்கிறோம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை) 

இயக்குநர் செழியன் அவர்களைத் ‘தடம்’ இதழுக்காக வெய்யில் மேற்கொண்ட நேர்காணலும் பிஸ்மி மேற்கொண்ட நேர்காணலும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து ‘உயிர் எழுத்து’ இதழின் ஆசிரியரும் ‘டுலெட்’ திரைப்படத்தின் இணை இயக்குநரும் இந்நூலின் பதிப்பாளருமாகிய சுதீர் செந்தில் அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. (2014, 2015ஆம் ஆண்டுகளில், என்னுடைய ஆரம்பக் கால சிறுகதை முயற்சிகளுக்கு ‘உயிர் எழுத்து’ இதழில், எனக்கு இடம் அளித்தவர் என்பதை நன்றியுடன் நினைவுக்கூர்கிறேன்)

டுலெட் திரைப்படத்திற்காக, மதியழகன் சுப்பைய்யா துவங்கிய சுவரொட்டி இயக்கத்தில் பங்குக்கொண்ட, சுவரொட்டிகள் வண்ணப்படங்களாகத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. (அவற்றில், நான் வரைந்த இரண்டு படங்கள் இடம்பெற்றிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஒன்று, என்னுடைய அக்கா மகள் உள்ளங்கையில் வரைந்த படம். இன்னொன்று வெள்ளைக் காகிதத்தில், ஒரு வீடு, ஒரு மரம், சூரியன் மற்றும் திரைப்படத்தின் மூன்று கதாப்பாத்திரங்களை உள்ளடக்கி வரைந்தது.) நூலின் இறுதியில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பட்டியலும் செழியனின் நன்றியும் இடம்பெற்று நூல் நிறைவடைகிறது.

“இந்த நூலின் வழியே நான் தர விரும்புவது திரைக்கதை மட்டுமல்ல. ‘இதுவும் தமிழில் முடியும்’ என்ற நம்பிக்கைதான்.” என்று புத்தகத்தின் ஆரம்பத்தில், இயக்குநர் செழியன் குறிப்பிட்டிருப்பது மிகையல்ல! தற்சார்பு சினிமாவின் மீது பெரும் நம்பிக்கையும் மதிப்பும் தன்னிச்சையாக மனதில் திரண்டெழுகிறது.

தற்சார்பு சினிமா இயக்கும் முயற்சியில் இருக்கும் நபர்களும், திரைப்படக் கல்லூரி மாணவர்களும், மிக மிக அவசியமாக வாசிக்க வேண்டும். 

திரும்பத் திரும்ப வாசிக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல் இது!

(இந்த நூலின் இரண்டாம் பதிப்பு, சாதாரண சைஸ்ஸில், மலிவுவிலைப்பதிப்பாகக் கிடைத்தால் இன்னும்  நிறைய ஆட்களைச் சென்றடையலாம்.)

*


“எவ்வளவு இருள் சூழ்ந்தாலும், அதற்குள் வெளிச்சம் இருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதற்குள் வழி இருக்கிறது.” எனும் செழியனின் வரிகளே தலைப்புக்கு எடுத்தாளப்பட்டுள்ளது!

Comments

Popular Posts