இறுக்கம் (சிறுகதை)


எப்போதும் நேரம் தவறியே வரும் அவன், அன்று அவள் சொன்ன நேரத்துக்கு அங்கு வந்திருந்தான். ஆனால், எப்போதும் நேரம் தவறாமல் வந்து காத்திருக்கும் அவள் வந்திருக்கவில்லை.

அந்தப் பூங்காவின் அடையாளமாக இருந்த ஆலமரத்துக்குக் கீழாக, புல்தரையில் அமர்ந்தபடி, அவன் காத்திருக்கத் துவங்கினான். வாங்கி வந்திருந்த மூன்று நாற்பது ரூபாய் ‘டேரி மில்க்’ சாக்லேட்களைச் சரிப்பார்த்துக்கொண்டான். அவை உருகத் துவங்கவில்லை.

அப்போது அங்கு ஒரு திருநங்கை அவனுக்கு அருகாக வந்தார். கையேந்தியபடி, ‘எதாச்சும் குடு செல்லம்…’ என்றார். அவன் ‘இல்லை…’ என்பது போல தலையாட்டினான். ‘பாக்கெட்ல வெச்சிருக்க சாக்லேட்டையாச்சும் அக்காவுக்கு குடு…’ என்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசிக்காமல், எடுத்து கொடுத்துவிட்டான். ‘தாங்க்ஸ்டா செல்லம்...’ என்று சொல்லியபடி அவர் நகர்ந்துவிட்டார். சாக்லேட்டைப் பிரித்து சாப்பிட்டபடியே அவர் சென்றுக்கொண்டிருந்தார்.

அலைப்பேசியைக் கையிலெடுத்து அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்தான். அரைமணி நேரமாகியும் அவனுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவளுடைய எண்ணுக்கு அழைத்தான். அந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும், பொறுமையாகக் காத்திருந்தான்.

நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. சுற்றி இருந்த எதிலுமே மனம் ஒன்றவில்லை. அவளைப் பற்றிய யோசனையாகவே இருந்தது. மீண்டும் அழைத்து பார்த்தான். எந்தப் பதிலும் இல்லை. ஆத்திரமாக இருந்தது. மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அமைதியாக இருந்தான். தூரத்தில் தொடர்ச்சியாக இரண்டு ஆம்புலன்ஸ் செல்லும் சத்தம் கேட்கத் துவங்க, அதற்குப் பிறகு அவனால் அமைதியாக காத்திருக்க முடியவில்லை. எழுந்துக்கொண்டான். மீண்டும் மீண்டும் அவளை அழைத்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ஒன்றும் புரியவும் இல்லை. பயமாக இருந்தது. அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன. வியர்வைத்துளிகள் பெருக்கெடுத்து வழிந்தன.

ஆர்த்திக்கு அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டு, அவளை அலைப்பேசியில் அழைத்து பார்க்குமாறு கூறினான். ஆர்த்தியும் அழைத்து பார்த்தாள். அந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.

‘மொபைல சைலண்ட்ல வெச்சிருப்பாண்ணா… பார்த்துட்டு அவளே உங்களுக்கு கால் பண்ணுவாண்ணா… ஒன்னும் பயப்படாதீங்க…’

‘சத்தியமா செம வெறுப்பு மயிரா இருக்கு ஆர்த்தி… 12 மணிக்கே கிளம்பி வரச் சொல்லியிருந்தா… அப்பவே வந்துட்டேன்… ஒரு கால் இல்ல… ஒரு மெசேஜ் இல்ல… எதுக்குமே ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல… அதான் பயமா இருக்கு…’

‘ஓ… இருங்கண்ணா… நான் திரும்பவும் அவளுக்கு கால் பண்ணி பார்த்துட்டு வரேன்… இருங்க…’

ஆர்த்தி மீண்டும் அவனை அழைத்தாள்.

‘இல்லண்ணா… எடுக்கல… அவளோட இன்னொரு நம்பர்க்குப் போட்டா இன்கம்மிங் ஸ்டாப்டுன்னு வருது… நீங்க இப்போ எங்கண்ணா இருக்கீங்க?’

‘மத்திய கைலாஷ்… வீட்ல இருந்து நேரா… வேளச்சேரி வரை ஏதோ வேலையா போறேன்னு சொன்னா… 12 மணிக்கெல்லாம் இங்க வந்துடுவேன்னும் சொன்னா… ஆனா இன்னும் வரல… ஒரு போன் கூட பண்ணல…’

‘ஓ… என்ன வேலையா போறேன்னுலாம் சொல்லலயாண்ணா?’

‘இல்லை ஆர்த்தி… நான் கேட்டதுக்கு, நல்ல விஷயம்தான்… சீக்ரெட்! நேர்ல வந்து சொல்றேன்னு சொன்னா…’

‘உங்களை வெறுப்பேத்தனும்னு பண்ணியிருப்பா… நீங்க வேற எதுவும் யோசிக்காதீங்க… அவ கால் பண்ணா நான் ஒடனே உங்களுக்குச் சொல்றேன்…’

‘சத்தியமா எனக்குப் புரியல… என் மொபைல்ல வேற சார்ஜ் இல்ல… அவளை நெனைச்சா எனக்கு இப்போ செம கடுப்பாகுது… எதைக் கேட்டாலும் சொல்லவே மாட்டா… எல்லாமே சீக்ரெட்… சீக்ரெட்… சீக்ரெட்… இன்னைக்கு எங்க போறேன்னு ஒழுங்கா சொல்லியிருந்தா அங்கையாச்சும் போய் பார்ப்பேன்… அதுவும் இல்ல… எங்கன்னு போய் பாக்குறத்து? சத்தியமா செம கஷ்டமா இருக்கு…’

‘எதுவும் யோசிக்காதீங்கண்ணா… அவ கால் பண்ணான்னா சொல்லுங்க… நானும் சொல்றேன்…’

அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். கஸ்தூரிபாய் நகர் இரயில் நிலையத்துக்குள் நுழைந்து வேளச்சேரி வரை டிக்கெட் எடுத்துக்கொண்டான். மேலேறிச் சென்று காத்திருக்கத் துவங்கினான். அவள் மீது பெருங்கோபம் வந்தது.

மீண்டும் அவளை அழைக்க, எந்தப் பதிலும் இல்லை. அலைப்பேசியை உடைத்துவிடலாம் போல இருந்தது.

தூரத்தில், இரயில் வருவது தெரிந்தது. வந்து நின்றதும் ஏறிக்கொண்டான். எதிர்திசையில் இருந்த நுழைவு வழியில் சென்று நின்றுக்கொண்டான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவள் இருக்க ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று தேடியபடியே வந்தான். அவள் எங்கும் இல்லை. தரமணியிலுள்ள கல்லூரி ஒன்றில், அவளது பள்ளித்தோழன் ஒருவன் படிக்கிறான். அவனைப் பார்க்க வந்திருப்பாளா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. சமீபத்தில்தான், அவன் ஏதோவொரு பெண்ணைக் காதலிக்கிறான் எனவும் அவளிடம் தன் காதலைச் சொல்லத் தயங்குகிறான் எனவும் அது சம்பந்தமாக ஒரு நாள் நேரில் பேச வேண்டுமென அழைத்திருக்கிறான் எனவும் அவள் கூறியிருந்தாள். தரமணி இரயில் நிலையத்தில் கண்களைச் சுழலவிட அவள் அங்கும் இல்லை. அவனுக்குப் பதற்றமாக இருந்தது.

வேளச்சேரி இரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு அவளைத் தேடத் துவங்கினான். வெளியிலும் சென்று பார்த்தான். பயனில்லை. மீண்டும் டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது ஆர்த்தி அவனை அழைத்தாள்.

‘அண்ணா… அவ வேளச்சேரி ரெயில்வே ஸ்டேஷன்லதான் இருக்காளாம்… நீங்க இப்போ கூப்ட்டு பாருங்க… பேசுவா…’

‘நானும் வேளச்சேரி ரெயில்வே ஸ்டேஷன்லதான் இருக்கேன் ஆர்த்தி… நான் பாக்குறேன்… ரொம்ப தாங்க்ஸ்… நான் பிறகுப் பேசறேன்… சரியா?’

சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளைத் தேடினான். அவள் நடைமேடையின் ஒரு கல்நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அவளை மிக வெறுப்புடன் பார்த்தான். அவள் மெல்லிதாகப் புன்னகைப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவள் மீது கோபம் வந்தது. அவளை நோக்கி நடக்கத் துவங்கினான். அவள் எழுந்துக்கொண்டாள். அவன் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. சென்னைக் கடற்கரை வரை செல்லும் இரயில் நின்றிருந்தது. ஏறிக்கொண்டனர்.

ஜன்னலுக்கு அருகாகச் சென்று அமர்ந்துக்கொண்டாள். அவன் அவளுக்கு அருகாக! சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்தனர். இரயில் புறப்பட்டது.

அவன் தன் கோபத்தையெல்லாம் தூக்கி ஏறிந்துவிட்டு, அவளிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தன்னைத் தயார் செய்துக்கொண்டு எதுவும் பேசாமல், பாக்கெட்டிலிருந்த இரண்டு ‘டேரி மில்க்’ சாக்லெட்டை எடுத்து அவள் கையில் திணித்தான். இரண்டும் சற்று உருகியிருந்தன. அவள் விருப்பமே இல்லாதவள் போல வாங்கிக்கொண்டாள்.

‘ஆர்த்திக்கு கால் பண்ணியா?’

‘ஆமாம்… நீ ஏன் திரும்பப் பார்த்துட்டு எனக்கு மொதல கால் பண்ணல? எங்க போயிருந்த?’

அவள் பதிலேதும் சொல்லாமல் மிக அமைதியாக இருந்தாள்.

‘சீனுவைப் பார்க்க போயிருந்தியா?’

‘ஓ… நீ அப்டி யோசிக்கிறியா? இந்தா இதை நீயே வெச்சிக்கோ… எனக்கு வேண்டாம்…’ என்று சொல்லியபடியே அவள் அவன் கொடுத்த சாக்லேட்டுகளைத் திரும்பத் தந்தாள். அவனுக்குச் சட்டென தலைக்குள் ஏதோவொன்று ஏற, சாக்லேட்டுகளை வாங்கியவன் சட்டென எழுந்து மிகுந்த கோபத்துடன் கீழே வேகமாக அடித்து எறிந்துவிட்டு அவளைவிட்டு நகர்ந்து நுழைவு வழிக்கு அருகில் வந்து நின்றுக்கொண்டான். அவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள். மிக அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள்.

அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் மிக அமைதியாக அவர்களை மாறி மாறிப் பார்க்க, அப்போதுதான் அந்தச் சூழலுக்குள் மீண்டும் வந்தான். சில நொடிகளில், நிதானம் அடைந்து மீண்டும் அவளுக்கு அருகாகச் சென்று அமர்ந்தான். அவள் வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே வந்தாள். அவன், தன்னைப் பார்க்கச் சொல்லி அவளது கைகளைத் தொட்டான். அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை.

அவன் அவளது கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவள் அமைதியாக இருந்தாள். அப்போதும் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

திடீரென ஒரு புல்லாங்குழல் ஓசை கேட்டது. ‘தென்றல் வந்து என்னைத் தொடும்…’ என்ற பாடலைப் புல்லாங்குழலில் வாசித்தபடி ஒரு பார்வையற்றவர் அவர்களை நெருங்கி நீங்கிச் சென்றார். அந்தச் சூழலில், அவனுக்கு அது என்னவோ போல் இருந்தது. அவளது கைகளை மேலும் இறுக்கமாகப் பற்றியபடி, அவன் மிக அமைதியாக இருந்தான்.

‘ட்ரிப்லிகேண்ல எறங்கி எதாச்சும் சாப்ட்டுட்டு போவோமா?’

அவள் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால், திருவல்லிக்கேணி இரயில் நிலையத்தை நெருங்கியதும் அவனுக்கு முன்பாகவே அவள் எழுந்துக்கொண்டாள். அவனும் எழுந்துக்கொண்டான். இருவரும் நுழைவு வழிக்கு அருகாகச் சென்று நின்றுக்கொண்டனர். இறங்கும்போது அவள் அவனது கையைப் பற்றிக்கொண்டாள். அவள் விரல்களில் இறுக்கம் கூடியிருந்தது.

Comments