பார்த்த பொழுது (சிறுகதை)

பல்லாவரம் இரயில் நிலையத்தை அடைந்தவுடன், பம்மல் செல்லும் சாலையை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான் சரவணன். ஷரண் ஐந்து மணிக்குள்ளாக தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தான். மணி ஐந்தாகிவிட்டிருந்தது. பம்மல் செல்லும் பேருந்தைப் பிடித்து ஷரண் வீட்டுக்குப் போய்ச் சேர எப்படியும் ஐந்தரை ஆகிவிடும்போல் இருந்தது. காலையிலிருந்து வெகு நேரம் வரையிலும் நாவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்ததால் கண் எரிச்சல் மிகுதியாகி தன்னையறியாமலேயே மதியம் தூங்கிவிட்டான். அதனால் வந்த வினை, இந்தத் தாமதம். அலைப்பேசியில் அழைத்து ஷரணுக்குத் தகவலைச் சொல்லிவிட நினைத்தான். ஆனால் பேலன்ஸ் இல்லை. போக்குவரத்துக்குப் போக செலவு செய்ய கையில் காசும் இல்லை. அதனால், ‘சரி பரவாயில்லை, நேரடியாக அவன் வீட்டுக்கேப் போய் விடலாம். தாமதமாக போனாலும் அவன் ஒன்றும் சொல்ல மாட்டான்’ என்று அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொண்டான். இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவிதமான படபடப்பு இருந்தபடியே இருந்தது. அடங்கியபாடில்லை.

பம்மல் செல்லும் சாலைக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தான். ஷேர் ஆட்டோக்களின் வரத்து அதிகமாகயிருந்தது. பேருந்துக்காக காத்திருப்போரின் கூட்டமும் ஏராளம். குறிப்பாக பெண்கள் அதிகம் பேர் நின்றிருந்தனர். அவர்களிலும் சமவயது பெண்களே அதிகம். ஒவ்வொருவரும் ஏதேதோ அலுவல் சார்ந்து பயணிப்பவர்கள். அங்கிருந்த எல்லாப் பெண்களும் அழகாக இருப்பதாகவே அவன் மனதுக்குப்பட்டது. அல்லது எல்லாப் பெண்களிலும் ஏதோவொரு அழகைக் கண்டுக்கொள்வதற்கு கண்கள் பழக்கப்பட்டிருந்தன. சுற்றியிருந்த ஒவ்வொரு நபர்களின் செய்கைகளையும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். அப்படி பார்த்துக்கொண்டிருந்தபோது அவனுக்கருகாக பர்தா அணிந்திருந்த பெண்கள் குழுவிலிருந்த பெண்ணொருத்தியின் கண்கள் அவனை ஊடுறுவிப் பார்ப்பதை யதேச்சையாக கண்டான். அவனும் அவளது கண்களையே பார்த்தான். அவளது கண்களில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாய் அவனுக்குப்பட்டது. இந்த மாதிரி விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுள் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இச்சைப் பார்வையாக இல்லாவிடினும்கூட அப்படி அவர்கள் பொருள் கொள்ளும்படி ஆகிவிட்டால்… அதைவிட அசிங்கம் வேறில்லை என்ற எண்ணம், கண்களை எப்போதும் ஓரிரு நொடி பார்வையுடன் அவனை நிறுத்தச்சொல்லும். ஆனால் எல்லாச் சமயங்களிலும் அப்படி நிறுத்த முடிகிறதா என்ன? மீண்டும் அவளது கண்களை ஓரிரு நொடிகள் ஊடுறுவி, இதழோரம் மெல்லிய புன்னகையுடனும் மனதோரம் இனம்புரியாத தவிப்புடனும் பார்த்துவிட்டு தலைத் தாழ்த்திக்கொண்டான்.

சிக்னல் வளைவில் பேருந்து வருவதைக் கவனித்தவன், வந்து நிற்கப்போகும் பேருந்தில் ஏறுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். குண்டும் குழியுமாக இருந்த அந்தச் சாலையில், அசைந்தாடியபடி பேருந்து புழுதிப் பறக்க வந்து நின்றது. அவனுக்கு முன்பாக இருந்த எல்லோரும் ஏறியப் பிறகு அவனும் ஏறிக்கொண்டான். அவனே எதிர்ப்பாராத வகையில், அந்தப் பெண்ணும் அவன் ஏறிய பஸ்ஸில் தான் ஏறினாள். அவள் தன் தோழிகளுடன் பேருந்தின் முன்வாசலுக்கு அருகாக நின்றுக்கொண்டிருந்தாள். அவன் பின்வாசலுக்கு அருகாக நின்றபடியிருந்தான். நடத்துனர் முன்வாசலிலிருந்து பயணச்சீட்டு கொடுத்தபடி பின்னுக்கு வந்துக்கொண்டிருந்தார். அவனுக்கருகாக வந்தபோது, உரிய சில்லறையைக் கொடுத்து ‘கிருஷ்ணா நகர் ஒன்னு…’ என்று கேட்டு பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டான்.

முதலில் வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி இருந்தான். மனம், அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையில் இருந்தது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் தலைத்தூக்கியபடி இருந்தது. கண்கள் அவள் பக்கமாக திரும்பின. அவள் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவன் அவளது கண்களைப் பார்த்தபடியிருந்தான், அவள் அவனைப் பார்ப்பதற்கான கணத்தை எதிர்பார்த்தபடி. அவள் அவனைப் பார்க்கவே இல்லை. அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவள் பார்ப்பாள் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர்த்து அவன் திரும்பிக்கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

கடைசியாக கிருஷ்ணா நகர் வந்து இறங்கியதும் ஜன்னல் வழியாக, கீழிருந்து நின்றபடி பார்த்தான். பேருந்து நகர்ந்தபோது அவளது கண்கள் அவனைச் சந்தித்தபடி இருந்தன. அந்தக் கண்களில் அவனொரு மகிழ்ச்சியைக் கண்டான். அல்லது அப்படி அவனாக நினைத்துக்கொண்டான். அவனுக்குள்ளும் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. மனசு இலகுவானது. பேருந்து முன்நகர்ந்து புறப்பட, அவன் சிறு யோசனையுடன் தன் வழிப்பார்த்து நடக்க ஆரம்பித்தான்.

ஒரு பெண்ணின் சிறு பார்வை மட்டுமே ஒருவனுக்கு கிறக்கத்தைத் தரக்கூடுமா? அதுவும் இதுவரை அறிந்திராத ஒரு பெண்ணின் பார்வை, இனி எப்போதும் சந்திப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு பெண்ணின் பார்வை எப்படி உள்ளுக்குள் மேலும் மேலும் கிறக்கத்தை வழங்குகிறது? இப்படியொரு கணத்தின் உணர்வுகளுக்கு என்னவென்று பெயர் வைப்பது? இதைக் காதலென்றால் தகுமா? நிச்சயம் இன்னொரு முறை அந்தப் பெண்ணைச் சந்திக்கவும், ஒரு வேளை சந்தித்தாலும்கூட அவளிடம் பேசவதற்கும் வாய்ப்பேயில்லை. அப்படியிருக்க இது காதலாகுமா? இதற்குப் பெயர்தான் என்ன? இதுதான் மனதின் பரிதவிப்பா? பல்வேறு கேள்விகள் மனதில் சுழன்றடிக்க, ஷரணின் வீட்டு வாசலை அடைந்திருந்தான சரவணன்.

ஷரண் வீட்டுக்கு வருவது இது இரண்டாவது தடவை. முதல் தடவை அருண்தான் அவனைப் பைக்கில் அழைத்து வந்தான். முதல் தடவை வந்தபோது இருந்த கூச்சத்தைக் காட்டிலும் இந்தத் தடவை அதிக கூச்சம் அவனுக்குள் புகுந்துக்கொண்டது. காரணம், ஷரணின் அம்மா. முதல் நாள் ஷரண் அவனது அம்மாவிடம், ‘அம்மா… நான் காம்ச்ச ‘சந்திரிகா’னு ஒரு கதைப் படிச்சீங்கல?… அந்தக் கதையை எழுதுன அண்ணன் இவர்தான்… பேரு சரவணன்…’ என்று சொல்லி இவனை அறிமுகம் செய்து வைத்தான். ‘அப்படியா? அந்தக் கதை ரொம்ப நல்லா இருந்துச்சிப்பா…’ என்று சொல்லி ஷரணின் அம்மா புன்னகைத்தார். மேலும் அன்று அவனிடம் அவர்கள் உபசரித்து பேசி உணவுப்பரிமாறியது எல்லாம் நினைவுக்கு வந்தன. அன்று அவர்கள் அவனுக்குப் பூரியும் சிக்கன் குருமாவும் பறிமாறினார்கள். போதும் போதுமென்று சொல்லியும்கூட, ‘வளரும் பிள்ளைகள்… அதுவும் சினிமா சினிமானு தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு அலைகிற பிள்ளைகள் அதிகம் சாப்பிடவேண்டும்’ என்று குறிப்பிட்டுச் சொல்லி பூரிகளை வைத்தபடி இருந்தார்கள். அவர்கள் அப்படியொரு வார்த்தைகளைப் பிரயோகித்து பேசியது அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஷரணின் சினிமா முயற்சிகளுக்கு அவன் வீட்டில் ஆதரவு தருகிறார்கள் என்பதையும் அது புரிய வைத்தது. அன்று அவன் ஐந்து பூரிகளுக்கு மேல் சாப்பிட்டான். வாய்தான் போதும் போதுமென்று சொன்னதே தவிர வயிறு அப்படி சொல்லவில்லையென்று அவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது போல. அதுநாள் வரையில், வேறு யார் வீட்டிலும் அந்தளவுக்கு அவன் திருப்தியாக சாப்பிட்டிருக்கவில்லை. அந்த நினைவு அவனுள் எழ, இன்றும் நிச்சயம் சாப்பிட சொல்வார்களே… அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான்.

மெல்ல அழைப்புமணியை இரண்டு தடவைகள் அழுத்தினான். அவன் எதிர்பார்த்தது போல ஷரணின் அம்மாதான் கதவைத் திறந்தார். இவனைப் பார்த்து மெல்ல புன்னகைத்து உள்ளே அழைத்தார். மெல்ல புன்னகைத்தபடி செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான். சம்பிரதாயமான நலன் விசாரிப்புகள் ஆரம்பித்த தருணத்தில், ஷரண் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்தான். புன்னகைத்தான். உரையாடல்கள் முடிந்து இருவருமாக அறைக்குச் சென்று கணினியின் முன்பாக உட்கார்ந்தனர்.

சரவணன் அவனிடம், “சாரி ஷரண்… கொஞ்சம் லேட்டாகிடுச்சி…” என்றான். “அண்ணா… நீங்க வேற ஏண்ணா எப்போ பார்த்தாலு சாரிகேட்டுக்கிட்டு… அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லண்ணா…” என்றான். அடுத்து “இப்போதைக்கு சும்மா நானா எடிட் பண்ணி வெச்சிருக்கேண்ணா… நான் போட்டுக்காட்றேன், நீங்க பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க… ஆஸ் எ ரைட்டரா நீங்க எதிர்பார்த்த அந்த ஃபீல் கெடைக்குதான்னு பாருங்க… அருண் வந்ததும் அவங்கூட வொக்காந்து அவன் சொல்ற மாதிரி கொஞ்சம் சேன்ஜஸ் பண்ணிப் பார்க்கலாம்…” என்று சொல்லி கணினிக்கு முன்பாக சரவணனை உட்கார வைத்துவிட்டு எடிட் செய்த குறும்படத்தின் காட்சித்தொகுப்புகளைப் போட்டு காட்டினான். சரவணனுக்குள் ஒருவிதமான எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொண்டிருந்தது. அவனெழுதிய கதையைக் காட்சிகளாக பார்க்கப் போகிற சந்தோஷமும் பூரிப்பும்!

அவன் கண்களை விலக்காமல் திரையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களில் நெளியும் உணர்ச்சிகளைக் கண்டுக்கொள்ள ஷரண் முயன்றுக்கொண்டிருந்தான். அவன் பார்த்து முடிப்பதற்கும், அறைக்குள் ஷரணின் அம்மா காஃப்பி டம்ளர்களுடன் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இவன் நெளிய ஆரம்பித்தான். அவர்களைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான். அவரும் மெல்லிதாக புன்னகைத்து, ‘ஆறிப்போய்ட போகுது… குடிச்சிட்டு படத்தைப் பாருங்க…’ என்று சொல்லியபடி கணினி மேசையின் மீது டம்ளர்களை வைத்துவிட்டு சென்றார். இருவரும் கைகளில் டம்ளரை எடுத்துக்கொண்டனர்.

சரவணன், மெல்ல காஃப்பியை உறிஞ்சிக் குடித்தான். சர்க்கரை அதிகமாய் இருந்தது.

ஒரு மிடறு உறிஞ்சியபடி ஷரண் கேட்டான். ‘எப்படிண்ணா இருக்கு?’

‘சர்க்கரை கொஞ்சம் அதிகமா இருக்கு ஷரண்…’

‘அண்ணா… படம் எப்படி இருக்குனு கேட்டேண்ணா…’ என்று பலமாக சிரித்தான் ஷரண்.

‘ஓ… படத்தைக் கேட்டியா? ரொம்ப நல்லா வந்திருக்கு ஷரண்…’

‘அண்ணா… உண்மையா சொல்லுங்க… நீங்க எதிர்பார்த்த மாதிரி வந்திருக்கா? இல்ல… எதாச்சும் சரியில்லாத மாதிரி இருக்கா?’

‘ஒரு சில விஷயங்களைத் தவிர்த்து பெரும்பாலும் எல்லாம் நான் நெனைச்ச மாதிரிதான் வந்திருக்கு ஷரண்… பெருசா எனக்கொன்னும் கொற சொல்ல தோணல… உண்மையா சொல்லனும்னா சினிமால எனக்கு நெறைய விஷயங்கள் தெரியாது… கதை எழுதித் தரச் சொன்னீங்க… எழுதி தந்தேன்… அவ்வளவுதான்! போகப் போகத்தான் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு…’

‘நீங்க ஷூட்டிங் அப்பவும் வந்திருக்கலாம்ண்ணா… நெறைய விஷயங்கள் தெரிஞ்சிருந்திருப்பீங்க … அடுத்த முறைலாம் ஷூட்டிங்ல இருங்க…’

‘ம்… கட்டாயம் அடுத்த முறை வரேன் ஷரண்… சரி! அருண் எப்போ வரேன்னு சொன்னான்?’

‘ஆறு மணிப்போல வரேன்னு சொன்னான்… இருங்க போன் பண்ணி பார்க்கலாம்…’ என்று சொல்லியபடி அலைப்பேசியையெடுத்து அருணுக்குப் போன் பண்ணினான் ஷரண். காதில் போன்னை வைத்தபடி காத்திருந்தான்.

‘டைரக்டர் அருண் சார்… சரவணன் அண்ணன் வந்துட்டார்… நீங்க எப்போ வருவீங்க?’ என்று கன்னத்தைத் தேய்த்தபடி, கிண்டல் தொனியுடன் கேட்டான். சரவணன் புன்னகைத்தபடி ஷரணைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஷரண் அவனிடம் தொடர்ந்து பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

‘அண்ணா… அவன் வீட்ல இருந்து கெளம்பி வந்துட்டு இருக்கானாம்… ஸ்ட்ரைட்டா டீக்கடைக்கு வரேன்னு சொல்றான்… நம்பளயும் வந்துட சொல்றான்… வாங்க நாம்ம டீக்கடையில போய் வெயிட் பண்ணலாம்…’ என்று சொல்லிவிட்டு எழுந்தான். உடன் சரவணனும் எழுந்து நகர்ந்தான்.

வீட்டின் ஹாலில் ஷரணின் அம்மா தேங்காய், வாழைப்பழம், கற்பூரம், நெய் புட்டி என்று சில சமாச்சாரங்களை ஒரு சிறிய கூடையில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஷரண் அவர்களுக்கு அருகாகப் சென்று, ‘அம்மா… நாங்க கொஞ்சம் வெளிய வரைக்கும்போய்ட்டு வரோம்…’ என்று சொன்னான்.

‘எப்போடா வருவ? நான் இப்போ கோயிலுக்கு கெளம்ப போறேன்? நீ வர லேட்டாகுமா?’

‘கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்… வீட்டைப் பூட்டிட்டு நீ சாவியை ஷூல வெச்சிட்டு போம்மா… நான் வந்து எடுத்துக்கறேன்…’

அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவருமாக நகர ஆரம்பித்தனர். ஷரணின் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி அடுத்த தெருவிலிருந்த ஒரு டீக்கடைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பாகவே அருண், தனது டியோவில் டீக்கடைக்கு வந்து அமர்ந்திருந்தான். அவர்களைப் பார்த்து கைக்காட்டினான். அவனைப் பார்த்து இருவரும் புன்னகைத்தனர். அவனுக்கு அருகாக சென்ற போது அருண் சரவணனைப் பார்த்து ‘ஹாய்ண்ணா… எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டான். ‘நல்லாருக்கேன் அருண்… நீ எப்படி இருக்க?’ என்றான். அவர்கள் உரையாடியபடியே மாஸ்டரிடம், மூன்று டீ சொன்னார்கள். ஷரண் கல்லாப் பெட்டிக்கு அருகாக சென்று மூன்று லைட்ஸ் வாங்கிக்கொண்டு வந்தான். மூவரும் ஆளுக்கொன்றை வாயில் வைத்து பற்ற வைத்தார்கள். மூவரும் ஒன்று சேர்ந்தாற்போல புகையை உள்ளிழுத்து வெளியேவிட்டனர். புகைத்தபடியே பேச ஆரம்பித்தனர்.

அருண் ஷரணிடம் கேட்டான், ‘அண்ணனுக்குப் படத்தைப் போட்டு காம்ச்சிய்யா?’ ஷரண் புகையை வெளியிட்டபடி தலையசைத்தான். ‘படம் எப்படிண்ணா இருக்கு? நீங்க நெனைச்சபடி எடுத்திருக்கேன்னா? இல்ல… மொக்கைப் பண்ணிட்டேனா?’ அருண் அவனிடம் கேட்டான். ‘ரொம்ப நல்லா வந்திருக்கு அருண்…’ என்றான். அப்போது டீக்கடை பையன் அவர்களுக்கு முன்பாக வந்து நின்று டீயைக் கொடுத்துவிட்டு சென்றான்.

‘அப்புறம் வேறென்னண்ணா ஸ்பெஷல்?’

‘ஸ்பெஷல்னு ஒன்னுமில்ல… எப்பவும் போல கொஞ்சம் கதைகள் எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… எதையும் எழுதி முடிக்க முடியல…’ அவன் சொல்லிவிட்டு டீயைக் கொஞ்சம் உறிஞ்சிவிட்டு புகையை இழுத்தான்.

அருண், சிகரெட் சாம்பலை உதிர்த்தபடி ‘ரைட்டிங்ன்னாலே கொஞ்சம் கஷ்டம்தான். போன படத்துக்கெல்லாம் கதை எழுதறத்துள்ள நான் செத்துட்டேன்… அதனாலதான் இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா படம் பண்ணலாம்னு உங்கக்கிட்ட கதை கேட்டேன்’.

மூவரும் ஒவ்வொரு மிடறுவாக தேனீர் அருந்தியபடியும் புகைத்தபடியும் இருந்தனர். ஒருவருக்கடுத்து ஒருவராக தீர்ந்த சிகரெட்டைக் கீழே போட்டு காலால் மிதிக்க துவங்கினர். தேனீரையும் முழுமையாக அருந்தி முடித்திருந்தனர். கொஞ்சம் நேரம் அப்படியே நின்று பேசியபடி இருந்தனர்.

அருண் அவனிடம் கேட்டான், ‘கடைசியா என்ன படம்ண்ணா பார்த்தீங்க?’.

‘ரொம்ப நாட்களுக்கு முன்னாடி Combrades – Almost a love storyனு ஒரு படம் பார்த்தேன் அருண்… ரொம்ப நல்லாருந்துச்சி… அதுக்கப்புறம் எந்தப் படமும் பாக்கல… புக்ஸ்தான் படிச்சுட்டு இருக்கேன்...’

‘அப்டியா? எனக்கும் எதாச்சும் புக்ஸ் கொண்டு வாங்கண்ணா… நானும் தமிழ்ல படிக்க ஆரம்பிக்கனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்… ஆ... ‘தீபன்’ படத்துல நடிச்சிருக்காரே? அந்த ரைட்டர் பேரு என்னண்ணா?’

‘ஷோபாசக்தி!’

‘ஆ… அவர் புக் எதாச்சும் இருந்தா கொண்டு வாங்கண்ணா...’

‘அவரோட எல்லா புக்ஸூம் இருக்கு அருண்… கொண்டு வரேன்…’

ஷரண் எதுவும் பேசாமல் அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தான்.

சரவணன், ஷரணிடம் கேட்டான், ‘என்ன ஷரண்? எதுவும் பேசாம அமைதியா இருக்க?’

‘என்னண்ணா பேசுறத்து இன்னொரு தம் அடிக்கனும் போல இருக்கு… உங்களுக்கு வேணுமா?’

சரவணன் ‘வேண்டாம்’ என்றுவிட்டான். அருண் தனக்கும் சேர்த்து ஒன்று வாங்க சொன்னான். இருவருமாக ஆளுக்கொரு லைட்ஸ் வாங்கி பற்ற வைத்துக்கொண்டனர். சரவணனுக்கும் இன்னொரு ‘தம்’ அடிக்க வேண்டும்போல் இருந்தது. அதேசமயம் அவனது உள்ளுணர்வு ஏனென்றே தெரியாமல் ‘வேண்டாம் வேண்டாம்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தது. அவர்கள் உதட்டில் சிகரெட்டைப் பொருத்தி, புகையை உள்ளிழுப்பதையே சரவணன் ஏதோவொரு யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் கணத்தில், ‘சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு நகர்வது நல்லது’ என்று அவனுக்கு யாரோ சொல்வது போல இருந்தது. மீண்டும் ஒரு குரல் ‘சீக்கிரம்!!! சீக்கிரம்!!!’ என்று எச்சரித்தது. ஏன் இப்படியெல்லாம் திடீரென்று தோன்றுகிறது என்று தெரியாமல் அவன் தவித்துக்கொண்டிருந்தான். அதை அவர்களிடம் சொல்லவும் செய்தான்.

‘ஷரண்… சீக்கிரம் வாங்க போகலாம்… ஏன்னு தெரியல… இங்க இருக்கறத்து என்னமோ போல இருக்கு…’ என்றான். ‘ஏண்ணா அப்படி சொல்றீங்க?’ என்று அருண் கேட்டான். ‘ஏன்னு தெரியல அருண்… என்னமோ தப்பா மனசுக்குப்படுது… சீக்கிரம் வாங்க…’ என்றான். ஷரணும் அருணும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் புகையை வேகமாக இழுத்தபடி இருந்தனர். அவன் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையில் நடந்துச்செல்பவர்களைப் பார்த்தபடியிருந்தான்.

சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஷரணின் அம்மா, இவர்கள் புகைப்பிடித்தபடி நின்றுக்கொண்டிருப்பதைக் கோபமாகப் பார்த்தபடியே சாலையோரமாக சென்றுக்கொண்டிருந்தார். சரவணன், ஷரணின் கைகளை மெதுவாகப் பிடித்திழுத்து சைகை காட்டினான். ஷரண், அவனது அம்மா தங்களைப் பார்த்துக்கொண்டுத் தங்களுக்கு எதிராக சாலையில் நின்றுக்கொண்டிருப்பதைக் கவனித்தான். அம்மாவைப் பார்த்த மறுகணமே அவன் கையில் வைத்திருந்த சிகரெட்டைத் தன்னிச்சையாகக் கீழே ஏறிந்துவிட்டான். இருவரின் முகங்களும் வாடிவிட்டது. இதைக் கவனிக்காமல் அருண், அவன் போக்கிற்குப் புகையை இழுத்துவிட்டபடி இருந்தான். அம்மா, ஷரணைப் பார்த்து, ‘வீட்டுக்கு வா… உன்னைக் கொன்னுடறேன்…’ எனும் விதமாக, கோபமான முகத்துடன் நடந்து சென்றபடியே சைகை காட்டினார்கள். அப்போதுதான் அருணும் அவர்களைப் பார்த்து சிகரெட்டைக் கீழே போட்டான்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் மூன்று பேரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் பேரமைதியுடன் டீக்கடைக்கு முன்பாகவே வெகுநேரம் நின்றுக்கொண்டிருந்தனர். ஷரணின் முகம் ரொம்பவே வாடிப்போய் இருந்தது. அவனுக்குள் நிறைய யோசனைகள் சுழன்றபடி இருந்தன. மற்ற இருவரும் ஷரணைப் பார்த்தபடி என்ன பேசுவதேன்றே தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தனர். ஷரணே பேச்சை ஆரம்பித்தான்.

“எப்படிண்ணா என்னமோ நடக்கப்போகுதுன்னு கரெக்ட்டா சொன்னிங்க?” என்று சோகம் கலந்த புன்னகையுடன் கேட்டான். “தெரியல ஷரண்… என்னமோ தப்பா நடக்கப்போகுதுன்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சி…  மனசு நெனைச்ச மாதிரியே எப்படி இது நடந்துச்சின்னு தெரியல…” அவன் சொல்லிவிட்டு மௌனமாக நின்றான்.

அருண், “அண்ணா… நீங்க ஒரு தீர்க்கதரிசிண்ணா… அடுத்து ஷரண் வீட்டுக்குப் போனா என்ன ஆகும்னு உங்க மனசு சொல்லுது… சொல்லுங்கண்ணா…” என்று கேலிப்புன்னகையுடன் கேட்டான்.

“டேய்… நீ வேற ஏண்டா…” சரவணன் பொய்யாக கோபித்தான்.

“உங்கம்மா இந்தப் பக்கமாதான் கோயிலுக்குப் போய்ட்டு வருவாங்கனு முன்னாடியே உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர்ஷரண்?” அருண் மிகக் கிண்டலாகக் கேட்டான்.

“அவங்க இந்தப் பக்கமா வரமாட்டாங்கடா… வேற பக்கமாதான் எப்பவும் வந்து போவாங்க… இன்னைக்கு என்னனு தெரியல… நம்ம நேரம்… இந்தப் பக்கம் வந்திருக்காங்க…” என்று சொல்லிவிட்டு ஷரண் அமைதியாக இருந்தான்.

“நம்ம நேரம்னு சொல்லாதீங்க மிஸ்டர் ஷரண்… இது உங்க நேரம்னு சொல்லுங்க… ஏன்னா… நாங்க இப்படியே எஸ்ஸாயிடுவோம்… வீட்டுக்குப் போய் அம்மாக்கிட்ட டோஸ் வாங்கப் போறத்து நீங்க தான்!” அருண் சொல்லிவிட்டு சிரித்தான். ஷரண் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சரி… விடுங்க மிஸ்டர் ஷரண்… எதுக்கும் கவலைப்படாதீங்க! வாங்க வீட்டுக்குப் போகலாம்… என்ன பண்ணிடப்போறாங்க… நாலு திட்டு திட்டுவாங்க… மிஞ்சிப்போனா நாலு அடி அடிபாங்க… அவ்ளோதானே! ம்… அவங்களுக்கே தெரியனும் இந்த வயசுல பசங்க இப்படித்தான் இருப்பானுங்கனு… ஃபிரியா விடு!”

ஷரண் மௌனமாகவே இருந்தான். சரவணன், “நான் வரல அருண்… நீ சொன்ன மாதிரி நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்பிடுறேன்… எனக்கு அசிங்கமா இருக்கு… என்னால நிச்சயமா அவங்க முகத்துல முழிக்க முடியாது…” என்றான்.

“அண்ணா… இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல… பெருசா ஒன்னும் நடக்காது வாங்கண்ணா… ஜாலியா போய்ட்டு வரலாம்… முடிஞ்சா ஷரண் அடி வாங்குறத்தை வேடிக்கைப் பார்த்துட்டு வரலாம்…” தனது வழக்கமான கிண்டல் தொனியை மாற்றாமல் சொன்னான் அருண்.

“இல்லை அருண்… எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு… நான் வரல…”

“போய் அவங்கக்கிட்ட சாரி கேட்டுட்டு போய்டலாம்ண்ணா… வேற ஒன்னும் நாம்ம பேச வேண்டாம்… அடுத்து இவன் கதை… இவங்க அம்மா கதை… வாங்க நாம்ம நம்ம கதையை முடிச்சிடுவோம்…” என்றான் அருண். ஷரணும் “வாங்கண்ணா… ஒன்னும் சொல்ல மாட்டாங்க… திட்னாலும் என்னைத்தான் திட்டுவாங்க… உங்களையெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க…” என்றான்.

மூவருமாக வீட்டுக்குக் கிளம்பினர். அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது ஷரணின் அம்மா சமையலறையில் இருந்தார். ஷரண் மட்டும் சமையலறைக்குள் சென்றான். சரவணனும் அருணும் ஷரணின் அறைக்குப் போய் நாற்காலில் அமர்ந்துக்கொண்டனர். அறையில், அருண் சரவணனைப் பார்த்து ‘ஒன்னும் நடக்காது… கவலைப்படாதீங்க’ எனும் விதமாக சைகை செய்தான். அறைக்குள் ஒரு மௌனம் நிலவியது. இடையில் ஷரண், சமையலறையில் அவனது அம்மாவுடன் சமாதானம் பேசிக்கொண்டிருப்பது மெல்லிய குரலில் கேட்டது. கூடவே அவனது அம்மாவின் விசும்பல் சத்தமும் கேட்டது.

அருணும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்குள்ளும் இனம்புரியாத ஒரு சங்கடம் நுழைந்திருந்தது. குறிப்பாக சரவணனின் முகத்தில் மீளா துயரம் ஒன்று பரவியிருந்தது. சரவணனுக்கு அப்போதே சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனாலும் அருண் சொன்னது மாதிரி அவர்களிடம் ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டுவிட்டு போவதுதான் நல்லது என்றும் தோன்றியது. கொஞ்ச நேரத்தில் ஷரணின் குரலும் அம்மாவின் விசும்பல் சத்தமும் அடங்கியது. ஷரண் அவனது அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான். அவர்கள் அவனது முகத்தைக் கவனித்தனர். ரொம்பவும் வாடியிருந்தான் ஷரண். கண்கள் கலங்கியிருந்தது போல் இருந்தது. அவர்களுக்கு அவனிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை. அவர்களுக்குள் ஓர் இறுக்கமான மௌனம் நீண்ட நேரம் நிலவியபடி இருந்தது.

திடீரென ஷரணின் அம்மா, அறைக்குள் காஃப்பி குவளைகளுடன் நுழைந்தார். அவர்களுக்கு முன்பாக, காஃப்பியை வைத்துவிட்டு சென்றார். அந்தக் கணத்தில், இன்னும் பெரும் நிசப்தம் அவ்வறையில் புகுந்தது. மூவரும் காஃப்பியைத் தொட்டுகூட பார்க்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தனர். திடீரென ஒரு குரல், “காஃப்பி ஆறிட போகுது… குடிச்சிட்டு வேலையைப் பாருங்க…” என்று கேட்டது. அம்மாவின் குரல் கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது அவர்களுக்கு.

அருண்தான் முதலில் காஃப்பியைக் கையிலெடுத்தான். மற்ற இருவரையும் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று உரிமையுடன் சைகை செய்தான். அவர்களும் குவளையை எடுத்து மெல்ல பருகத் துவங்கினர்.

“சர்க்கரை சரியா இருக்காண்ணா?” என்று ஷரண் மெல்லிய குரலில், சரவணனிடம் கேட்டான்.

“சரியாதான் இருக்கு ஷரண்…” என்று சொல்லிய சரவணனுக்கு காஃப்பி நிறையவே கசத்தது.



(‘அவர்கள் சிகரெட் பிடிக்கச் சென்றபோது’ எனும் தலைப்பில் 'உயிர் எழுத்து' ஜூன் 2017 இதழில் வெளியான சிறுகதை. திருத்தி எழுதப்பட்டது.)

Comments