வித் அவுட் (சிறுகதை)

நூலகத்துக்குள் நுழைந்த போது மணி சரியாக ஒன்றாகியிருந்தது. ரெஃபரன்ஷ் செக்சனிலிருந்த அசோகமித்திரனின் கட்டுரைத்தொகுப்பைக் கையிலெடுத்ததும் அவள் என்னை அலைப்பேசியில் அழைத்ததும் ஒருசேர நிகழ்ந்தது. அவளது அழைப்பையேற்று பேசினேன். தனது ப்ராஜெக்ட் வொர்க்கை முடிப்பதற்கான காலாவகாசம் முடிய இன்னும் ஒரு தினம் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் தான் தன் ஆய்வுரையை முழுமையாகத் தட்டச்சு செய்து முடிக்கவில்லை என அவள் என்னிடம் வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள். அதுமட்டுமில்லாமல் அவளுக்கு உதவியாக, விரைந்து ஆய்வுரையைத் தட்டச்சு செய்வதற்கு என்னுடைய உதவியை நாடினாள். உடனடியாக என்னைக் கல்லூரிக்கு வரச்சொன்னாள். நான் அவளுக்கு வருவதாக வாக்களித்து விட்டு அழைப்பைத் துண்டித்து, பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸைத் திறந்து கையிருப்பாக எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தேன். வெறும் பதினெட்டு ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

நான் அன்று கல்லூரிக்கு விடுப்பெடுத்திருந்தேன். அதனால் அந்த நாளை வீணடிக்க மனமற்று நூலகத்துக்குச் செல்ல முடிவெடுத்திருந்தேன். வீட்டிலிருந்து நான் நூலகத்துக்குக் கிளம்பியபோது சாப்பிட்டிருக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இரவு வெகுநேரம் வரையிலும் கண் விழித்திருந்ததால் தூங்கியெழுவதற்குள் மணி நண்பகல் பன்னிரண்டு ஆகிவிட்டிருந்தது. குளித்துமுடித்துவிட்டு சாப்பிடப் பிடிக்காமல், உடனடியாக நூலகத்துக்குக் கிளம்பிவிட்டிருந்தேன். தேநீர் அருந்துவதற்கும் பேருந்து போக்குவரத்துக்கும் போதுமானதாக இருந்த முப்பத்தைந்து ரூபாய்களை மட்டும் கையிலெடுத்து வந்திருந்தேன். அவளது அழைப்பின் பெயரில் நான் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசியம் வரும் என்று நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. கையிருப்பாக இருந்த பதினெட்டு ரூபாய்களைக் கொண்டு கல்லூரி வரைக்கும் பேருந்தில் பயணிக்கலாம் என்றாலும்கூட, திரும்பி வருவதற்கான பணத்திற்கு என்ன செய்வது? என்றொரு கேள்வியும், அவளிடமே வீடு திரும்புவதற்குத் தேவையான பணத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாமா என்ற எண்ணமும் என்னுள் எழுந்தடங்கியது. எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாமென்ற முடிவுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்தேன். ஒரு தனியார் பேருந்து வர, அதிலேறி அமர்ந்துக்கொண்டேன். அதிலேறிய பிறகு சில கேள்விகள் என்னுள் எழுந்தன.

‘இதற்கு முன்பு இந்தத் தனியார் பேருந்தில் பயணித்தது இல்லையே? இந்தப் பேருந்தில் தாம்பரம் வரையிலும் செல்வதற்கான கட்டணம் எவ்வளவு? ஒரு வேளை நம்முடைய கையிருப்பான பதினெட்டு ரூபாய்களைக்காட்டிலும் அதிகமாக இருந்தால் என்ன செய்வது?’

நடத்துநர் என்னை நெருங்கி வந்தபோது அவரிடம் கையிருப்பாக இருந்த பணத்தைக் கொடுத்து ‘தாம்பரம் ஒன்னு’ என்று கேட்டேன். அவர் என்னிடமிருந்த பத்து ரூபாய் தாளையும் சில்லறைகளையும் பெற்றுக்கொண்டார். ஆனால் எண்ணிப்பார்க்கவில்லை. அவர் தன் கையில் வைத்திருந்த பயணச்சீட்டு நோட்டில், பயணக்கட்டணத்தைப் பயணச்சீட்டில் எழுதி அதைக் கிழித்து என் கையில் கொடுத்தார். நான் பயணச்சீட்டைப் பார்த்தேன், ‘எவ்வளவு ரூபாய்கள்?’ என்று. ஆனால் அவர் எழுதியிருந்தது எனக்குப் புரியவில்லை. எவ்வளவாக இருக்குமென்று புரியாமல் அவரிடம் கேட்டேன். ‘அண்ணா… டிக்கெட் எவ்வளவுண்ணா?’ அவர் பதிலேதும் சொல்லாமல், உடனடியாக தன் கையிலிருந்த சில்லறைகளைப் பார்த்தார். அதிலிருந்து மூன்று ரூபாய்களையெடுத்து என் கையில் திணித்தார். உடனடியாக அடுத்தப் பயணியைப் பார்த்து நகர்ந்தார். நான் அந்த மூன்று ரூபாய் சில்லறையைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

பேருந்தில், “கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா… கண்ணீர் குயில் பாடுகிறேன்…” என்று ஜானகி பாடிக்கொண்டிருந்தார். நான் அந்தக் குரலில் லயித்து ஜன்னல் இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி வந்தேன். இடையே அந்தப் பாடலில் எஸ்.பி.பியும் சேர அந்தப் பாடலின் இலயிப்பில் ஆழ்ந்தேன். தொடர்ந்து இளையராஜா பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன. 

இறங்கும்வரையிலும் மனசெங்கிலும் இளையராஜா இராஜ்ஜியம்தான்!

மணி இரண்டாகியிருந்தது. தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து விரைந்து நடந்து கல்லூரியை அடைந்திருந்தேன். நான் அலைப்பேசியில் அவளை அழைக்கலாமென்று நினைத்த கணத்தில் அவளாகவே என்னை அழைத்தாள். நான் எங்கே இருக்கிறேன் என்பது குறித்து வினவினாள். நானும் அதேக் கேள்வியைத்தான் அவளிடம் கேட்க நினைத்திருந்தேன். 

பதிலைச் சொல்லிவிட்டு அவளிடமிருந்து பதிலைப் பெற்றேன். ‘நான் தமிழ் டிபார்ட்மெண்ட்டவிட்டு இப்போதான் வெளிய வரேன்…’ என்றாள். நான் சொன்னேன், ‘அங்கயே இருங்க… நான் வரேன்…’. ‘இல்லை… நீங்க நேரா லைப்ரரி வந்துடுங்க…’ என்றவள் என்ன நினைத்தாளோ என்று தெரியவில்லை. அடுத்தக் கணமே, ‘இல்லை… நீங்க இங்கையே வாங்க… நான் வெயிட் பண்றேன்…’ என்றாள்.

நான் தமிழ்த்துறை அறைக்கருகாகச் சென்று பார்த்தேன். அவள் அங்கு இல்லை. திரும்பி நடந்தப் போதுதான் அவளைக் கண்டுக்கொண்டேன். அவள் தமிழ்த்துறை அறையிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்றிருந்தாள். என்னைக் கண்டுக்கொண்டு கையசைத்தாள். நான் அவளைப் பார்த்தேன். பதிலுக்குக் கையசைக்கவில்லை. அவளை நோக்கி நடந்து நெருங்கினேன். என்னைப் பார்த்து மெல்லிதாக புன்னகைத்தபடி, ‘ஹாய்…’ என்றாள். நான் பதிலுக்குத் தலை அசைத்தேன். அவள் அடுத்து எதற்கும் காத்திருக்கமாட்டாதவளாய், ‘லைப்ரரி போவமா?’ என்றாள். நான் அதற்கும் தலையசைத்தேன். லைப்ரரிக்குள் நுழைந்து கிடைத்த இருக்கைகளில் ஒருவருக்கருகாக இன்னொருவர் அமர்ந்துக்கொண்டோம். அவள், தனது பையிலிருந்து மடிக்கணினியையும் அவளது குறிப்பு புத்தகத்தையும் நிறைய குறிப்பு தாள்களையும் எடுத்து மேசையின் மீது பரப்பினாள்.

அவள் தான் கைப்பட எழுதிய தாள்களில் பாதியையும் மடிக்கணினியையும் என்னிடம் கொடுத்துதட்டச்சு செய்ய சொன்னாள். மீதி பாதி தாள்களைச் சரி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தட்டச்சு செய்ய செய்ய என்னிடமிருந்த தாள்கள் குறைந்த விகிதத்தில், அவளிடமிருந்த தாள்கள் என்னிடம் தட்டச்சு செய்ய வந்துச்சேர்ந்தன. இப்படியாக நாங்கள் தட்டச்சு செய்து முடித்து பிழைத்திருத்தி, அந்தப் பிரதியை மறக்காமல் மெயிலில் சேமித்துவைத்துக்கொண்டோம், பிரிண்டிங் கடைக்குப் போய் பிரிண்ட் எடுக்க உதவியாக இருக்கும் என்று. எல்லாம் முடிந்தபோது மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. எனக்குக் கொஞ்சம் வயிறு கிள்ளியது. அந்தச் சமயத்தில், அவளாக ‘சரி வாங்க! டீ குடிக்க போவோம்…’ என்று சொன்னது கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது. 

அவளுடன் கேண்ட்டீனை நோக்கி விரைந்து நடந்தேன். அவள் முன்பாக செல்ல அவளைப் பின் தொடர்ந்தேன். அவள் அலைப்பேசி திடீரென ஒலிக்க அதையெடுத்து பேசியப்படியே அவள் முன் நகர்ந்தாள். நான் ஓர் ஓரமாக நின்றுக்கொண்டிருந்தேன். அவள் அலைப்பேசியைக் காதில் வைத்து பேசியபடியே ஒரு கையில், பேப்பர் கப்பில் கொடுக்கப்பட்ட ‘க்ரீன் டீ’யை வாங்கிக்கொண்டு வந்தாள். ‘என்ன ஒரே ஒரு டீ மட்டும் வாங்கி வருகிறாள்?’ என்று நான் யோசித்த கணத்தில், கேண்ட்டீன் காரன் அவளை அழைத்தான். நான் நினைத்தேன். அவன் ‘இன்னொரு டீயை எடுத்துக்கொள்ள அவளைப் பணிக்க போகிறான்’ என்று. ஆனால் ஏமாற்றம்! அவன் மறந்த மீதி சில்லறையைக் கொடுத்தான். அவள் அந்தச் சில்லறையைப் பெற்றுக்கொண்டாள். அலைப்பேசியைத் துண்டித்து க்ரீன் டீயை எடுத்துக்கொண்டு என்னருகே வந்தாள். எனக்குள் பெரும் சங்கடம் நெளியத் துவங்கியது.

என்னருகே வந்து, என் முன்பாக சில்லறையை நீட்டி ‘போய் டீ வாங்கிக்கங்க… நீங்க க்ரீன் டீ குடிக்க மாட்டீங்கல…’ என்றாள். மனதுக்குள், ‘அந்த டீயை நீயே வாங்கி வந்திருக்கலாமே! அட்லீஸ்ட் அந்த டீக்கு காசு கொடுத்துவிட்டு என்னை அழைத்திருந்தால், அவன் ஊற்றிக்கொடுக்க போகும் டீயை நானே வந்துவாங்கிக்கொண்டிருப்பேனே…’ என்று எனக்குத் தோன்றியது. அதுமட்டுமில்லாமல், அதே கேண்ட்டீனில் நான் நின்றிருந்த அதே இடத்தில், இதற்கு முன்பாக க்ரீன் டீ வாங்கி பருகிய நாட்களும் எனக்கு நினைவுக்கு வந்தன. கூடவே, ‘எப்படி நான் க்ரீன் டீ குடிக்க மாட்டேன்?’ என்ற முடிவுக்கு வந்தாள் என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் அவள் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த கவனப்பிசகால் செய்துக்கொண்டிருக்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

நான் ‘எனக்கு டீ வேண்டாம்’ என்றேன். ‘ஏன்?’ எனக் கேட்டாள். ‘இல்லை… வேண்டாம்…’ என்று பேச்சை நிறுத்திக்கொண்டேன். ‘சரி… போகலாம்… டைம் இல்ல… நான் நடந்துக்கிட்டே குடிச்சிக்கிறேன்…’ என்றாள். நாங்கள் நடக்கத் துவங்கினோம். ப்ரிண்ட் எடுக்க ஒரு கடையை அடைந்திருந்தோம். அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக தன் கையில் பணமில்லை எனவும், ஏடிஎம்மில் போய் எடுத்து வருவதாகவும் அதுவரையில் என்னை ப்ரிண்ட் எடுத்து பைண்ட் செய்யும் வரையில் கடையிலேயே என்னை இருக்க சொல்லிச் சென்றாள். நான் சரி என்று காத்திருந்தேன். அவள் அந்தக் கடைக்காரரிடம் அருகில் எங்கே ஏடிஎம் இருக்கிறது என்று விசாரித்து நகர்ந்தாள்.

எனக்குக் கடுமையான பசி எடுத்தது. அவளுடைய வரவுக்காக நான் காத்திருந்தேன். இந்த வேலை சீக்கிரம் முடியும்பட்சத்தில், அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு நான் என் வீட்டுக்குச் சென்றாவது ஆசுவாசமாய் அமர்ந்து சாப்பிடலாமென்று நினைத்தேன். ஆனால் நேரம் கடந்துக்கொண்டிருந்தது. அரைமணி நேரமாகியும் அவள் வரவில்லை. அவளது ஆய்வுரை, பணத்தைக் கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் தயாராக இருந்தது. நான் அவளை அலைப்பேசியில் அழைத்தேன்.

“ஹலோ… எங்க இருக்க?”

“கடைக்குப் பக்கத்திலிருந்த ஏடிஎம் வொர்க் ஆகல… அதான் கொஞ்சம் நடந்து இன்னொரு ஏடிஎம்ல பணம் எடுக்க வந்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்…” என்றாள்.

“சரி… சீக்கிரம் பாத்து வா…” என்று சொல்லி நான் அழைப்பைத் துண்டித்தேன்.

பசியை மறக்கவும் நேரம் கழிக்கவும் பைண்ட் செய்யப்பட்ட அவளது ஆய்வுரையைப் பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிழையேதுமில்லாமல் தெளிவாக இருக்கிறதா என்று பரிசோதித்தேன். கடையில் போவோரையும் வருவோரையும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக, அவள் வந்து சேர்ந்தாள்.

பணத்தைக் கொடுத்து அவளது ஆய்வுரையைப் பெற்றுக்கொண்டு நாங்கள் நகரத் துவங்கியபோது மணி ஏழைத் தாண்டியிருந்தது. நடந்து வரும்போது அவள் தனக்குப் பசிக்கிறது என்றாள். ‘ஏதாவது ஜூஸ் குடிப்போமா?’ என்று அவள் என்னிடம் கேட்டாள். நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். அவள் ‘இல்லைன்னா… டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டாள். எனக்கு அந்தக் கணத்தில், என்ன சொல்வது என்று தெரியவில்லை. திடீரென்று ‘இல்லை… எனக்குப் பசிக்கல… வேண்டாம்… உனக்கு ஏதாச்சும் வேணும்னா குடி…’ என்றேன். ‘எனக்கு ஜூஸ்தான் வேணும்… டீ வேண்டாம்…’ என்றாள். அருகிலிருந்த பேக்கரி ப்ளஸ் ஜூஸ் கடைக்கு என்னை அழைத்துச் சென்றாள். அந்தக் கடையிலிருந்த பெரியவர் ‘ஜூஸ் போட ஆள் இல்லை’ என்று சொல்ல திரும்பினோம்.

அவள் மீண்டும் என்னிடம் கேட்டாள், ‘நீங்க டீ குடிக்கிறீங்களா?. நான் ‘எனக்கு வேண்டாம்’ என்று மீண்டும் சொன்னேன். ‘அப்போ வாங்க போவோம்…’ என்றாள். நாங்கள் இரயில் நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம். இரயில் நிலையத்தை நெருங்க நெருங்க ‘டிக்கெட் எடுக்க கூட காசு இல்லையே… இவளிடம் கேட்கலாமா?’ என்று மனசு என்னைக் கேட்டுக்கொண்டிருந்தது.

நான் அவளிடம் பணம் ஏதும் கேட்கவில்லை. வழக்கமான மௌனம் காத்தேன்.

நாங்கள் தாம்பரம் இரயில் நிலையத்தினுள் நுழையவும், ‘செங்கல்பட்டு வரையில் செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி நான்காவது பிளாட்ஃபாரத்திற்கு வந்து சேரும்’ என்ற அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது. அவள் என்னைப் பார்த்து, ‘போங்க… இந்த ட்ரைன்லயே போய் ஏறிக்கங்க…’ என்றாள்.

‘இல்லை… நான் உன்னைக் காலேஜ் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்னே…’ என்றேன். ‘வேண்டாம்… ஏற்கனவே நிறைய டைம் ஆகிடுச்சி… நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போங்க…’ என்றாள். நான் மறுத்தேன். அவளுடன் தொடர்ந்து நடந்துச்சென்றேன். அவள் மீண்டும் மீண்டும் என்னைப் பணித்தாள். ‘இந்த ட்ரைன்லையே போங்க… நான் போய்க்கறேன்…’ என்றாள். நான் மௌனத்துடன் அவளுடன் தொடர்ந்து நடந்த கணத்தில், ‘எப்பன்னா போங்க… திமிர் பிடிச்சவங்க… அழிஞ்சிதான் போவாங்க…’ என்று கிண்டலாய் சபித்தாள். அவள் அப்படிச் சொன்னதும் மேலும் அவளைச் சங்கடப்படுத்த விருப்பமில்லாமல், நான் அவள் சொன்னபடி, இரயிலைப் பிடிக்க நடந்தேன். அவளும் என்னுடன் நடந்து வந்தாள். நான் இரயிலில் ஏறிவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் எனக்குக் கையசைத்தாள். நான் புன்னகைத்தேன். அடுத்த சில நொடிகளில், இரயில் பெருமூதலுடன் நகரத் தொடங்கியது. நான் அவளை எட்டிப்பார்த்தபடி இருந்தேன். அவள் கையசைத்து புன்னகைத்து என்னை வழியனுப்பிவிட்டு நடக்கத் துவங்கினாள். நான் தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டேன். அப்போது இரயிலிலிருந்த மின்னொலிபெருக்கியின் மூலம் ஓர் அறிவிப்பு காதில் வந்து விழுந்தது.

“இரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்!”

நான் அதைக் கேட்டும் கேட்காத மாதிரி வெளியில் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.

Comments