LIST (2011) (கொரியன் குறும்படம்)

 


கொரியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ‘ஹாங்க் சாங்க் சூ’-ன் LIST (2011) எனும் இக்குறும்படம் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் கால அளவுடையது. அவரது பாணியிலிருந்து சற்றும் விலகாத படைப்பு. ‘IN ANOTHER COUNTRY’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த இடத்தில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு, அதே நடிகர்களைக் கொண்டு இரண்டு நாட்களுக்குள்ளாக இந்தக் குறும்படம் அவரால் எழுதி இயக்கப்பட்டிருக்கிறது.

முப்பது வயதை நெருங்கியிருக்கும் திருமணமாகாதப் இளம்பெண்ணொருத்தி, தன் மாமா வாங்கியக் கடன் தொல்லையிலிருந்து விடுப்படவும், தன்னுடைய விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும், தாயுடன் ஒரு கடற்கரையோர விடுதியில் தங்கியிருக்கிறாள். மறுநாள், அந்தக் கடற்கரை நகரத்தில் தான் செய்ய வேண்டிய விஷயங்களைக் குறிப்பேட்டில் பட்டியலிட்டுக்கொள்கிறாள்.

தனது தாயுடன் பயணத்தைத் தொடங்குகிறாள். இருவரும், அந்தக் கடற்கரையோர கிராமத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர். கடற்கரைக்குச் செல்கின்றனர். கடற்கரையில், அவள் ஓர் இளம் இயக்குநரை அடையாளம் கண்டுக்கொண்டு அவனுடன் பேசத் துவங்குகிறாள். தனது தாய்க்கு அவனை அறிமுகம் செய்து வைக்க, அவர்கள் மூவரும் ஒன்றிணைந்து ஓர் உணவுவிடுதிக்குச் சென்று மதிய உணவை உண்கின்றனர். இடையியே நிகழும் உரையாடலில், அந்த இயக்குநர் விவாகரத்தானவர் என்பது தெரியவருகிறது. மேலும் அவர், அந்தப் பெண்ணின் தாயிடம் ‘உங்கள் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது… அவளுடன் நான் நேரம் செலவிட நீங்கள் அனுமதிக்க வேண்டும்…’ என மிக வெளிப்படையாக கேட்கிறார். இருவருக்கும் ஆச்சரியம். அந்தப் பெண் தன்னால் முடியாது என மறுக்கிறாள். பிறகு, தாயும் உடன் இருந்தால் மட்டுமே தான் பாதுகாப்பாக உணர்வதாகச் சொல்கிறாள். அதைத் தொடர்ந்து அந்த இயக்குநர், ‘அதனாலென்ன? அவரும் நம்முடன் வரட்டும்…’ எனச் சொல்ல, மூவரும் ஒன்றிணைந்து பயணிக்கத் துவங்குகின்றனர்.

மீண்டும் கடற்கரைக்குச் செல்கின்றனர். அவள் கடற்கரை ஓடு ஒன்றைக் கையில் சேகரித்து வைத்துக்கொள்கிறாள். அந்த இயக்குநர், அவர்களைத் தனது புகைப்படக் கருவியில் படம் எடுக்கிறார். அவர்களுக்கு இடையில் ஓர் உரையாடல் நிகழ்கிறது. அவள் எந்த வகையில் தன்னைக் கவர்ந்தாள் என்பதை அந்த இயக்குநர் விளக்குகிறான். பிறகு கடற்கரையோர விடுதிக்குச் செல்கின்றனர். இருவரும் இணைந்து இறகுப் பந்து விளையாடுகின்றனர். பிறகு, மூவரும் இணைந்து கொஞ்சம் மதுவுடன் இரவுணவு உண்கின்றனர். உணவுக்குப் பின் இளம் இயக்குநரும் இளம்பெண்ணும் மட்டும் இணைந்து நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். பிறகு, அவள் அந்த இயக்குநரைத் தங்களுடன் சேர்ந்தே தங்கிக்கொள்ள அழைக்கிறாள். தன்னுடைய தாய்தான் அழைத்தாள் எனவும் அவருக்கு ஏதும் சங்கடம் இல்லை எனவும் தெரிவிக்கிறாள். விடுதியறைக்குச் செல்கின்றனர். அவள் தனது தாய்க்கு உடலைப் பிடித்து விடுகிறாள். பிறகு, அவர்களைப் படுக்கச் சொல்லிவிட்டு, அவளது தாய் உறங்கச் சென்றுவிடுகிறாள். அவள் படுப்பதற்கு, பாய் தலையணை போர்வைகளைத் தயார் செய்துவிட்டு பல் துலக்கச் சென்றுவிடுகிறாள். வெளியே வரும் அவளுடன் இணைந்து, அறைக்குள்ளாக இருந்தபடியே இருவரும் நிலவை ரசிக்கின்றனர். கைகளைப் பற்றிக்கொண்டு படுத்தபடி, உரையாடுகின்றனர். அந்த இயக்குநர் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். அவளும்! அவர்கள் முத்தமிட்டுக்கொள்கின்றனர்.

இறுதியில், அவள் தாய் வருகிறாள். இளம்பெண்ணின் மெல்லிய கனவு கலைகிறது.

மிக எளிமையான நேர்க்கோட்டு பாணியிலான கதை. கதை முடிவின்போது, அந்தப் பெண் பட்டியலிட்ட அவள் விருப்பங்கள் யாவும், அவள் கனவில் நிகழ்ந்து கலைவதை அந்தப் பெண் எப்படி உணர்கிறாளோ… எவ்வாறு ஏற்றுக்கொள்கிறாளோ… அதைப்போலவே நாமும் உணர்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம்.

Comments