நிலவைப் பார்க்கும் குழந்தை (கவிதை)

1

சோர்ந்த மனதுடன்
நிலவைப் பார்த்தால் அழும் சுபாவம் எனக்கு
நகர்ந்துக்கொண்டிருக்கும் இரயிலுக்கிணையாய்
நிலவும் நகர நகர...
ஜன்னலோர இருக்கையில்,
நிலவுக்கு முகம் கொடுக்காமல்
முகம் திருப்பிப் பார்க்கிறேன்
எதிர் இருக்கையில்
அழத் துவங்குகிறது
ஒரு குழந்தை.
சூழ்ந்திருந்த எல்லோரின் சமாதானத்தையும்
புறக்கணித்த குழந்தை,
'நிலா பார்... நிலா பார்...' என்ற
எனது கோரிக்கையை மட்டும்
சட்டென ஏற்றுக்கொண்டது ஏனோ.
கண்ணீரைத் துடைத்து
நிலா பார்க்கத் துவங்குகிறது
மிக அமைதியாக
பார்க்கிறது
பார்த்துக்கொண்டே இருக்கிறது
இன்னும் அமைதியாக.
எனக்குத் தெரியும்
நிலா பார்க்கும்
எந்தக் குழந்தையும் அழுவதே இல்லை
மேலும்...
நிலா பார்க்கும் குழந்தையைப் பார்க்கும்
எந்த மனுஷனும் மனுஷியும்கூட!

Comments

  1. அழகு...மிகுந்த தருணம்.

    ReplyDelete

Post a Comment