சந்திரிகா என்றொரு சிறுமி (வாழ்வியல் அனுபவ குறிப்பு)


தாம்பரம் இரயில் நிலையத்தின் நான்காவது பிளாட்பாரத்திலிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்தபடி நான் செங்கல்பட்டு இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். இரயில் வர, அதிக நேரம் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அலைப்பேசியில் செய்திகள் வாசித்துக்கொண்டு இருந்தேன். பின்பு ஏதோவொரு சலிப்பு மேலிட, அலைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு ஒரு காகிதத்தில் ஒரு ‘காக்கா’வை வித்தியாசமான ஒரு கோணத்தில், லெட் பென்சிலால் வரைந்துக்கொண்டிருந்தேன். அப்போது அலங்கோலமாகத் தலை மயிர்களை விரித்துவிட்டபடியும் அழுக்கேறிய வெள்ளை நிற உடையை அணிந்தபடியும் ஒரு சிறுமி என் முன் தோன்றினாள்.

நான் அவளை நிமிர்ந்து பார்க்க, வலதுக்கையில் சில சில்லறைகளையும் ஒரு பத்து ரூபாய் தாளையும் ஏந்தியபடி, இடக்கையால் சிக்குப்பிடித்த தலை மயிர்களின் சிக்குகளை எடுத்தபடி, ‘அண்ணா… காசுக்குடு’ என்றாள். அவளுக்கு வயது ஆறோ ஏழோ இருக்கலாம்.

இல்லை என்பது போல நான் அந்த சிறுமியிடம், உதட்டைப் பிதுக்கி காட்டினேன். என்னிடம் இரயில் பயணச்சீட்டைத் தவிர, நிஜமாகவே ஒரு பைசாவும் இல்லை. ஆனாலும் அவள் ‘குடுண்ணா…’ என்று கைகளை ஏந்தியபடியே நின்றுக்கொண்டிருந்தாள். நான் அச்சிறுமியிடம் ‘காசில்ல…’ என்றேன். அவள் என் கைகளிலிருந்த தாள்களைப் பார்த்தாள். அதிலுள்ள எழுத்துக்களையும் நான் வரைய முற்பட்டிருந்த காகத்தின் படத்தையும் பார்த்தாள்.

‘என்ன இது?’ அவள் கேட்டாள். நான் ‘காக்கா’ என்றேன். அவள் சிரித்தபடியே ‘இதுவா காக்கா?’ என்று சொல்லியபடி என் தலையில் அவ்வளவு உரிமையுடன் ஒரு கொட்டு வைத்தாள். எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. நான் வரைந்த படத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டேன். ஆமாம், அது ‘காக்கா’ மாதிரியில்லை. நான் சிரித்துக்கொண்டேன்.

நான் அவளிடம் கேட்டேன். ‘பின்னே… காக்கா எப்படி இருக்குமாம்?’

அவள் என்னிடமிருந்த பென்சிலையும் காகிதத்தையும் வாங்கிக்கொண்டாள். நாற்காலியில் தாளை வைத்து அவள் மனதில் ரூபங்கொண்டிருந்த காக்காவை அவள் வரைய ஆரம்பிக்க, பென்சிலில்  மிக மெல்லிதாயிருந்த ஊக்கு உடைந்துவிட்டது. உண்மையில் அவளுக்கு அந்தப் பென்சிலை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. அழுத்தி அழுத்தி எழுதினாள். அதனால் ஊக்கு உடைந்துகொண்டே இருந்தது.

‘அண்ணா… என்னண்ணா பென்சில் எழுத மாட்டேங்குது? வொடையுது?’

‘அத அப்புடி அழுத்தி எழுதக் கூடாது… பொறுமையா எழுதனும்… காட்டு நான் எழுதிக்காட்டுறேன்’ என்று சொல்லியபடி அவளிடமிருந்த பென்சிலை வாங்கி அவளுக்கு எழுதி காண்பித்தேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே அவள் ‘குடுண்ணா… நான் எழுதறேன்…’ என்று சொல்லியபடி பிடுங்கிக்கொண்டாள்.

அவள் மீண்டும் காக்காவை வரைய ஆரம்பித்தாள். மீண்டும் பென்சில் ஊக்கு உடைய அவள் கடுப்பாகிவிட்டாள். ‘இந்தாண்ணா… இது ஒழுங்காவே எழுத மாட்டேங்குது… இதை நீன்னே வெச்சிக்க…’  என்று சொல்லியபடி என்னிடம் தந்துவிட்டாள். பிறகு சுயநினைவுக்கு வந்தவளாய் மீண்டும் கைகளை நீட்டியபடி ‘அண்ணா… காசுக்குடுண்ணா…’ என்றாள். நான் அவளுக்கு என் நிலையை எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தபடியிருந்தேன்.

‘உண்மையா காசு இல்லை…’ என்றேன்.

‘அண்ணா… பொய் சொல்லாதண்ணா…’

நான் என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒன்றுக்கும் உதவாத, எப்போதும் என்னைப் போல் பசித்து இளகியிருக்கும் என்னுடைய  பர்சை எடுத்து அவளுக்குக் காட்டினேன்.

‘அண்ணன் கிட்ட ஒரு பைசாவும் இல்ல… நீ வேணும்னா அண்ணனுக்கு டீ குடிக்கக் காசு தா… அண்ணனுக்கும் பசிக்குது…’ என்றேன் விளையாட்டாக சிரித்தபடி!. அவள் ஒரு நொடியும் தாமதியாமல் தன்னுடைய கையிலிருந்த பத்து ரூபாயை என் முன் நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ…’ என்றாள். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் ‘வேண்டாம்… சும்மா கேட்டேன்…’ என்றேன். அவள் ‘எனக்குத் தெரியும்…’ என்று சொல்லிவிட்டு மெதுவாகப் புன்னகைத்து கொண்டாள்.

‘உம்பேரென்ன?’

‘சந்திரிகா…’

‘உம்பேர இந்தப் பேப்பருல எழுது… பார்க்கலாம்…’ என்று சொல்லியபடி அவள் கைகளில் என்னுடைய பாக்கெட்டில் நிரந்தரமாக தங்கிவிட்டது போன்ற பாவனையிலிருக்கும் கருநிறப்பேனாவை தந்தேன். அவள் அதைப் பெற்றுக்கொண்டு பேப்பரில் கிறுக்கியபடியிருந்தாள். அவளுக்கு எழுத தெரியவில்லை.

‘இப்படியா எழுதுவாங்க… பேனாவக்குடு… நான் எழுதி காட்டுறேன்…’ என்று சொல்லியபடி அவளிடமிருந்து பேனாவை வாங்கிப் பேப்பரில் நான் எழுத ஆரம்பித்தபோது அவள் தன்னுடைய பிஞ்சு கைகளை என் முன் நீட்டினாள். ‘அண்ணா… எங்கையில எழுதுண்னா…’ என்றாள். எழுதத் துவங்கினேன். எழுதும் போது ‘அண்ணா… கூசுதுண்ணா…’ என்றபடி கைகளை அடிக்கடி இழுத்தபடியும் சிரித்தபடியுமிருந்தாள். நான் அவள் கைகளில் ‘சந்திரிகா’ என்றெழுதினேன். நான் எழுதி முடித்தவுடன் அவள் தன் கைகளை வாகாகத் திருப்பித் தன்னுடைய பெயரைப் பார்த்துக்கொண்டாள். நான் அவளிடம் பேனாவைக் கொடுத்து ‘இப்ப நீ எழுது பாக்கலாம்…’ என்றேன். அவள் பேனாவைப் பிடித்தபடி அமைதியாகவே வெகுநேரம் இருந்தாள். நான் கேட்டேன்.

‘நீ படிக்கறயா இல்லையா?’

‘…………….’

‘படிக்கலயா?’

‘…………….’

‘உங்க அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க?’

‘……………..’

‘உங்க வீடு எங்க இருக்கு?’

‘……………..’

அவள் எதுவும் காதில் விழாதவள்போல் இருந்தாள். என்னுடைய ஒரு கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. அவளிடம் மேலும் கேள்விகளை எழுப்ப மனமில்லை.

ஒரு கணத்தில் அவள் என்னுடைய சட்டை பாக்கெட்டில் கை விட்டாள். நான் என்னுடைய சட்டை பாக்கெட்டில் லெட் பாக்ஸ் ஒன்றையும் அழிப்பானொன்றையும் வைத்திருந்தேன். அவற்றைக் கைகளில் எடுத்துக்கொண்டாள். லெட் பாக்ஸைக் காட்டி ‘என்னண்ணா இது?’ என்று கேட்டாள். ‘இதுத்தான் பென்சிலுக்குப் போடுற ஊக்கு…’ என்றேன் நான். அவள் அந்த பாக்ஸ்ஸைத் திறந்துப் பார்த்தாள். ஊக்குகளைக் கைகளில் கொட்டியபோது ஒன்றிரண்டு அவள் கைகளிலிருந்து தவறி கீழே விழுந்தது. நான் அவற்றைக் கவனமாக எடுத்து அவள் கைகளில் கொடுத்தேன். அவள் அதைப் பெற்றுக்கொண்டு அந்தச் சிறிய பாக்ஸூக்குள் போட்டுக்கொண்டாள். ஏதோ எண்ணம் தோன்றியவளாக ‘அண்ணா… இத நான் எடுத்துக்கட்டுமா?’ என்று கேட்டாள். நான் லெட் பென்சிலையும் சேர்த்து அவளுக்குக் கொடுத்தேன். அவள் ‘பென்சில் வேண்டாம்ண்ணா… அது ஒழுங்காவே எழுத மாட்டேங்குது… வேணாம்…’ என்றாள். நான் ‘பென்சில் இல்லாம அதை மட்டும் வெச்சிக்கிட்டு என்ன போற?’ என்று கேட்டேன். அவள் ‘அது வேண்டாம்… இது போதும்…’ என்றாள். நான் சரியென்று அவளிடம் அதை மட்டும் கொடுத்தேன்.

அவள் ஓர் ஊக்கை எடுத்து என் கைகளில் குத்தினாள். நான் சிறு வலி ஏற்பட ‘ஆ...’ எனக் கத்தினேன். அவள் ‘வலிக்குதா?’ என்று சிரித்தபடி கேட்டாள். ‘ஊக்க எங்கிட்ட குடு… உனக்குக் குத்தி காட்டுறேன்… வலிக்குதான்னு சொல்லு…’ என்றேன். அவள் என்னிடம் ஊக்கை தருவது போல் பாவனைக் காட்டி ஏமாற்றினாள். பிறகு ‘அண்ணா… டாட்டா…’ என்று சொல்லிவிட்டு என்னிடமிருந்து நகர ஆரம்பித்தாள். நான் அவள் செல்லும் திசையை நோக்கி பார்த்தபடியே இருந்தேன்.

கொஞ்சம் தூரம் தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு நபரின் கைகளைப் பென்சில் ஊக்குகளால் குத்தியபடி அவள் காசு கேட்டுக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. அந்த நபர் ஏதோ இந்தியில் பேச அவள் வேறொரு நபரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வேறொருவர் வேறொருவரென்று தொடர்ந்து நடந்தபடியே இருந்தாள்…

எனக்கான இரயில் குறித்த அறிவிப்பு ஒலிப்பெருக்கியில் வந்தது. நான் இரயில் வரும் திசைப் பார்க்க ஆரம்பித்தேன். தூரத்தில், இரயில் வந்துக்கொண்டிருந்தது.

 

Comments