ஈத்து – முத்துராசா குமார் (விமர்சனம் அல்ல, குறிப்புகள்)

 

 

‘பிடிமண்’, ‘நீர்ச்சுழி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து முத்துராசா குமாரின் எழுத்தில் வந்திருக்கும் ‘ஈத்து’, ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கிய அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கவிதைகளை எழுதிப் பழக்கப்பட்டவர்கள், சிறுகதை எனும் வடிவத்திற்குள் நுழையும்போது பெரும்பாலும் சிறுகதைகளிலும் கவிதைக்கான மொழியைக் கையாள்வதென்பது இயல்பு. ஆனால், முத்துராசா குமாரின் மொழி அப்படியானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், முத்துராசா குமாரின் மொழி முன்னோடிகளின் எந்தச் சாயலுமற்றதாகவே இருக்கிறது. மிகத் தனித்த குரலுடனும் மொழியுடனும் இருக்கின்றன அவரது கதைகள்!

இத்தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் நிலம், ஒரு கதாப்பாத்திரமாகவும் மற்ற கதாப்பாத்திரங்களின் குணங்களையும் அவர்தம் வாழ்வையும் வரையறுக்கும் மிக முக்கிய காரணியாகவும் இருக்கிறது. பெரும்பாலும் எல்லாக் கதைகளின் மாந்தர்களும் சமூகத்தின் அடித்தட்டு மனிதர்கள். இத்தொகுப்பிலுள்ள கதை மாந்தர்களை இவ்வாறு பிரித்துக்கொள்கிறேன்.

1.      தங்களது அன்றாடத் தேவைகளுக்கான தேடல்களிலும், அதை அடைய முடியாமல், அது தரும் நெருக்கடியிலும் தன்னைத் தொலைப்பவர்கள். அப்படியே வாழப் பழக்கப்பட்டவர்கள். அல்லது அப்படி வாழப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். (தொல்லிருள், இடுக்கி)

தொகுப்பின் முதல் கதை ‘தொல்லிருள்’. இருளுக்கே பழக்கப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட மாந்தர்களைப் பற்றியது. எப்போதும் அரசின் கவனத்துக்கு அப்பாலே வாழ்பவர்கள் பற்றியது. தங்களது அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் பெறுவதற்கு, எத்தனைக் கட்டுமனுக்களை எழுதிக்கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்படுபவர்களைக் குறித்தது. அவர்கள் எழுதிக் குவித்த கட்டுமனுக்கள் மழைக்காலங்களில், மழைக்குப் பெயர்ந்து விழும் மண்வீடுகளிலிருந்தும் மழை நீரிலிருந்தும் சேதமடையாமல் பாதுக்காக்க ஒரு இரும்புப்பெட்டியைக் கையாள்பர்கள் குறித்தது. தொல்குடிகளான அவர்களது குடியிருப்புக்கு மின்சாரம் என்பதே கிடையாது. அலைப்பேசியை வாங்க முடிந்திருப்பினும்கூட, அவர்களால் அலைப்பேசிக்கு மின்னூட்டம் செய்ய இயலாது. அவர்கள் வேலை செய்யும் முதலாளிகளின் வீடுகளிலோ கழனிகளிலிருக்கும் மோட்டார் அறைகளிலோதான் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சூழல். இந்தப் பின்னணியிலிருந்துதான், குடியிருப்புக்கு சூரியவொளி மின்சாரம் வழங்க வரும் சமூகப்பணியாளர்களையும் முதன்முதலாக தங்களது குடியிருப்பில் மின்சார விளக்கின் வெளிச்சத்தை ஒளியாக உணர முடியாமல், அந்த வெளிச்சத்தின் சூட்டை எதிர்கொள்ளும் சிந்தாமணி எனும் சிறுவனையும் குடியிருப்பின் மூத்தத்தாய் குப்பு, குடியிருப்பின் குழந்தைகள் மற்றும் குடியிருப்பு மாந்தார்கள் என எல்லோரையும் உள்ளடக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது ‘தொல்லிருள்’ எனும் கதை.

‘இடுக்கி’ எனும் சிறுகதை வயல்வெளிகளில் நெல் சேகரிக்க வரும் எலிகளை வேட்டையாடப் பயன்படும் இடுக்கிகளைத் தானே தயாரித்து எலியிடுக்கிப் போடும் ஆண்டி என்பவருக்கும், ஆண்டிக்கு வேலை கொடுப்பவரும் அய்யர் வீட்டு விளைநிலத்தைப் பராமரிப்பவருமான சதுரகிரியின் மகனான நாகு எனும் சிறுவனுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. நீச்சலடிக்கத் தெரியாமல், சகவயது பயல்களின் கேலிக்கு ஆளாகும் நாகுவைத் தெப்பத்தில் மூழ்கி மாண்டுவிடாமல் காப்பாற்றியது மட்டுமில்லாமல், அவனுக்கு நீச்சலும் பழக்குகிறார் ஆண்டி. அந்த நொடியிலிருந்து நாகு அவருடன் ஒட்டிக்கொள்கிறான். மேலும், இடுக்கி செய்வது எப்படி எனத் தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் கொள்கிறான். விடாப்பிடியாக இருந்து அதைத் தெரிந்தும்கொள்கிறான். இந்த ஒட்டுதல் பற்றி அவனது அப்பாவுக்குத் தெரிந்தால் தோளை உறித்துவிடுவார் எனத் தெரிந்தும்கூட, அது அவனுக்குக் கவலை தரக் கூடியதாக இல்லை. ஆண்டியுடான உறவு அவனுக்கு முக்கியமானது. அதனால்தான், தனது அப்பாவால் ஆண்டி உழைப்புச்சுரண்டலுக்கு ஆளாகி அவமானப்படுத்தப்பட்டதை அறிந்து ஆண்டியைத் தேடிவரும் நாகு, “நாளைக்கு எங்கப்பன் இடுக்கி போட கூப்ட்டான்னா… உம்மவனும் நல்லாவே இடுக்கிப் போடுவான்… அவனைப் போய் போடச் சொல்லுன்னு நறுக்கா சொல்லிடு…” என்று அவனால் சொல்ல முடிகிறது.

2.      உலகமயமாக்கத்தின் பாதிப்பில் நிகழ்ந்த சமூக மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளாமல் அல்லது தெரிந்தும் ஏற்றுக்கொள்ளாமல் தன் போக்கில், தனக்குகந்த வாழ்வை வாழும்பொருட்டு சமூகத்திலிருந்து தங்களைத் தானே துண்டித்துக்கொண்டு பழைமை நீங்காமல் தனித்திருப்பவர்கள். (திண்ணக்கம், கொட்டாங்குளத்தான்)

‘திண்ணக்கம்’ பாவைக்கூத்து கலைஞர்கள் பற்றியது. உலகமயமாக்கலின் பிடிக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமல், அதேசமயம் தன் தம்பியையும் மகனையும் அவரகள் போக்கில் விட்டுவிடும் ராமு எனும் பாவைக்கூத்து கலைஞனும் அவரது மனைவி வள்ளியும் விடாப்பிடியாக, தங்களுக்குத் தெரிந்த பாவைக்கூத்து நிகழ்த்தியே ஜீவனம் செய்கின்றனர். மகன் எவ்வளவு வற்புறுத்தியும் அவனுடன் சென்று நகர வாழ்க்கை வாழ மறுக்கின்றனர். கோபம்கொள்ளும் மகன், பாவைகளை எரிக்க, ராமுவுக்குப் பித்து பிடித்துவிடுகிறது.

இதைப்போலவே, ‘கொட்டாங்குளத்தான்’ கதையின் பூவலிங்கம் பழைமையை மறக்க முடியாமல், சொந்த ஊரைவிட்டு வேறொரு ஊருக்குப் போக மனமில்லாமல், தனக்குத் தெரிந்த வாழ்வைத் தனது மண்ணில்தான் வாழ்வேன் என்ற வைராக்கியத்துடன், மனைவி மகளை நீங்கித் தனது ரேக்ளா மாடுகளுடன் யாருமற்ற கிராமத்தில், தனியொருவனாக வாழ்கிறான்.

3.      எவ்வளவு நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், எவ்வளவு துயர்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் கதாப்பாத்திரங்கள், முத்துராசா குமாரின் சிறுகதைகளின் சிறப்பு போல இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் அப்படியான மனிதர்களை நம்மால் அடையாளம் கண்டுக்கொள்ள முடிகிறது.

‘பொம்மைகள்’ சிறுகதை, மாரியாத்தா கோவில் வேண்டுதல்களுக்கு நேர்த்திக்கடனாகப் படைக்கப்படும் விதவிதமான பொம்மைகளைச் செய்யும், பாலு-பிச்சையம்மா எனும் தம்பதிகளைப் பற்றியது. கண்மாய்க்குத் தின்னக் கொடுத்த தனது மகள்தான் அந்தக் கண்மாய் மண்ணென நினைத்து அந்த மண்ணையெடுத்துதான் அவர்கள் அத்தனை வருடமும், வருடம் தவறாமல் நிகழும் மாரியாத்தா திருவிழாவுக்கு நேர்த்திக்கடன் பொம்மைகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும் குழந்தைப் பொம்மைகள் செய்வதில்தான் இருவருக்கும் பெரும் திருப்தியும் விருப்பமும். அந்தப் பொம்மைகள் அனைத்துக்கும் தங்கள் மகள் உருவத்தையே கொடுப்பதாகவும் அந்தப் பொம்மைகள் யாவுமே தங்களது மகள்தான் என்றும் மகிழ்ச்சி அவர்களுக்கு. கண்மாய்யைக் குடைந்து மண்ணேற்றிச் செல்வது அதிகமாக அதிகமாக, தான் பொம்மை செய்வது இதுதான் கடைசி வருடமாக இருக்குமோ என்றோர் எண்ணம் பாலுவுக்கு. அந்தப் பயத்தைப் பிச்சையிடம் சொல்ல, ஒருவர் இல்லாமல் இன்னொருவர் எப்படி என்ற பயம் இருவர் நெஞ்சையும் பிசைகிறது.

‘கொரவள’ சிறு வயது முதலிருந்தே இணைப்பிரியாமல் வளர்ந்து வாழும், ஒப்பாரி பாடல்கள் பாடும் இரு தோழிகளைப் பற்றியது. அவர்களில் ஒருவரின் மரணம் குறித்தது.

‘அழகு வீடு’ கதையில், வாரிசற்ற அழகப்பனும் வெள்ளையம்மாளும் அழகப்பனின் அண்ணன் காசியின் ஒரே மகளான அமுதாவைத் தங்களது மகளாக நினைத்து வளர்க்கின்றனர். காசியும்கூட அழகப்பனைத் தம்பிப் போல் அல்லாமல், மகன் போல நினைத்து வளர்த்தவர்தான். அமுதாவுக்குப் பிடித்த புறாக்களுக்கு இடம்தரவும் அவள் விருப்பத்தை நிறைவேற்றவும் வீட்டையே புறாவீடாக்கி அவளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

இவர்களுடன், ‘தொல்லிருள்’ கதையில் வரும் குப்பு பாட்டியும், சிந்தாமணியின் அம்மாவும் அப்பாவும்… ‘இடுக்கி’ கதையின் ஆண்டியும் நாகுவும்… ‘திண்ணக்கம்’ கதையின் ராமு-வள்ளி இணை… ‘அமராவதி’ கதையின் அமராவதி ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.



முத்துராசா குமாரின் சிறுகதைகளில் இடம்பெறும் ஒரே தன்மையிலான கதைமாந்தர்களைப் போலவே இன்னும் சில விஷயங்களும் திரும்பத் திரும்ப இடம் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் சிறு தெய்வ வழிப்பாடு என்பது ஏதேனும் ஒரு வகையில் இடம் பெற்றுவிடுகிறது. அதேப்போல, கதை மாந்தர்களின் உணவுப்பழக்கங்களும் கதையில் முக்கிய பங்காற்றுகிறது என்று சொல்லலாம். போக, மரங்களும் செடிகளும் கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் நீர்நிலைகளும் நிலவெளிகளும் அவர் கதைகளில் மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் புறச்சூழல்களின் விவரிப்பில் இருந்தே அவர் ஆரம்பிக்கிறார். மிக நுட்பமாகவே எல்லாற்றையெல்லாம் கையாள்கிறார்.

ஒரு தொகுப்பில் எல்லாக் கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைவதென்பது அரிது. முத்துராசா குமாரின் ‘ஈத்து’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவையாக இருக்கின்றன. எல்லாக் கதைகளும் தனித்துவம் பெறுகின்றன. ‘ஈத்து’ மிக முக்கியமான தொகுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதியவர்களையும் புதிய குரல்களையும், மிக நேர்த்தியான பதிப்புடன் தொடர்ந்து அடையாளப்படுத்தும் சால்ட் மற்றும் தன்னறம் பதிப்பகத் தோழமைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

ஈத்து – முத்துராசா குமார்

சால்ட்-தன்னறம் கூட்டுவெளியீடு

விலை, 160 ரூபாய்.

அட்டை வடிவமைப்பு, மணிவண்ணன்

ஒளிப்படம், வினோத் பாலுச்சாமி

Comments