எப்பவும் போல (குறுங்கதை)



நாங்கள் எப்போதும் சந்தித்துக்கொள்ளும் அந்த இரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையிலிருக்கும் டீ ஸ்டாலுக்கு அருகாக இருக்கும் கல்மேசையில் அமர்ந்தபடி, நான் ராஜேஷூக்காகக் காத்திருந்தேன்.

‘எனக்கு உன்னைப் பார்க்கனும் ராஜேஷ்… இப்பவே! ரொம்ப பயமா இருக்கு…’

இரவு அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடி இருந்தேன். நான் குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆன்லைன்னில்தான் இருந்தான். உடனே குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தான். எனினும், பதில் அனுப்ப நேரம் எடுத்துக்கொண்டான். நான் அவனது பதிலுக்காகக் காத்திருந்தேன். நீண்ட யோசனைகளுக்குப் பிறகே ‘சரி வரேன்…’ என்றான்.

எந்தச் சண்டையாக இருந்தாலும், பெரும்பாலும் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக, அவனாகவே பேசி என்னைச் சமாதானம் செய்துவிடுவான். ஆனால், கடைசி சண்டையின்போது, அவனாகப் பேச முன்வரவில்லை. எப்போதும்போல அவனாகவே பேசி இந்தச் சண்டையையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். நாட்களுடன் சேர்ந்து அவனது மௌனமும் வெகுவாக நீண்டது. என்னால் பொறுக்க முடியவில்லை. நான் வேண்டாம் என்றும் என்னைவிட்டு விலகிவிடலாம் என்றும் அவன் முடிவெடுத்துவிட்டானா என்ற கேள்வி எனக்குள் எழுந்ததும் எனக்குப் பயமாக இருந்தது. அவனை இழக்க நான் விரும்பவில்லை.

தூரத்தில் அவன் வருவதைக் கண்டுக்கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த வெள்ளை நிறச் சட்டையும் நீல நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். அது எனக்கு ஒரு விதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. நானும் அவனுக்குப் பிடித்தபடி, நெற்றியில் மிகச் சிறிய நீல நிறப் பொட்டுடன் நீல நிறச் சுடிதாரை அணிந்து வந்திருந்தேன். ஆனால், அவனைப் பார்த்ததும் எனக்கேற்பட்ட மகிழ்ச்சிபோல அவனுக்கு ஏதும் ஏற்படவில்லை என்பது போல, அவனது முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.

நான் அவனைப் பார்த்தபடியே இருந்தேன். அவன் அருகில் வந்தான். அவன் முகத்தில் மாறுதலே இல்லை. எனக்குப் படபடப்பாக இருந்தது. நான் அமர்ந்திருந்த கல்மேசையில் இடம் இருந்தும்கூட, பக்கத்திலிருந்த கல்மேசையில் சென்று எனக்கு இணையாக அமர்ந்துகொண்டான். நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் எந்தச் சலனமும் இல்லாமல், எதிரே தூரத்திலிருந்த மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் எழுந்து சென்று அவனுக்கு அருகாக அமர்ந்துகொண்டேன். அவன் கைகளை எடுத்து கோர்த்துக்கொண்டேன். அவன் கைகளை விலக்கினான். நான் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் நேராகத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். நான் மீண்டும் அவன் கைகளைப் பற்றினேன். அவன் மீண்டும் விலக்கினான். எனக்கு அழுகை வந்துவிடும்போல இருந்தது. ஆனால், அழவில்லை. கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். அமைதியாக இருந்தான். தோள் சாய்ந்துக்கொண்டேன்.

இடையில் நீண்ட மௌனம் நிலவியது.

திரும்பிப் பார்த்து மெல்ல ‘சாப்ட்டியா?’ எனக் கேட்டான்.

நான் உடனே ‘இல்லை’ எனத் தலையாட்டினேன்.

‘சரி… வா… எதாச்சும் சாப்பிடுவோம்…’ என்று அழைத்தபடி, டீ ஸ்டாலுக்கு அருகாகக் கைகளைப் பற்றியபடியே அழைத்து சென்றான்.

டீ ஸ்டாலில் இருந்த அண்ணன், எங்களைப் பார்த்து ‘என்ன ரெண்டு பேரையும் ரொம்ப நாளா காணோம்?’ எனக் கேட்டார்.

‘கொஞ்சம் வேலையா இருந்தோம்ண்ணா… அதான் வரமுடியல்ல…’ என்றான். நான் அமைதியாக இருந்தேன்.

அவன் என்னிடம், ‘சரி… என்ன சாப்பிடலாம்?’ எனக் கேட்டான்.

டீ ஸ்டால் அண்ணன், ‘வேற என்ன? எப்பவும் போல ஒரு காஃப்பி, ஒரு டீ…! சரிதானம்மா?’ என்றார், மெல்ல புன்னகைத்தபடி.

Comments