இயக்குநர் Michael Haneke உடன் உரையாடல் (தமிழில், விநோ)

 




திரைப்படம் சார்ந்த உங்களுடைய முதல் அனுபவம் உங்களுக்கு நினைவில் இருக்குமானால், அதைக் கேட்க நான் மிக ஆவலாக இருக்கிறேன்.

லாரன்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லட்’தான், நான் முதன்முதலாகப் பார்த்த திரைப்படம், அதேசமயம் நான் முழுமையாகப் பார்க்காத திரைப்படமும் அதுதான்! என்னுடைய பாட்டிதான் அந்தப் படத்தைப் பார்க்க என்னை அழைத்து சென்றார். அந்தத் திரைப்படத்தின் ஆரம்பம், இருள் அடர்ந்த ஒரு கோட்டையை அறிமுகப்படுத்தும் காட்சியுடனும் மிகுந்த தொந்தரவுக்கு உட்படுத்தும் பின்னணி இசையுடனும் இருக்கும். நான் மிகவும் பயந்து, அழத் துவங்கி, திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தொந்தரவு செய்தேன். அதனால் என்னுடைய பாட்டி என்னை திரையங்கிலிருந்து வெளியே அழைத்து செல்ல வேண்டியிருந்தது.

 

ஏதோவொரு வகையில், அது உங்களை அறியாமலேயே பாதித்திருக்க வேண்டும். பிற்காலத்தில், சினிமாவில் தொடர வேண்டுமென்ற எண்ணத்துக்கு உங்களைத் திருப்பிய குறிப்பிட்ட இயக்குநர் யாரேனும் இருக்கிறார்களா?

நான் இளைஞனாக இருந்தபோது, நான் செய்ய விரும்பிய பல்வேறு விஷயங்கள் இருந்தன. முதலில், நான் அரங்குகளில் பியானோ வாசிக்கும் நபராக மாறவே விருப்பம் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கான திறமை என்னிடம் இருக்கவில்லை. பிறகு, நானொரு நடிகனாக விரும்பினேன், ஏனெனில் எனது பெற்றோர் இருவரும் நடிகர்களாக இருந்தனர். ஆனால் நான் நடிப்பு பள்ளிக்கான சேர்க்கை தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை. (நான் அவர்களுக்கு நடித்து காட்ட வேண்டியிருந்தது. நான் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.) எனவே, பிறகு நான் எழுதத் துவங்கினேன். நான் ஒரு விமர்சகனாகி நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன். அந்த அனுபவம், என்னாலும் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும் என்ற எண்ணத்தை நோக்கி அழைத்து சென்றது. அந்த எண்ணத்தைப் பிரதிபலிக்க, என்னை வழி நடத்திய ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் பெயரைக் குறிப்பிட வேண்டுமெனில், அது ராபெர்ட் ப்ரெஸ்ஸான் என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

 

ப்ரெஸ்ஸானின் திரைப்பட ஆக்கங்கள், உங்களை எந்த வகையில் பாதித்திருந்தன?

ப்ரெஸ்ஸானைப் பற்றி நினைக்கும்போது, என் உடனடி நினைவுக்கு வருவது என்னவென்றால், சினிமா ஊடகத்திற்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு வித தீவிரத்தன்மையை அவர் கொண்டு வந்திருந்தார். அவருக்கிருந்த தனித்த பார்வையும் எனக்குப் பிடிக்கும். பெரும்பாலான படைப்பாளிகள் சினிமாடிக் க்ளிஷேக்களையே தங்களது திரைப்படங்களின் உருவாக்கத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு படைப்பாளி தனது படைப்புகளின் தனித்துவத்தைக் கண்டுணர்தலும் தனது பாணியை நிலைநிறுத்துதலும் மிகவும் கடினம். மிகச் சில படைப்பாளிகளே அதைச் செய்திருக்கிறார்கள். அப்படியான படைப்பாளிகளை நான் சினிமாவின் கலங்கரை விளக்கங்களாகப் பார்க்கிறேன். தார்க்கோவ்ஸ்கி மற்றும் காசவெட்ஸ் போன்ற இயக்குநர்களையே அத்தகையவர்கள் என நான் நினைக்கிறேன்.

 

ISABELLE HUPPERT & JEAN-LOUIS TRINTIGNANT போன்ற நடிகர்களுடன், அவர்களது ஒத்துழைப்புடன் தொடர்ந்து ஒன்றாக இயங்குகிறீர்கள். அவர்களுடன் ஒன்றிணைந்து, எவ்வாறு நீங்கள் பணிப்புரிகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அதற்கென குறிப்பிட்ட வழிமுறைகளோ கோட்பாடுகளோ என்னிடம் இல்லை. எனினும், என்னால் சொல்ல முடிந்தது என்னவென்றால் நான் எனது நடிகர்களை நேசிக்கிறேன், மேலும் அவர்களுடன் பணிப்புரிவதை விரும்புகிறேன். இவை யாவும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவது தொடர்பானது. நம்பிக்கை உணர்வின் மூலம், நீங்கள் எப்போதும் அவர்களை ஆதரிப்பீர்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அந்த உணர்வின் அடிப்படையில், அவர்களால் கொடுக்க முடிந்த சிறந்த பணியை அவர்கள் வழங்குவார்கள். இயக்குநர்கள் தங்களைப் புரிந்துக்கொள்ளவில்லை என்றோ அவர்கள் முட்டாள்தனமான முடிவுகளை நோக்கி நகர்கிறார்கள் என்றோ நடிகர்கள் உணரும்போதுதான் பிரச்சனையாக இருக்கும். என்னுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக என்னிடம் கேட்பது, ‘நீங்கள் எவ்வாறு நடிகர்களுடன் பணிப்புரிகிறீர்கள்? அதன் ரகசியம் என்ன?’ என்பதுதான். ஒவ்வொரு முறையும், ‘அதற்கான வழிமுறை எதுவும் என்னிடம் எதுவுமில்லை’ என்று நான் சொல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு விதமானவர்கள், ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வகைகளில்தான் பணியாற்ற முடியும். நான் ஒரே நடிகர்களுடன் தொடர்ச்சியாக பணிப்புரிகிறேன், எனெனில் நான் அவர்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். மேலும் அவர்களது பலம், பலவீனங்கள் அறிந்து அவர்களுக்காக எழுதும் திறன் எனக்கிருக்கிறது. நல்ல முடிவுகளை நோக்கி நகரும் வாய்ப்பு, அவர்களது தொடர்ந்த ஒத்துழைப்பாலே நிகழ்கிறது. நான் ஹப்பர்ட்டுடன் பணிப்புரியும்போது, முன்கூட்டியே அவர் திரைக்கதையைப் படித்து நன்குப் புரிந்துக்கொண்டிருப்பார். அதனால் கதாப்பாத்திரத்தின் நோக்கங்கள் பற்றி நீண்ட நேரம் விவாதிப்பதற்கான தேவை எங்களுக்கு இருக்காது.

 

திரைப்பட உருவாக்கத்தின் எந்தப் பகுதியில் நீங்கள் பெரும் மகிழ்ச்சியை அடைகிறீர்கள்?

ரீ-ரெகார்டிங் மற்றும் சவுண்ட் மிக்ஸிங். அந்த நேரத்தில், நீங்கள் எவ்வித உளச்சிக்கலும் இல்லாமல் இருப்பீர்கள், எல்லாக் காட்சிகளும் ஒன்றிணைந்திருக்கும், அதனால் உங்களால் விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய முடியும். நான் ஒலிச்சேர்க்கையில் எப்போதும் மிக ஆர்வமாகவே இருப்பேன். நாங்கள் இரண்டு மாதங்கள் ஒலிச்சேர்க்கைக்கு செலவிடுவோம். இது மிகவும் அதிக செலவு தரக்கூடியதுதான். எனினும் அதுதான் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. நான் பல ஆண்டுகளாக, மிக நல்ல ஒலிச்சேர்க்கையாளருடன் பணிப்புரிந்து வருகிறேன். நான் மிகச் சிறந்த ஒலித்திறனும் செவித்திறனும் கொண்ட நபர். பார்ப்பதைவிட எனக்கு கேட்பதே பிடிக்கும். நான் மேடை இயக்குநராகப் பல ஆண்டுகள் பணிப்புரிந்திருக்கிறேன். அப்போது என் நடிகர்களுடன் ஒத்திகை பார்க்கும்போது, மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும் நான் பார்வையைத் தாழ்த்திக்கொள்வேன். அவர்களைப் பார்க்க மாட்டேன். என் நடிகர்கள், “நீங்கள் எங்களைப் பார்க்கவே இல்லை!” என்று புலம்புவார்கள். நான் அவர்களுக்கு “நான் உங்கள் குரலில் கவனம் செலுத்துகிறேன். நான் உங்களை அந்தவகையில் அணுகும்போது மிகச் சிறிய பிழையைக்கூட என்னால கேட்க முடியும், உணர முடியும். ஆனால் நான் உங்களைப் பார்க்கும்பட்சத்தில் அதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்” என பதில் அளிப்பேன்.

 

ஒரு திரைக்கதையை ஓர் எழுத்தாளராக நீங்கள் எழுதும்போது, ஓர் இயக்குநராக, ஒரு திரைப்படம் காட்சிப்பூர்வமாக எவ்வாறு சொல்லப்பட வேண்டுமென யோசிப்பீர்களா? ‘ஹாப்பி எண்ட்’ திரைப்படத்தின் அநேக காட்சிகளில் அலைப்பேசிகளும் கணினி திரைகளும் மிக முக்கியமான வகையில் இடம் பெற்றிருந்ததாக நான் கருதுகிறேன்.

என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்திய, என்னைப் பெரிதும் கவர்ந்த, என்மீது மிகுந்த பாதிப்பைச் செலுத்திய திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் எல்லாரும் தங்களுக்கான திரைக்கதையைத் தாங்களே எழுதிக்கொண்டவர்கள்தான். அவர்கள் எழுதும்போது, அவர்களின் திரைக்கதையை அவர்கள்தான் இயக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். மேலும் அதன் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே வைத்திருப்பார்கள். ஒரே நேரத்தில், திரைக்கதை, வசனம் மற்றும் அது எப்படி படமாக்கப்படவேண்டிய விதம் என அனைத்தையும் கையாள்பவர்கள் அவர்களே! உதாரணத்துக்கு, ‘கோட் அன்நோன்’ திரைப்படத்தில் பத்து நிமிடங்களுக்கு நீடிக்கும் மிக நீண்ட ஷாட்களைகளைக் கொண்ட காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சி படமாக்குவதற்கு மிகவும் சிக்கலானது. நான் அந்தக் காட்சியை இயக்காவிட்டால் அதை நான் எழுதுவது என்பதே சாத்தியம் இல்லாத ஒன்று. நான் எழுதும்போதே அதை எப்படி நடைமுறைப்படுத்துவது இயக்குவது என்ற யோசனையுடனே இருந்தேன். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளராக இல்லாதப்பட்சத்தில், வழக்கமான ஒன்றை உருவாக்கும் ஒரு சூழலில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எந்தச் சவாலையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றே அர்த்தம். கதை நன்றாக சொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாகவும் இருக்கலாம் – ஹாலிவுட் ஸ்டூடியோக்களில், இந்த முறையில்தான் அந்தந்த துறை  தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன – ஆனால் இது ஒரு படைப்பாளியின் தனித்துவத்துக்கு நேரெதிரானது.

 

ஏதேனுமொரு இலக்கியப் படைப்பாளியின் படைப்பைத் திரும்பத் திரும்ப நீங்கள் வாசிப்பதுண்டா? உங்களுக்கு மிக நெருக்கமாக உணர்வதுண்டா?

நிறைய நபர்கள் இருக்கிறார்கள். எனது வீட்டில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தாமஸ் மன்னின் ‘டாக்டர் ஃபாஸ்டஸ்’ எப்போதும் எனக்கு விருப்பத்துக்குரிய ஒன்று. நான் ஜெர்மானிய இலக்கியத்துடன் மிக வலுவான உறவைக் கொண்டிருக்கிறேன். ராபர்ட் முசிலியின் ‘தி மேன் வித்தவுட் குவாலிட்டிஸ்’ பற்றியும் எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்களாகிய டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயெவ்ஸ்கி பற்றியும் நான் சிந்திப்பதுண்டு. சமகால எழுத்தாளர்களில், மிசெல் உவ்ல்பெக்கை நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வாரமும், குறைந்தப்பட்சம் ஒரு புத்தகத்தையாவது நான் வாசித்துவிடுகிறேன், அதனால் பதில் சொல்வதற்குச் சற்றே கடினமாக இருக்கிறது.

 

நீங்கள் திரைப்படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும், அதிகமாக வாசிக்கிறீர்களா?

ஆம். ஆனால், குறிப்பிட்ட சில திரைப்படங்களை நான் திரும்பத் திரும்பப் பார்க்கிறேன், ஏனெனில் ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால், அதை நீங்கள் இருபது தடவைகள் பார்த்திருந்தாலும்கூட, அதிலிருந்து நீங்கள் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட சில திரைப்படங்களைத் திரும்ப பார்ப்பதற்கு, என்னை நானே கட்டாயப்படுத்தி கொள்வதும் உண்டு. காரணம், நான் சினிமாவைக் கற்பிக்கிறேன். எனவே, ஒவ்வொரு வருடமும் புதிய மாணவர்கள் வரும்போது அவர்களுக்கு நான் வெவ்வேறு வகையான க்ளாசிக் படங்களைத் திரையிட்டு காட்டுவேன். ஒவ்வொரு ஆண்டும், நான் ‘தி மிரர்’ திரைப்படத்துடந்தான் தொடங்குவேன். அதற்குப் பிறகு ‘ஆ ஹசார்ட் பல்தசார்’, ‘தி க்ரோனிக்கல் ஆஃப் அன்னா மாக்தலேனா பாக்’ மற்றும் ‘எ வுமன் அண்டர் தி இன்ஃப்ளூயன்ஸ்’ என்ற வரிசையில் பார்ப்போம். எல்லாம் மிகச் சிறந்த க்ளாசிக் திரைப்படங்கள்.

 

நீங்கள் தொடர்ச்சியாக, புதிய திரைப்படங்களைப் பார்ப்பதில்லை என்றாலும்கூட, நீங்கள் பெரிதும் மதிக்கும் சமகால திரைப்பட இயக்குநர்கள் இருக்கிறார்களா?

எனக்கு அஸ்கர் ஃபர்ஹாதியைப் பிடிக்கும். உண்மையில், அவர் சிறந்த எழுத்தாளர் என்று நான் நினைக்கிறேன். அவரது திரைக்கதைகள் மிக ஆச்சரியமாகவும் அதேசமயம் செக்காவின் தரத்திலும் இருக்கின்றன. மேலும், யார்கோஸ் லாந்திமோஸ், ரூபன் ஆஸ்ட்லண்ட் போன்றவர்களையும் நான் விரும்புகிறேன். நிறைய புதியவர்களும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள்-இயக்குநர்கள்.

 


Comments