சுமித்ராவும் ஷிவாவும் (குறுங்கதை)

 

கிண்டி இரயில் நிலையத்தில் இறங்கி, சுரங்கப் பாதைக்குள் நுழைந்து கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சுரங்கப் பாதையின் முடிவில், வழியில் இருந்த சில நடைப்பாதை வியாபாரிகளில், ஒரு புத்தக வியாபாரியும் இருந்தார். பல்வேறு வகையான தலைப்புகளில், பல்வேறு வகையான சைஸ்களில் புத்தகங்கள் நிறைய இருந்தன. நான் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடியே நடந்தேன். ‘சுமித்ரா’ எனும் பெயர் தாங்கிய புத்தகம் ஒன்று கண்ணுக்குத் தட்டுப்பட, என்னையும் அறியாமல் நின்றேன். கையிலெடுத்து பார்த்தேன். பக்கங்களைப் பிரித்து பார்த்தபோது நல்ல வாசம் வந்தது. புத்தகங்கள் படிப்பதிலும் கதைகள் படிப்பதிலும் எப்போதும் எனக்கு ஆர்வமிருந்தது இல்லை என்றபோதிலும்கூட, ஏனோ அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டுமென்று தோன்றியது. காரணம், ‘சுமித்ரா’ எனும் பெயர்!

*

கிண்டி இரயில் நிலையத்தில் இறங்கி, சுரங்கப் பாதைக்குள் நுழைந்து கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சுரங்கப் பாதையின் முடிவில், வழியில் இருந்த சில நடைப்பாதை வியாபாரிகளில், ஒரு கைக்குட்டை வியாபாரியும் இருந்தார். பல்வேறு வகையான வண்ணங்களில், பல்வேறு வகையான டிசைன்களில் கைக்குட்டைகள் நிறைய இருந்தன. நான் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடியே நடந்தேன். ‘ஷிவா’ எனும் பெயர் நிரம்பிய கைக்குட்டை ஒன்று கண்ணுக்குத் தட்டுப்பட, என்னையும் அறியாமல் நின்றேன்.  கையிலெடுத்து பார்த்தேன். கைக்குட்டையைப் பிரித்து பார்த்தபோது நல்ல வாசம் வந்தது. என்னிடம் ஏற்கனவே நிறைய கைக்குட்டைகள் இருக்கின்றன என்றபோதிலும்கூட, ஏனோ அந்தக் கைக்குட்டையை வாங்க வேண்டுமென்று தோன்றியது. காரணம், ‘ஷிவா’ எனும் பெயர்!

*

புத்தகத்தை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். பேருந்து நிலையத்தில் நிறைய ஆட்கள் நின்றிருந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை சற்றே அதிகம் என எனக்குத் தோன்றியது. எனக்கு அருகாக நின்றிருந்த வெள்ளை நிறச் சுடிதார் அணிந்திருந்த பெண், என் கையிலிருந்த சுமித்ராவைப் பார்த்துகொண்டிருந்தாள். அவள் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை என்னுடைய பெயர் தாங்கிய கைக்குட்டை என்பதால், ஒரு வித குறுகுறுப்புடன் நான் அவளைப் பார்த்துகொண்டிருந்தேன். அந்தப் பெண் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். என்னால் அவளையும் அவள் கையிலிருந்த கைக்குட்டையையும் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. அவளும் என்னைப் பார்த்துகொண்டே இருந்தாள். அவளது முகத்தில் மெல்லிய புன்னகை இருந்துக்கொண்டே இருந்தது.

*

கைக்குட்டையை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். பேருந்து நிலையத்தில் நிறைய ஆட்கள் நின்றிருந்தனர். பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை சற்றே அதிகம் என எனக்குத் தோன்றியது. எனக்கு அருகாக நின்றிருந்த வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்த இளைஞன், என் கையிலிருந்த கைக்குட்டையைப் பார்த்துகொண்டிருந்தான். அவன் கையில் வைத்திருக்கும் புத்தகம் என் பெயர் தாங்கிய புத்தகம் என்பதால், ஒரு வித குறுகுறுப்புடன் நான் அவனைப் பார்த்துகொண்டிருந்தேன். அந்த இளைஞன் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தான். என்னால் அவனையும் அவன் கையிலிருந்த புத்தகத்தையும் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. அவனும் என்னைப் பார்த்துகொண்டே இருந்தான். அவனது முகத்தில் மெல்லிய புன்னகை இருந்துக்கொண்டே இருந்தது.

*

அவர்கள் இருவருக்குமான பேருந்து வெகுநேரம் வரவில்லை.

அவர்கள் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் மெல்ல அடியெடுத்து வைத்தபோது, அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வந்தது.

கூட்டத்தின் இடையே, அவன் பேருந்தின் முன்னாடி ஏறிக்கொண்டான். அவள் பேருந்தின் பின்னாடி ஏறிக்கொண்டாள்.

பேருந்து நகர்ந்தது.

இருக்கை ஏதும் இருவருக்கும் கிடைக்கவில்லை. பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு, கூட்டத்தின் இடையே நின்றபடி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவன் புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள். பார்வையிலேயே நிமிடங்கள் கரைந்தன.

இருவரும் மத்திய கைலாஷ் பேருந்து நிலையத்தில், ஒன்றாக இறங்கினர். இருவருக்கும், தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. அவன் அவளை நோக்கியும் அவள் அவனை நோக்கியும் நகர்ந்தனர்.

மெல்ல புன்னகைத்தபடி அவன், ‘உங்கள் பெயர் சுமித்ராதானே?’ எனக் கேட்டான்.

மெல்ல புன்னகைத்தபடி அவள், ‘உங்கள் பெயர் ஷிவாதானே?’ எனக் கேட்டாள்.

இருவரும் சிரித்துக்கொண்டனர்.

*

Comments