இறுதி (குறுங்கதை)


இறுதியாக இறந்துவிடலாமென்று இருவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர். இனியும் இந்தச் சுமையின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது என்றே இருவருக்கும் தோன்றிற்று. இவ்வளவு சீக்கிரத்தில், இவ்வாழ்வு தனது அர்த்தத்தை இழந்துவிடுமென்று இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. யாருக்கும் எந்தக் குறிப்பும் எழுதத் தோன்றவில்லை இருவருக்கும். அவர்களது நான்கு வயது மகள், சிறிய ப்ளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி, கையில் வைத்திருந்த பீங்கான் குவளையிலிருந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகியபடியே, தொலைக்காட்சியில் ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தொலைக்காட்சியின் ஒளியும் அவ்வறையிலிருந்த நீல நிற மேசை விளக்கொன்றின் ஒளியும் மட்டுமே அறையெங்கும் பரவியிருந்தது. தொலைக்காட்சியின் ஒலியைத் தவிர்த்து பார்த்தால், அறை நிசப்தத்தால் நிறைந்திருந்தது.

துயராழ்ந்த முகங்களுடன் இருவரும் ஷோபாவில் அமர்ந்திருந்தனர். அவள் அவனது தோளில் சாய்ந்திருந்தாள். அவளது கன்னங்களில் கண்ணீரின் ரேகைப் படிந்திருந்தது. அவனது கண்கள் சிவந்திருந்தன. தொடர்ந்த தூக்கமின்மையால், இருவரது கண்களைச் சுற்றிலும் கருவளையங்கள் சூழ்ந்திருந்தன. இருவரும் சிறுமியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொள்ள இனி எதுவும் இருக்கவில்லை. எல்லாமும் முன்பே பேசியாயிற்று. ஒரு மனதாக முடிவாகிற்று. இனி முடிவை நோக்கி நகர வேண்டியதே மிச்சமிருந்தது.

சிறுமிப் பாலை முழுமையாகக் குடித்து முடித்தாள். குவளையைத் தரையில் வைத்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு தொலைக்காட்சியைத் தொடர்ந்தாள். ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது அம்மா திடீரென வெடித்தழுதாள். சிறுமி திரும்பிப் பார்த்தாள். அப்பா, அம்மாவின் தலையைக் கோதியபடி சமாதானம் செய்தார். அவளது அழுகை நிற்கவேயில்லை. அழுகைத் தொடர, அவளுக்குக் கேவல் எழுந்தது. சிறுமி நாற்காலியிலிருந்து எழுந்து சென்று அம்மாவின் மடிக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள். அம்மா அவளை அணைத்துக்கொண்டாள். அவளுக்குக் கண்ணீர் பெருகியது. அவன் அவளைச் சமாதானம் செய்ய முயன்று தோற்றுக்கொண்டே இருந்தான். இறுதியில், இனி எந்தச் சமாதானங்களுக்கும் அர்த்தமில்லை என்றுணர்ந்ததும் பொறுக்க முடியாமல் தன்னையும் மீறி அழத் துவங்கினான். இருவரது அழுகையும் சிறுமிக்குள் ஒரு விதமான பதற்றத்தைக் கூட்டியது. அவளும் ஏதோவொரு பயத்துக்கு ஆட்பட்டு அழத் துவங்கினாள். பின்னர் இருவருமாகச் சேர்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டு, சிறுமியைப் படுக்கறைக்குத் தூக்கிச் சென்றனர்.

அறையில் ஆழ்ந்த நிசப்தம் நீடிக்க, கரிய நிழல்களைப் போல அவர்கள் படுத்திருந்தனர், சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி. அவர்களுக்கிடையில், சிறுமி கண்களை மூடி தூங்கிக்கொண்டிருந்தாள். தங்களை நெருங்கிக்கொண்டிருக்கும், ஏதோவொரு அறுவருக்கத்தக்க மிருகத்தைக் காணச் சகிக்காதவர்கள் போல அவர்கள் இருவரும் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர்.

விடிந்தது. அறையில் அதே நிசப்தம் நீடித்திருந்தது.

மூவரும் ஒருவருக்கிணையாக ஒருவர், கட்டிலில் எந்த அசைவுமற்று கிடந்தனர். சிறுமி குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தாள். அவளது பெற்றோரின் வாயிலிருந்து நுரை வடிந்து காய்ந்திருந்தது. கண்கள் இறுக மூடியிருந்தன. எந்தச் சலனமுமில்லை யாரிடமும்.

திடீரென சிறுமி இருமியபடி திரும்பிப் படுத்தாள். கண்களைக் கசக்கியபடி விழித்துக்கொண்டாள். தனக்குப் பக்கத்திலிருந்த அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள். ‘அம்மா’ என்று அழுதபடி, முதலில் அவளது அம்மாவின் உடலை உலுக்கத் துவங்கினாள்.

Comments