JEANNE DIELMAN, 23, QUAI DU COMMERCE, 1080 BRUXELLES திரைப்படம் குறித்து CHANTAL AKERMAN (தமிழில், இசக்கிவேலன்-விநோ)

 




ஓர் இரவு, இத்திரைப்படத்திற்கான எண்ணம் எனக்குள் எழுந்தது. உடனடியாக, சில வார்த்தைகளில் அவற்றை எழுதிக்கொண்டேன். பின், அடுத்த நாள் துவங்கி இரண்டு வாரங்களில், எல்லா விவரங்களையும் கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நாவலின் வடிவத்தில் நான் மொத்தமாக தொகுத்தெழுதினேன். அவை எல்லாமும் மிக எளிதாக என்னுளிருந்து வெளிப்பட்டன, விபச்சாரத்தையும் கொலையையும் தவிர்த்து மற்ற அனைத்தையும் நான் ஏற்கனவே என்னைச் சுற்றிப் பார்த்தே வந்திருக்கிறேன். விபச்சாரம் ஒரு வகையான உருவகமாகவே கையாளப்பட்டுள்ளது, ஆனால் மற்ற அனைத்தும் நான் நன்றாக அறிந்தவையே, அவை யாவும் என்னுள் நிறைந்தே இருந்தன. பொதுவாக மதிக்கப்படாத – மதிப்பைப் பெறாத – இத்தகைய எல்லாச் செயல்களுக்கும் அர்த்தம் கற்பிக்கும் வகையிலேயே இந்தப் படத்தை உயிர்ப்புடன் நான் உருவாக்கினேன். இந்தக் கதையின் கதாப்பாத்திரத்தை எழுதியபோது டெல்பைன்தான் என் மனம் முழுக்க நிறைந்திருந்தார். என்னைக் குறிப்பிடத்தகுந்த வகையில் உணரச் செய்த விஷயம் என்னவென்றால், அவர் இந்தக் கதாப்பாத்திரத்தைப் போன்றவர் அல்லர். (அல்லது இந்தக் கதாப்பாத்திரத்தின் எந்தத் தன்மையையும் அவர் நிஜத்தில் கொண்டிருக்கவில்லை.) அவர் அசாதாரணமான ஓர் பெண்மணி. யாரேனுமொருவர் படுக்கைகளைச் சீர்ப்படுத்துவதையும் பாத்திரங்களைக் கழுவுவதையுமே தங்களது அன்றாடப் பணியாகக் கொண்டிருப்பதைப் பார்த்தோமேயானால், நாம் அந்த நபர்களை உண்மையாகக் கவனிப்பதில்லை என்றே அர்த்தம், தங்கள் மனைவிகள் அன்றாட வேலைகளைச் செய்யும்போது ஆண்கள் குருடர்கள் ஆகிவிடுவதைப் போல! எனவே, இதுவரையில் அன்றாட வேலைகளைச் செய்யாத – செய்து நாம் காணாத – ஒரு நபரே அந்தக் கதாப்பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருக்கவேண்டும் என்ற வகையில், டெல்பைன் திடீரென ஒரு கணத்தில் அந்தக் கதாப்பாத்திரமாக எனக்குத் தோன்றினார்.

நான் பெண்கள் சூழவே வளர்ந்தேன். ஏனென்றால், என் தகப்பனாருக்கு மூன்று சகோதரிகளும் என் தாயாருக்கு மூன்று அத்தைகளும் இருந்தனர். அதனால், நாங்கள் எப்போதும் ஏதேனுமோர் அத்தையின் வீட்டில்தான் இருப்போம். எனவே அவர்களது அன்றாடங்களைப் பார்த்தபடியே நான் வளர்ந்தேன். அது ஒரு கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறை, அதில் சில சடங்குகளுக்கு இடம் இருந்தன. எல்லா சங்கதிகளும், யூதச் சடங்குகளுக்கு மாற்றாக வேறொரு வகையில் உருமாறியிருந்தன. ஒரு தினத்தின் நம் அன்றாட செயல்பாடுகள் யாவுமே ஒரு யூதச் சடங்காகக் கருதப்பட்டன. அவ்வாறான சடங்குகள் நிறைந்திருக்கவே, நான் என் எட்டு வயது வரை வாழ்ந்து வந்தேன். ஏனென்றால், அப்போது என்னுடைய தாத்தா எங்களுடன் வாழ்ந்து வந்தார். (அவரது இறப்புக்குப் பின், அம்மாவும் அப்பாவும் எல்லாச் சடங்குகளுக்கும் முடிவு கட்டினர்.) அந்த வகையில், அவளுடைய செயல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட சடங்குகளின் இடத்தையே அடைந்து அவளுக்கொரு அமைதியை ஈட்டித் தருவதாக நான் நம்பினேன். அதனால்தான், எல்லா நாட்களிலும் எல்லாத் தருணங்களிலும், அவள் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவளுக்குள் எப்போதுமிருக்க, அது அவளுக்கு ஓர் அமைதியைத் தருகிறது. அவளிடமிருந்து பதற்றத்தைத் தள்ளியே வைக்கிறது. அடுத்த நாளும் அதிகாலை வெகுவிரைவாக எழுந்துக்கொண்டதற்குப் பின், நிரப்புவதற்கு நிறைய நேரம் அவளுக்கிருக்கிறது, அதனால் அவளொரு விதமான பதற்றத்துக்கு ஆட்பட்டு முதல்முறையாக நாற்காலியில் சரிகிறாள். அந்த நொடியில், ஒரு விதமான மர்மம் தொற்றிக்கொள்ள, நடைமுறையில் ஒன்றுமே நிகழவில்லை என்றாலும்கூட, ஒரு கிரேக்க துன்பவியல் போல ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று நாம் உணர்கிறோம்.




ஒரு பெண்ணின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நேர்த்தியாக, நீங்கள் சொல்ல தேர்ந்தெடுத்தீர்கள் எனில், நீங்கள் பெண்களை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றே அர்த்தம். ஏதேனும் வழிகளில், எப்போதும் புறக்கணிக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட பெண்களின் அசைவுகளை நாம் எப்போதும் கண்டபடியேதான் இருக்கிறோம். பெண் மையக் கதாப்பாத்திரங்களை உள்ளடக்கிய திரைப்படங்களிலுள்ள மிக முக்கியமான பிரச்சனையாக நான் கருதுவது, அவை உள்ளடக்கத்துக்கு துளியும் தொடர்பில்லாமல் இருப்பதே அகும். பெரும்பாலும் எந்தப் பெண்ணுக்கும் தன்னுடைய உணர்வைக் கடத்தும் மனத்திடம் இல்லை. மாறாக, எப்போதும் மிக எளிமையானதாக எல்லார்க்கும் தெரிந்ததாக இருப்பதையே கையாள்கிறார்கள். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த முறையான வழிகளைத் தேட மறந்துவிடுகிறார்கள்.

படக்குழுவில், 80% நபர்கள் பெண்களாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால் யாரும் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் மீது நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. அது ஆண்களுக்கு மட்டுமேயான வேலையாக பார்க்கப்பட்டது. அதேப்போல, பெண்களில் ஒலிப்பதிவு (Sound Recordist) துறையில் பணிப்புரிபவர்களென்றும் யாரும் இல்லை. அனேக ‘Script Girls’ இருந்தனர். படத்தொகுப்பு செய்யவும் உடைகளைப் பராமரிக்கவும் முக-சிகை அலங்காரம் செய்யவும் நிறைய பெண்கள் இருந்தனர். ஆனால் ‘Lighting’ துறையில் வேலைப் பார்க்கவும் ஒருவரும் இல்லை. குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே பெண்களுக்கான இடம் இருந்தது. எனவே எல்லாத் துறைகளிலும், பெண்களால் திறம்படச் செயலாற்ற முடியும் என்ற சாத்தியத்தை, எல்லார்க்கும் உணர்த்த நான் விரும்பினேன். நாங்கள் அதை ஒன்றிணைந்து செய்து காட்டினோம். எந்த வகையிலும் அது யாரையும் தூண்டும்படி இருக்கவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவில், DIRECTOR’S FORTNIGHTல் எங்கள் திரைப்படம் திரையிடப்பட்டபோது, திரையரங்கில் இருந்து இடையிடையே மக்கள் தொடர்ந்து வெளியேறியதை நானும் டெல்பைனும் பின்னிருக்கையிலிருந்து கவனித்தபடியே இருந்தோம். மேலும் இருக்கைகளிலிருந்து வந்த சத்தத்தின் மூலமாக, மக்களால் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அப்போது மார்குரைட் துராஸ் தியேட்டரில் இருந்தார். அவர் எழுந்து, ‘இந்தப் பெண்ணுக்குப் பித்து’ என்று கூச்சலிட்டார். மேலும் ஏதேதோ சொன்னார். உண்மையில், அவர்தான் பித்தேறியபடி நடந்துகொண்டதாக எனக்குத் தோன்றியது. நான் எழுந்து கேட்டேன், ‘நீங்கள் எதைப் பித்து என்று சொல்கிறீர்கள்?’. சற்று அமைதியாக இருக்கும்படி, உடனிருந்த டெல்பைன் என்னிடம் கேட்டுக்கொண்டார். திரையிடலுக்கு அடுத்த நாள், எங்கள் திரைப்படத்தை மேலும் 50 திரைப்பட விழாக்களில் திரையிட கேட்டிருந்தார்கள். உலகின் அத்தனை மூலைகளிலும் இந்தத் திரைப்படத்தை நான் திரையிட்டேன். திரையிடலுக்குப் பிறகான நாட்களில், திரைப்படப் படைப்பாளிகளின் பாதையில் நானும் ஒருத்தியானேன். வெறும் திரைப்படப் படைப்பாளி அல்ல, மிகச் சிறந்த படைப்பாளி என்று எனது 25 வயதில், திடீரென்று சொன்னார்கள். நான் பெரும் மகிழ்ச்சி கொண்டேன். அதேசமயம் கடினமாகவும் உணர்ந்தேன், ஏனென்றால் இதைவிட மிகச் சிறப்பாக எப்படிச் செயலாற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். மேலும் என்னிடம் என்ன உள்ளது என்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

*

Comments