தனது வாழ்வை மாற்றிய திரைப்படங்கள் குறித்து HOU HSIAO-HSIEN (தமிழில், விநோ)

 

போருக்குப் பிந்தைய ஐரோப்பிய சினிமா, ப்ரீத்லெஸ் மற்றும் எட்வர்ட் யங்குடன் பயணித்தது :

எனது இளம்பிராயத்தின்போது, சில இயக்குநர்கள் அடங்கிய குழுவும் நானும், இயக்குநர் எட்வர்ட் யங்கின் வீட்டிற்கு அடிக்கடிச் செல்வோம். அந்த வீடு, ஜப்பானிய பாணியிலான வீடு, நாங்கள் - அந்த வீட்டில் இருந்த -ஜாப்பானிய விரிப்புகளில் ஒருவரைச் சூழ்ந்து ஒருவர் அமர்ந்துக்கொள்வோம். அந்த நாட்களில், நாங்கள் வயதில் மிக இளையவர்களாக இல்லை என்றபோதிலும், திரைப்பட இயக்குநர்களாக எங்களை நாங்கள் மிக இளையவர்களாகவும் புதியவர்களாகவும் உணர்ந்தோம். அதனால் நாங்கள் உருவாக்க விரும்பும் திரைப்படங்களைக் குறித்து பேரார்வத்துடனும் பெரும் இலட்சத்தியத்துடனும் இருந்தோம்.

நாங்கள் பார்த்த திரைப்படங்கள் யாவும், வெவ்வேறு நாடுகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலங்களில் உருவாக்கப்பட்டவையே. ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள், இத்தாலியில் நியோரியலிசப் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன. ஃபிரான்சில் கோடார்ட்டின் ‘ப்ரீத்லெஸ்’ திரைப்படமும் ஃபிரான்சிஸ் த்ரூபோவின் ‘தி 400 ப்ளோஸ்’ திரைப்படமும், ஜெர்மனியில் ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பைண்டரால் உருவாக்கப்பட்ட புதிய பாணியிலான திரைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தன. இவை யாவும், நாங்கள் பார்த்து விவாதிக்கும் படங்களாக இருந்தன. நாங்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்று திரைப்பட உருவாக்கம் குறித்து பயின்றவர்களாக இருந்தோம், ஆனால் யங் அப்படியில்லை. அவர் அறிவியல் படித்தவராகவும் கணினியில் வேலை செய்பவராகவும் இருந்தார். தைவானில் திரைப்படங்கள் உருவாக்குவதற்காக – திரைத்துறையில் பணிப்புரிவதற்காக – அவர் அந்த வேலையத் துறந்தார்.


எனது ‘தி பாய்ஸ் ஃப்ரம் ஃபெங்குவே’ திரைப்படத்தை ஒன்றிணைப்பதில், வெகுநிச்சயமாக ‘ப்ரீத்லெஸ்’ பெரும்தாக்கத்தை கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், எனது ஒத்துழைப்பாளர்களுடன் நான் படத்தைத் படத்தொகுப்பு செய்தபோது, நாங்கள் உண்மையாகவே ‘ப்ரீத்லெஸ்’ திரைப்படத்தைப் பார்த்தோம். படத்தொகுப்பின்போது, ஜம்ப் கட்ஸ் பாணியைக் கையாள, எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அது இருந்தது. ஏனெனில் கடந்த காலங்களில், ஒரு லாங் ஷாட்டிலிருந்து துவங்கி ஒரு க்ளோஸ்-அப் ஷாட் உடன் முடிப்பதே வழக்கமான பாணியாக இருந்தது. ஆனால் இங்கே, அதே நிலைப்பாட்டுடன், கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும் நீங்கள் சொல்ல விழையும் கதைகளையும் ஜம்ப் கட்ஸ் மூலமாகவும் வெளிக்கொணரலாம் என்பதை அந்தத் திரைப்படம் எனக்குக் கற்பித்தது.

 

யங்கின் ‘எ பிரைட்டர் சம்மர் டே’ மற்றும் நடிகர்கள் சாப்பிடுவதைக் காணுதல் :


நாங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும்போதும் திரைப்பட இயக்குநர்களாக என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து பேசும்போதும், நாங்கள் உளமாற ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் எங்கள் சொந்தக் கதைகளைச் சொந்தக் கண்ணோட்டத்துடன் மிக யதார்த்ததுடன் சித்தரிப்போம் என்பதே! ‘எ பிரைட்டர் சம்மர் டே’, உண்மையில் யங்கின் சொந்த அனுபவத்திலிருந்து வந்தது, மேலும் அந்த நேரத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. எனது ‘தி அஸ்ஸாஸின்’ திரைப்படத்தின் முன்னணி நடிகரான சாங் சென்னை இந்தப் படத்தில் நீங்கள் காணலாம். அந்தச் சமயத்தில், அவனுக்கு பதினான்கு வயது. மேலும், அப்போதே மிக அழகாக இருப்பான்.


யதார்த்தவாதத்தின் கருத்துவத்தைப் போற்றி, மதிக்கும் வகையில், எனது திரைப்படங்களை உருவாக்குவது குறித்து, நான் எப்போதும் சிந்திக்கிறேன். அந்த நாட்களில், தொழில்முறை நடிகர்கள் அல்லது தொழில்முறைசாரா நடிகர்கள் என எவரும், நான் விரும்பிய வகையில், யதார்த்தவாத முறையில் நடிப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை; நடிக்கவில்லை. அதைப் பெறுவதற்கு, நான் அவர்களுக்காக யதார்த்தமான ஒரு சூழலை உருவாக்க வேண்டியிருந்தது. அதன்மூலம் அவர்கள் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து, அந்தக் கதாப்பாத்திரத்துக்குள் நுழைந்து, நான் விரும்பிய வகையிலான நடிப்பை அவர்கள் எனக்குக் கொடுத்தனர். எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று, நடிகர்களைச் சாப்பிடுவதற்கு அழைப்பதுதான். எனவே, சாப்பிடுவதைப் பற்றிய ஒரு காட்சி இருந்தால், சாப்பிடுவதற்கான நேரம் வரும்போதே அந்தக் காட்சியை நான் எடுப்பேன். அதற்கு முன்பு நடிகர்கள், பசியுடன்தான் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வேன். மேலும், நான் அவர்களுக்குப் பரிமாறுவேன், அவர்கள் மேசையில் அமர்ந்து மிகவும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை உண்பார்கள். பின்னர், அவர்கள் மிக இயல்பான நிலையில் உணவருந்தும்போது, அந்தக் கதாப்பாத்திரம் ஒரு விதமான மனச்சோர்வுக்குள் நகர்வைதையும் ஏதோ ஒன்று அவரையோ அவளையோ மிகுந்த தொந்தரவுக்கு ஆளாக்குகிறது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுவேன். அதற்குப் பிறகு, பெரும்நம்பிக்கையுடன் அவர்கள் அந்த மாற்றத்தைத் தங்களது உணவைச் சாப்பிட்டபடியே நிகழ்த்துவார்கள்.

 

மிகியோ நருசேவின் ஃப்ளோட்டிங் க்ளவுட்ஸ் மற்றும் திரைப்படங்களுக்குள் நுழைதல் :


நான் இந்தத் திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்னவெனில், இது எல்லாருக்கும் மிகப் பரிச்சயமானது. நான் வளர்ந்தது ஒரு ஜப்பானிய வீட்டில். எப்படியென்றால், வடிவமைப்பிலும் கட்டிடக்கலையின் பாணியிலும் அமைந்த ஜப்பானிய வீடு. மேலும், உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், தைவான் ஐம்பது ஆண்டுகளாக ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எனவே, நருசேவின் திரைப்படங்களிலிருந்து நான் உள்வாங்கிய விஷயங்கள், என் வளர்ச்சியினூடாகவே எனக்கு மிகப் பரிச்சயமாக இருந்தன. இந்தத் திரைப்படம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், மக்கள் நம்பிக்கையற்று இருந்தபோது என்ன நடந்தது என்பதைப் பற்றியதுதான். இந்தக் கதை, நம்மை ஓர் இருண்மைக்குள் அழைத்து செல்லும் அதே நேரத்தில், நம்மை உணர்வுப்பூர்வமாக பாதிப்பதாகவும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நாட்களில், முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில், இந்தச் சமூகத்தின் மூலமாக ஓர் உறவில் மனிதர்களின் உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றன என்பதை வெளிப்படுத்தும் திறன் ஓர் இயக்குநராக நருசேவுக்கு இருந்தது. அந்தக் கதாப்பாத்திரங்கள் யாவும், மிக நேர்த்தியாக – நம்பகத்தன்மையுடன் – திரையில் உலவும் வகையில் அவரால் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

தனிப்பட்ட முறையில், எனது இளமைக்காலத்தில் எவ்வாறு பல்வேறு சலசலப்புகளைக் கடப்பது என்பதை நான் தெரிந்தே வைத்திருந்தேன். மேலும், நான் நன்றாகவே இருந்தேன். நான் சூதாடியிருக்கிறேன். நான் வீட்டுப்பொருட்களை விற்றிருக்கிறேன் அல்லது அடமானம் வைத்திருக்கிறேன். இருந்தபோதிலும்கூட, அதையெல்லாம் கடந்து நான் எப்போதும் இலக்கியத்தின் மிகத் தீவிரமான வாசகனாகவும் சினிமாவின் மிகத் தீவிரமான ரசிகனாகவும் இருந்திருக்கிறேன். மிக எளிதாக, ஓர் இருண்ட பாதையை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களை நான் கொண்டிருந்தபோதிலும், அப்படி ஆகிவிடாமல் என்னை மிகக் கருணையுடன் பாதுகாத்து வழி நடத்தியது, வாசிப்பும் திரைப்படங்களும்தான் என்று தோன்றுகிறது. அவைதான் எப்படியோ என்னை இன்றிருக்கும் இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றன.

வளரும்பிராயத்தில், நான் சென்று பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கையை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, திரையங்கில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களையும் அவை வெளியான சமயத்திலேயே நான் பார்த்திருக்கிறேன். நான் திரையரங்குகளுக்குள் செல்ல நிறைய வழிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது, வேறு ஒருவரின் குழந்தையைப் போலவும், பெரியவர்களுக்கான சட்டையை அணிந்துக்கொண்டு அவர்களுடன் இருப்பதைப் போலவும் பாசாங்கு செய்து நடித்து திரையரங்குகளுக்குள் இலவசமாக நுழைவேன். பிறகு நடுநிலைப்பள்ளி நாட்களில், நான் சற்றே பெரியவனாக இருந்தேன், அதனால் திரையரங்குகளுக்குள் நுழைய, நான் யாரோ ஒருவருடைய குழந்தை என்பது போல இனியும் பாசாங்கு செய்ய முடியாது. எனவே, தரையில் இறைந்து கிடைக்கும் டிக்கெட்டுகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் ஒட்டி, திரையரங்குகளுக்குள் நுழைந்து, டிக்கெட் பரிசோதனை செய்பவர்களிடம் அதைக் கொடுத்து உள் நுழைவேன். பெரிய அளவில் அவர்கள் டிக்கெட்கள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள், எனவே பரிசோதிக்காமல் அதைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நீங்களே அறியலாம். அதற்குப் பிறகு, நான் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த நாட்களில், திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்கள் பார்க்க, நான் மிகச் சுவாரசியமான ஒரு விஷயத்தைச் செய்தேன். திரையரங்குகளின் மதில்களில் ஏறி குதித்து உள் நுழைந்தேன். அல்லது திரையரங்குகளின் வேலிகளை வெட்டியெறிய வேண்டியிருந்தது.

 

ஃபெலினியின் அமர்கோட் மற்றும் விதிகளை மீறுவது :

நான் இந்தத் திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்க காரணம், இது மறக்கவியலாத நினைவுகளைப் பற்றியது என்ற காரணம் மட்டுமல்ல, இது குறிப்பிட்ட நகரத்தைப் பற்றியது. விசித்திரமான அனைத்து கதாப்பாத்திரங்களைப் பற்றியது. மேலும் குடும்பங்களைப் பற்றியது.  ‘எ டைம் டு லைவ் எ டைம் டு டை’ போன்ற எனது திரைப்படங்களில், இந்தத் திரைப்படம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்றே நான் நினைக்கிறேன். மேலும் வளர்ந்து வரும் எனது அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கவும், அந்த அனுபவங்களைத் திரைப்படங்களாக உருவாக்கவும் இந்தப் படம் எனக்கு ஊக்கமளித்தது.


இந்தப் படத்துடன் தொடர்புடைய இன்னொரு விஷயம் எனக்கு நினைவிருக்கிறது. ‘தி பாய்ஸ் ஃப்ரம் ஃபெங்குவே’ திரைப்படத்தைப் படம்பிடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம். திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரம், ஒரு சண்டையில் ஒரு செங்கலைக் கையிலெடுத்து ஒருவனது தலையில் அடித்துவிட்டு, சட்டகத்தின் இடது பக்கமாக வெளியேறினார். மீண்டும் சுற்றி வந்து, சில குச்சிகளை எடுத்துக்கொண்டு சட்டகத்தின் வலது பக்கமாக வெளியேறுமாறு, பிறகு நான் அவரைத் திருத்தி இயக்கினேன். சட்டகத்துக்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் குறித்த வழிமுறைகள் நாம் யோசிக்க வேண்டிய ஒன்றல்ல. திரைப்படப் பள்ளிகளில், அதை எப்படிச் செய்ய கூடாது என்பதைக் கற்றே வைத்திருந்தோம். நீங்கள் சட்டகத்தின் ஒரு பக்கத்திலிருந்து உள் நுழைந்தால் அதேப் பக்கத்திலிருந்துதான் வெளியேற வேண்டும். ஃபெலினியும் அவரது அமர்கோட் திரைப்படமும் இந்த வழக்கமான பாணியை உடைத்து, நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதை எனக்குக் கற்பித்தனர். இந்தத் திரைப்படம், திரைப்படப் பள்ளியில் கற்ற-கற்பிக்கப்பட்ட அனைத்து விதிகளையும் வழிமுறைகளையும் மீற அனுமதி வழங்கி, எனக்குள் பெரும்தாக்கத்தை நிகழ்த்தியிருந்தது. இது சமகால திரைப்பட இயக்குநர்கள் அனுபவிக்கும் வகையிலான ஒன்று என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் அத்தகைய சுதந்திரங்களைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கோட்பாடுகளைச் சுற்றி அவர்கள் இயங்குவதில்லை. ஆனால் எனது துவக்க காலங்களில், இந்த விதிகள் யாவும் கிட்டத்தட்ட பைபிளைப் போலவே கருதப்பட்டன. எனவே அதை உடைத்தெறிந்து அதிலிருந்து விலக முற்பட்டேன்.

*

Comments