உணர்ச்சிப் பெருக்குடன் எழுதிய கடிதங்கள் ( “பாரதியின் கடிதங்கள்” நூல் குறித்த அறிமுகம் )

 



“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவன் பாரதி. அத்தகையவன் தமிழ் படித்தால் காசுபேராது என்ற ஓர்மையுடனேயே தமிழுலகுக்குக் காலெடுத்து வைத்தான் என்று சொன்னால் நம்பமுடிகிறா? ஆனால் அதுதான் உண்மை. இத்தகவலை “பாரதியாரின் கடிதங்கள்” மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.


"செந்தமிழ்த் திருமொழி சிறிது மாதரிப்பவர்

இன்மையின் இந்நாள் இனிதுகற் பவர்க்கு

நன்மை பயவாது நலிந்திட, மற்றைப்

புன்மொழி பலவும் பொலிவுறலாயின;

……………………………. என் தந்தையார்

என்னையும் புறமொழிகற்க வென்றியம்புவர்.

என்னையான் செய்குவ தின்றமிழ் கற்பினோ

பின்னை ஒருவரும் பேணார் ஆதலின்

கன்னயா னம்மொழி கற்கத் துணிந்தனன்."


பாரதியார் எழுதிய கடிதங்களில் நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் மிகப்  பழமையான கடிதத்தின் ஒரு பகுதியே மேற்காணும் இக்கவிதை. இக்கடிதம் எழுதப்பட்ட தேதி 1897 ஜனவரி 24.  இதை எழுதும்போது பாரதியாருக்கு வயது 14 நிரம்பி ஒரு மாதம் பன்னிரெண்டு நாட்களே ஆகியிருந்தன. இளைஞர் பாரதி தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இது அவரது தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை. பாரதி ஆங்கிலக் கல்வியும் கற்க வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். அதற்கிணங்க, பாரதியார் திருநெல்வேலி சென்று ஆங்கிலக் கல்வி பயிலலானார். இந்தச் சமயம் தந்தை வறுமை எய்திடவே, பாரதி ஜமீன்தாரின் சிற்றப்பனை உதவுமாறு வேண்டுகிறார். தமக்குத் தமிழில் உள்ள பற்றுதலையும், வருவாயை முன்னிட்டு ஆங்கிலம் கற்க நேர்ந்ததையும் பாரதி இப்பாடலின் மூலம் எடுத்துரைக்கிறார்.

தமிழின் முதல் நவீனக் கவிஞனாக மலர்ச்சிபெற்ற பாரதியின் இலக்கிய வாழ்க்கை புரவலரை நாடிப் பாடிய பாடலோடு தொடங்குவது முரணானது. இத்தகைய முரண்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதை அவனது பின்னாளைய வாழ்க்கையும் புலப்படுத்தவே செய்கின்றன.

1919ம் ஆண்டுப் புதுச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் (எட்டயபுரம், திருநெல்வேலி) நுழைந்த பாரதி, மே  2ந்தேதி 1919ல் தம்மை ஆதரிக்கும்படி எட்டயபுரம் ஜமீன்தாருக்கு “ஓலைத்தூக்கு” ஒன்றை அனுப்புகிறான். அதில் தமிழ் நாட்டில் தமிழறிந்த மன்னவன் இல்லை என்ற அவச்சொல் வெங்கடேசு ரெட்டப்பர் பதவி ஏற்றவுடன் ஒழிந்தது என்றும், புவியனைத்தும் போற்றிடும் கவியரசர் தமிழ் நாட்டில் இல்லையென்ற அவச்சொல் தம்மால் தீர்ந்ததென்றும்  பெருமிதத்துடன் கூறுகிறான். 


 “மன்னவனே, தமிழ் நாட்டில் தமிழறிந்த

  மன்னரில்லை யென்று மாந்தர்

  இன்னலுறப் புகன்ற  வசை நீ மகுடம்

புனைந்த பொழுது திறந்த தன்றே?” 


அதேப்போல,

“சுவை புதிது நயம் புதிது

வளம் புதிது சொற் புதிது

ஜோதி கொண்ட

நவகவிதை யெந்நாளும் அழியாத

மஹா கவிதை”

என்று தமது கவிதைகளின் புகழைத் தாமே எடுத்துரைக்கிறான்.

அதுமட்டுமல்லாது பிரான்ஸில் தனது கவிதைகளைப் பாராட்டுகிறார்களென்றும் மொழிப்பெயர்த்துப் போற்றுகிறார்களென்றும் கூறுகிறான். அதேப்போல ஜமீன்தார் தன்னை எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதையும் கூறுகிறான். “வியத்தகுமென் கவிதைகளை நான் பாட நீ கேட்டு, நன்கு போற்றி ஜயப் பறைகள் சாற்றுவித்து, சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு வியப் பரிவாரங்கள் முதலிய பரிசளித்து” வாழ்த்த வேண்டுமென்கிறான். 

மே 2ம் தேதி எழுதிய கடிதத்திற்குப் பதில் வரவில்லை என்றவுடன் அவன் மறுநாளே மீண்டும் இன்னொரு கடிதம் (சீட்டுக்கவிகள்) எழுதிகிறான். ஆனாலும் அவனுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அரசாங்கத்தின் மீது ஜமீன்தாருக்கு இருந்த பயமென  நம்பி பாரதி சில மாதங்கள் கழித்து (ஆகஸ்ட், 6, 1919) மீண்டும் ஜமீனுக்குக் கடிதம் எழுதுகிறான். அதில் அவன் “சில மாசங்களுக்கு முன் கடலூரில் என்னை விடுதலை செய்யுங் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளெல்லாம் சமீபத்தில் நீங்கிவிட்டதினின்றும் ஆங்கில ராஜாங்கத்தார் என்னிடம் பரிபூர்ணமான நல்லெண்ணம் செலுத்துகிறார்களென்பதும் தெளிவாகப் புலப்படும்.” என்று ஒரு குறிப்பையும் சேர்த்து எழுதுகிறான். முதல் இரு கடிதங்களின் முடிவில் ‘சுப்பிரமணிய பாரதி’ என்று மட்டுமே கையெழுத்திட்ட பாரதி மூன்றாவது கடிதத்தில் “சந்நிதானத்திடம் மிக்க அன்புள்ள, சி.சுப்பிரமணிய பாரதி” என்று கையெழுத்திட்டிருப்பது அவன் வாழ்வில் ஏற்பட்ட பேரவலமே!

*

பாரதி தன்னுடைய 19 வயதில், காசியில் தனது அத்தை வீட்டில் வசித்தபோது அவரின் போக்கும் நடையுடை மாற்றங்களும் தேசிய பற்றும் அவரது உறவினர்களுக்குப் பயத்தை விளைவித்திருக்கின்றன. யாரோ ஒரு உறவினர், பாரதி ஏதோவொரு வெடிகுண்டு இயக்கத்தில் சேர்ந்துவிட்டது போலப் பாரதியின் மனைவி செல்லாமாவிடம் கூறியிருக்கிறார். அதை நம்பிய 12 வயதுடைய செல்லம்மா பாரதியிடம் “உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்து விடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறாள். அதற்குப் பாரதி எழுதுகிறார்:

“நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவன் அல்ல. இதைப் பற்றி உன்னைச்  சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.”

இதேப்போலத் தம்பிக்கு (சி.விசுவநாதனுக்கு) எழுதிய கடிதத்தில், “எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸமஸ்கிர்தத்திலே காயிதம் எழுது” என்கிறான் பாரதி.

*

நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில், “எங்கேனும் ,எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை?” என உரிமையுடன் கேட்கிறான். அதே  கடிதத்தில் அவன் எழுதிய இந்த வரிகளைக் கவனியுங்களேன்.

“தம்பி – நான் ஏது செய்வேனடா!

தமிழைவிட மற்றொரு பாஷை  சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி – உள்ளமே உலகம்.”

*

பாரதியிடம் தனது நூல்களை வெளியிடும் விரிவான திட்டமொன்று இருந்திருக்கிறது. தனது எழுத்துப் பிரதிகளை 40 தனித்தனி புத்தகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு புத்தகத்தையும் 10,000 பிரதிகள் அச்சிடும் திட்டம். அப்படியானால் நான்கு லட்சம் பிரதிகள்.  அவை இரண்டு வருஷத்துக்குள் விற்றுச் செலவெல்லாம்  போக  நிகர லாபமாக ஒன்றரை லட்சம் கிடைக்குமென்று அவன் கணக்குப்போட்டு வைத்திருக்கிறான். தனது திட்டத்தை முதலில் ஸ்ரீநிவாஸ வரதாசார்யருக்குக் கடிதமாக அனுப்பிப் பண உதவி செய்ய வேண்டுகிறான்.

“உங்களிடமிருந்தும் உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்கு நான் ஸ்டாம்பு ஒட்டிப் புரோ நோட்டு எழுதிக்கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கக்கூடிய அபரிமிதமான லாபத்தை முன்னிட்டு, மாதம் 2 சதவிகிதம் தாராளமாகவே வட்டி தருகிறேன்.” என்று எழுதியிருக்கிறான். அவனது இத்திட்டத்திற்கு யாரும் உதவியதாகத் தெரியவில்லை. 

பிறகு மீண்டும் தமது விரிவான பிரசுர திட்டத்தைக் குறித்து ‘தமிழ் வளர்ப்பு – ஒரு வேண்டுகோள்’ என்றொரு அச்சுக் கடிதம் எழுதி பலருக்கு அனுபியிருக்கிறான் என்று தெரிகிறது.  

“தமிழ் நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும், அதிக விரைவாகவும் விலைப்பட்டுப் போகுமென்பதில் சிறிதேனும் ஸந்தேஹத்துக்கிடமில்லை,” என்கிறான். 

இந்நூலில் பாரதியாரின் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பேசுவது போல  எழுதி சென்றிருக்கும் இக்கடிதங்கள் பாரதியை குறித்துப் புரிந்துக்கொள்வதற்கும் அவன் புரவலரை நம்பி வாழ்ந்த வாழ்க்கையைப் புரிந்துக்கொள்வதற்கும் துணை செய்கின்றன. இவை பாரதியின் கவிதைகளுக்குச் சளைத்தவை அல்ல.

*

Comments

Post a Comment