சருகுகள் (கவிதை)


1


நீயும் நானும்

எப்போதும் சந்தித்து பேசும்

பாதாம் மரத்தின் கற்மேசையில்

தனித்தமர்ந்திருக்கிறேன்

தரையில் ஊறும்

எறும்புகளைப் பார்த்து


இப்போதெல்லாம்

நீயும் பேசுவதில்லை

நானும் பேசுவதில்லை

நீ பேசவில்லை என்று நானும்

நான் பேசவில்லை என்று நீயும்

நமக்காக யார் பேச?

உள்ளுக்குள் கேள்வி 

எழுந்த கணத்தில்

மரத்திலிருந்து சருகுகள்

ஒவ்வொன்றாய் தரையில் வீழ்கின்றன

என் மடியிலும் வீழ்ந்தது ஒன்று

எடுத்து சுழற்றிக்கொண்டே

யோசித்தேன்


இம்மரம் யாரை நினைத்தழுது

உதிர்க்கிறது இத்தனைச் சருகுகளை?

உன்னையா?

என்னையா?

நம்மையா?


நம்மை எனும் பதிலே

தேவையாய் இருக்கிறது

அப்படியே நம்புகிறேன்

அப்புறமென்ன?


உதிரும் சருகுகள்

அனைத்தையும்

அள்ளியெடுத்து

உன் பெயரெழுதி

பரிசளிக்கிறேன் உனக்கு

உறக்கம் தொலைக்கும்

நாட்களில் மட்டுமாவது

உறங்காமல்

கொஞ்சமேனும்

என் பெயர் நினைத்து

ஒவ்வொன்றையும் சுழற்று.


*


2


ஒருவரும் இல்லை

என்னைத் தவிர்த்து


யாருமற்ற மரத்துக்குக் கீழாக

சுட்டெரிக்கும் வெயிலிலும்

கொட்டித் தீர்க்கும் மழையிலும்

சுழன்றலைந்து

கசங்கிய மனதுடன்

மரம் உதிர்த்து

தனித்திருக்கும் சருகளையெல்லாம்

ஒன்று திரட்டி ஒன்றிணைப்பேன்

அவை ஒன்றையொன்று தழுவிக்கொள்வதை

வெறுமனே நின்று வேடிக்கைப் பார்ப்பேன்


என்னைத் தழுவ ஒருவரும் இல்லை என

கசங்கும் மனம் கண்ணீர் உதிர்க்கும்

கலங்கும் மரம் சருகை உதிர்க்கும்.


*


3


சருகு என்பது என்ன?

வேறொன்றும் இல்லை,

சற்றே மனம் பிசகிய இலை.


*

Comments