மனதின் அடியாழத்திலிருந்து...

மறுபடியும் முகநூலில் அவரது பெயரைத் தட்டச்சு செய்தேன். அவர் இன்னமும் எனது நட்பு அழைப்பை ஏற்காமல்தான் இருக்கிறார்.

இப்போது திரும்பவும் அவரது முகநூல் பக்கம் செல்ல என்ன காரணம்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, Instagramல் Ask Me Anything என்றொரு நிலைத்தகவலைக் கல்லூரியில் உடன்பயிலும் தங்கை போட்டிருந்தார். நான் அவரிடம் கேட்டிருந்தேன், "If you could meet anyone in the world, alive or dead, who would it be?" என்று. அவரது பதிலுக்காக காத்திருந்தேன். மறுநாள் அவரிடமிருந்து பதில் வந்திருந்தது. "My Brother ............" என்று அவரது அண்ணனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், அவரை எனக்குத் தெரியும். அதுவரை எனக்குத் தெரியாதது, இந்தப் பெண் அவரது தங்கை என்பதுதான்.

அவர் எங்களுக்குக் கல்லூரியில் சீனியர். அவரைக் கல்லூரியில் மிகக் குறைவான நாட்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றாலும் அவரைத் தெரியும். மிக அமைதியான நபர்.

நாங்கள் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவர் மூன்றாம் ஆண்டு. முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நடந்துக்கொண்டிருந்தது. அந்தத் தினம் முழுக்க இரண்டாம்-மூன்றாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து "சும்மா பேசிக்கொண்டிருப்போம்". அப்படியொரு நிகழ்வில், இரண்டாமாண்டு எடிட்டிங் துறையைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இந்த அண்ணனை முதலாமாண்டு மாணவர் என்று நினைத்து "டேய்... நீ இங்க வாடா..." என்று அழைத்தனர். அவர்களுக்குத் தெரியாது, அவர் சீனியர் என்று. காரணம், பெரும்பாலும் யாரும் அவரைக் கல்லூரியில் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்குத் தெரியும்.

அவர் மெல்லிய புன்னகையுடன் அப்படியே நின்றுக்கொண்டிருந்தார். நான் நண்பர்களிடம் சொன்னேன், அவர் நமக்கு சீனியர் என்று. அப்புறம் நாங்கள் ஒன்று சேர்ந்து மன்னிப்பு கேட்டோம். அவர் அப்போதும் ஒரு வார்த்தை பேசவில்லை. மெல்லிய புன்னகையுடன் நகர்ந்துவிட்டார். இதுவே வேறு யாராக இருந்திருந்தால் அங்கு வேறு மாதிரியாக ஏதாவது பிரச்சனை நடந்திருக்கும். அவரது மென்மையால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்தக் கணம் அவரது புன்னகை எனக்குப் பிடித்திருந்தது. அவரையும்!

அன்றிரவு நான் அவரது பெயரை முகநூலில் தேடி, நட்பு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. பிப்ரவரி மாதம் ஒரு நாள் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. ஏற்கனவே 'தற்கொலை' எனும் விஷயம் என்னைத் தொடர்ச்சியாக யோசிக்க வைக்கும் விஷயமாக இருந்தது/இருக்கிறது. காரணம், சுற்றி சூழ நிறைய உறவுகளின் தற்கொலைகளைப் பார்த்துவிட்டேன். அதனால் 'தற்கொலை' எனும் விஷயத்தைப் பற்றி மட்டும் நிறைய யோசிப்பேன்.  தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எப்போதும் வந்ததில்லை. அவரது தற்கொலை என்னை மறுபடியும் சில கேள்விகளுக்கு அழைத்து சென்றது.

எனது இறுதியாண்டு குறும்படத் தயாரிப்புக்கு 'தற்கொலை' சார்ந்த ஒரு கதையையே முதலில் எழுதினேன். அந்தக் கதை எழுத உண்மையில், அவரும் ஒரு காரணம்தான். ஆனால் அந்தக் கதையை கல்லூரி நிர்வாகம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டது. நானும் எடுக்கவில்லை. ஆனால் அந்தக் கதை அப்படியே இருக்கிறது.

இதையெல்லாம் அவரது தங்கையிடம் சொல்ல வேண்டுமென்று அவரது பதிலைப் பார்த்த அந்தக் கணம் எனக்குத் தோன்றியது. ஆனால் நான் சொல்லவில்லை. சிறு தயக்கம்!

அன்று மறுபடியும் முகநூலில் அவரது பெயரைத் தட்டச்சு செய்தேன். அவர் எனது நட்பு அழைப்பை ஏற்காமல்தான் இருந்தார்.

இன்று மறுபடியும் முகநூலில் அவரது பெயரைத் தட்டச்சு செய்தேன். அவர் இன்னமும் எனது நட்பு அழைப்பை ஏற்காமல்தான் இருக்கிறார்.

நாளை மறுபடியும் முகநூலில் அவரது பெயரைத் தட்டச்சு செய்வேன். அவர் அப்போதும் எனது நட்பு அழைப்பை ஏற்காமல்தான் இருப்பார்.

(அந்தத் தங்கைக்கு...)

Comments