AHALYA (2015)

 


அஹல்யா... பெங்காலி மொழிக் குறும்படம். ‘கஹானி’ 'பத்லா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கியிருக்கும் 14 நிமிடக் குறும்படம். ராதிகா ஆப்தே, சௌமித்ரா சட்டர்ஜி மற்றும் டாடா ராய் சட்டர்ஜி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘அஹல்யா’ எனும் சொல்லில் ‘ஹல்யா’ என்பதற்கு ‘அழகின்மை’ என்று பொருள். ‘அ’ அன்மைப் பொருளில் அமைய, அஹல்யா என்பது ‘அழகில்லாத பகுதி துளியும் இல்லாதவள்’ என்று பொருள்படும். ‘அஹல்யா’ எனும் இந்தக் குறும்படத்தைப் புரிந்துக்கொள்ள நம்முடைய இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தைத் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் பிறந்தவளே ‘அஹல்யா’ (அஹலிகை). காண்போரை மயக்கும் அழகுடையவள் அவள். பார்த்த மாத்திரத்திலேயே நம்மைப் பிரமிக்க வைக்கும் பேரழகி அவள். பாற்கடலைவிட்டு வெளியே இறங்கி வரும் அவளைத் தேவர்கள், அசுரர்கள் என எல்லாரும் வைத்தக்கண் வாங்காமல் பார்த்தபடியே இருக்கிறார்கள். பெருமூச்செறிகிறார்கள். அவளை அடைய எல்லாரும் விரும்புகிறார்கள். எல்லாரையும்விட இந்திரன் அதிகமாகவே அவள் அழகில் மயங்கி கிறங்கிவிடுகிறான். எந்த அளவுக்குக் கிறங்கிபோகிறான் என்றால் பிரம்மனிடம் கெஞ்சும் அளவுக்கு… எப்படி? அவளைத் தனக்குத் தந்துவிடுமாறு…  

பிரம்மன் இத்தகைய இக்கட்டான நிலையை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க நிபந்தனை ஒன்றைத் தயாரிக்கிறார். ‘இரண்டு முகங்கள் கொண்ட பசுவை யார் முதலில் வலம் வருகிறானோ அவனுக்கே அஹலிகை’ என்கிறார். இந்த நிபந்தனையைக் கேட்ட தேவர்களுக்கு எரிச்சல் கூடுகிறது. ‘இரண்டு முகங்களுடைய பசுவுக்கு எங்குப் போவது?’ என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஒன்றிணைந்து எல்லாரும் கெஞ்சுகிறார்கள். இரண்டு முகங்களுடைய பசுவை தவிர்த்த வேறு நிபந்தனைக்காக. இரக்கம் கொள்கிறார் பிரம்மன். சரி… அது முடியாத காரியமாக இருப்பின் உலகை முதலில் வலம் வருபவனுக்கு அஹலிகை என்கிறார் பிரம்மன். அவ்வளவுதானே என்று எல்லாரும் புறப்படுகிறார்கள்.

இந்திரன் ஐராவதத்தின் மீதும் எமன் எருமையின் மீதும் அக்கினிதேவன் ஆட்டுக்கிடாயின் மீதும் வாயு தேவன் மான் மீதுமாக ஏறி பறக்கிறார்கள். இப்படியாக மற்றவர்களும் தங்களுக்குக் கிடைத்த வாகனத்தில் வலம் வர ஆரம்பிக்கிறார்கள்.

இதையெல்லாம் தூரம் நின்று பார்க்கும் நாரத முனிக்கு இந்த நேரத்தில் ஒரு யோசனை தோன்றுகிறது. அஹல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவதே அந்த யோசனை. அஹல்யாவால் கௌதம முனிவருக்கு உரிய பணிவிடைகளைச் செய்ய முடியும் என்று அவர் கருதுகிறார். அதனால் கருவுற்று கன்று ஈனும் நிலையிலுள்ள ஒரு பசுவை கௌதம முனிவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பசுக் கன்று ஈனும் சமயத்தில், அதாவது பசுவின் பின்புறத்திலிருந்து கன்றுவின் தலை வெளிவந்த சமயத்தில் பசுவைச் சுற்றிவர சொல்கிறார் நாரதர். கௌதம முனிவரும் சுற்றி வருகிறார். இப்போது பசு இரண்டு தலைகள் கொண்ட பசு அல்லவா? பசுக் கன்று ஈனும் அதைச் சுற்றி வருபவர் உலகத்தைச் சுற்றி வந்ததுக்கு ஒப்பாவர் என்பது ஐதீகம். அதன்படி பார்த்தால் அஹலிகை யாருக்கு? கௌதம முனிவருக்குத் தானே!

பிரம்ம தேவர் தனது வாக்குத் தவறாமல், அஹலிகையைக் கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அஹலிகையும் கௌதம முனிவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறாள். அவர்களுக்குச் சதானந்தன் பிறக்கிறான். இவை யாவும் அறியாத இந்திரன் மற்றவர்களுக்கு முன்பாக உலகத்தைச் சுற்றி வந்துவிட்டுப் பிரம்மனிடம் அஹலிகையைக் கேட்கிறான். அஹலிகைக்குத் திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்துவிட்ட கதையைச் சொல்கிறார் பிரம்மன். இந்திரன் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாகக் கதறுகிறான். அவனுள் எழுந்த காமம் அடங்கவில்லை. அஹலிகைக்குக் குழந்தைப் பிறந்திருந்தால் என்ன? அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் மிகுந்தவனாக இருக்கிறான்.

பின்னிரவு ஒன்றில், கௌதம முனிவர் வீட்டருகே சேவல் போலக் கூவுகிறான் இந்திரன். பொழுது விடிந்ததாக நினைத்து கௌதம முனிவர் நீராட செல்கிறார். இந்த நேரத்தில் கௌதம முனிவர் போல உருமாறி செல்லும் இந்திரன், அஹலிகையை அணைக்கிறான். அவளும் கணவர்தானே என்றெண்ணி அவருடன் கூடுகிறாள். இச்சமயத்தில் பொழுது விடியாததை உணரும் கௌதம முனிவர் வீடு திரும்புகிறார். இந்திரன் பூனை வடிவமாக மாறி இடத்தைவிட்டு நகருகிறான். இந்த விஷயத்தை உணரும் கௌதம முனிவர் கடுஞ்சினம் கொள்கிறார். அஹலிகை உண்மை அறிகிறாள். கௌதம் முனிவரின் காலில் விழுந்து கதறுகிறாள். ஆனால் கௌதம முனிவர் அவளுக்குச் சாபமிடுகிறார். ‘கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ!’ என்று. அதுமட்டுமில்லாமல் ‘ராமனின் அடிப்பொடி பட்டால் உன் சாபம், பாவம் இரண்டும் தீரும்’ என்றும் அருளுகிறார். பின்பு இராமாவதாரத்தின்போது காட்டிற்குச் செல்லும் இராமனின் கால், அங்குக் கல்லாகக் கிடந்த அஹலிகையின் மீதுபட்டு அவள் உயிர் பெற்றாள் என்பதும் அவளது சாபம், பாவம் இரண்டும் தீர்ந்தது என்பதும் புராணம். இந்தப் புராணத்தை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதையில் தவறிழைத்தவன் இந்திரன். ஆனால் சாபம் பெறுபவள் அஹலிகை. இது எந்த வகையில் நியாயமாகும்?

சுஜாய் கோஷ் இயக்கியிருக்கும் ‘அஹல்யா’ எனும் இக்குறும்படம் நம் இராமாயணம் கூறும் புராணக் கதையை மறுதலித்து உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி? இந்தக் குறும்படம் குற்றம் இழைத்த இந்திரனே தண்டனைக்கு உரியவன் என்பதை ஆழமாக முன்வைக்கிறது. நவீனக் காலக் கதாப்பாத்திரங்களை முன் நிறுத்தி நம் பழமையான தொன்மத்தை மறுமதிப்பீடு செய்கிறது இக்குறுபடம். அவ்வகையில் முக்கியமானதொரு குறும்படமாகிறது ‘அஹல்யா’.  

Comments