உருவம் (சிறுகதை)



ஆழ்ந்துறங்கிக்கொண்டிருந்தேன். முகம் மறைய போர்த்தியிருந்த போர்வையை திடீரென யாரோ ஒருவர் இழுப்பது போல தோன்றவே போர்வையை இறுகப் பிடித்தபடிப் புரண்டுப் படுத்தேன். மீண்டுமொரு முறை போர்வை இழுக்கப்படுவதுபோல உணர்ந்தேன். உடனே போர்வையை விலக்கிப் பார்த்தேன். தூக்கக் கலக்கத்தில், அறையிலிருந்த எல்லாமும் மங்கலாகவே தெரிந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு அறையைச் சுற்றிப் பார்த்தேன். யாருமில்லை.

எனக்கிணையாக இருந்த அடுத்தடுத்த கட்டில்களில் வேலுவும் விஷ்ணுவும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்னும்சொல்லப்போனால், வேலு படுத்திருந்ததுதான் என்னுடைய கட்டில். நான் படுத்திருந்தது அவனுடையது. ஏனோ அவன் என்னுடைய கட்டிலில், என்னுடையப் போர்வையைப் போர்த்திக்கொண்டு எனக்கு முன்பாகவே படுத்து தூங்கிவிட்டிருந்தான்.. அதனால் அவனுடையக் கட்டிலில், அவனுடையப் போர்வையைப் போர்த்திக்கொண்டு நான் படுத்திருந்தேன்.

கட்டிலுக்கு அருகாக வைத்திருந்த அலைப்பேசியில் மணியைப் பார்த்தேன். இரண்டரை ஆகியிருந்தது. கட்டிலிலிருந்து எழுந்து அறைக் கதவைத் திறந்து வெளியேறி கழிவறைக்குச் சென்றேன். சிறுநீர் கழித்துவிட்டு வந்து மீண்டும் படுத்தேன். வெகுசில நிமிடங்களுக்குள்ளாகவே மறுபடியும் ஆழ்ந்த நித்திரைக்குள் மூழ்கிவிட்டேன்.

திடீரென நாய்களின் குரைப்பொலி பலமாகக் கேட்கத் துவங்கியதும் எனக்கு விழிப்பு தட்டியது. நான் போர்வையை விலக்கி எழ முற்பட்டேன். என்றாலும்கூட, என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை. மேலும் என்னால் எழுந்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் நான் சுயநினைவுக்குள் இருப்பது மாதிரியான உணர்வுதான் எனக்கு இருந்தது. கூடவே என்னை எழச் செய்யாத வகையில் யாரோ ஒருவர் எனது முழு உடலையும் அழுத்தி பிடித்திருப்பது மாதிரியான உணர்வும் இருந்தது. அந்தக் கணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், குரலெடுத்து கத்த முயன்றேன். உதவிக்கு வேலுவையும் விஷ்ணுவையும் அழைக்க முயன்றேன். ஆனால் என்னால் ஒரு வார்த்தையையும் உச்சரிக்க முடியவில்லை. உடலை அழுத்தி பிடித்திருக்கும் ஏதோ ஒன்றிடமிருந்து திமிறி எழ முற்படுகிறேன். கைகளையும் கால்களையும் அசைத்தசைத்து உதைத்து பார்க்கிறேன். கூடவே குரலெடுத்து கத்தவும் செய்கிறேன். இருப்பினும் என்னால் எழுந்திருக்க முடியவில்லை. எனது குரலும் வெளியேறவில்லை. தொடர்ந்து முயன்று இறுதியாகக் கட்டிலிலிருந்து திமிறி எழுந்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் உருவம் வேலுவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது மாதிரியாக எனக்குத் தோன்றியது. உடனே நான் தலையணையைக் கையிலெடுத்து அந்த உருவத்தின் மீது வீசியபடியே கத்தினேன்.

‘வேலு... எந்திரிடா... யாரோ நம்ம ரூம்ல இருக்காங்க... வா... நாம்ம வெளிய போயிடலாம்...’

தலையணை வேலுவின் மீதுபட்டதும் அங்கிருந்த உருவம் காணாமல்போனது. வேலுவும் சடாரென்று எழுந்துக்கொண்டான். எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது, நான் திடீரென வேலுவின் கட்டிலில் அமர்ந்தேன். வேலு, தூக்கம் மிகுந்த குரலில் ‘என்னடா? என்னாச்சு?’ என்று கேட்டான். என்னால் மறுபடியும் பேசவே முடியவில்லை. அமைதியாக அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘எதாச்சும் கனவு கினவு கண்டியா?’

நான் எதுவும் பேசவில்லை. உண்மையில் என்னால் எதுவும் பேசவே முடியவில்லை. அவன் ‘சரி... இப்படியே என் பக்கத்திலேயே படுத்துக்கோடா...’ என்றுவிட்டு படுத்துக்கொண்டான். நான் மீண்டும் படுத்திருந்த கட்டிலில் வந்து சாய்ந்ததாக நினைவு. எப்போது தூங்கினேன் என்று எனக்குச் சரியாக நினைவில் இல்லை.

மீண்டும் போர்வையை யாரோ இழுப்பது போல தோன்ற போர்வையை விலக்கிப் பார்த்தேன். விடிந்திருந்தது. வேலு நின்றுக்கொண்டிருந்தான். மெல்லிய குரலில் பேசத் துவங்கினான்.

‘நைட்டு எதுக்குடா எழுந்து வந்து என் பக்கத்துல உட்கார்ந்த?’ எனக் கேட்டான்.

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. தூக்கக் கலக்கமாக வேறு இருந்தது. அதனால் ‘அப்புறம் சொல்றேன்... இப்போ என்னைத் தூங்கவிடுடா...’ என்றுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன். அவன் உடனே மீண்டும் போர்வையை இழுத்தான். ‘என்னனு சொல்லுடா... ப்ளீஸ்...’ என்றான். ‘நான் அப்புறம் சொல்றேன்... போடா...’ என்றேன். ‘டேய்... சொல்டா...’ என்றான் மீண்டும். அவன் விடுவதாக இல்லை. திரும்பிப் பார்த்தேன். விஷ்ணு தூங்கிக்கொண்டிருந்தான்.

‘நேத்து நம்ப ரூம்ல ஏதோவொரு உருவம் வந்துச்சிடா... அதை நான் பார்த்தேன்... யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு நெனைச்சேன்... நீயும் யார்க்கிட்டயும் சொல்லாத...’ நான் சொன்னேன்.

அதைக் கேட்ட வேலு, என்னை நெருங்கினான். மெல்லியக் குரலில் ‘நான் ஒன்னு சொல்லட்டா?’ என்று என்னிடம் கேட்டான். அவன் அப்படி என்னிடம் கேட்ட தொனி, ஏற்கனவே இப்படியொரு விஷயத்தை அவன் உணர்ந்திருக்கிறான் என்பதை எனக்கு உணர்த்துவதாகவே இருந்தது. அதனால் ‘சொல்லு...’ என்றேன். எனக்கருகாக கட்டிலில் வந்து அமர்ந்தான். மிக மெல்லிய குரலில் பேசினான்.

‘எங்கப்பா செத்துட்டார்னு நெனைக்குறேன்டா...’

‘டேய்... லூசு மாதிரி பேசாதடா...’ என்றேன்.

அவன் ‘நேத்து நைட்டு வந்திருந்தது எங்கப்பா தான்... எனக்கு நல்லாத் தெரியுது... நானும் பார்த்தேன்...’ என்றான் தீர்க்கமாக.

‘அப்படிலாம் இருக்காது... அப்படிலாம் யோசிக்காதடா...’ என்றேன்.

சில நிமிடங்கள் மௌனமாக உடன் அமர்ந்திருந்தான்.

மீண்டும் உடைந்த குரலில், ‘எனக்கு நல்லாத் தெரியுதுடா... அவரு செத்துட்டாரு...’ என்றுவிட்டு அமைதியானான். நானும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

இருவரும் வெகுநேரம் எதுவும் பேசாமலேயே அமர்ந்திருந்தோம். திடீரென அவனது அலைப்பேசி ஒலித்தது. இருவருமாக மேசை மீதிருந்த அவனது அலைப்பேசியைப் பார்த்தோம். அவன், என் முகத்தைப் பார்த்து வருத்தம் தோய்ந்த வகையிலான ஒரு புன்னகையைச் செலுத்திவிட்டு, எழுந்து சென்றான். தன்னிச்சையாக நான் கட்டிலிலிருந்து எழுந்து நின்றேன். அவன் அலைப்பேசியைக் கையிலெடுத்து பார்த்தான். மறுகணமே என்னைப் பார்த்தான். அவனது கண்களில் கண்ணீர் தேங்கத் துவங்கியது. 

Comments

  1. அருமை... ஒரு திகிலுடன் கூடிய உருக்கமான குரும்படம் பார்த்த உணர்வு ❤

    ReplyDelete
  2. எனக்கு சின்ன வயசுல இதே ோல நடந்தது னைவு இருக்குணா

    ReplyDelete
  3. நல்ல கதை சுருக்கம்,படிக்கும் போதே நீங்கள் எழுதிய கதை கற்பனையாக கண்முன்னே தோன்றியது....அருமை

    ReplyDelete

Post a Comment