நிரம்பி வழியும் மௌனம் (சிறுகதை)



கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்திலான இரு வண்ணத்துப்பூச்சிகள், திடீரென என் அறைக்குள் நுழைந்து, எனது எழுதுமேசையில் தியானித்தபடியிருந்தப் புத்தர்களுக்கு மேலாக, விநோதமான வகையில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக மாறி மாறி அமர்ந்தபடி இருந்தன. நோயுற்ற மிருகமொன்று மிகத் தனிமையில், ஒரு மரத்தின் நிழலுக்குக் கீழாக அமர்ந்து இளைப்பாறுகையில், அதற்கருகாமையிலேயே அதன் வேட்டை விலங்கொன்று அலைந்து திரிவதைத் தெம்பற்று வேடிக்கைப் பார்ப்பதைப் போல, மௌனமாக அந்த வண்ணத்துப்பூச்சிகளின் அலைதல்களையும் தாவல்களையும் அமர்தல்களையும் தங்களுக்குள் நிகழ்த்திக்கொண்ட விளையாட்டுக்களையும் நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வண்ணத்துப்பூச்சிகள், தங்கள் மேனிகளில் தவழ்ந்து விளையாடுவதற்கு அனுமதியளித்தது போன்ற பாவனையில், எப்போதும்போல எந்தச் சலனமுமற்று கண்களை மூடிக்கொண்டு தியானித்தனர் அவ்விரு புத்தர்கள்.

ஒருவர், வலது கையால் தனது தலையைத் தாங்கிப் பிடித்தபடி படுத்திருந்து தியானித்தார். இரண்டாமவர், வலது காலின் முட்டியில் தனது கைகளைக் கிடத்தி அவைகளின் மேல் தலைச் சாய்ந்து தியானித்தார்.

நிலையான முகப்பாவங்களுடன் எனது எழுதுமேசையை அலங்கரிக்கும் புத்தர்களையும், நிலையற்ற அலைதல்களுடன் புத்தர்களின் மேனிகளில் கொஞ்சி விளையாடி தவழ்ந்தலையும் வண்ணத்துப்பூச்சிகளையும், நிதானமான பார்வையுடனும் மெல்லிய புன்னகையுடனும் நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இரு புத்தர்களும் கல்லால் ஆனவர்கள். என்னைப் போலவே கறுப்பானவர்களும் கூட! ஆனால் காணும் கணத்திலே, ஒரு விதக் கவர்ச்சியால் மற்றவர்களை வசீகரிக்க தெரிந்தவர்கள். ஆசையைத் துறக்க சொன்னவர்கள், எப்போதும் ஆசையைச் சுரக்க செய்பவர்கள். கண்டவுடனே காதலைத் தூண்டுபவர்கள். உடனடியாக உடைமையாக்கி கொள்ள சொல்லி இறைஞ்சுபவர்கள்.
*

அவள் அறிமுகமான நாட்களுக்குப் பிறகே புத்தர்(கள்) மீதான கவனம் என்னுள் குவிந்தது. இவ்விரு புத்தர்களைக்கூட, எனக்குக் கையளித்தவள் அவளே!

திடீரென ஒரு நாள், உடனே சந்திக்க வேண்டுமென்று சொல்லி அழைத்தாள். அவரது திடீர் அழைப்பை என்னால் சட்டென புரிந்துக்கொள்ள முடியாமல், உடனடியாக அவள் வரச் சொல்லியிருந்த இடத்துக்குச் சென்றேன். ஒரு மரத்துக்குக் கீழாக நிழல் விரிய அமைந்திருந்த கல் மேசையில், கையிலொரு காய்ந்து வீழ்ந்த சருகொன்றைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் காத்திருந்தவளைப் போல தென்பட்டாள் அவள். அவளை நெருங்கியதும் சிறிய மௌனத்துடன் மிகச் சிறிய இதழ்கள் விரிய புன்னகைத்தாள். மேசையில் அமரச் சொல்லி இடமளித்தாள்.
அமர்ந்துக்கொண்டேன். இருவருக்குள்ளும் மௌனம் நிலைத்திருந்தது. நான் பேச விரும்பினேன்.

‘எதுக்கு உடனே வரச் சொன்ன?’

‘ஒன்னுமில்ல... சும்மாதான்... உங்கள பார்க்கனும்போல தோனுச்சு...’

அவளது பதில் எனக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து என்ன கேட்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.
திடீரென அவள், வண்ணக்காகிதங்கள் சுற்றப்பட்ட ஒரு சின்னஞ்சிறிய பரிசுப்பெட்டியை என் முன்பாக நீட்டினாள். நான் என்னவென்று புரியாமல் திகைத்தேன். என்னவாக இருக்குமென்ற யோசனையுடன், நான் வாங்கிக்கொண்டு, அதைப் பிரிக்க முயன்றபோது என் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

‘வீட்ல போய் பிரிச்சு பாருங்க...’ என்றாள்.

நான் கைகளைப் பெட்டிலிருந்து விலக்கிக்கொண்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நொடியில், அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டாள். இறுக்கம் கூடியது. அப்போது எங்களுக்கு முன்பாக சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தினாலான இரு வண்ணத்துப்பூச்சிகள் இணையாக பறந்துக்கொண்டிருந்ததைக் கவனிக்கத் துவங்கினேன்.

அவளுடனான சந்திப்புக்குப் பிறகு, வீட்டுக்குச் சென்றுப் பெட்டியைப் பிரித்து பார்த்தேன். தலையைத் தாங்கிப் பிடித்தபடி படித்திருந்து தியானிக்கும் புத்தர்!
*

இன்னொரு நாள். இருவரும் கடற்கரைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.

இரயில் பயணத்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி இரயிலின் பெரும் இரைச்சல்களுக்கு மத்தியில், அவள் இரண்டாம் முறையாக வண்ணக்காகிதங்களால் சுற்றப்பட்ட பரிசுப்பெட்டியொன்றை எனக்களித்தாள். இந்த முறை எந்தக் கட்டுப்பாடுகளும் அவளெனக்கு விதிக்கவில்லை. எனினும் சூழல் உகந்ததாய் இல்லையென்று நான் அதைப் பிரிக்கவில்லை. அவள் என் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, எனது இடதுக்கையை இறுகப் பற்றிக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்க துவங்கினாள்.

இரயிலுக்குள் வண்ணத்துப்பூச்சிகள் எப்படி வந்ததென தெரியவில்லை. முன்பு வந்தது மாதிரியே சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தினாலான இரு வண்ணத்துப்பூச்சிகள் எங்களுக்கு முன்பாகப் பறந்துக்கொண்டிருந்தன. அவை எனக்குள் சொல்லவியலாத வகையிலான உணர்வுகளைக் கிளர்த்தின.

வீட்டுக்குச் சென்றுப் பெட்டியைப் பிரித்து பார்த்தேன். வலது காலின் முட்டியில் தனது கைகளைக் கிடத்தி அவைகளின் மேல் தலைச் சாய்த்து தியானிக்கும் புத்தர்!
*

இப்போதெல்லாம் அவள் என்னிடம் பேசுவது இல்லை. உண்மையில் அவள் என்னிடம் பேசுவதில்லையா? அல்லது நான் அவளிடம் பேசுவதில்லையா? தெரியவில்லை! என்னிலிருந்து அவள் தூர விலகிக்கொண்டாளா? அல்லது நான் அவளிடமிருந்து விலகி இருக்கிறேனா? எந்தப் புள்ளியிலிருந்து எங்களுக்குள் இப்படியொரு இடைவெளி மிகுந்தது? எனக்குத் தெரியவில்லை.

சமீப நாட்களாக, எனக்குப் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. மிகக் குறிப்பாக, எனது அறைக்குள் நுழையும் கணங்களில், இந்தப் புத்தர்களைப் பார்க்காமல் இருப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தப் புத்தர்களைப் பார்த்துவிட்டால், அவளின் நினைவுகள் எழாமல் இருப்பதில்லை. அவளது நினைவுகள் எழுந்துவிட்டால், என்னுள் ஒரு சோகம் குடிப் புகுந்துவிடுகிறது. தீராமல் அலைக்கழிக்கும் மன உளைச்சல்கள் பெருகுகிறது. இந்த மன உளைச்சல்களைப் போக்க, வேறு வழியின்றி அந்தப் புத்தர்களையே கண்ணிமைக்காமல் உட்கார்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. பார்க்கும் கணங்களில் மன உளைச்சல்கள் பெருகுவதும் பார்த்துக்கொண்டே இருக்க இருக்க மன உளைச்சல்கள் ஒரு சீராய் அடங்குவதும் பார்த்து முடித்துவிட்டு அறையைவிட்டு நீங்கும்போது மீண்டும் மன உளைச்சல்கள் தொற்றிக்கொள்வதும் தினசரி வாடிக்கையாகிவிட்டது.

கூடவே, இவர்கள் என்னுடன் என்னறையிலேயே வசிப்பது எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. அவர்களது மௌனம் பொதிந்த முகம் என்னை நோயாளியாக்குகிறது. மனம் பேதலித்த ஒரு மன நோயாளியாக மாற்றி என்னை முற்றிலுமாக முடக்குகிறது! எல்லாமும் ரொம்பவும் குழப்பமாக இருக்கின்றன. குழப்பங்கள் நாளுக்கு நாள் குறையாமல் கூடுகின்றன.
*

அவளிடமே இந்தப் புத்தர்களைக் கையளித்துவிடலாமா?

ம்?

அப்படி அவளுக்குக் கையளிப்பதன் மூலம் எனது மன உளைச்சல்கள் முற்றிலும் இல்லாமல் தீர்ந்துவிடுமா?

எனக்குத் தெரியவில்லை.

 ஆனாலும்...

நான் காத்திருக்கிறேன், இந்தப் புத்தர்கள் என்னிடமிருந்து விடுதலையடையும் கணத்திற்காக! அல்லது அவர்களிடமிருந்து நான் விடுதலை அடையும் கணத்திற்காக!

மீண்டும் அதே கேள்வி.

‘அவளிடமே இந்தப் புத்தர்களைக் கையளித்துவிடலாமா?’
*

என் பார்வை சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தினாலான வண்ணத்துப்பூச்சிகளை நோக்கி நகர்கிறது. இவ்விரு வண்னத்துபூச்சிகளும் என்னைத் தொடர்ந்து அலைவது எப்படி?

அவை ஒன்றுக்கொன்று இணையாக, என் அறை முழுக்க அலைகின்றன. நான் அவைகளைப் பார்வையால் பின் தொடர்கிறேன். ஒரு கட்டத்தில் அவை மீண்டும் என் எழுது மேசையை நோக்கி நகர, என் பார்வையும் நகர்கிறது. அவை புத்தர்களே தஞ்சமென அவர்களின் மேனிகளில் தவழப் போகின்றன என்று நான் நினைத்த கணத்தில், மாறாக அவை என் அலைப்பேசிக்கு மேலாக அமர்கின்றன. சில நொடிகளில், அலைப்பேசியில் வெளிச்சமெழ அது அதிர்கிறது. அவ்வதிர்வில் வண்ணத்துப்பூச்சிகள் அலைப்பேசியிலிருந்து விலகி, ஜன்னல் வழியாக புகுந்து இணைப்பிரியாமல் வெளியில் பறந்து போகின்றன. நான் அவற்றையே பின் தொடர்ந்து ஜன்னலை நோக்கி நகர்கிறேன். அவை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துவிட்டு திரும்புகிறேன், அலைப்பேசியை நோக்கி!

அலைப்பேசியைக் கையிலெடுத்து பார்க்கிறேன், அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

புத்தர்களின் முகங்களைப் பார்க்கிறேன், வழக்கம்போல எந்தச் சலனமும் இல்லை!

மௌனமே நிரம்பி வழிகிறது!
*

Comments

Post a Comment