THE GUILTY (2018)



ஒரு திரைப்படத்தில் காட்டப்படுகின்ற காட்சிகளையும் தெரியப்படுத்துகிறத் தகவல்களையும் தாண்டி, பார்வையாளனது எண்ணங்களையும் கற்பனைகளையும் தூண்டி, திரைப்படத்தினுள் அவனை ஓர் அங்கமாக ஒன்றிணைப்பது என்பது மிகவும் அபூர்வமான செயல். அப்படியான அபூர்வமான செயலை வெகுசில திரைப்படங்களே நிகழ்த்துகின்றன. அல்லது வெகுசில படைப்பாளிகளே நிகழ்த்துகின்றனர். அப்படியான திரைப்படங்களில் ‘தி கில்ட்டி’ எனும் இத்திரைப்படத்துக்கும் படைப்பாளிகளில் இயக்குநர் குஸ்தவ் மோலருக்கும் நிச்சயம் இடம் உண்டு.

இத்திரைப்படம் முழுமையும் இரண்டே இரண்டு அறைகளில் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் அடுத்தடுத்த அறைகள். மேலும் திரைப்படத்தில் நடித்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். இன்னும் சொல்லப்போனால் ஒரேயொரு கதாப்பாத்திரம் (அஸ்கர்) மட்டுமே திரைப்படம் முழுமையும் இயங்குகிறது. மற்றவர்கள், மேசைக்கு முன்பமர்ந்து உடன் பணியாற்றும் ஊழியர்கள். மற்றவர்கள், முதன்மை கதாப்பாத்திரத்துடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடுபவர்கள். அவர்களது குரல்களும் அவர்களிருக்கும் பிரச்சினைகளுமே திரைப்படத்தை நகர்த்தி செல்கின்றன.

எதாவது பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் அலைப்பேசியில் அழைக்கும்போது அவர்களுக்கு உரிய முறையில் பதிலளித்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், போலீசையோ ஆம்புலன்ஸையோ அவர்களிருக்கும் இடத்துக்கு அனுப்பி வைப்பதே அஸ்கரின் முதன்மையான பணி. ஈபென் எனும் பெண், தான் கடத்தப்பட்டுவிட்டதாக அஸ்கரை அழைத்து சங்கேத மொழியில் தெரிவிப்பதிலிருந்து திரைப்படம், தனது தீவிரத்தை நோக்கி நகரத் துவங்குகிறது. மேலும் அவளுடைய ஆறு வயது மகளும் கைக்குழந்தையான மகனும் வீட்டில் தனித்திருப்பதாகவும் அவளைக் கடத்திக் கொண்டு செல்பவன் அவளது கணவன் என்பதும் நமக்குத் தெரிய வருகிறது.  அதைத் தொடர்ந்து நிறைய அழைப்புகள், விசாரிப்புகள், உரையாடல்களென்று நமக்கு ஒவ்வொரு தகவல்களாக தெரிய வருகின்றன. இந்தப் பிரச்சினையில், அந்தப் பெண்ணுக்கான உரிய தீர்வை எட்டுவதற்கு அஸ்கர், தனது பணி நேரம் முடிவடைந்த நிலையிலும்கூட போராடத் துவங்குகிறான். அவன் எந்தளவுக்குப் போராடுகிறாரோ அதேயளவுக்கான போராட்டம், பார்வையாளர்களான நமக்குள்ளும் தொற்றிக்கொள்கிறது. அஸ்கருடன் இணைந்து நாமும் அடுத்தடுத்து அவனது செயல்களை எந்தக் கேள்விகளும் பெரிய யோசனைகளுமற்று பின் தொடர்கிறோம். ஒவ்வொன்றாக அடுக்கப்படும் தகவல்கள் மூலம் இறுதி தீர்வை அடைகிறோம்.

காட்சிகளைக் காட்டிலும் ஒலியின் மூலமே கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் ஒலி கையாளப்பட்டிருக்கிறது. அலைப்பேசியில், எதிர்முனையில் பேசிக்கொண்டிருப்பவரது சூழல்களை உணரும் வகையில் ஒலிக்குறிப்புகள் நமக்கு வழங்கப்படுகின்றன. அவ்வொலிக்குறிப்புகளின் மூலம், திரையில் காட்டப்படாத காட்சிகள் நமக்குள் கற்பனையாக உருவம் கொள்ள துவங்குகின்றன. பார்வையாளன் இட்டு நிரப்பிக்கொள்ளும் வகையிலான இந்த அணுகுமுறை, கதைச்சொல்லலில் மிகப் பெரும் சாதனை.  இப்படியான ஒரு கதைக்களத்துடன் தனது முதல் திரைப்பட முயற்சியில் இறங்கிய இயக்குநர் குஸ்தவ் மோலர் பாராட்டப்பட வேண்டியவர்.

மேலும் இத்திரைப்படத்துக்கான தலைப்பு மிகவும் கச்சிதமானதாக இருக்கிறது. 19 வயது இளைஞனைக் கொன்ற குற்றத்தின் காரணமாகப் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அஸ்கர், அந்தக் குற்றவுணர்வில் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான். மேலும் அந்த வழக்கிலிருந்து விடுவிப்பு பெற நண்பனைப் பொய் சாட்சிக்கு அழைக்கும் குற்றவுணர்வும் அவனுக்கு ஏற்படுகிறது.   அதுமட்டுமில்லாமல் இப்போதையப் பணியில், உதவியென்று தன்னை அழைக்கும் பெண்ணுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியாத குற்றவுணர்வுக்கும் ஆளாக்கப்படுகிறான். இதற்கிடையில், ஈபென் எனும் பெண்ணுக்குள் மிகும் குற்றவுணர்வும் சேர்ந்துவிடுகிறது.

இந்தத் திரைப்படம் டென்மார்க் சார்பாக சிறந்த அயல்மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments