ROMA (2018)



‘ஒய் து மமா டம்பியென்’, ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ மற்றும் ‘க்ராவிட்டி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான மெக்சிகன் இயக்குநர் அல்ஃபோன்ஸோ குரோன். அவர் இயக்கியிருக்கும் சமீபத்திய கருப்பு வெள்ளை திரைப்படம்தான் ‘ரோமா’.

தனது பால்ய கால நினைவுகளை மீட்டெடுத்து, மெக்சிகோவின் ரோமா எனும் பிராந்தியத்தில், 1970-71ஆம் ஆண்டுகளில் தனது குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அப்போதிருந்த அரசியல் சூழல்களுடன் ஒன்றிணைத்து அவர் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இத்திரைப்படத்துக்கான உந்துதல் அவரது பால்ய கால நினைவுகளின் மூலம் எழுந்திருந்தாலும்கூட, அவரது மொத்த கவனமும் அவர் சார்ந்த நிகழ்வுகளை மட்டுமே தொகுப்பது என்றில்லாமல் அவரது வீட்டில் பணிப்புரிந்த – குடும்பத்தில் ஒருத்தி போலவே பாவிக்கப்பட்ட – ஒரு பணிப்பெண்ணை முதன்மைப்பாத்திரமாக வடிவமைத்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பது திரைப்படத்தின் முதன்மையான சிறப்பியல்புகளில் ஒன்று. வெவ்வேறு வகைகளில் ஆண்களால் கைவிடப்படும் ஒரு எஜமானிக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் எஜமானியின் குழந்தைகளுக்குமிடையிலான அன்பும் காதலும் பரிவும் கனிவும் தியாகமும் பிணைப்பும் திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், இத்திரைப்படத்தின் சிறப்பியல்புகளில் மற்றொன்று.

திரைப்படத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் அணுகப்பட்டுள்ளன. பணிப்பெண்ணான ‘க்ளியோ’ எல்லா விஷயங்களையும் எந்த ஆர்பாட்டமில்லாமல் அணுகுகிறாள். மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாள். குரலை உயர்த்த வேண்டிய இடத்திலும்கூட அவள் தனது குரலை உயர்த்துவதே இல்லை. ‘ஃபெர்மின்’ தூரோகம் இழைத்தது தெளிவாகத் தெரிந்திருந்தும்கூட, அவள் அவனைத் தேடி செல்கிறாள். எல்லாரிடமும் மிகவும் கனிவாகவே நடந்துக்கொள்கிறாள். மிகக் குறிப்பாக குழந்தைகளிடம். தூங்கிக்கொண்டிருக்கும் சிறுமி ‘சோஃபி’யை அவள் பாட்டு பாடி எழுப்பிவிடும் காட்சியும் ‘பெப்பே’வுடன் இணைந்து அவனைப் போலவே ‘I can’t. I’m dead’ என்று விளையாடும் காட்சியும் அவளுக்கும் குழந்தைகளுக்குமான பிணைப்புக்கு சாட்சிகள். மேலும் அந்தக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீதான அன்புக்கும் காதலுக்கும் விலையாக, ஒரு கட்டத்தில் அவர்களுக்காக தனது உயிரையும் பணயமாக வைக்கத் துணிகிறாள். ‘க்ளியோ’ எந்தளவுக்கு அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபர்களின் மீதும் ப்ரியம் வைத்திருக்கிறாளோ அதேயளவுக்கு அவர்களும் வெவ்வேறு தருணங்களில் அவள் மீதான தங்களது ப்ரியங்களை வெளிப்படுத்தவே செய்கின்றனர். தான் கருவுற்றிருப்பதாக சந்தேகித்து க்ளியோ அதைத் தனது எஜமானி ‘சோஃபியா’விடம் தெரிவிக்கிறாள். மேலும் அவள் ‘நீங்கள் என்னை வேலையைவிட்டு நீக்கிவிடுவீர்களா?’ என்று பரிதாபமாக கேட்கும் தருணத்தில், சோஃபியா அவளை அணைத்துக்கொள்கிறாள். அவள் மீதான தனது ப்ரியத்தைத் தெரிவிக்கிறாள். மேலும் தானே அவளைக் காரிலேற்றி மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்து சென்று வருகிறாள். அதேப்போலவே சோஃபியாவின் அம்மா, க்ளியோவுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தொட்டிலை முன்பதிவு செய்வதற்குத் தன்னுடன் அழைத்து செல்கிறாள்.

திரைப்படத்தில், குடும்பத்தைப் பாதியிலேயே கைக்கழுவிக்கொண்டு ஓடிவிடும் சோஃபியாவின் கணவனது பாத்திர வடிவமைப்பு குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவனது அறிமுகம் விலையுயர்ந்த காரை எந்தச் சேதாரமுமின்றி ‘பார்க்’ செய்வதில் ஆரம்பித்து வீட்டிலுள்ள தனது பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்லும்போது, புத்தகங்களையெல்லாம் வீட்டிலேயே வைத்துவிட்டு அலமாறிகளை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வதில் முடிவடைகிறது. சிறுவன் பெப்பேயின் கதாப்பாத்திர வடிவமைப்பும் குறிப்பிட்டு சொல்லத் தகுந்த வகையில் இருக்கிறது. காரணம், அவனது விருப்பங்கள் எல்லாமும் ‘விமானம்’ சார்ந்த விஷயங்களாகவே உள்ளன. அவன் ‘பைலட்’ ஆக விருப்பப்படுகிறான். அவன் விரும்பும் திரைப்படங்களும் விண்வெளி சார்ந்த கதைகளாகவே இருக்கின்றன. அவன் விளையாடப் பயன்படுத்தும் பொம்மைகூட ஒரு விமானம்தான். மேலும் அவன் எதையும் சுயமாகவே யோசிக்கிறான். அதன் வெளிப்பாடுதான், தனது அண்ணனுடன் துப்பாக்கி வைத்து விளையாடும் காட்சியில் அண்ணன் சுடும்போது அவனும் திரும்ப சுடுகிறான். அப்போது அவனது அண்ணன் ‘இது என்னுடைய விளையாட்டு... இந்த விளையாட்டில் நீதான் சாக வேண்டும்’ என்று சொல்லும்போது ‘நான் ஏன் சாக வேண்டும்?’ என்று எதிர்த்து கேட்கிறான். திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலும் விமானங்கள் ஓர் உபப்பாத்திரங்கள் போலவே வந்துக்கொண்டே இருக்கின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நிறைய காட்சிகள் மிகவும் அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. க்ளியோ, உயிரற்று பிறக்கும் தனது குழந்தையைப் பெரும் பரிதவிப்புடன் எதுவும் செய்வதறியாது பார்த்து விடையனுப்பும் காட்சி,  கடற்கரையில் தனது உயிரைப் பணய வைக்கும் காட்சி, தனது அப்பா தங்களைவிட்டு சென்றுவிட்டார் என்பதைத் தெரிந்துக்கொண்ட மகனிடம் சோஃபியா மற்ற குழந்தைகளிடம் இதைச் சொல்லிவிடாதே என்று கெஞ்சும் காட்சி, சோஃபியா தனது குழந்தைகளிடம் ‘இனி அப்பா திரும்பி வரமாட்டார்’ என்பதைத் தெரியப்படுத்தும் காட்சியென்று நிறைய காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கின்றன. எதையுமே சொல்லாததுபோல மிக எளிமையான முறையில் நகர்ந்து நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்லும் திரைக்கதை வடிவமைப்புகளில் இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைப்பு மிக முக்கியமான ஒன்று என்று தோன்றுகிறது.

திரைப்படத்தைக் கருப்பு வெள்ளையில் படம்பிடித்திருப்பது இக்கதைக்கும் கதையின் சூழல்களுக்கும் வலு சேர்க்கும் வகையிலுள்ளது. கருப்பு வெள்ளை என்பது மிகச் சிறந்த தேர்வு. திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் அல்ஃபோன்ஸோ குரோனே ஒளிப்பதிவையும் கையாண்டிருப்பது இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. அதை அவர் மிகவும் திறம்படச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. வெவ்வேறு வகையிலான காலச்சூழல்களையும் நிலப்பரப்புகளையும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் க்ளோசப் ஷாட்கள் படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. படத்தொகுப்பையும் அவரே கூடுதலாக கையாண்டிருக்கிறார். அதனால் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது. ஆகவே இத்திரைப்படம் அவரது ‘மாஸ்டர் பீஸ்’ என்றால் அது மிகையாகாது.

Comments

Post a Comment