COLD WAR (2018)



இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சூழலில், போலந்து அரசு நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் கலைஞர்களை ஒருங்கிணைத்து குழுவொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுப்படுகிறது. அந்தக் குழுவுக்குத் தலைமையேற்று நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் ஓர் இசைக்கலைஞனுக்கும் குழுவுக்கான தேர்வில் பங்கேற்க வரும் இளம் பாடகிக்கும் இடையில் ஏற்படும் காதலே ‘கோல்ட் வார்’ திரைப்படத்தின் ஒரு வரிக்கதை. மிக எளிமையாகத் தோன்றினாலும், மிகக் குறுகிய நிமிடங்களுக்குள் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் எல்லா வகைகளிலும் அசாதாரண முறையில் இருக்கிறது. 1949 முதல் 1964 வரை, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு தருணங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு பிரிந்தும் சேர்ந்தும் தீராக்காதலில் மூழ்கித் திணறும் இருவரது காதல் கதையைச் சொல்வதற்கு இயக்குநர் எடுத்துக்கொள்ளும் கால அளவு வெறும் 85 நிமிடங்கள் மட்டுமே. இத்திரைப்படம் 4:3 என்ற விகிதத்தில் கருப்பு வெள்ளையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் முதல் ஷாட்டிலே கதைக்குள் நம்மை அழைத்து செல்லும் வெகுசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று. நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் இருவர், தங்களது இசைக்கருவிகளுடன் இசையமைத்து ஒன்றாக இணைந்து பாடும் பாடலின் வரிகளைக் கூர்ந்து கவனிக்கும் ஒருவர், அது திரைப்படத்தின் ஆதாரப்புள்ளியாக இருப்பதை உணரலாம். அந்தப் பாடகர்கள் பாடும் பாடலையும் இசையையும் வெகுவாக இரசிக்கும் நம்மைப் போலவே அந்த ஷாட்டின் இறுதியில், சிறுவனொருவன் காட்டப்படுவது ஓர் அலாதியான அனுபவத்தை வழங்குகிறது.

திரைப்படத்தில் விக்டருக்கும் ஸூலாவுக்கும் இடையிலான காதல் மிகவும் ஆழமானதாக இருக்கிறது. இருவருக்குமிடையிலான முரண்கள், அவர்களது உறவில் அடிக்கடி ஏற்படும் இடைவெளி, இருவருக்குமிடையிலான தூரமென எல்லாவற்றையும் கடந்து விக்டரும் ஸூலாவும் ஏதோவொரு வகையில் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்தே போயிருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கிடையிலான தீராக்காதல், ஒருவரை நோக்கி இன்னொருவரை தொடர்ந்து அழைத்து வந்தபடியே இருக்கிறது. இருவருக்குமான இடைவெளிக்கிடையே, அவர்கள் வேறு உறவுகளிலும் தங்களை ஈடுப்படுகின்றனர். ஸூலா, இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்கிறாள். அதிலொரு உறவில் ஒரு குழந்தையைக் கூட பெற்றிருக்கிறாள். விக்டரும் பாரிஸில் வேறொருத்தியுடன் உறவில் இருக்கிறான். என்றாலும்கூட இருவரையும் விடாது தொடர்ந்து துரத்துகிறது காதல். இறுதியில் இருவரும் என்றென்றைக்கும் ஒன்றாகவே இருப்பதற்கும் தங்களது வாழ்வில் வேறு யாரும் குறுக்கிடாமல் இருப்பதற்கும் ஒரு முடிவு எடுக்கின்றனர். அந்த முடிவை நோக்கி நகர்கின்றனர்.

பதினைந்து வருடங்களில், விக்டர் மற்றும் ஸூலா எனும் கதாப்பாத்திரங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக நுணுக்கமான காட்சிகளின் மூலம் திரைப்படத்தில் பதிவுச்செய்யப்பட்டிருக்கிறது. போலந்து அரசுக்காக இசைக்கலைஞர்களை ஒருங்கிணைக்கும் குழுவின் முக்கியப் பொறுப்பாளியாகவும் இசைஞனாகவும் அறிமுகமாகும் விக்டர், ஸூலாவின் வருகைக்குப் பிறகு அவள் மீது கொள்ளும் காதலின் காரணமாக எடுக்கும் முடிவுகளால் மெல்ல மெல்ல வீழ்கிறான். பாரிஸில் ஒரு கிளப்பில் இசைஞனாகப் பணிப்புரிய வேண்டிய நிலைக்கு ஆள் ஆகிறான். பின் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு உதவுகிறான். திரைப்படத்தின் இறுதியில் இசைக்கருவிகளை மீட்டவியலா நிலையை அடைந்தவனாக அடையாளம் காட்டப்படுகிறான். ஆனால் ஸூலா, விக்டருக்கு மாறாகப் பெரும் புகழை அடையத் துவங்குகிறாள். என்றாலும்கூட, வாழ்க்கையின் மீது விக்டருக்கு இருக்கும் அதே திருப்தியின்மையே அவளிடமும் இருக்கிறது.

இத்திரைப்படத்தில் வரும் பாடல்களும் இசையும் நடனக் காட்சிகளும் பெரிதும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. அவைப் படத்துடன் ஒன்றிப் பார்ப்பதற்குப் பெரிதும் உதவுகின்றன. திரைப்படத்தைப் பேரனுபவமாக மாற்றுகின்றன. மேலும் ஒலியூட்டப்பட்டிருக்கும் விதமும் நுணுக்கமான முறையில் இருந்தது. சிகரெட் புகையை உள்ளிழுக்கும்போது வெளிப்படும் மெல்லிய ஓசை கூட, இரசிக்கும் வகையில் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. நடிப்பு, எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு என்று எல்லா வகையிலும் மிகக் கச்சிதத்தன்மை வாய்ந்த திரைப்படம் இது.

இயக்குநர் பாவெல் பௌலிகோவ்ஸ்கி, இத்திரைப்படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். மேலும் 2013ஆம் ஆண்டில் இவர் இயக்கிய ‘இடா’ எனும் கருப்பு வெள்ளை திரைப்படம் ‘சிறந்த அந்நியமொழித் திரைப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Post a Comment