CLIMAX (2018)

வீழ்ச்சியை நோக்கி நகரும் கொண்டாட்டம்



Death is an extraordinary experience.
Life is a collective impossibility.
- Gasper Noe

சில நடனக்கலைஞர்கள் இணைந்து ஒத்திகை செய்யும் ஒரு பாதுகாப்பான இடம், ஓர் அசாதாரணமான சூழலில் எப்படி முற்றிலும் பாதுகாப்பற்ற இடமாக உருமாறுகிறது என்பதே ‘க்ளைமாக்ஸ்’ திரைப்படத்தின் ஒரு வரி கதை. இத்திரைப்படத்தை இயக்குநர் Gasper Noe, மிகவும் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான மிக நீண்ட நடனக் காட்சியொன்று, மிகச் சிறந்த பின்னணி இசைத்துணுக்குகளுடன் அசாதாரணமான கோணத்தில், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த நடனக் காட்சியானது அந்த நடனக்கலைஞர்களிடமிருக்கும் உற்சாகத்தை அப்படியே அவர்களிடமிருந்து நமக்கும் எளிதில் கடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளன் ஏதோவொரு வகையில் அவர்களுடன் வெகு விரைவில் இணக்கமாகி, அந்தக் குழுவுடன் தானும் நடனமாடும் கற்பனையில் ஆழ்கிறான். அல்லது அங்கமாகிறான்.

பெரும் கொண்டாட்டமாக நிகழும் ஒத்திகையை முடித்துவிட்டு எல்லாரும் மதுவருந்த துவங்குகிறார்கள். அவர்கள் அருந்தும் மதுவில் ஏதோவொரு போதைப்பொருள் கலந்திருக்க, அது கொடுக்கும் கிறக்கத்தில் ஒவ்வொருவரும் தன்னைத் தாங்களே இழக்கத் துவங்குகின்றனர். ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் இன்னொருவரை அச்சுறுத்த ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வன்மங்களும் அழுக்குகளும் ஒவ்வொன்றாக வெளிப்படத் துவங்குகின்றன. பெரும் கொண்டாட்டமான மனநிலையுடன் துவங்கிய திரைப்படமானது இந்தப் புள்ளியிலிருந்து பெரும் வீழ்ச்சியை நோக்கி நகரத் துவங்குகிறது.

ஆரம்பப் பகுதியில் வரும் நீண்ட நடனக் காட்சியை ஒருங்கிணைத்த நடன அமைப்பாளரின் உழைப்பானது ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் நடன அசைவுகளும் தகுந்த முறையில், வெவ்வேறு வகையில் கையாளப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த காட்சியானது ஒத்திகைகள் ஏதுமற்று படப்பிடிப்பு தளத்தில்தான் சீராக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 16 தடவைகள் அந்த நடனக் காட்சி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு வகையில், ஒருங்கிணைக்கப்பட்டு சீராக்கப்பட்டிருக்கிறது. 96 நிமிடங்கள் கால அளவுடைய இத்திரைப்படம், வெறும் பதினைந்து நாட்களிலே படமாக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் இயக்குநர் Gasper Noe இத்திரைப்படத்தை உருவாக்க உந்துதலளித்த திரைப்படங்களென்று சில திரைப்படங்களைக் குறிப்பிடுகிறார். அவை, ‘The Towering Inferno’, ‘The Poseidon Adventure’ மற்றும் David Cronenberg இயக்கிய ‘Shivers’.  இந்த எல்லாத் திரைப்படங்களும் குழுவாக இணைந்து செயல்படத் துவங்கும் நபர்களின் வீழ்ச்சியை மையமிட்டதாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆற்றல்கள் நிறைந்த மனிதன், போதையின் பிடிக்குள் சிக்கும்போது பெரும் வீழ்ச்சியை அடைகிறான்.

Comments

  1. Nice write up bro.. And thanks for ur additional informations about climax..

    ReplyDelete

Post a Comment