ANDHADHUN (2018)



‘பத்லாபூர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘அந்தாதுன்’. ‘ THE PIANO TUNER’ எனும் ஃப்ரென்ச் குறும்படத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்று மிகப் பெரிய பியானோ கலைஞனாக வேண்டுமென விரும்பும் ஒரு பார்வையற்றவன், ஒரு கொலைக்குச் சாட்சியாகிறான். ஆனால் அவனால் அந்தக் கொலை குறித்த சாட்சியை யாரிடமும் தெரிவிக்க முடியாது. அவன் தெரிவிக்க முற்படும்போது ஏற்படும் குழப்பங்களைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள், அவனையும் அந்தக் கொலையைச் செய்தவர்களையும் அவர்களோடு சம்பந்தப்பட்ட நபர்களையும் எத்தகைய முடிவை நோக்கி அழைத்து செல்கிறது என்பதே இத்திரைப்படத்தின் கதை.

இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகச் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருக்கிறது. 2018ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களிலே இத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. பார்வையாளனின் முன் அனுமானங்களையெல்லாம் தொடர்ந்து தகர்த்து அடுத்த நகர்வு குறித்து யோசிக்கவிடமால் நகர்கிறது திரைக்கதை. இத்திரைப்படத்தின் முடிவானது பார்வையாளர்கள், பல்வேறு சாத்தியங்களைக் கற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தகுந்தபடி முந்தையக் காட்சிகளும் வசனங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தனக்குத் தகுந்தபடி தொகுத்துக்கொள்ளும் பார்வையாளன், தன்னளவில் ஒரு முடிவை எட்டுகிறான்.

உதாரணத்துக்கு இறுதிக்காட்சியில், தனது வழியிலிருக்கும் ‘கேன்’னைத் தனது கைத்தடியால் அவன் தட்டிவிடுகிறான். இந்தக் குறிப்பு அவனுக்குப் பார்வை தெரியும் என்கிற வாதத்தையே எனக்குள் தோற்றுவித்தது. காரணம், அவன் அதை யதேச்சையாகத் தட்டிவிட்டது போல தெரியவில்லை. அவன் பெரும் பலம்கொண்டே அதைத் தட்டிவிடுகிறான். மேலும் அவன் ஷோஃபியிடம் சொல்பவையெல்லாம் அவன் கட்டமைத்திருக்கும் கதை என்றே நான் நம்புகிறேன். மேலும் சிமியின் கண்கள் அவனுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் சிமியின் உடலுறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் டாக்டர் ஸ்வாமிக்குக் கிடைத்த பணத்திலே ஆகாஷ், வெளிநாடுக்கு வந்திருக்கிறான் என்பது எனது முடிவு.

அவனுக்குக் கண்கள் உண்மையாகவே தெரியவில்லை. கண்கள் தெரியாதபோதிலும் அவனுக்குள் இருக்கும் அவனது திறமைகளால்  அவன் தற்போதைய நிலையை அடைந்திருக்கிறான். ஷோஃபியிடம் சொல்வது அனைத்தும் உண்மை என்பது இன்னொரு முடிவு. இப்படி இன்னும் சில முடிவுகளுக்கும் திரைக்கதையில் சாத்தியங்கள் இருக்கின்றன.

எல்லாக் கதாப்பாத்திரங்களும் மிகவும் சுவாரசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளனர். மிகக் குறிப்பாக, தொடர்ந்து சந்தேகக் கண்கள் கொண்டு ஆகாஷிடம் சில்மிஷங்களிலும் பரிசோதனைகளிலும் ஈடுபடும் பக்கத்து வீட்டுச்சிறுவனின் கதாப்பாத்திரம் வெகுவாக ஈர்க்கும்படி இருந்தது. அச்சிறுவன் தன்னிடமிருக்கும் போனில் ஆகாஷை வேவு பார்த்து அவனுக்குக் கண்கள் தெரியும் என்பதை நிறுவ முயல்கிறான். அதன் மூலம் பணம் பார்க்கவும் நினைக்கிறான். இதேப் போன்றொரு சாட்சியத்தை உருவாக்க முனையும் ஆட்டோ டிரைவர், சிமியின் கண்கள் கட்டப்பட்டிருக்கும் சூழலில்கூட அவளது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்யாமல், வெறும் குரலாக மட்டுமே பதிவு செய்ய முற்படுகிறான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. தான் நடித்த பழையத் திரைப்படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் திரும்பத் திரும்பப் பார்த்தும் கேட்டும் இரசிக்கும் ‘மார்க்கெட்’ இழந்த நடிகரின் கதாப்பாத்திரம் குழந்தை மனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த திரைப்படங்களின் வசனங்களும் பாடல் வரிகளும்கூட படத்தின் கதையுடன் பயணிக்கும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நடிகர்களும் தங்களது பங்களிப்பைத் திறம்படச் செய்திருந்தாலும்கூட ஆயுஸ்மானும் தபும் தங்களது நடிப்பால் பெரிதும் ஈர்க்கின்றனர். திரைப்படத்தில் இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் பங்களிப்பு மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று. அவரது இசையும் பாடல்களும் பெரிதும் இரசிக்கும் வகையிலும் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையிலும் இருந்தன. திரைப்படத்தின் ஐந்து திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான பூஜா லதா ஸ்ருதியே படத்தொகுப்பையும் கையாண்டிருப்பதால் அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் இதுவரை இயக்கியிருக்கும் ஐந்து திரைப்படங்களில் இதுவே முதன்மையானது என்று தைரியமாக சொல்லலாம்.

‘ஒரு திரைப்படத்தை இயக்குவதற்குத் தேவையான இரண்டு விஷயங்கள் ஒரு பெண்ணும் ஒரு துப்பாக்கியும்.’ எனும் கோடார்டின் கூற்றை ஏனோ இத்திரைப்படத்துடன் தொடர்புப்படுத்த விரும்புகிறேன்.

Comments