X : PAST IS PRESENT (2015)


ஒரே கதை... ஒரே கதாநாயகன்... 11 கதா நாயகிகள்... 11 இயக்குநர்கள்... (அபினவ் சிவ் திவாரி, அனு மேனன், ப்ரீத்தம் டி குப்தா, ராஜா சென், ராஜா ஸ்ரீ ஓஜா, ஹேமந்த் கபா, சந்தீப் மோகன், கௌஷிக் முகர்ஜ்ஜி, நலன் குமாரசாமி, சுபர்ன் வர்மா, சுதீஷ் காமத்) இந்த விஷயம்தான் இந்தப் படத்தைப் பார்க்க என்னைத் தூண்டியது. அதுமட்டுமில்லாமல் படத்தின் 11 இயக்குநர்களில் ‘சூதுகவ்வும்’ நலன் குமாரசாமியும் ஒருவர். நலன் குமாரசாமி இயக்கிய பகுதியை எழுதியவர் ‘ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா. முதலில் அந்தப் பகுதியை தியாகராஜன் குமாரராஜாதான் இயக்குவதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் பகுதியை அவரால் இயக்க முடியவில்லை. பின்பே நலன் இயக்கியிருக்கிறார்.

‘கே’ எனும் சினிமா இயக்குநர், திரைப்பட விழாவொன்றில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அந்தப் பெண்ணுடனான சந்திப்புக்கும் உரையாடலுக்கும் பின் அவன், அவள் மூலமாக தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் சந்தித்து பழகிய பத்து பெண்களின் நினைவுகளை எவ்வாறு மீட்டெடுக்கிறான் என்பதே ‘எக்ஸ்’ திரைப்படத்தின் கதை. அவன் கடந்த காலத்தில் சந்தித்த அந்தப் பத்து பெண்களையும் திரைப்பட விழாவில் சந்திக்கும் அந்தப் பெண்ணையும் சேர்த்து மொத்தமாக பதினொரு பெண்களுடான அவனது கதையை பதினொரு இயக்குநர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து இயக்கி ஒன்று சேர்த்திருக்கிறார்கள். இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பம்சம்.

மொத்தம் பதினொரு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் கதைக்கூறல் முறையும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்டவை. ஒரே கதாப்பாத்திரத்தை மையமிட்டு சுழலும் திரைக்கதை, அவனது கடந்த கால வாழ்வின் சிறுசிறு பகுதிகளை முன்னும் பின்னுமாக அடுக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட, அவனது இருபது வயலிருந்து அவனது நாற்பது வயது வரைக்குமான வாழ்க்கையில், அவன் கடந்த வந்த பெண்களுடனான உறவுகளையும் அவர்களுடனான உறவுச்சிக்கல்களையும் முறிவுகளையும் சொல்லிச்  செல்கிறது. அந்தக் கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு காலக் கட்டத்திற்குப் பின்னான மாறுதல்களும் அவனது ஒவ்வொரு முடிவுகளுக்குப் பின் இருக்கும் தர்க்கங்களும் நாமே உணரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில், என்னை மிகவும் கவர்ந்த அத்தியாயம் ‘8 TO 8’. அந்தப் பகுதியை இயக்கியிருப்பவர் ப்ரீத்தம் டி.குப்தா. ஒரே ரூமில் ‘8 TO 8’ என்று இரவு பகலாக நேரத்தைப் பிரித்து வசிக்கும் ஒரு ஆண் – பெண் பற்றிய கதை. இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் ஒருவரையொருவர் கடைசி வரைக்கும் சந்திக்கவேமாட்டார்கள். ஆனால் அறையிலுள்ள ஒரே நோட்டில் கவிதைகளை எழுதி தங்கள் எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். இந்த அத்தியாயம் ஒரு வகையில், வாங்க் கர் வாய் திரைப்படத்தைப் போல இருந்தது. (அல்லது எனக்கு அப்படித் தோன்றும்படியாக இருந்தது.)

இன்னொரு அத்தியாயம் ICE MAID. அந்த அத்தியாயத்தைப் பார்க்கும்போதே நிச்சயம் அதை கௌஷிக் முகர்ஜ்ஜி (Q) தான் இயக்கியிருப்பார் என்று தோன்றியது. நான் நினைத்தபடியே அவர்தான் இயக்கியிருந்தார். இந்த அத்தியாயம் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் கே, தான் எழுதிய கதையைப் பற்றி விவாதிக்கிறான். அந்தக் கதையை எப்படி தொடர்வது என்று தெரியாமல் திணறுகிறான். அவன் சொல்லும் கதையில், அறையில் பாரு எனும் பெண்ணுடன் இருக்கிறான் கே. அப்போது அவனது அறைக்கதவு தட்டப்படுகிறது. வெளியில் இருப்பவளோ சந்திரமுகி எனும் பெண். பாருவும் சந்திரமுகியும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். இதுதான் அவன் சொல்லும் கதை. இதற்கு பிறகுத் தொடர முடியாமல் தவித்து, வேலைக்காரி பாசந்தியிடம் இந்தக் கதையை எப்படி தொடர்வது எனக் கேட்கிறான் கே. பாசந்தி ‘அவளை உள்ளே அனுமதி. அவள் உள்ளே வந்து அவனைச் சுடட்டும்..’ என்று அதைத் தொடரச் செய்ய சொல்கிறாள். இந்த அத்தியாத்தில் இடம்பெறும் அந்த மூன்று பெண்களும் ஒருவரே! இந்த அத்தியாயம் எல்லா அத்தியாயங்களிலிருந்தும் சற்றே மாறுப்பட்ட ஒன்று. காரணம், இந்த அத்தியாயம் கதைக்குள் இன்னொரு கதை என்று எழுதப்பட்டிருக்கிறது.

11 இயக்குநர்கள், வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களைக் கொண்டு இயக்கியிருந்தாலும்கூட திரைப்படத்தின் தொடர்ச்சியில் பெரியளவிலான மாற்றங்களை நம்மால் உணரவே முடியாது. ஒளிப்பதிவின் தரம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. திரைப்படத்தில நடித்திருக்கும் எல்லா நடிக, நடிகைகளும் நன்றாகவே நடித்திருக்கின்றனர். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம்,  மிகச் சிறந்த முயற்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. (ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு இலட்சம்தான் பட்ஜெட் என்று சுதீஷ் காமத் ஒரு நேர்காணலில் சொன்னதாக நினைவு)

ஒரு சுவாரசியமான திரைப்படம், இந்த X: PAST IS PRESENT.

Comments