BHAVESH JOSHI (2018)


UDAAN, LOOTERA, TRAPPED ஆகிய வெவ்வேறு வகையிலான திரைப்படங்களை இயக்கி, சினிமா ரசிகர்களால் பெரிதும் கவனம் பெற்ற விக்ரமாதித்ய மோத்வானே இயக்கியிருக்கும் நான்காவது திரைப்படம் ‘பாவேஷ் ஜோஷி’. யார் இந்த பாவேஷ் ஜோஷி? அவன் ஓர் எளிய மனிதன். நாட்டில் நிலவும் ஊழலைச் சகிக்க இயலாது ஒரு மாற்றத்தை எதிர்நோக்குபவன். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மட்டுமல்லர், அவனது பிரச்சனை. சட்டவிதிகளைத் துடைத்தெறியும் அவனைப் போன்ற சாமானியர்களும்தான். அதனால் அவன் எல்லாரிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறான். அதைச் செயல்படுத்த தன்னால் இயன்ற காரியங்களில் ஈடுப்படும், மும்பை நகரின் சூப்பர் ஹீரோ அவன்.

பாவேஷ் ஜோஷி, சிக்கந்தர் கண்ணா மற்றும் ராஜத் மூவரும் நண்பர்கள். மும்பை நகரவாசிகள். 2011ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று தங்களுக்குள் ஓர் இணக்கத்தை உண்டாக்கிக்கொண்டவர்கள். இவர்களில் பாவேஷ் ஜோஷியும் சிக்கந்தர் கண்ணாவும் இணைந்து இன்சாஃப் (நீதி) என்றொரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கின்றனர். ஒரு காகிதப் பையைத் தலையில் மாட்டிக்கொண்டு தங்களது முகம் தெரியாதபடி, மும்பை நகரில் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் சிறுசிறு நிகழ்வுகளையெல்லாம் தங்கள் பாணியில் தட்டிக்கேட்கின்றனர். மேலும் அதை வீடியோவாகப் பதிவு செய்கின்றனர். இப்படியே அவர்களது நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சிக்கந்தர் கண்ணாவும் ராஜத்தும் தங்கள் பணிகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகின்றனர். ஆனால் பாவேஷ் ஜோஷி, தனியொருவனாக தனது பணிகளைத் தொடர்ந்துக்கொண்டிருக்க ஒரு கட்டத்தில், மும்பை நகருக்குக் குடிநீர் வழங்குவதில் நிகழும் முறைக்கேடுகளைக் கண்டுப்பிடிக்கிறான். அதை நிகழ்த்துபவர்களைப் பின்தொடர்ந்த ஒரு தருணத்தில் கொல்லப்படுகிறான். பாவேஷ் ஜோஷியின் மரணத்தைத் தொடர்ந்து அவனது நண்பன் சிக்கந்தர் கண்ணா, பாவேஷ் ஜோஷியாகத்  தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நண்பன் செயல்படுத்த நினைத்த காரியத்தைக் கையிலெடுக்கிறான். அந்தக் காரியத்தில் அவன் வெற்றியடைந்தானா என்பதே மீதிக்கதை!

திரைப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் நன்றாக இருக்கின்றன. எந்தச் சூழலிலும் தனது நிலையிலிருந்து தவறாதிருக்கும் பாவேஷ் ஜோஷியின் கதாப்பாத்திரம் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. அவன் எந்நேரத்திலும் தனது நெறியிலிருந்து விலகுவதில்லை. யாருக்கும் சலுகைகள் வழங்குவதில்லை. அதனால்தான் ஓர் இரவில், சிக்னலில் நிற்காமல் செல்லும் சிக்கந்தர் மீது கோபம் கொள்கிறான். அந்தக் கோபம்தான் இருவருக்கிடையில் வாக்குவாதமாகி, கைக்கலப்பில் முடிவடைகிறது. அந்த நிகழ்வே சிக்கந்தரை ஒரு தவறான முடிவை எடுக்க வைக்கிறது. அந்தத் தவறான முடிவுதான் ஒரு வகையில், பாவேஷ் ஜோஷியின் மரணத்துக்கும் வழிவகுக்கிறது. பாவேஷ் ஜோஷியின் கதாப்பாத்திரம் படத்தின் ஆரம்பத்திலிருந்து அவன் முடிவு வரை ஒரே ஸ்திரத் தன்மையுடனே இருக்க, சிக்கந்தர் கண்ணா கதாப்பாத்திரம் அநேகத் தருணங்களில் தடுமாற்றங்கள் கொண்டதாக இருக்கிறது. பாவேஷ் ஜோஷியின் மரணத்துக்குப் பிறகே அக்கதாப்பாத்திரம் பாவேஷ் ஜோஷியைப் போல ஒரு ஸ்திரத் தன்மை அடைகிறது. இன்னும் சொல்லப்போனால் பாவேஷ் ஜோஷியாகவே மாறுகிறது. அதேப்போல ‘பாட்டேல்’ கதாப்பாத்திரம், ‘ராணா’ எனும் அமைச்சருக்கு பினாமியாக இருந்து ராணாவின் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்துகிறது. ராணாவுக்கும் பாட்டேலுக்கும் உடைந்தையாக காவல்துறையில், சுனில் ஜாதவ் இருக்கிறான். ஆரம்பத்தில் இறுக்கமான முகப்பாவங்களுடன் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்ளும் ஜாதவ், ஒரு கட்டத்தில் - சக ஊழியன் ஒருவனைப் பாட்டேல் சுட்டுக்கொன்றன் பிறகு - இலகிவிடுகிறான் என்றே தோன்றுகிறது. அதனால்தான், இறுதியில் சிக்கந்தர் கண்ணாவைச் சுடத் தலைக்குக் குறிவைப்பவன் பின் இடுப்புக்கு இறக்கிக்கொள்கிறான். ஏதோவொரு வகையில், சிக்கந்தர் கண்ணா பிழைக்க வேண்டுமென்று அவன் எதிர்பார்க்கிறான் என்று இதைப் புரிந்துக்கொள்ளலாம். பாட்டேல் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரதாப் பாத்தும் சுனில் ஜாதவ் கதாப்பாத்திரத்தில் நடித்த சின்மே மண்ட்லேக்கரரும்தான் படத்தில், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

விக்ரமாதித்ய மோத்வானேயுடன் இணைந்து அனுராக் காஸ்யப்பும் அபய் கொரானேவும் திரைக்கதை எழுதியுள்ளனர். கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான முரண் என்றில்லாமல், மும்பையில் நிகழவிருக்கும் நிகழ்வை மையப்படுத்தி நகரும் கதை என்பதால், ஒவ்வொரு சம்பவங்களாக தொடரும் திரைக்கதை அநேகத் தருணங்களில் கைக்கொடுத்தாலும், இறுதிக்காட்சியில் சற்றே பலவீனமாகத் தோற்றமளிக்கிறது. அதேப்போல, சில காட்சிகள் வேறு சில திரைப்படங்களின் காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன.

திரைப்படத்தில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய வகையில், ஃப்ரென்ச் சண்டைப்பயிற்சியாளர்களான சிறில் ராஃப்பெல்லி, செபாஸ்டின் சவாயு எனும் இருவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. எட்டு நிமிடங்களுக்கு மேல், வெவ்வேறு தளங்களில் நீளும் ‘பைக் சேஸிங்’ காட்சி அத்தனை சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் சித்தார்த் தவான், மிகச் சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இரவுகளில் நடக்கின்றன. மிகச் சிறப்பாக ஒளியைக் கையாண்டு மும்பை நகரின் சாலைகளைப் படத்தின் வேகம் குறையாத வகையில், அதேசமயம் மிகவும் அழகாக படம்பிடித்திருக்கிறார். அமித் திரிவேதியின் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்கும் வேகத்துக்கும் பலம் சேர்க்கின்றன. ஒரு சூப்பர்ஹீரோ திரைப்படத்துக்குத் தகுந்த வகையில் படத்தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளும் பைக் சேஸிங் காட்சியும் தொகுக்கப்பட்டிருக்கும் விதம் பெரிதும் கவரும்படி இருக்கின்றன. என்றாலும் ஒரு சில காட்சிகள் திரைப்படத்தின் வேகத்தைத் திசை மாற்றும்படி இருப்பது ஒரு குறை.

ஒரே மாதிரியான திரைப்படங்களுக்குள் சிக்காமல், தொடர்ந்து வெவ்வேறு வகையிலான திரைப்படங்கள் எடுக்க முயலும் விக்ரமாதித்ய மோத்வானேயின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

Comments

  1. எழுத்து நடை vera level Na ������������

    ReplyDelete

Post a Comment