THE VIOLIN PLAYER (2016)


கலை என்றால் என்ன? சொல்லளவில் ‘கலை’ எனும் சொல்லுக்குப் பொருள் காண்பதைத் தவிர்த்து ‘கலை’ என்பது என்ன என்பதை இன்னொருவருக்கு உணர்த்துவது அரிய செயலாகவே உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் ‘கலை’ எனும் சொல்லுக்கான பொருளையும் அது தரும் உணர்வையும் அவரவர் அளவில் உணர்ந்து வருகின்றனர். எது மனித மனத்தின் வெளிப்பாடாக அமைந்து நம் உணர்வுக்கும் கருத்திற்கும் இன்பம் தருகிறதோ அதைக் கலை என்று சொல்லலாமா? அப்படியெனில், ஒரு கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திவிடுவது மட்டுமே கலையாகிவிடுமா? ஒரு படைப்பு, கலையம்சம் பெறுவது எப்போது? இப்படியான கேள்விகள், எப்போதும் சில திரைப்படங்களைப் பார்க்கும்போதோ ஏதேனுமொரு கதையை வாசிக்கும்போதோ எனக்குள் எழுகின்றன. ‘THE VIOLIN PLAYER’ எனும் திரைப்படத்தைப் பார்த்து முடித்தபோதும் இந்தக் கேள்விகள் எனக்குள் எழுந்தன.

பரபரப்பான மும்பை நகர வாழ்வில், தனக்கான உரிய அங்கீகாரமும் போதிய வருமானமுமற்று தனது மனைவியுடன் வாழும் ஒரு வயலின் ப்ளேயரின் ஒரு நாள் வாழ்வும் பயணமுமே இந்தத் திரைப்படம். மிக எளிமையாக, ஒரு வரியில் கதை என்று இப்படிச் சொல்லிவிட்டேன். ஆனால் இத்திரைப்படத்தின் கதை அத்தனை எளிமையான ஒன்றல்ல. சற்றே சிக்கலானது. இந்தத் திரைப்படம் ஆரம்பமாகிய விதம், ஒரு கதைக்கான எந்த முகாந்திரமுமற்று இருப்பதைப் போல முதலில் தோன்றியது. ஆனால் இரயில் நிலையத்தில் வயலினுடன் அமர்ந்திருக்கும் வயலின் ப்ளேயரை எதிர் பிளாட்ஃபாரத்தில் நின்றிருக்கும் ஒருவன், விடாமல் பார்வையால் துரத்துவதிலிருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. நம்மை இன்னொரு தளத்துக்கு அழைத்து செல்கிறது.

எதிர்முனையிலிருந்து பார்ப்பவன் யாராக இருக்கும்? அவனுடைய நோக்கம் என்னவாக இருக்கும்? என்று வயலின் ப்ளேயரைப் போலவே நாமும் யோசித்து ஒரு விதமான பரிதவிப்புக்கு ஆள் ஆகிறோம். ஒரு கட்டத்தில், அவன் தன்னை ஓர் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் இயக்கியிருக்கும் திரைப்படத்துக்கு சோலோவாக வயலின் வாசிக்க வருகிறாயா என்று கேட்டதற்குப் பிறகும்கூட வயலின் ப்ளேயரின் மனநிலையுடன் நாம் தொடர்ந்து ஒன்றிப்போகும் வகையில், எதிர்முனையிலிருக்கும் கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு இருக்கிறது. அதற்குப் பிறகு நிகழும் நிகழ்வுகள் எல்லாம் நான் சற்றும் எதிர்பாராதவை. அந்நிகழ்வுகளையும் அது தரும் அதிர்ச்சிகளையும் வயலின் ப்ளேயரைப் போலவே நாமும் இறுதியில் ஏற்றுக்கொள்கிறோம்.

இத்திரைப்படத்தில் வயலின் ப்ளேயராக நடித்திருக்கும் ‘ரித்விக் சக்ரவர்த்தி’யின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. எந்த வகையிலும் திருப்தியடையாத ஒரு கலைஞனின் முகம் இயல்பாகவே அவருக்கு அமைந்திருக்கிறது. அதில் அவர் இன்னும் கொஞ்சம் திருப்தியின்மையை வரவழைத்து அந்தக் கதாப்பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். சோலோவாக வாசிக்கப்போகிறோம் என்ற உற்சாகத்தில், அவர் பீத்தோவனையும் மொசார்ட்டையும் கற்பனை செய்தபடி, பின்னணியில் ஒலிக்கும் இசைக்குத் தகுந்தபடித் தரும் முகப்பாவங்களே போதுமானவை இவரது நடிப்பு திறனை மதிப்பிடுவதற்கு. மேலும் அவர் வாசிக்கவுள்ள திரைப்படத்தின் ஆரம்பத்தைக் கண்டுச் சலிப்படைவதும், பின் போகப் போக அத்திரைப்படத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓர் இரகசியத்தைக் கண்டுக்கொண்ட பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றங்களையும் நடிப்பில் அவ்வளவு கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார். மர்மமான மனிதனாக அறிமுகமாகும் ‘அடில் ஹூசைன்’ பார்வையிலே ஒரு விதமான மர்ம தன்மையைக் கொடுத்தார்.

ஒரு இசைக் கலைஞன் குறித்த திரைப்படத்தில் இசைக்கு வலுவில்லாமல் இருக்குமா? அர்ணப் சக்ரவர்த்தி மற்றும் பாஸ்கர் தத்தா ஆகிய இருவரின் இசை திரைப்படத்தின் காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்தன. மிகக் குறிப்பாக, இறுதியில் திரைப்படத்துக்காக சோலோவாக வாசிக்கும்போது வரும் இசைத்துணுக்கு அபாரம். இத்திரைப்படத்தில், இசையுடன் சேர்ந்து புறச்சூழல்களை உணரும் வகையில் எல்லாக் காட்சிகளிலும் ஒலியமைப்பு நன்றாக செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தின் மிகப் பெரிய பலம், ஒளிப்பதிவு. கதைக்குத் தகுந்தபடி, மெல்ல மெல்ல ஒளிப்பதிவின் தன்மையும் இருண்மையை நோக்கி நகர்கிறது. இருளடைந்த அறைக்குள் ஒளியை நேர்த்தியாக கையாண்டு இறுதிக்காட்சிகளைப் படம் பிடித்திருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மூன்று முறை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்ற ‘அபிக் முக்கோபத்யாய்’ என்பது குறிப்பிடத்தக்கது.

‘பவ்தயான் முகர்ஜ்ஜி’யின் திரைக்கதையும் இயக்கமும், திரைப்படத்தைப் போலவே மிகவும் கச்சிதமாகவே இருந்தது. எழுபது நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் ஒரு நெடுங்கதையை வாசித்த உணர்வையே எனக்குத் தந்தது. பிகாசோ சொல்வதைப் போல ‘தினசரி வாழ்வின் அழுக்குகளையெல்லாம் கலை, முற்றிலுமாக மனதிலிருந்து நீக்குகிறது’. இத்திரைப்படம் சொல்லும் செய்தியும் அதுதான்.

Comments

  1. அண்ணா உங்களின் எழுத்துடனே ஒன்றிப் ோகிறது மனம் ணா !

    ReplyDelete

Post a Comment