THE BLUE UMBRELLA (2005)



குழந்தைகள், தாங்கள் பார்க்கும் எல்லாப் பொருட்களையும் உடைமையாக்கிக் கொள்ள ஆசைப்படுவார்கள். குழந்தைப் பருவத்தில், நாம் ஒவ்வொருவரும் நிறைய பொருட்களின் மீது ஆசை கொண்டிருப்போம். அவற்றை அடைய வேண்டித் தவியாய் தவித்திருப்போம். கிடைத்துவிட்டால் அந்தச் சந்தோஷத்தை அளவில்லாமல் கொண்டாடுவோம். கிடைக்காவிட்டால், அது கிடைக்கும்வரை அடம் பிடிப்போம். அதை அடைவதற்கான எல்லா வழிகளையும் ஆராய்வோம். அதைக் குறித்தே நிறைய யோசிப்போம். அநேக சமயங்களில் நாம் ஆசைப்படும் பொருளைத் திருடியாவது அடைந்துவிட வேண்டுமென்று எண்ணி, அதற்கான முயற்சிகளில்கூட ஈடுப்படுவோம். இப்படியான அனுபவங்கள் அநேகமாக எல்லாருக்கும் இருக்குமென்றே நம்புகிறேன். உண்மையில் இப்படியான சின்னஞ்சிறு ஆசைகள், அநேக நபர்களுக்கு குழந்தைப் பருவங்களுடன் முடிந்துப்போவதில்லை. அவை முதுமை வரையிலும்கூட தொடரும்.

‘ரஷ்கின் பாண்ட்’ எழுதிய ‘THE BLUE UMBRELLA’ எனும் குறுநாவலைத் தழுவி அதேப் பெயரில் 2005ஆம் ஆண்டு ‘விஷால் பரத்வாஜ்’ இயக்கிய திரைப்படத்தில் ஒரு சிறுமியிடமிருந்து அவளது நீல வண்ண குடையை அபகரிக்க நினைக்கும் ஒரு முதியவனின் குழந்தை மனம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல. குழந்தைகளுக்கு எப்போதும் அறிவுரைகளை வழங்கியபடியே இருக்கும் பெரியவர்களுக்கும் பொதுவான திரைப்படம்.

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள ஒரு மலையடிவார கிராமம். சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்துப்போகும் இடம். அந்தக் கிராமத்தில் வசிக்கும் பினியா எனும் சிறுமிக்கு ஜப்பான் நாட்டுப் பயணி ஒருத்தியிடமிருந்து ஒரு நீல வண்ண குடை கிடைக்கிறது. அவள் அந்தக் குடையைக் கிராம மக்கள் எல்லோரிடமும் காட்டி சந்தோஷம் கொள்கிறாள். அதனுடனே எங்கேயும் எப்போதும் அலைகிறாள்.

அதே ஊரில் தேநீர் கடை வைத்திருக்கிறார் நந்து. அவருக்கு அந்தக் குடையைப் பார்த்ததிலிருந்து அதன் மீது ஆசை சுரக்கிறது. அதை அடைய பினியாவிடம் நிறைய போராடுகிறார். ஆனால் அவள் அதைக் கொடுக்க மறுக்கிறாள். தந்திரமாக அதைக் கைப்பற்ற நினைக்கிறார். அவரைப் போல அந்தக் கிராமத்தில் எல்லாருக்கும் அந்தக் குடையின் மீது ஆசை இருக்கிறது. இதற்கிடையில் பினியாவின் குடை, களவு போகிறது. அந்தக் குடையைத் திருடியவர் யார்? மீண்டும் அந்தக் குடை பினியாவுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுடன் திரைப்படம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

நந்து கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பங்கஜ் கபூர்’ திரைப்படம் முழுமைக்கும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவரது உடல்மொழியும் அவர் பேசுகிற விதமும் அத்தனை சிறப்பாக அந்தக் கதாப்பாத்திரத்துக்குப் பொருந்தும் வகையிலும் நியாயம் சேர்க்கும் வகையிலும் இருந்தன. படத்தின் எதிர்மறையான கதாப்பாத்திரம் என்றாலும்கூட, அந்தக் கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு மிகவும் கவரும்படி இருந்தது. முதுமையடைந்தாலும்கூட அவருக்குள் ஒரு குழந்தைமை நீடித்திருக்கிறது. அது அவரது ஒவ்வொரு செயல்களிலும் பிரதிபலிக்கிறது. நந்துவின் தேநீர் விடுதியில் வேலை செய்யும் ராஜாராம், குடையைத் திருடிக்கொண்டு வந்துவிடவா என்று கேட்கும்போது அவனை அறிவுறுத்தும் வகையில் பேசும் நந்து ஒரு கட்டத்தில், குடையின் மீதான ஆசையில் தனது நெறியிலிருந்து தவறிவிடுகிறார். திரைப்படத்தின் மிக முக்கியமான விஷயமே இதுதான்.

அநேக தருணங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கும் நாம் சந்தர்ப்ப சூழல்களால் நம் நெறியிலிருந்து தவறிவிடுகிறோம். இதைக் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சேர்த்தே உணர்த்தும் வகையில் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. இப்படியான ஒரு திரைப்படத்தை இயக்கிய விஷால் பரத்வாஜின் முயற்சி பாராட்டுகளுக்குரியது. இத்திரைப்படம் ‘சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்’ எனும் பிரிவில் தேசிய விருதை வென்றிருக்கிறது.

Comments