GARBAGE (2018)


பெண்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் பெருகுகின்றன. அவை எல்லாத் தளங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. சமூக ஊடகங்களின் வளர்ச்சி பெருகியிருக்கும் இன்றையச் சூழலில், பெண்கள் மீதான வன்முறை சமூக ஊடகங்களின் வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. அவர்களது உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. மேலும் பெண்கள் மீதான வன்முறைகள் அடக்குமுறைகளுடன் சேர்ந்து இன்றையச் சூழலின் அரசியல் நிகழ்வுகளும் அந்நிகழ்வுகள் சார்ந்து நிகழ்த்தப்படும் விவாதங்களும்கூட ஏதேனுமொரு வகையில், வன்முறையைத் தூண்டும்படியாக இருக்கின்றன. அவை ஒவ்வொருவரையும் ஏதேனுமொரு வகையில் பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக வலதுசாரிகள் நிகழ்த்தும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் பெரும் சர்ச்சைகளை நாட்டில் ஏற்படுத்துக்கின்றன. வலதுசாரிகளுக்கு எதிரான கருத்துக்களும், அதைப் பேசுபவர்களின் உரிமைகளும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. வலதுசாரி சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியும் எழுதியும் அவற்றை வெவ்வேறு தளங்களில் பரப்பியும் வரும் சான்றோர்கள் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆள் ஆகின்றனர். சிலர் கொல்லப்படவும் செய்கின்றனர். இந்தியா முழுவதும் இன்றையச் சூழல் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான சூழலை மையப்படுத்தித்தான் கௌஷிக் முகர்ஜ்ஜி ( DIRECTOR Q), ‘GARBAGE’ எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

பனீஸ்வர், ஒரு டாக்ஸி ஓட்டுநர். கோவாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளே அவனது வாடிக்கையாளர்கள். அவன் உள்ளூரிலுள்ள சச்சிதானந்த மஹாராஜா (பாபா) எனும் சாமியாரின் மீது பெரும் பக்தியும் மரியாதையும் வைத்திருக்கிறான். மேலும் அவர் சார்ந்த இயக்கத்தில் ஓர் அங்கமாக திகழ்கிறான். சமூக ஊடகங்களில், சச்சிதானந்த சுவாமிகளின் போதனைகளைப் பார்ப்பதும் அவரது இயக்கம் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து பகிர்வதும் அவனது அன்றாட நடவடிக்கை. மேலும் அவனுக்கு டெஸ்டிகுலர் கேன்சர் இருக்கிறது. அவன் ஆங்கில மருத்துவத்தை நம்பாமல், பாபாவையே நம்புகிறான். பாபாவால் மட்டுமே தன்னைக் காப்பாற்ற முடியும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான்.

பனீஸ்வருடன் அவனது அறையில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறாள். அவளால் வீட்டைவிட்டு எங்கேயும் போக முடியாது. அவளால் பேசவும் முடியாது. அவள் பனீஸ்வரின் அடிமையாக, அவனுக்கு சேவகம் செய்யும் ஒருத்தியாகவே அவனுடன் இருக்கிறாள். அவள் முழுமையாக பனீஸ்வருக்குக் கட்டுப்பட்டவளாகவும் பயந்தவளாகவும் இருக்கிறாள்.

ராமி, மருத்துவக் கல்லூரி மாணவி. அவளுக்கும் அவனது காதலனுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட, அவன் அவனுடனும் இன்னொரு நண்பனுடனும் ராமி உறவுக்கொண்ட வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறான், அதனால் பாதிக்கப்படும் அவள், தனது குடும்பம் மற்றும் நகரத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு விரக்தி மிகுந்த மனநிலையுடன் கோவாவுக்கு வருகிறாள். அவளை விமான நிலையத்திலிருந்து, அவளது தோழிக்குச் சொந்தமான வீட்டுக்கு அழைத்து செல்கிறான் பனீஸ்வர். அவளைப் பற்றி அறிந்துக்கொள்பவன், அவள் மீது இச்சைக்கொள்ள துவங்குகிறான். இந்தப் புள்ளியிலிருந்து இத்திரைப்பட்த்தின் கதை துவங்குகிறது.

இயக்குநர் கௌஷிக் முகர்ஜ்ஜி, இத்திரைப்படத்தின் மூலம் பல்வேறு அடுக்குகளில் தனது அரசியல் பார்வையைப் பதிவுச் செய்திருக்கிறார். கண்மூடித்தனமாக சாமியாரை நம்பும் பனீஸ்வர் எந்தக் கேள்விகளுமற்று அவரை எப்போதும் ஏற்கிறான். அவர் எது சொன்னாலும் அதை நம்புகிறான். அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறான். அதனால்தான் சாமியார், அவரது ஆண்குறியைச் சுவைக்கச் சொல்லும்போது எந்தக் கேள்வியுமற்று அதைச் செய்கிறான். ஒரு வகையில, இந்தக் காட்சிதான் திரைப்படத்தின் மிகவும் வலுவான - அதேசமயம் கேலிக்குரிய - காட்சி. அதேப்போல், காதலனால் பாதிக்கப்படும் ராமி, பெரும் மனச்சிக்கலுக்குள் உழலுகிறாள். தனது பாதுகாப்பு குறித்து நிறைய யோசிக்கிறாள். தன்னைப் பார்க்கும் ஒவ்வொரு ஆண்களின் மீதும் கோபம் கொள்கிறாள். அதன் பாதிப்பால் அவளுக்குள் வன்முறை கட்டுப்பாடற்று பெருகிறது. அந்தக் கட்டுப்பாடற்ற வன்முறை எண்ணம்தான், அவளைப் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்த நினைக்கும் நபர்களின் மீதான வன்மமாக மாறி அவர்களைத் துன்புறுத்துகிறது. அவள் பனீஸ்வரை வதைப்பதற்கும் அதுவே காரணம். முதலில் தன்னைத் தானே கூண்டுக்குள் அடைத்துக்கொள்ளும் ராமி, அதிலிருந்து வெளியேறி இறுதியில் அதற்குள் பனீஸ்வரை அடைத்து துன்புறுத்தும் காட்சி குறியீட்டுத்தன்மை வாய்ந்தது. பனீஸ்வர் எப்படி ஓர் அறைக்குள் அடைத்து வைத்து நாணம் எனும் பெண்ணை வதைக்கிறானோ கிட்டத்தட்ட அதேப்போலவே அவன் ராமியால் வதைக்கப்படுகிறான்.

இயக்குநர், தான் பேச நினைத்த அரசியலைத் தனக்குப் பிடித்த வகையில், மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். கதையில் திடுக்கிடும் திருப்பங்கள் திணிக்கப்படவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அரசியலும் கதாப்பாத்திரங்களின் உளவியல் ரீதியான அணுகல்களும் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. அதிர்ச்சியூட்டும் இறுதிக்காட்சிக்குப் பின்னான கவிதையின் காட்சி வடிவம்தான் இந்தத் திரைப்படம்.

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் என்ன மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த மாதிரியான அரசியல் திரைப்படங்கள் இன்றையச் சூழலுக்கு மிகவும் தேவை என்று தோன்றுகிறது.

Comments