WONDER WHEEL (2017)




எப்போதும் வூடி ஆலன் மீதான ஆச்சரியம் எனக்குக் குறைவதே இல்லை. 82 வயதாகியும் ஓய்வில்லாமல் தொடர்ந்து இன்னும் இயங்கிக்கொண்டே இருக்கிறார். அவரது எழுத்தாற்றலும் குறைந்தபாடில்லை. தனது திரைக்கதைகள் மூலம் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஓர் இயக்குநராக தனது ஐம்பதாவது திரைப்படத்தை நோக்கிய பயணத்தில் உள்ளார். Wonder Wheel அவரது இயக்கத்தில் அவரது பாணியில் சற்றும் மாறுதல் இல்லாமல், அவரது 82வது பிறந்த நாளில் வெளியாகியிருக்கும் திரைப்படம்.

1950களில் கோனி ஐலாண்டில் நடக்கிறது கதை. மிக்கி ரூபன் எனும் லைஃப் கார்ட் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு கதையைத் துவக்குகிறான். அவன் கதையைத் துவங்குவதுகூட ஒரு வகையில் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையிலேயே இருக்கிறது. காரணம், அவனொரு நாடக ஆசிரியனாக விரும்பவன். அதுமட்டுமில்லாமல், கதையில் நிகழவுள்ள எல்லாக் கதாப்பாத்திரங்களின் மன மாறுதல்களுக்கும் காரணமாகப் போகிறனவனும் அவனே. அவனுக்கு ஜின்னி எனும் பெண்ணின் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவள் இவனைக் காட்டிலும் வயதில் மூத்தவள். இன்னும் சொல்லப்போனால், திருமணமானவள். ஹம்ட்டி எனும் இரண்டாம் கணவனும் முதல் கணவனுக்குப் பிறந்த ரிச்சி எனும் மகனும் அவளுக்கு உள்ளனர். ஒரு ரெஸ்டாரண்டில் பணிப்பெண்ணாக வேலைப்பார்க்கும் அவளுக்கு வாழ்க்கை திருப்தி இல்லாமலே நகர்கிறது. நிறைய மன அழுத்தங்கள். தான் வாழும் இருப்பிடத்தில் நிலவும் இரைச்சலும் கூட அவளது மன அழுத்தத்துக்கும் திருப்தியில்லா வாழ்வுக்கும் காரணமாக உள்ளது.

இப்படியான வாழ்க்கைக்கு மத்தியில், ஹம்ட்டியின் மகள் கரோலினா (முதல் மனைவிக்குப் பிறந்தவள்) ஒரு பிரச்சனையுடன் அவனைத் தேடி வந்துவிடுகிறாள். அவளுக்கு அதைத் தவிர்த்து வேறு வழியும் இல்லை. மிகவும் இளம் வயதிலேயே ஒரு கேங்க்ஸ்டரைத் திருமணம் செய்துக்கொண்ட அவள், அவனைப் பற்றிய தகவல்களைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பதில் போலீஸ்க்குத் தெரியப்படுத்துகிறாள். அதனால் ஏற்படப்போகும் பிரச்சனைகளைச் சமாளிக்க வழியற்று அவனது கணவன்-போலீஸ் என இரண்டு தரப்புக்கும் தெரியாமல், தந்தையைத் தேடி வந்துவிடுகிறாள். ஹம்ட்டி, முதலில் அவள் மீது மிகுந்த கோபம் காட்டுகிறான். கடைசியில் அவள் தரப்பை ஏற்றுக்கொள்கிறான். ஜின்னி அவளால் தனக்கும் மகனுக்கும் எந்த வகையிலாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறாள். அவளுக்கு இன்னுமொரு பிரச்சனையாகிறது இது. இதற்கிடையில் ஜின்னிக்கு மிக்கியுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஜின்னி மூலமாக கரோலினாவுக்கும் மிக்கியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்குள் உறவிச்சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

ஜின்னி கதாப்பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில், மிகவும் கச்சிதமான நடிப்பை வழங்கி, நம்மை பெரிதும் ஈர்க்கிறார் கேட் வின்ஸ்லெட். மிக்கியுடனான உறவை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் சமயத்தில், அவ்வுறவில் பிடிப்பு தளர்ந்து அவனுக்குள் கரோலினா புக ஆரம்பிப்பதை உணர்வதைத் தொடர்ந்து ஜின்னிக்குள் ஏற்படும் மாற்றங்களை அத்தனைக் கச்சிதமான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் மிக்கி, கரோலினா இருவரிடமும் அவர்களுக்குள்ளான உறவைக் குறித்த சந்தேகங்களைக் கேட்டபடியே இருக்கிறாள். இருவரிடமும் ஒவ்வொரு மாதிரி தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள்.

ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் யாரேனும் ஒருவரிடத்தில் தங்களை ஒப்புக்கொடுத்தபடியே இருக்கின்றன. சூழலுக்குத் தகுந்தபடி தங்களைத் தாங்களே தகவமைத்தும் கொள்கின்றன. ஜின்னி முதல் கணவனுடனான வாழ்க்கையில் நேர்மையில்லாத காரணத்தால்தான் அவளது முதல் கணவன் அவளிடமிருந்து விலகிச்செல்கிறான் அதே துரோகத்தையே ஜின்னி இப்போது வேறொரு சந்தர்ப்பத்தில் ஹம்ட்டிக்கும் செய்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஹம்ட்டியிடமிருந்து ரிச்சி திருடுவதைக் கண்டிக்கும் ஜின்னியேதான் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஹம்ட்டியிடமிருந்து மிக்கிக்கு வாட்ச்சைப் பரிசளிக்க தேவையான பணத்தையும் திருடுகிறாள். மிக்கி, ஜின்னியைத் திருமணம் செய்துக்கொண்டு வாழ விரும்பியவனாக தெரியவில்லை. ஜின்னி, அவனிடம் தான் திருமணமானவள் என்றும் தனக்கு ரிச்சி என்றொரு மகன் இருப்பதையும் தனது நிஜ வயதையும் சொல்லும் சமயத்தில் அவன், திருமணமானப் பெண்ணைக் கவர்ச்சிகரமானவளாக எதிர்கொள்வது தனக்கொன்றும் புதிதான விஷயமில்லை என்பது மாதிரியான பதிலைச் சொல்வதிலிருந்தும் உணரலாம்.  மிக்கியைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் கரோலினா, தன்னைப் புதிதாக கண்டுக்கொள்கிறாள். அவளுக்கும் அவன் மீது இயல்பாக ஈர்ப்பு உண்டாகிறது. அதைக் குறித்து ஜின்னியிடம் அவள் கருத்துகள் கேட்கிறாள். ஜின்னி, கரோலினா மிக்கியைப் பற்றி பேசும் ஒவ்வொரு முறையும் அவளிடம் கடுமை காட்டுகிறாள். இப்படியாக, ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் உளவியல் சார்ந்தும் உணர்வுகள் சார்ந்தும் பயணிக்கிறது இத்திரைப்படம். கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை மட்டுமே பிரதிபலித்து பெரிய சுவாரசியங்கள் ஏதுமற்று ஒரே சீராக நகரும் திரைக்கதை தொய்வாகவே இருக்கிறது.

படத்தில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய இரண்டு விஷயங்கள் நடிகர்களின் நடிப்பும் ஒளிப்பதிவுமே! கேட் வின்ஸ்லெட்டின் ஒட்டுமொத்த திரையனுபவ நடிப்பையும் மதிப்பிட இத்திரைப்படமும் பெரிதும் உதவும். விட்டோரியோ ஸ்டொராரோவின் ஒளிப்பதிவில் எல்லாக் காட்சிகளும் மிளிர்கின்றன. ஒவ்வொரு காட்சிகளுக்கும் தகுந்தபடி, அவர் லைட்டிங்கில் நிறங்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் பெரிதும் கவர்கிறது. அனேக தருணங்களில் அவர் நிகழ்த்தும் ஒரே காட்சியிலான நிற மாற்றங்கள், கதாப்பாத்திரங்களின் மன மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது.

Comments