THREE BILLBOARDS OUTSIDE EBBING MISSOURI (2017)




In Bruges, Seven Psychopaths ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து Martin McDonagh இயக்கியிருக்கும் திரைப்படம் ‘Three Billboards Outside Ebbing Missouri’. சிறந்த நாடக ஆசிரியராக அறியப்படும் மார்டின் மெக்டொனாக் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி இத்திரைப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். நுணுக்கமான முறையில் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கற்பழித்துக் கொள்ளப்பட்ட மகளுக்கான நீதியை வேண்டிப் போராடும் ஒரு தாயின் கதை என்று இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் எளிதாக கூறிவிடலாம். ஆனால் அக்கதை சொல்லப்பட்டுள்ள விதமும் திரைக்கதையும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் அணுகப்பட்டிருக்கும் விதமும் இத்திரைப்படத்தின் தரத்தை உயர்த்தும்படி இருக்கின்றன. வெகுசில நிமிடங்களிலே கதைக்குள் நுழைந்துவிடும்படியாக அமைப்பட்டிருக்கும் அனேக திரைக்கதைகளுள் இதுவும் ஒன்று.

சாலையோரத்திலிருக்கும் சிதைந்துப்போன மூன்று விளம்பரப் பலகைகளின் காட்சித்துண்டுகளுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். அவை வெகுகாலமாக விளம்பரங்கள் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றன என்பதை வெகுசில காட்சித்துண்டுகளிலே நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அதைத் தொடர்ந்து அச்சாலையின் வழியே ஒரு கார் நுழைகிறது. காருக்குளிருக்கும் மில்ரெட், அந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே வருகிறாள். அவள் ஏதோவொரு யோசனை வந்தவள் போல காரை நிறுத்தி உள்ளிருந்தப்படியே அந்தப் பலகைகளைப் பார்க்கிறாள். ஏதோவொரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல புறப்படுகிறாள். விளம்பரம் கொடுப்பதற்காக விளம்பர நிறுவனத்தை அடைகிறாள். ஒரு வருடத்துக்கான விளம்பர உரிமைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு, அந்தப் பலகைகளில் எழுத வேண்டிய வாசகங்களை நிறுவன உரிமையாளனிடம் தருகிறாள். அவளைப் பற்றிய தகவல்களை விசாரிக்கும் அவன், அவள் கொடுத்த வாசகங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். அவள் சொல்லாமலேயே அவள் யாரென எளிதில் கண்டுக்கொள்கிறான். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்களான நமக்கு அந்த வாசகங்கள் என்னவாக இருக்குமென்ற எதிர்ப்பார்ப்பு கூட ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து ஈஸ்டர் தினத்தில் அந்த விளம்பர வாசகங்களை அந்நிறுவன ஊழியர்கள் பலகைகளில் விளம்பரப்படுத்தும்போது அவ்வழியாக டிக்ஸன் எனும் போலீஸ் அதிகாரி, ஒவ்வொரு விளம்பரப் பலகைகளையும் பார்வையிட்டபடியே வருகிறான். அவனைத் தொடர்ந்தபடியே அவனைப் போலவே நாமும் அந்த வாசகங்களைப் பார்வையிடுகிறோம். அவன் அதிர்ந்துப்போய் தன்னுடைய மேலதிகாரியான வில்லியம்க்குத் தகவல் தெரிவிக்கிறான். நாமும் அவ்வாசகங்களால் அதிர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறோம். விளம்பரப் பலகைகள் தரும் கேள்விகளுடன் கதைக்குள் நுழைய ஆரம்பிக்கிறோம்.

திரைப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும். குடும்ப வாழ்வின் சிக்கல்கள், காவல்துறைக்கும் மக்களுக்குமான இடைவெளி, காவல்துறை நண்பர்களுக்குள் நிலவும் இணக்கம் என்று மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகப்பட்டுள்ளது இத்திரைப்படம். டிக்ஸனுக்கும் அவனது தாய்க்குமான பிணைப்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் வெகுசில மாதங்களுக்குள் மரணத்தை அடையவிருக்கும் வில்லியம், பணத்துக்காக தனது மகளின் கற்பழிப்பு வழக்கை மூடிவைக்கிறார் என்று குற்றம் சாட்டுவதில் எந்த நியாமும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்கூட, தன் மகளின் இறப்புக்கான நீதியை வேண்டி நிற்கும் மில்ரெட்க்கு வேறெந்த வழியும் இல்லை. அதனால்தான் விளம்பரப் பலகைகள் குறித்து வருத்தமடைந்து அவளுக்கு அறிவுரை வழங்கும் பல் மருத்துவர், பாதிரியார், அவளது முன்னாள் கணவன், மகன் என்று அவளுக்கு நெருக்கமான எல்லோரிடமும் ஆவேசமடைகிறாள். மில்ரெட்டைப் புரிந்துக்கொள்ளும் வில்லியம் தன்னால் இயன்ற அளவுக்குத் தன் தரப்பு நியாயங்களை அவளுக்கு எடுத்துரைக்கிறவே செய்கிறான். மேலும் அவன் அவளிடம் கனிவாகவே நடந்துக்கொள்கிறான். அதனால்தான் விளம்பரப் பலகைகளுக்கான ஒரு மாத வாடகையை மில்ரெடுக்குத் தெரியமாலேயே அவனால் செலுத்த முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், குற்றவாளியைக் கண்டுப்பிடிக்க முடியாத வருத்தம் அவனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. வில்லியம்க்கு நேர்மாறாக இருக்கிறான் டிக்ஸன். ஆரம்பத்திலிருந்தே எல்லோரிடமும் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்பவனாக இருக்கிறான். அதனால்தான் விளம்பர நிறுவன உரிமையாளனிடம், ஆரம்பத்திலிருந்து இருக்கும் பிணக்கு வில்லியமின் தற்கொலைக்குப் பிறகு இன்னும் அதிகமாகிறது. மிகவும் வெறித்தனத்துடன் வெல்பியைத் தாக்கி மாடியிலிருந்து தள்ளிவிடுகிறான். விளம்பரப் பலகைகளுக்கும் தீ வைக்கிறான். அவனால் எந்தவொரு காரியத்தையும் அப்படித்தான் அணுகமுடியும். திரைப்படத்தின் இறுதிக்கட்டத்தில், வில்லியம்ஸின் இறப்புக்குப் பின்பாக ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை. மிகக் குறிப்பாக டிக்ஸன், வில்லியம்ஸின் கடிதத்தைப் படித்த பிறகு வேறொருவன் ஆகிறான்.

டிக்ஸன் வெல்பியை வெறித்தனத்துடன் அடித்துவிட்டு, போலீஸ் நிலையத்துக்குள் நுழையும்போது வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் கறுப்பின ஆள் முதலில் எந்த முக்கியத்துவமும் அற்றவராக தெரிவார். டிக்ஸன் உட்பட நமக்கும். ஆனால் அந்தக் கதாப்பாத்திரம் ஒரு வகையில், டிக்ஸனின் காவல் பணிக்குப் பெரும் திருப்பத்தைத் தரப் போகிறது என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டோம். அதேப்போல தன்னால் அடித்து நொறுக்கப்பட்ட வெல்பி இருக்கும் அதே அறையில், காவல் நிலைய தீவிபத்தில் சிக்கிக்கொள்ளும் டிக்ஸன் அனுமதிக்கப்படுவதும் டிக்ஸனை அடையாளம் கண்டுக்கொள்ளாத வெல்பி அவனிடம் அத்தனை கனிவாக நடந்துக்கொள்வதும் திரைப்படத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இதே மாதிரியான இன்னொரு தருணம்தான், வில்லியம் இரத்த வாந்தி எடுக்கும்போது அவனிடம் மில்ரெட் காட்டும் கருணையும்! கற்பழித்து கொல்லப்பட்ட ஏஞ்சலா பற்றிய காட்சி ஒன்றே ஒன்றுதான். அது அவளுக்கும் மில்ரெடுக்குமான உறவைப் பற்றிய பார்வையைத் தரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அவள் எப்படி கொல்லப்பட்டாள் என்பது மாதிரியான காட்சிகளுக்கு இடமில்லாமலே நகர்கிறது திரைக்கதை. திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று.

திரைப்படத்தின் இசை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. மில்ரெட், தன்னளவில் எழுச்சியுறும் சமயங்களில் வரும் பின்னணி இசையும் டிக்ஸன் வெல்பியை வெறித்தனமாக தாக்கும்போது வரும் பாடலும் அத்தருணங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன.

திரைப்படத்தில் எல்லா நடிகர்களும் அத்தனைக் கச்சிதமாக தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மகளை இழந்து வாடும் தாயாக, படம் முழுக்க முகத்தில் அத்தனைத் துயரத்தை ஏற்றி நடித்திருக்கிறார் ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட். டிக்ஸனாக நடித்திருக்கும் சாம் ராக்வெல்லின் உடல்மொழி, படம் முழுக்க அத்தனைத் தனித்துவமாக இருக்கிறது. வூடி ஹாரல்சனும் தனது பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

Comments