THE BEGUILED (2017)




1966ஆம் ஆண்டில் THOMAS P. CULLINAN என்பவர் எழுதிய THE BEGUILED எனும் நாவலைத் தழுவி, 1971ஆம் ஆண்டில் CLINT EASTWOOD நடிப்பில் DON SIEGEL இயக்கிய திரைப்படத்தின் திரைக்கதையையும் நாவலையும் அடிப்படையாக வைத்து புதிதாக திரைக்கதை அமைத்து படத்தை மீளுருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் SOFIA COPPOLA. ஏன் இந்தப் படத்தை அவர் மீளுருவாக்கம் செய்ய நினைத்தார்? அல்லது மீளுருவாக்கம் செய்யவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகள் இங்கு தவிர்க்க முடியாதவை. அதற்கான பதில் எளிமையானது. 1971ஆம் ஆண்டில் வெளியான அந்தப் படம், ஓர் ஆண் நாவலாசிரியரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி ஓர் ஆண் இயக்குநரால், போரில் காயமடைந்து தவிக்கும் ஓர் போர்வீரனை (ஆணை) மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளியில்தான் சோஃபியா மாறுப்பட்டு, அந்தக் கதையைப் பெண்களை மையப்படுத்தி அவர்களின் உளவியலிலிருந்து மீளுருவாக்கம் செய்வதற்கான தூண்டுதலைப் பெற்றிருக்கிறார் எனலாம்.

சில நுணுக்கமான விஷயங்களைக் கையாண்டு, படத்தின் துவக்க காட்சியிலேயே அழுத்தமாக சில விஷயங்களைப் புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர். கதை 1864ஆம் ஆண்டில், VIRGINIA பகுதியில் நடக்கிறது. 12 வயதுடைய ஏமி, கையிலொரு கூடையுடன் காளான்களைச் சேகரிக்க ஒரு வனப்பகுதிக்குள் நடக்கிறாள். பின்னணியில், அந்த வனத்திலுள்ள பூச்சிகளின் சத்தங்களுக்கு மத்தியிலும் அருகாமையில் வெடிக்கும் வெடிச்சத்தங்களுக்கு மத்தியிலும், அவள் ஏதோவொரு பாடலை ‘ஹம்மிங்’ செய்தபடி மிகவும் இயல்பாக, எந்தவித பயமும் அற்றவளாக தனியாக நடந்து செல்கிறாள். இதன் மூலம் அந்தப் போர்ச்சூழல் அவளுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதையும் போர்ச்சூழல் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதன் காரணமாகவே அவள் பயமில்லாமல் வெளியில் திரிகிறாள் என்பதையும் நமக்குச் சொல்லிவிடுகிறார் இயக்குநர். அப்படி அவள் காளான் சேகரிக்க சென்ற இடத்தில், எதிர்பாராத விதமாக காயமடைந்து ஒரு மரத்துக்குக் கீழாக வீழ்ந்து கிடக்கும் ‘யான்கீ’ ஜான் மெக்பர்னியைப் பார்த்து பதற்றமடைகிறாள். காரணம், அவன் எதிரணி போர் வீரன். இருப்பினும் அவள் மனிதாபிமானத்தின் அடிப்படையில், அவனுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக தாங்கள் தங்கியிருக்கும் பள்ளியை நோக்கி தோள் சாய்த்து அழைத்துச் செல்கிறாள். அந்தப் பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியை (மார்த்தா), ஓர் ஆசிரியை (எட்வினா) மற்றும் ஏமியுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பெண்கள் தங்கியிருக்கின்றனர். (1971ஆம் ஆண்டில் வெளியான படத்தில், இவர்களுடன் சேர்ந்து கறுப்பின பணிப்பெண்ணும் இருப்பாள். அந்தக் கதாப்பாத்திரம் இந்தப் படத்தில் இல்லை.) ஏமியின் செயலை எல்லாரும் கண்டித்தாலும், காயம்பட்ட அந்தப் போர் வீரனை ஓர் அறையில் கிடத்தி தங்கவைத்து அவனுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். இந்தப் புள்ளியிலிருந்து கதை இன்னொரு பரிணாமத்திற்கு நகர்கிறது. ஒவ்வொரு பெண்களுக்கும் அவனுக்குமான உறவுச்சிக்கல்களும் மனச்சிக்கல்களுமாக நகர்கிறது கதை.

ஏமிக்கு அவன் ஒரு நெருங்கிய நண்பனைப் போல தெரிகிறான். அதனால் அவள் அவனுடன் பறவைகள், இயற்கை என்று உரையாட விரும்புகிறாள். அவனைக் கண்டெடுத்து காப்பாற்ற முன்வந்தவள் அவள்தான் என்பதால் அவனும் அவளை அவ்வாறாகவே கருதுகிறான். ஓரிடத்தில், இந்தப் பள்ளியிலேயே ‘நான் உன்னை மட்டும்தான் என்னுடைய நெருங்கிய தோழியாக நினைக்கிறேன்’ என்றும் குறிப்பிடுகிறான். மார்த்தாவுக்கு அவன் ஒரு காயம்பட்ட போர்வீரனென்பதால் அவன் இப்போதைக்குச் சிகிச்சை அளிக்கபட வேண்டியன், அதை மீறி அவனுடன் எந்த நட்பும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லையென்ற எண்ணம் அவளுக்கு. அதேசமயம் அவன் நம்பிக்கையுள்ள மனிதனாகவும் தோன்றுகிறான். அதனால்தான் மற்ற எல்லாப் பெண்களையும் வேலை செய்ய சொல்லி ஒவ்வொருவருக்கும் அவள் வேலையை ஏவுவதுபோல, இவனுக்கும் தோட்ட வேலைகளை ஒதுக்கிறாள். திருமணம் செய்ய வேண்டிய வயதில் இருக்கும் எட்வினாவின் மனசில் அவன் ஒரு வகையில் சலனத்தை ஏற்படுத்துகிறான். பதினேழு வயது நிரம்பிய அலிசியாவுக்கு, அவன் வீரியமிக்க ஓர் ஆணாக தெரிகிறான். (சல்லாபிக்க தோதான ஓர் ஆண்) அதனால்தான் அவள், ஜெபத்துக்கு மத்தியில், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தனியாக வந்து அவனுக்கு முத்தம் தந்துவிட்டு ஓடுகிறாள். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவனுடன் உடலுறவு கொள்ளவும் முன்வருகிறாள். இப்படியாக ஒவ்வொருவரும் அவனுடன் ஏதோவொரு வகையில் தன்னை இழக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவனுடனான ஒரு தருணத்திற்காக காத்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

ஜான் மெக்பர்னி, அலிசியாவுடன் கட்டிலைப் பகிர்வதை எட்வினா பார்த்துவிடுவதிலிருந்து எல்லாமும் மாறுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதாப்பாத்திரங்களும் தன்னளவில் சிதைந்துப்போகின்றன. உருமாறுகின்றன. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கனிவாக நடந்துக்கொண்ட மெக்பர்னி, தனது காலை இழப்பதிலிருந்து மிகவும் மோசமாக நடந்துக்கொள்கிறான். மார்த்தா, அவன் மீதான நம்பிக்கைகளை முற்றாக இழக்கிறாள். எட்வினா, ஒரு புறம் அவனை வெறுத்தாலும் இன்னொரு புறம் ஒருவிதமான தத்தளிப்பிலேயே இருக்கிறாள். அலிசியாவுக்குள் குற்றவுணர்வு மேலிடுகிறது. தனது வளர்ப்பு ஆமையைத் தூக்கியெறியும் அவனை ஏமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட எட்வினாவைத் தவிர்த்து மற்ற எல்லாரும் அவன் மீது மிகுந்த வெறுப்பிலேயே இருக்கின்றனர். எட்வினா மட்டுமே ஒரு விதத் தத்தளிப்பில் இருக்கிறாள். ஒரு வகையில், அவள் அவனை ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறாள். அதனால்தான் அவனுக்குத் தன்னையே தந்துவிடுகிறாள். ஆனால் அவளைத் தவிர்த்து மற்ற எல்லாரும், அவனை விஷம் வைத்து கொல்ல முடிவெடுக்கின்றனர். படத்தின் முடிவில் யார் யாரை வஞ்சித்தது என்ற கெள்வி இயல்பாக எழுகிறது.

இந்தப் படத்தில், எல்லாக் கதாப்பாத்திரங்களும் தங்களின் சூழலுக்குத் தகுந்தபடி நடந்துக்கொள்கின்றன. நல்லவர்-கெட்டவரென்று யாருமில்லை. அவரவர் சூழலே அவர்களை தங்களது நெறியிலிருந்து வேறொரு திசையை நோக்கி திருப்புகிறது என்பதை மிகவும் அழகாக கையாண்டுள்ளார் இயக்குநர். நடிகர்களின் தேர்விலும் அவர்களது நடிப்பிலும் அவர்களது கதாப்பாத்திர வடைவமைப்பிலும் அவ்வளவு கச்சிதம் தெரிகிறது. படத்தின் ஒலியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை. மெழுகுவர்த்திகளைக் கொண்டு அறையில் ஒளிப்பதிவு செய்திருப்பது புறச்சூழல்களில், மரங்களுக்கு மத்தியில் சூரிய ஒளியின் மிளிர்வுகள் எல்லாம் அற்புதமான காட்சியனுபவத்தை வழங்குகின்றன.

இந்தத் திரைப்படத்திற்காக சோஃபியா கப்போலா கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார். கேன்ஸ் திரைப்பட வரலாற்றில், ஒரு பெண் இயக்குநர் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறுவது இதுவே இரண்டாவது முறை. (கேன்ஸ் விருது பெறும் முதல் அமெரிக்க பெண் இயக்குநரும் கூட) இதற்கு முன் 1961ஆம் ஆண்டு ரஸ்யாவைச் சேர்ந்த யூலியா சொல்ன்ட்சேவா என்ற இயக்குநர்தான் முதல் முறையாக இந்த விருதைப் பெற்ற பெண் இயக்குநர்.

Comments