COCO (2017)




மிகல் எனும் சிறுவன், தனது கூட்டுக்குடும்பத்துடன் மெக்ஸிகோவில் வசித்து வருகிறான். காலணிகள் தயாரிப்பதுதான் அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தின் பிரதான தொழில். மெக்ஸிகோவின் இசைப்பிரபலமான ‘எர்னெஸ்டோ’வைத் தனது முன்மாதிரியாகக் கருதி அவரைப்போல ஆக வேண்டுமென கனவு காண்கிறான். ஆனால் இசைக்குப் பெயர்பெற்ற மெக்ஸிகோவில் அவனது ஒரு குடும்பம் மட்டும் இசைக்கு எதிரானதாக இருக்கிறது. ‘இசை’ என்ற சொல்லுக்கே வீட்டில் ‘தடை’ எனும் அளவிற்கு. தடைக்குக் காரணமும் இருக்கிறது. ஆனால் சிறுவன் மிகலுக்கு இசையில் அளவுக்கடந்த ஆர்வம். யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு மேல் இரகசிய அறை அமைத்து கிடாரை மறைத்து வைத்து அவ்வப்போது பயிற்சி செய்து வருகிறான். இதற்கிடையில் தனது இசை ஆதர்சமான எர்னெஸ்டோதான் தனது கொள்ளுத்தாத்தா என்பதைக் கண்டுக்கொண்டு அதைத் தனது குடும்பத்துக்குச் சொல்கிறான். மேலும் இனி தனது பயணம் இசையுடனே இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் தருணத்தில், அவனது பாட்டி அவனது கிடாரை உடைத்தெறிகிறாள். அவனும் குடும்பத்துடன் தனது உறவை உடைத்துக்கொண்டு தனது பயணத்துக்குத் தயாராகிறான். அவனது இசைப்பயணம் என்னவானது? எனும் கேள்வியைத் தொடர்ந்து பயணிக்கிறது இத்திரைப்படம்.

‘கோகோ’ திரைப்படத்தின் களம், மெக்ஸிகோ என்றாலும்கூட அது பெருவாரியான நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய கதையாகவே உள்ளது. மிகக் குறிப்பாக, இந்தியா மாதிரியான கூட்டுக்குடும்ப வாழ்விலும் மூதாதையர் வழிப்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கையுடைய நாடுகளுக்குப் பொருந்தும்படி உள்ளது. அதனால்தான் இத்திரைப்படத்தில் மெக்ஸிகோவின் ‘DAY OF THE DEAD’ என்று அழைக்கப்படும் இறந்துப்போன மூதாதையர்களுக்கு நன்றி சொல்லும் வழக்கம் நமக்கும் நெருக்கமானதாக இருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதை மிகவும் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். நிறைய தருணங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. மிகல், எர்னெஸ்டோவின் அருங்காட்சியத்துக்குள் நுழைந்து கிடாரைத் திருடுவதிலிருந்து திரைப்படம் இன்னொரு திசையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. அவன் இறந்தவர்களின் உலகத்துக்குள் நுழைகிறான். அந்த உலகம், மிகலுக்கு அளிக்கும் ஆச்சரியத்தையே நமக்கும் அளிக்கிறது. அதேப்போல தனது ஆதர்சமான எர்னெஸ்டோவின் உண்மைத்தன்மையையும் இறந்தவர்களின் உலகத்தில் அவனுக்கு வழிகாட்டியாக வரும் ஹெக்டரையும் முழுமையாக கண்டுக்கொள்ளும் இடங்களும் சிறப்பானவை. மேலும் இறப்புக்குப் பின்னான வாழ்க்கையில்கூட ஒரு இறப்பு நிகழ்கிறது. ஆம், இறந்தவர்களைப் பூமியுள்ளவர்களில் ஒருவரும் நினைவுக்கூராதப் பட்சத்தில் அவர்கள் மீண்டும் இறக்கிறார்கள். மிகலிடம் தனது புகைப்படத்தைக் கொடுத்து தன்னை நினைவுக்கூரச் சொல்லும் ஹெக்டர் கதாப்பாத்திரத்தை ஆரம்பத்தில் முக்கியத்துவமற்று பார்க்கும் நாம், இன்னொரு தருணத்தில் அந்தக் கதாப்பாத்திரம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்கிறோம். உண்மையில் ஹெக்டர் மாதிரியான நமக்குத் தெரியாத மனிதர்களின் உழைப்பை உறிஞ்சியே எர்னெஸ்டோ மாதிரியான நிறைய பிரபலங்கள் உழன்றுக்கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனம்.

இத்திரைப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இன்றைய தலைமுறைகளின் சவாலைப் பிரதிபலிக்கும் வகையிலான மிகலின் கதாப்பாத்திரம். குடும்ப உறுப்பினர்களுடன் மிகுந்த இணக்கத்துடன் இருக்கும் அவன், தனது கனவுக்கு எதிராக ஒட்டுமொத்த குடும்பமும் நிற்கும்போது முதலில் செய்வறியாது திகைக்கிறான். தனது கனவை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கிறான். அதேசமயம் இன்னொரு கட்டத்தில், குடும்பத்திலிருந்து விலகி தனித்து பயணிக்க முடிவெடுக்கிறான். ஒரு வகையில், இதேமாதிரியான சூழலில்தான் மிகலின் கொள்ளுத்தாத்தா, மனைவியையும் மகள் கோகோவையும்விட்டு பிரிகிறார். அந்தப் பிரிவுதான் மிகல் குடும்பத்தில் இசைக்குத் தடை விதித்திருப்பதற்கான காரணமாக இருக்கிறது. இலக்குகளை நோக்கி, குடும்பத்தினரின் ஆதரவற்று பயணிக்கும் இளைஞர்கள், மிகல் கதாப்பாத்திரத்துடன் தங்களைப் பொருத்திக்கொள்ளலாம். அப்படித் தன்னைப் பொருத்திப் பார்க்கும் ஒருவனுக்கு இத்திரைப்படம் இன்னும் நெருக்கமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசைகளையும் இலட்சியங்களையும் நோக்கி பயணிக்கும் இளைஞர்கள், குடும்பத்தைக் கைக்கழுவிச் செல்வதைத் தவிர்க்கும்வகையில் தன்னளவில் ஒரு தீர்வைச் சொல்ல முயன்றிருக்கிறது இத்திரைப்படம். மேலும் ஒவ்வொரு உறவுகளின் முக்கியத்துவம், மூதாதையர்களுக்குச் செலுத்த வேண்டிய் மரியாதை, எல்லா உயிர்களிடத்தும் செலுத்த வேண்டிய அன்பு என்று குழுந்தைகளுக்கான போதனைகளையும் (அவை குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல) தீர்வாக சொல்கிறது.

இசை சார்ந்த கதையில் இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இல்லாமல் எப்படி? பின்னணி இசையும் பாடல்களும் (Remember Me, Un Poco Loco) கவரும்படி இருக்கின்றன. அவை திரைப்படத்தை இன்னொரு தளத்தில் அணுக நம்மை அழைத்து செல்கின்றன. குழ்ந்தைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பினர்க்கும் நல்ல திரைப்படத்தைப் பார்த்த உணர்வையும் திருப்தியையும் தரும் திரைப்படம் இது.

மேலும் இத்திரைப்படம் Best Animated Film, Best Original Song ஆகிய இரண்டு பிரிவுகளில் 90வது ஆஸ்கர் விருதுக்கானப் போட்டியில் உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குநர் லீ அங்க்ரிச் இயக்கிய ‘டாய் ஸ்டோரி 3 (2010)’ எனும் திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை 2011ஆம் ஆண்டில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments